வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

July 31, 2010

சாந்தனின் “Whirlwind” ஐ முன்வைத்து சில சமூக, அரசியல் அவதானிப்புக்கள்

- குமாரவடிவேல் குருபரன்

நூல் பெயர்: “The Whirlwind”
நூல் வகை: நாவல் (ஆங்கிலம்)
ஆசிரியர்: ஐயாத்துரை சாந்தன்
பதிப்பு: V.U.S. பதிப்பகம், சென்னை (2010)
பக்கங்கள்: 179
இந்திய விலை: ரூ. 100

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்திய விருது பெற்ற சாந்தன் அவர்களது முதலாவது ஆங்கில நாவல் “The Whirlwind”. இந் நாவல் அண்மையில், இலங்கையிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் ஆக்க இலக்கியங்களுக்கான கிரேயன் (Gratien) விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து படைப்புகளுள் ஒன்றாகும். Whirlwind என்ற சொல்லுக்கான அண்மித்த தமிழ்ச் சொல் ‘சுழல் காற்று’ எனலாம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் இந்திய அமைதிப் படையினரின் நிலைகொள்ளல் தொடர்பாக ஜுலை மாதம் 1987ஆம் ஆண்டு நான்கைந்து நாட்கள் இடைவெளியினூடு இடம்பெற்றவொரு சுற்றிவளைப்பு இராணுவ நடவடிக்கையையும் அதனை ஒட்டிய இடப்பெயர்வு அனுபவத்தையும் கூறும் ஓர் அரசியல் நாவல் இந்த “Whirlwind”.

இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியத் தலையீடு தொடர்பாக (குறிப்பாக 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் நிகழ்ந்த காலப்பகுதி தொடர்பிலான) ஆக்க இலக்கியம் சாராத (non-fiction) படைப்புகளும் ஆய்வுகளும் ஏராளமாக வெளிவந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அக் காலப்பகுதியில் கடமையாற்றிய இந்திய இராஜதந்திரிகள் இராணுவ உயரதிகாரிகளது மற்றும் ஊடகவியலாளர்களது நினைவுக் குறிப்புகளாக அமைந்துள்ளன. இவற்றைத் தவிர தென்னிலங்கை மற்றும் இந்திய அரசியல் மற்றும் வரலாற்றுப் புலமையாளர்களும் தமது ஆய்வுகளை வெளியீடுகளாக்கியுள்ளனர். இது தொடர்பில் தமிழர் தரப்பில் இக்காலப்பகுதி தொடர்பில் ஆய்வு அல்லது ஆவணப்படுத்தும் வகையிலான முயற்சிகள் மிகக் குறைவு அல்லது இல்லை என்றே கூறலாம். ஒரே ஒரு விதி விலக்காக அமைவது “The Broken Palmyrah” (“முறிந்த பனை”) என்ற நூல். தமிழரது அரசியலில் நிலவுகின்ற சமூக, சட்ட அரசியல் சார்ந்த ஆய்வு இடைவெளி மிகவும் பாரதூரமானது.

இக்காலப்பகுதி தொடர்பிலான ஆக்க இலக்கியங்கள் என்று பார்க்கும் பொழுது தமிழ் ஆக்க இலக்கியத்தில் பல படைப்புக்கள் வெளிவந்தமை ஆச்சரியப்படுவதற்கில்லை. 1980 களுக்குப் பின்னரான ஆக்க இலக்கியப் படைப்புகளினது முனைப்பு கூடுதலாக தமிழரது போராட்டச் சூழல் பற்றிய பிரதிபலிப்புகளாகவே இருந்துள்ளன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சாந்தன் அவர்களது தமிழ் ஆக்க இலக்கியங்கள் இந்தியப் படையினரது நிலைகொள்ளல் பற்றி அதன் ஆரம்ப காலத்திலிருந்தே பேசி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆங்கில நாவல் இலக்கியப் பரப்பிற்குள் இக் காலப்பகுதி தொடர்பிலான படைப்புக்கள் இல்லை என்றே கூறலாம். இலங்கையின் இன முரண்பாட்டு அரசியல் என்று பொதுவாகப் பார்க்கும் போது கூட ஆங்கில ஆக்கிய இலக்கியப் பரப்பிற்குள் மிகச் சொற்பமான செயற்பாட்டையே அவதானிக்க முடிகின்றது. 1983 இனக்கலவரம் தொடர்பிலான படைப்புகளான சியாம் செல்வத்துரையின் “Funny Boy” மற்றும் மனுகா விஜயசிங்கவின் “Monsoons and Potholes”, 1983 க்குப் பின்னரான சம்பவங்கள் தொடர்பில் நிஹால் டி சில்வாவின் “The Road from Elephant Pass” மற்றும் புண்யகாந்தி விஜயநாயக்கவின் “The Enemy within” போன்ற ஆக்கங்களைக் குறிப்பிடலாம். இவர்கள் யாவரும் தென்னிலங்கையர் அல்லது தென்னிலங்கை அரசியற் பரப்பில் வாழ்ந்து கொண்டு எழுதியவர்கள் என்பது நோக்குதற்குரியது. இந்த வகையில் தமிழ் போராட்டச் சூழலில் வாழ்ந்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழர் சாந்தன் ஒருவராகவே இருக்க முடியும். (இக்கணிப்பீடு மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பைத் தவிர்த்தே முன்வைக்கப்படுகின்றது. மொழிபெயர்ப்பு இலக்கியப் பரப்பிற்குள் நின்று செயற்படும் சோ.ப. போன்றவர்களது முயற்சிகளும் முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை).

