
முன்னைய பதிவுகள்
* தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்
* தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்
'தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்' , 'தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்' ஆகிய இரண்டு பதிவுகள் தொடர்பாகவும் சில நண்பர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். பெருமளவான விடயங்களை ஒரே பதிவில் சுருக்க முற்படுகின்றேன் என்பதைக் குறையாகத் தெரிவித்திருந்தார்கள். சுட்ட முற்படும் பல்வேறு விடயங்களை விரிவாக்கித் தனித்தனிப் பதிவுகளாக இடலாம் என்பது அவர்களது கருத்தாயிருந்தது. கடந்த இரண்டு பதிவுகளும் வெறும் சட்டகங்களே என்பதை கட்டுரையின் இறுதிப்பகுதியில் தெரிவித்திருந்தேன். அவற்றை விரிவாக்கிச் செல்ல வேண்டியது பல்வேறு துறை சார்ந்தவர்களின் பணியாகவே இருக்க முடியும். நான் கவனப்படுத்த முற்பட்ட விடயம் தமிழ்த்தேசியவாதம் என்பது தனியே அரசியல் கோரிக்கை மட்டுமல்ல என்பது மட்டுமல்லாது, அக்கோரிக்கை சார்ந்து செயற்படுபவர்கள் அதன் ஆழத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவுமே. தேசியவாதக் கோரிக்கையின் உள்ளடகத்தை அல்லது அது உள்ளடங்கும் பகுதிகளை - அதன் சட்டகத்தின் எல்லைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமானது. மேலும், அக்கோரிக்கை கடந்த காலங்களில் ஏற்படுத்தி பாதிப்புக்கள் எவை? அக்கோரிக்கையின் சில நடைமுறைகளால் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய தரப்புக்கள் எவை? என்பது போன்ற விடயங்களை மிகத்தெளிவாக வரையறை செய்யும் போதே அதன் ஆரோக்கியமான திசைவழியைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். இவ்வகையான தீர்மானங்களுக்கு வராமல், 70 களில் அல்லது 80 களில் இருந்திருக்கக்கூடிய விடயத்தைத் தூசு தட்டி எடுத்து, காவுவது நிச்சயமாகக் சரியான அறுவடையைத் தரப்போவதில்லை. அதுமாத்திரமன்றி, குறித்த அரசியல் கோரிக்கைக்குள்ள உண்மையான தேவையையும் காரணங்களையும் படிப்படியாக இல்லாததாக்கும் சூழலை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து கொள்ளாவிடின், நாம் வரலாற்றில் இருந்து எதையும் படிக்கைவில்லை என்றே கருத வேண்டும்.
Applicable form and Diversity
இக்காலத்தைய தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவம் 'ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.' என்றவாறு கடந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வகையான விடயங்களில் Deconstructive அணுகுமுறையும் எவ்வகையான விடயங்களில் Constructive அணுகுமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக மேலும் மேலும் சிந்திக்க வேண்டியுள்ளது. இப்புரிதலுக்கு வர முன்னதாக 'அரசு' வடிவத்தின் தோற்றம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலக அதிகார ஒழுங்கின் வரலாறு, பின்-காலனித்துவ காலப்பகுதியில் இனத்துவ முரண்பாடுகள் - தீர்வுகள் போன்ற விடயங்களில் பரந்தளவான தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏற்கனவே, முதல் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று, அரசு சீர்திருத்தம் (state reformation) என்ற எல்லைக்குள் இயங்கி