ஒரு பொது மொழியினூடாக சமூக அரசியல் இலக்கியப் பதிவுகளை மேற்கொள்வதில் ஒரு முக்கியமான சமூகப் பெறுமதி உள்ளது. ஆங்கிலமொழி மூலமான அறிவுச் செயற்பாடானது உயர் மத்தியதர வர்க்க மற்றும் மேட்டுக்குடியினிடத்து உறைநிலைப்பட்டுள்ளதாயினும் இந்த முக்கியமான சமூக தளத்திற்குள்ளும் எமது சமூகம், அரசியல் தொடர்பிலான பதிவுகளை நாம் முன்வைப்பது எதிர்காலத்தில் எமது வரலாறு எங்ஙனம் பேசப்படுகின்றதென்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வகையில் சாந்தனின் “Whirlwind” வரவேற்கப்படவேண்டியது.

“Whirlwind” இன் அரசியல்

இயல்பானதொரு மொழிநடையில் சாதாரண மக்களுக்கிடையிலான உரையாடலினூடாக வெளிவருகின்ற அரசியலை, Whirlwind இல் பதிவு செய்யும் சாந்தன் அதேவேளை பல்வேறு பாத்திரங்களினூடு எமது அரசியல் தொடர்பிலான தனது பார்வையையும் முன்வைக்கின்றார். இச்சமநிலையை நாவல் எங்கணும் அவதானிக்கலாம். மக்கள் மத்தியில் இந்திராகாந்தி மீதிருந்த ஈர்ப்பு, அவரது இறப்பின் பின்னரான இந்திய அரசியலை அவரது அரசியலோடு ஒப்பிட்டு அங்கலாய்க்குமொரு அரசியல் பார்வை (பக்.31), இந்தியப் படையினரை வரவேற்ற மனநிலையும் அது சொற்ப காலத்தில் வெறுப்பாக மாறிய அரசியல் மனப்பாங்கும் (பக்.69), இலங்கை இராணுவத்தை இந்திய இராணுவத்தோடு ஒப்பிட்டு பின்னையதை அதிகமாக வெறுத்த மக்களது மனநிலை (பக். 24) போன்ற IPKF காலப்பகுதியில் நடைபெற்றவை பற்றிப் ‘பொதுப் புத்தி’ (Common sense) மட்டத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட அரசியலை சாந்தன் இயல்பாகப் பதிந்து வைத்திருக்கிறார்.

இப் பொதுப்புத்தி அரசியல், பிரதான அரசியல் நீரோட்டத்தின் விவாதத்தில் வெளிப்படுவது மிகக் குறைவு - வெளிப்படுவது இல்லை என்று கூடச் சொல்லலாம். இதற்கு அதன் ‘சாதாரண தன்மை’ அல்லது ‘Sub-altern’ தன்மை காரணமாகவிருக்கலாம். (இது தொடர்பான ஆய்வுப் புலத்தினை Sub-altern studies என்பார்கள்). ஆக்க இலக்கியப் படைப்புக்கள் மூலமாக இவை வெளிக்கொணரப்படலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம்.

சாந்தனுடைய தனிப்பட்ட கூர்மைப்படுத்தப்பட்ட அரசியல் தத்துவார்த்தமும் நாவலின் பல பாத்திரங்கடாக மேற்சொன்ன பொதுப்புத்தி அரசியலை நளினம் செய்யாமல் முன்வைக்கப்படடிருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக சாந்தன் அடையாள அரசியல் (Identity politics) தொடர்பாகக் கொண்டிருக்கும் சந்தேகமும் வெளிப்படையாக நாவலில் சொல்லப்படுகின்றது (பக்கங்கள் 93-96). சாந்தனின் உலக இலக்கியப் பரிச்சயமும் (குறிப்பாக இரஸ்ய இலக்கியத்தில் அவர் கொண்டுள்ள நாட்டமும்) இடதுசாரி அரசியலில் அவர் கொண்டுள்ள பரிச்சயமும் ஒரு சர்வதேசியவாதிக்குரிய சிந்தனைகளாக (Internationalist) வெளிப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. (பக். 140 இல் சாந்தன் இர~ஸ்ய நாவலாசிரியர் Mikhail Sholokhov மற்றும் அமெரிக்க நாவலாசிரியர் Ernest Hemingway ஆகியோரது படைப்புக்களை சிவன் என்ற பாத்திரத்தினூடாக மேற்கோள் காட்டி வேறுபட்ட யுத்த சமூகங்களுடைய அனுபவங்களின் பொதுத் தன்மையைப் பற்றிப் பேசுவதைக் காண்க).

மற்றுமோர் இடத்தில் ‘political behalfism’ த்தைச் சாந்தன் சாடுகிறார். எமது சார்பில் போராட்டம் நடத்துவதாகக் கூறிக் கொள்பவர்களிடமிருந்து நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் என்று சாந்தனின் ஒரு பாத்திரம் பேசுகிறது. தனியே இந்திய அமைதிப் படையினரைப் பற்றியதாக நாம் இவ்வவதானிப்பைச் சுருக்க முடியாது. அரசியல் விளிம்பின் நுனியில் ஒரு பரிதவித்த சமூகமாக மாறியுள்ள நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். நல்ல இலக்கியங்களுடைய உண்மையான சேவை இதுதான்.

40 வருடகால சமூக இலக்கியச் செயற்பாட்டைத் தாண்டி வந்துள்ள சாந்தன் அரசியல் “ism” கள் எவற்றுள்ளும் அடைக்கப்பட விரும்பாதவர் என்பதனைப் பதிவு செய்துள்ளார். ஏலவே இடதுசாரிஃ சர்வதேசியவாத சிந்தனை மரபின் தாக்கங்கள் இந்நாவலில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளேன். பின் நவீனத்துவ மரபின் சாயல்களையும் காணலாம் என்பதையும் இங்கு சேர்க்கலாம். (தேவர் என்ற பாத்திரத்தினூடாக ‘நிலையான உண்மை’ என்றொன்றில்லை என்ற சாந்தனின் வாதத்தை உதாரணமாகப் பார்க்கலாம் (பக். 33).

பக். 32 இல் சிவன் என்ற பாத்திரத்தினூடாக சாந்தனிடத்து வெளிப்படும் பின்வரும் அவதானிப்பு முதல் நோக்கில் அரசியல் மேலெழுந்தவார்த்தனம் உடையதாகத் தெரிந்தாலும் ஒரு ஆழ்நிலையில் அர்த்தபுஷ்டியுடையதாகவே படுகின்றது. சாந்தன் எந்த அடைப்புக்குள்ளும் நின்று தன் இலக்கிய எழுத்தை வரையறை செய்ய விரும்பாத தொனிப்பும் இவ்வவதானிப்பில் வெளிப்படுகிறது.
“இந்தக் கொடுமையான விளையாட்டில் எந்தவொரு (அரசியல்) செயற்பாட்டாளரும் தனது மனசாட்சிக்கு எதிராக செயற்படுவதாக நான் நினைக்கவில்லை. எல்லாத் தரப்புக்களும் தாம் நல்லது என்று நினைப்பதனையும் மக்களுக்குச் சரியானது எனக் கருதுவதனையுமே செய்கின்றனர். இவர்களுடைய செயற்பாடுகள் மற்றையவர்களுடைய செயற்பாடுபாடுகளோடு முரண்படுவது அவர்களை மட்டுமல்ல, யாருக்காக இதனைச் செய்வதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த அப்பாவி மக்களையும் வெகுவாகப் பாதிப்பது துரதிட்டவசமானது”. (மொழிபெயர்ப்புக் கட்டுரையாளரது)