வருபவர்கள் 'கட்டவிழ்ப்பு' (Deconstruction) என்பதை எவ்வாறு அணுக முற்படுகின்றார்கள் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ளும் போதே தேசிய அரசுருவாக்கம் (nation state formation) என்ற வெளியில் இயங்க முற்படுபவர்கள் , பின் - நவீன கால சிந்தனைப் போக்குகளை உள்வாங்கி - தமது பிரயோக வடிவத்தை மெருகூட்டலாம் என்ற தெளிவிற்கு வர முடியும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதென்பது (Deconstruction) அதனை - உள்ளக அடையாளங்கள் சார்ந்து சுக்குநூறாக்கி பிளவுபடுத்துவதல்ல. மாறாக, கட்டவிழ்ப்பின் மூலம் அதனை ஜனநாயகப்படுத்துவது அல்லது மீளொழுங்கிற்கான புதிய நிபந்தனைகளை உருவாக்கிக் கொள்வது என்றும் பொருள்படும். இச்செயற்பாடு, தமிழ்த்தேசியவாத்தை கீழிருந்து மேலாக (Bottom - up) அதன் உண்மையான தேவை சார்ந்து கட்டியெழுப்பும் என்று நிச்சயமாகவே கூற முடியும். கீழிருந்து மேலாக தேசியவாத்தின் அடிப்படையான அம்சங்களில் இருந்து அதைக் கட்டியெழுப்பும் போது - நிச்சயமாக அரசியல் கோரிக்கைக்குரிய தனியான செயற்பாட்டியக்கம் தேவைப்படப்போவதில்லை. மாறாக, அதன் அங்கமான ஒவ்வொருவருமே அரசியல் கோரிக்கையின்பாலான தீவிரத்துடனும் தமது கருத்தியலுக்கான தெளிவுடனும் இருப்பார்கள். தவறான அரசியல் பிரதிநித்துவ சக்திகள் ஊடுருவ முடியாத ஆரோக்கியமான வெளிகளைக் கட்டமைக்கும். தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டவிழ்ப்பதை தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களே முன்வைக்க வேண்டும். அவ்வெளியை தாம் 'வெளியார்' (Outsider) என்று கருதுபவர்களோ அல்லது தமிழ்த்தேசியவாத எதிர்ச்சக்திகள் என்று கருதுபவர்களோ கையகப்படுத்துவதை அனுமதிக்கும் போது, அடையாள அரசியலை அதன் நன்மையான பக்கத்திற்கு மாறாக தீமையான பக்கத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது. கட்டவிழ்ப்பு என்பது ஒருவித சமூகம் சார்ந்த Re - engineering செயற்பாடென்ற புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழில் கட்டவிழ்ப்பு சார்ந்து ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்மறையான பிம்பத்தை மாற்றியமைப்பதனூடாகவே இவ்விடயம் சார்ந்து சாதகமான புரிதலை ஏற்படுத்த முடியும்.
இலங்கையில், தமிழ்த்தேசியம் என்ற சட்டகத்திற்குள் வரக்கூடியவர்கள் அல்லது குறித்த சட்டகத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் சமூகங்கள் எவை என்பது தொடர்பானதுமான புரிதலை மேம்படுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்கள் சார்ந்த புரிதலை கடந்த 30 ஆண்டுகளில் வளர்த்துள்ளோம்? இன்று தமிழ்த்தேசியக் கோரிக்கையை முன்னெடுப்பவர்கள் மேற்படி சமூகங்கள் சார்ந்து எவ்வகையான நிலைப்பாடுகளில் உள்ளார்கள்? அதற்கு எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருக்கின்றது? போன்ற விடயங்கள் தொடர்பாக எவ்விதமான தயக்கமுமற்று உரையாட வேண்டியுள்ளது. எமக்கருகில் உள்ள தமிழ்நாட்டிலும் உலகச்சிந்தனைப் போக்கிலும் சமகாலத்தில் உரையாடப்படும் விடயங்களை வெறுமனே எமது அரசியல் கோரிக்கையை பலவீனமாக்கும் செயற்பாடுகள் என்று நிராகரித்துவிட்டு நகருபவர்கள் தமிழ்த்தேசியம் தொடர்பான அக்கறையற்றவர்கள் என்றே கருத வேண்டும்.