இந்த அரசியல் விளையாட்டில் ஒருவர் மற்றொருவர் மீது குறைகாணும் தன்மையை, நீண்டகாலமாக அவதானித்துச் சோர்வுற்றதால் சாந்தனிடம் ஏற்பட்ட ஒரு வித சலிப்பின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு விதத்தில் இருத்தலியத் தத்துவார்த்தத்தின் (existentialism) சாயலையும் இந்த அவதானிப்பில் காணலாம். இருத்தலியம் முறைசார்ந்த, புலமைவார்ப்பிற்குட்பட்ட தத்துவார்த்தமானது உண்மையான மனித அனுபவத்திலிருந்து தொலைவுபட்டது எனக் கொள்கின்றது. விவாதத்திற்குட்படுத்த வேண்டிய பல விடயங்களைச் சாந்தன் எமக்குத் தந்து உதவியுள்ளார்.

‘Whirldwind’ இல் இடம்பெயர் வாழ்வியல் தொடர்பாக இது தொடர்பில் ‘Whirldwind’ முன்வைக்கும் மூன்று விடயங்களை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன்.

முதலாவது, இடப்பெயர்வு வாழ்வு அனுபவமானது அது உருவாக்கித்தரும் ஒரு இறுக்கமான சமூக வெளி காரணமாகத் தமிழர் சமூகத்தில் நிலவிவரும் சாதிக் கட்டுமானங்களை உடைக்கின்றதா அல்லது நெகிழ்வடையவோ அன்றி உறுதி செய்யவோ பங்களிக்கின்றதா என்பது தொடர்பானதாக. ‘Whirldwind’ இல் முத்து என்ற பாத்திரத்தினூடாக (பக்கங்கள் 162-165) இந்தக் கேள்வியை சாந்தன் எம்முன் நிறுத்துகிறார். சாந்தனைப் பொறுத்த வரையில் வாழ்வா சாவா என்ற நிலை வரும்போது (existential threat) இந்த வேறுபாடுகள் தளர்வடைகின்றன. இந்த அனுபவத்தைப் பொதுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என நாம் சிந்திக்க வேண்டும்.

இரண்டாவது, எமது சமூகம் பெண்களது நிலை தொடர்பாகக் கொண்டிருக்கும் பார்வை பற்றியது. மற்றவர்களோடு இடம்பெயராது சற்றுக் காலம் தாழ்த்தி வரும் கலா (எனும் பாத்திரம்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடுமோ என்று ஏனைய சில பெண் பாத்திரங்கள் சந்தேகப்படுவதும் அது பற்றிக் கலாவுடன் கலந்துரையாட முற்படுவதையும் சாந்தன் கவனமாக எடுத்துக் காட்டியுள்ளார். போர்ச் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களை தனக்கேயுரிய சுருக்க நேர்த்தியோடு சாந்தன் சொல்லியிருக்கிறார்.

மூன்றாவது, சமூகத் தலைமைத்துவம் தொடர்பாக எமது சமூகத்தில் மாறிவரும் பெறுமான மதிப்பீடு தொடர்பாக. தேவி (மனைவி) மற்றும் ராஜு (கணவன்) என்ற கதாபாத்திரங்கடான கலந்துரையாடலை முன்னறுத்தி சாந்தன் சொல்வதை ப.133இல் காண்க.
தொடர்ந்தேர்ச்சியாக எமது சமூகத்தில நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழல், காரணமாக சமூகப் பிரச்சனைகளில் அக்கறை கொள்வது என்பது விரும்பப்படுவதில்லை என்ற செய்தியை சாந்தன் பதிவு செய்கிறார். “ஏன் நமக்கு இந்த சோலி” என்ற சமூக மனநிலை எம்மத்தியில் ஆழ ஊடுருவியுள்ளது. எமது சமூகத்தில் எதிர்காலம் பற்றிக் கவலைப்பட வைக்கும் மனநிலை இது. இதிலிருந்து நாம் எப்படி வெளிவரப் போகின்றோம் என்பதனைப் பற்றிய சிந்தனையும் விவாதமும் இன்றைய அவசரத் தேவைகள்.

Whirldwind இன் மொழி நடை

பின்காலனித்துவ ஆங்கில மொழிப் பாவனையில் ஆங்கிலத்தை அதன் பிரித்தானிய வடிவில் (British English) தான் உபயோகிக்க வேண்டும் என்ற தூய்மைவாதம் உடைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை அதன் பல்வேறு சமூகத்திற்காட்பட்ட பல்வகைப் பாவனையை “World Englishes” என்று அழைக்கின்றனர். இலங்கையில் பேராசிரியர் மனிக் குனசேகர, கலாநிதி அர்ச்சுன பராக்கிரம போன்றோர் ஆங்கில மொழிப் போதனையிலும் ஒரு “Sri Lankan English” என்ற தராதரத்தை அங்கீகரித்து கற்றல் கற்பித்தலில் பாவிக்கலாம் என்றும் கூறுகின்றனர். “Sri Lankan Dictionary of English” என்ற ஒன்றையும் பிரித்தானியக் கவுன்சிலில் Michael Meyler அண்மையில் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தை குறிப்பிடத்தக்களவு காலம் கற்பித்த சாந்தன் அவர்கள் இதைப் பற்றி என்ன பார்வையைக் கொண்டுள்ளாரோ தெரியவில்லை. ஆனால் சாந்தனின் மொழி நடையில் சமூகத்தின் தாக்கம் (இது தொடர்பான ஆய்வை Social Linguistics சமூக மொழியியல் என்பார்கள்) நிறையவே உள்ளது - Sri Lankanised English இன் கூறுகளும் நிறையவே உள்ளன. உதாரணமாக: “I say, you can’t take this much of space. If you want to sleep comfortably, get back home” (பக். 37) என்பதில் வருகின்ற ““I say”. இந்த “I say” அச்சில் வேறுபடுத்தி Italic இல் காட்டுவது அவதானிக்கத்தக்கது. தமிழ்ப் பழமொழிகள் பலவற்றையும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு (transliterate) செய்து நாவலின் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். சாந்தனுடைய தமிழ் மொழி நடையில் நான் அதிகம் இரசித்தது அவரது ‘economy of language’ மொழியைக் கவனமாகவும் சுருக்கமாகவும் பாவிக்கும் ஆற்றல். அதனை அவர் ஆங்கிலத்திலும் காட்டியுள்ளார்.

(யாழ் உதயன் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

சாந்தனின் சில நூல்களை காண இங்கே சொடுக்கவும்

'எதுவரை' இதழில் பிரசுரமான சாந்தனின் நேர்காணல் (2010)

July 19, 2010

@rozavasanth | அண்ணன் ரோசாவசந்திற்கு...

இந்த உரையாடல் தொடர்பான சில விடயங்கள். முதலில் இவ்விடயங்கள் சார்ந்து எனது அனுபவத்தைக் கூறிவிடுகின்றேன். அறிவியல் தொடர்பான எனது ஆரம்பகால வாசிப்புக்கள் பெரும்பாலும் சுஜாதாவில் தொடங்கி ரவிசிறீனிவாஸ் வரையானவை. இவை Teen-age அனுபவங்கள். பின்பு Capra வை வாசித்தபோது சுஜாதா போன்றவர்களின் இந்துத்துவா கருத்தியல்கள் அதில் புகுத்தப்பட்ட விதம் குறித்து அறிய முடிந்த அதேநேரம் அவ்வகையான வாசிப்புக்கள் ஓரளவு தடைப்பட்டும் போனது. பின்னர் Edward Said இன் Orientalism உடனும் அதன் பின்பான ஐரோப்பிய மையவாதத்திற்கு எதிரான கருத்தியல்களை உள்வாங்கியதன் பின்னர் EthnoMedicine தொடர்பாக பலவிடயங்களை வாசித்தறிய முடிந்தது. இதில் இருந்து அறிவியலின் வரலாறு தொடர்பான விடயங்களைத் தேட முடிந்தது. அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நீண்ட கால மரபைக் கொண்ட சமூகங்கள் உற்பத்தி செய்த 'அறிவுகள்' அவற்றின் தொடர்ச்சிகள் காலனியாதிக்கத்தின் காரணமாக தடைப்பட்டுப் போனது மட்டுமல்லாது, ஆவணப்படுத்தப்படவும் இல்லை என்பதை அறிந்து கொள்ளவும் முடிந்தது. உள்ளூர் மருத்துவங்கள் சிலவற்றினதும் ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றீடான மருத்துவங்களின் 'நிரூபிக்கப்படாத' (கவனிக்கவும்) அபூர்வ சக்திகள் தொடர்பாக அதிசயப்பட முடிந்தது. அதேநேரம் லெவி-ஸ்ட்ராஸ் இன் வாசிப்பனுபவங்கள் ஒர் விடயத்தை நன்றாக உணர்த்தின. மேற்கலாத சமூகங்களின் அறிவுற்பத்தி தர்க்கம் மற்றும் பரிசோதனை முறைகளைப் பின்பற்றவில்லை என்பதோடு அறிவு என்பது மூடநம்பிக்கையோடு இரண்டறக் கலந்த விடயமாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. அவர்கள் அறிவுத்தொடர்ச்சியை ஆவணப்படுத்துவதற்கு மாறாகச் சடங்குகளூடு அறிவைக் கடத்தி வந்திருக்கின்றார்கள் என்பதை ஐரோப்பியர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமது மேலாண்மை சார்ந்து அத்தொடர்ச்சிகளை முற்றாக மறுதலித்து தமது பார்வையில் அவற்றை பதிவு செய்ததோடு தமது அறிவியல் தொடர்ச்சிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி வெற்றியும் பெற்றார்கள். இன்று எம்மிடம் 5000 ஆண்டுகால மரபைக் கொண்ட எமது அறிவுத் தொடர்ச்சி இல்லை. அது எம்மிடம் இருந்து இழக்கப்பட்டுவிட்டது. உதாரணமாக நீர்வளத்துறையைச் சேர்ந்த தசநாயக்க என்னும் சிங்கள புலமையாளர் கூறுவார் காலனியாதிக்க காலத்திற்கு முற்பட்ட இலங்கையின் நீர்முகாமைத்துவம் தொடர்பான கொள்கையோ அதன் வடிவமோ ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் கூட இன்றும் மாற்றப்படவில்லை. அக்காலத்தையவரின் அமைப்புக்கள் சற்று மெருகூட்டப்பட்டுள்ளன அவ்வளவே. இலங்கை வளமான நீர்வளத்தை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாது அதற்கான நீர்முகாமைத்துவத்தையும் கொண்டிருந்தது. இவ்விடயத்தை நான் கூறுவதற்கான காரணம் மேற்கல்லாத அறிவு மரபுகள் எவ்வாறு தோற்றுப்போயின அல்லது தோற்கடிக்கப்பட்டன என்பதற்கானதே. மருத்துவம் மற்றும் நீர்முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்தவை என்பதால் இவை தொடர்பான அறிவு எதோவொருவகையில் அப்பிரதேச மக்களால் தொடரப்பட்டது. ஒருபக்கத்தில் ஐரோப்பிய அறிவு ஐரோப்பா அல்லாத அறிவுத் தொடர்ச்சிக்காகப் பிரதியீடு செய்யப்பட்ட அதேவேளை சமாந்தரமாக மக்களால் தமது அறிவுத்தொடர்ச்சிகள் சிறிய அளவில் தொடரப்பட்டன. மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித்தனம் என்ற கேலிப்பேச்சுக்களின் மத்தியிலும் அவை 500 வருடங்கள் தொடரப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியமான விடயமே. காலனியாதிக்க காலம் முடிவுக்கு வந்த பின்னர் உருவான பின்காலனியக் கற்கைகள் Edward Said இன் Orientalism இற்குப்பின்னர் உத்வேகமடைகின்றன. இதேநேரம் மானுடவியல் தொடர்பான கற்கைகளின் பெருக்கம் புதிய சிந்தனைகளிற்கு வழிகோலுகின்றது. இதன் தொடர்ச்சியிலேயே Subaltern Studies போன்ற துறைகள் தோற்றம் பெறுகின்றன. இவற்றின் நோக்கமே ஐரோப்பா அல்லாத பிரதேசங்களது உண்மையான வாழ்வுமுறைகள் மற்றும் அறிவுத்தொடர்ச்சிகளையும் அவற்றின் மூலங்களையும் கண்டுகொள்வதன் பாற்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே இன்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இனத்துவ அறிவியல் (EthnoScience என்பதை இனத்துவ அறிவியல் என்பதாக மொழிமாற்றம் செய்ய முற்படுகின்றேன். ஆனால் அது தவறென்பது எனது தனிப்பட்ட கருத்து) கற்கைகளை இன்று பெருமளவான மானியங்கள் கொடுத்து ஊக்குவிக்கின்றன. டார்வினின் கூர்ப்பு சார்பான வாதங்கள் பிற்காலத்தில் இவற்றிற்கு வலுச்சேர்த்தன. வெவ்வேறு சூழ்நிலையில் வாழ்ந்து வந்த சமூகங்கள் பலவிதமான ஆயிரக்கணக்கான சாத்தியங்களைக் கொண்ட அறிவுகளை / அறிவுத்தொடர்ச்சிகளை, ஆயிரக்கணக்கான மாற்றீடுகளைக் கொண்ட அறிவை உற்பத்தி செய்திருக்கும். நாம் ஒற்றைப்பாதையில் செல்கின்றோம் என்ற எண்ணம் பிற்காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஏற்பட்டது. இதை விளங்கிக்கொள்ள ஒரு புள்ளியில் (ஒரு புள்ளி என்பது அபத்தம். வெறும் உதாரணத்திற்கு மட்டும்) வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்த பயணங்கள் எதோவொரு பிறிதொரு புள்ளியில் இடைவெட்டும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு சமனானதே ஐரோப்பா பிறதேசங்களைக் கண்டடைந்தபோது நிகழ்ந்தது. இவ்வுதாரணத்தின் மூலம் அதிர்ச்சியின் முழுமையை விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் நேரடி உதாரணம் ஒன்றைப் பார்க்க முடியும். பூமி ஒரு வெடிப்பில் பிறந்ததாகவும் அவை இரட்டைப் பிள்ளைகள் எனவும் வைத்துக் கொள்வோம். மற்றையது வட்டவடிவப் பாதையில் இயங்கும் நோக்கில் எதிர்த்திசையில் பயணித்து லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து இரண்டும் சந்தித்தால் ஏற்படும் அதிர்ச்சி சொல்லி மாளாதது. இரண்டுக்குமான ஒப்பீடுகள் உருவாக்கும் துறைகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஒரே நிபந்தனைகளிலான வளர்ச்சி என்று வைத்தால் கூட அது நிச்சயமாக முற்றிலும் வேறானதாகவே இருக்கப்போகின்றது. இதில் ஒரு தொகுதியில் இருந்து மற்றைய தொகுதி கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளாவிட்டால் இழப்பு இரண்டுக்குமானதே என்பதே எனது வாதம். மாற்று அறிவியல் பற்றிய பார்வைகளுக்குப் பின்னரும் சில உதாரணங்களுக்குப் பின்னரும் நான் கணிதம் பற்றிய விடயங்களுக்கு வருகின்றேன். அதற்கான காரணத்தை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். நடைமுறை வாழ்வுடன் நெருங்கிய தொடர்புள்ள பிற அறிவுத்துறைகளில் ஐரோப்பியர்களுக்குக் முழுதாகக் காவுகொடுக்கப்படாத அறிவுத்தொடர்ச்சிகளை நீங்கள் நன்று அறிவீர்கள். ஆனால், கணிதம் போன்ற துறைகள் ஏன் EthnoMedicine தொடர்பான ஆய்வுகள் அளவிற்குச் செய்யக்கூடிய தரவுகள் இல்லையெனில், அவை அன்றாட வாழ்வியலில் இருந்து மறக்கப்பட்டுவிட்டதோடு அவ்வறிவு தொடர்ச்சியாகக் கடத்தப்படவுமில்லை. உங்களுக்கு இப்போது ஆரம்பித்த கோபம் இனிமேல் உச்சத்திற்கு ஏறப்போகின்றது என்பது தெரிந்தே கூறுகின்றேன். கணிதம் என்பதை தனியே சமன்பாடுகளுக்குள் முடங்கிய விடயமாக என்னால் கருதமுடியவில்லை. ஒழுங்குபடுத்தல் - ஒப்பீடுசெய்தல் - வகைப்படுத்தல் - முகாமைத்துவம் செய்தல் போன்றவை உருவாக்கும் கணிதக்கோலங்கள் கலாச்சாரங்கள் சார்ந்து வேறுவேறானவை என்பதோடு அவற்றின் அறிதிறனும் கலாச்சாரப் பின்புலம் சார்ந்து வேறுவேறானவை. Numerical analysis ஐ நீங்கள் புரிந்துகொள்வதற்கும் நான் புரிந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. கலாச்சாரத்தை மையமாக வைத்து அறிவியலை பிரதேசங்கள் சார்ந்து அளவிட முயற்சிப்பதை நிச்சயமாக நீங்கள் எதிர்ப்பீர்கள். ஆனால், மற்றைய அறிவியலாளர்களை விட உங்களைப் போன்ற அறிவியலாளர்களிடம் அவ்வெதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. ஏனெனில் நீங்கள் சமூகவியல் தளங்களிலும் இயங்கக்கூடியவர்கள். ஆவணப்படுத்தப்படுத்தப்படாத வெளிப்படையாகப் பயன்படுத்தப்படாத வாய்ப்பாட்டுத்தன்மைக்குள் வந்துவிடாத கணித மரபுகள் தொடர்பானதே எனது அக்கறை. இவை மொழியியலை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படக்கூடியவை. இன்றைய Cognitive science இவற்றை அடிப்படையாகக் கொண்டது. அவை உண்மையில் புதிய பாதைகளைத் திறந்துவிடக்கூடியவையாக எதிர்பார்க்கப்படுகின்றன. உண்மையில் Ethno என்ற பிரயோகமே மொழி அடிப்படையானதாகவே நான் கருதுகின்றேன். இனத்துவம் என்பது சமூகவியல் தளங்களில் வேறுபல பார்வைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாகவே EthnoScience என்பதற்கு இனத்துவ அறிவியல் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தத் தயங்கினேன். மேலும் நான் கூறும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவுருவாக்கம் என்பது Engineering Mathematics பிற Applied Mathematics துறைகளில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள். அவர்களால் இவ்வகையான விடயங்களை ஏற்றுக்கொள்ளவது கடினமாக இருக்கும். ஆனால், ஒரு வாய்ப்பாடோ அல்லது சமன்பாடோ உருவான 'வரலாறு' என்பது ஏராளம் ஏளனங்களுடன் கூடியது. நீங்கள் கூறும் விடயங்களை மறுதலிக்கும் இடத்திலும் நான் இல்லை. அலன் சோக்கலின் வாதங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையே எனதும். ஆனால், கணிதவியலை புனிதப்படுத்தி அதைச் சமன்பாடுகளுக்குள் மட்டுப்படுத்தும் நோக்கம் இல்லாததன் காரணமே புதிய பார்வைகள் தொடர்பான தேடுதலை ஆதரிக்கின்றேன். கிட்டத்தட்ட நீங்கள் கூறும் கலாச்சார மையவாதம் சார்பானதே எனதுவாதமே தவிர சுஜாதா கூறுவது போன்றதான 'எம்மிடம் ஏற்கனவே எல்லாம் இருந்தது' போன்ற உடார்கள் அல்ல. அதில் நான் மிகத்தெளிவாக இருக்கின்றேன். நவீன கணிதத்தில் எந்தக்கணிதமும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சுஜாதா போன்று வாதிப்பவரிடம் மட்டுமே நீங்கள் மேற்படி கேள்வியைக் கேட்க முடியும். சுதேசிய அறிவு புதிய பாதைகளில் - சிறிய அளவாயினும் - பயணித்திருக்குமா என்பதற்கான தேடல் பெரிய சமன்பாடுகளுடன் போராடும் கணிதவியலாளர்களுக்கு சுவராசியமாக இருக்கப்போவதில்லை. ஆயினும், எங்காவது ஓரிடத்தில் உடைப்பெடுக்குமா என்ற பார்வைகளுடன் கூடியதே அறிவியல். உங்களிடம் நான் கேட்பது நீங்கள் நடந்து சென்ற நீண்ட பாதையில் ஆரம்பத்திற்குச் சென்று சுற்றுமுற்றும் பாருங்கள். அங்கே உங்களுக்கு வேறொரு நீண்ட பாதை இருக்கும் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகப் பொய் கூறப்போவதில்லை. ஆனால், சிறியதொரு புதியவகை அமைப்புடன் கூடிய பாதை இருக்கக்கூடும். அப்பாதையில் புதிய பிரதேசங்களைக் கண்டுகொள்வதற்கான சாத்தியங்கள் இருக்கக்கூடும். புதிய பாதைகள் என்று கூறுவதை விட முக்கியமாகப் புதிய சட்டகங்கள் இருக்கக்கூடும். Fritjof Capra போன்றவர்கள் இந்நோக்கிலேயே கீழைத்தேய மரபு நோக்கி ஓடியிருப்பார்கள் எனத்தோன்றுகின்றது. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் விடைகள் இல்லை. அவற்றிற்கு என்னால் அல்ல வேறு யாராலும் பதில் சொல்ல முடியும் எனவும் நான் நினைக்கவில்லை. ஆனால், அதுவல்ல பிரச்சனை என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.


மேலதிக வாசிப்பிற்கு : Ethnomathematics: challenging eurocentrism in mathematics education


Statcounter