Inclusive Nationalism, Exclusive Nationalism and Third Space
கடந்த பதிவுகளில் குறிப்பிட்டது போன்று தேசியவாதம் இயங்கும் முறையை நாம் தெளிவாக இனங்கண்டுகொள்ள வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசியவாதம் முற்போக்கான வடிவில் இயங்குவதில்லை. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். தேவைகள் - அரசியல் கோரிக்கைகள் போன்றவற்றால் உருவாகியிருக்கக்கூடியது. தொடர்ச்சியான இயக்கத்தில் ஒற்றை பரிமாணத்தை முதன்மைப்படுத்த எத்தனிக்கும். உலகில் உள்ள அனைத்துத் தேசியவாதங்களினது தவிர்க்க முடியாத பிற்போக்காமன பாத்திரமே இதுதான். ஒருகட்டத்தில் ஒற்றைப் பரிமாணத்தை அடையும் தேசியவாதம் - அதே மூர்க்கத்தோடு மேலிருந்து கீழாக இயங்கத் தொடங்கும். இதன் போது ஒவ்வாமைகளுடனும் தனித்துவங்களுடமிருக்கின்ற சமூகங்களை தனது பரப்பிற்குள் அபகரித்துக் கொள்வது மாத்திரமன்றி - தனது கோரிக்கைகளையும் ஒற்றை அடையாளத்தையும் வித்தியாசங்களை மறுத்துத் திணிக்கத் தொடங்கும் தன்மை கொண்டது. அதற்கான கருத்தியல் ரீதியான நியாயத்தை, பிரயோகிப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடியது. அதை இயக்க முற்படுபவர்களது கைகளைத் தாண்டி தானாக - மூர்க்கமாக இயங்கும் வல்லமை தேசியவாதத்திடம் உண்டு. தேசியவாதத்தைக் கையாளுபவர்கள் இப்புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமானது. இவ்வகையான புரிதலற்றவர்கள் எக்காலத்திலும் தேசியவாத்தைக் கையாள முற்படக்கூடாது.
இன்றுள்ள சூழலில், தமிழ்த்தேசியவாத உணர்வையும் அதன் வெளிப்பாட்டையும் மறுக்க முடியாத நிலமை உள்ளது. இன்றுள்ள தமிழ்த்தேசியவாதக்கூறுகளின் கணிசமான பகுதி, சிங்கள பெருந்தேசியவாதத்தின் எதிர்வினையென்பதை மறுக்க முடியாது. ஆக, தேசியவாத்தை 'உள்வாங்கும்' தன்மை கொண்டதாக எவ்வாறு கட்டியமைக்க முடியும் என்ற பகுதிக்குள் புக வேண்டியுள்ளது. பன்மைத்துவக்கூறுகள் நிரம்பியதாக - போதுமானளவு ஜனநாயக வெளிகள் நிரம்பியதாக எவ்வாறு வளர்த்துச் செல்ல முடியும் என்ற வகையிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகின்றது. தேசியவாதம், தன்னைச் சிதைத்துக் கொண்டும் நகர வேண்டியதன் அவசியமும், தேசியவாத்தின் முதன்மைக் குணாம்சமே வெளியொதுக்கல் செய்வதுதான் என்பதும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டாயிற்று.
ஒருவரது அரசியல் நிலைப்பாடுகளை தெளிவாக வரையறை செய்து அணுக முடியாது. அரசியல் நிலைப்பாடுகள் நிறமாலை (spectrum) போன்றது. வெவ்வேறு கற்றைகளுக்குள் அலைந்து திரியும் தன்மை கொண்டது. தீவிர தமிழ்த்தேசிய நிலைப்பாட்டு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் எதிர் தீவிர தமிழ்த்தேசிய எதிர்ப்பு வரையறைக்குள் தம்மை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் என்ற இருவகை அரசியல் நிலைகளை வைத்துக் கொண்டுதான் சகலதையும் பார்க்க வேண்டிய துரதிஸ்டவசமான நிலையில் உள்ளோம். எவ்வாறிருப்பினும், அரசியல் அக்கறை குறைந்த - அரசியல் அக்கறை தொடர்பில் தமது நிலைப்பாடுகளை குறித்த எல்லைக்குட்படுத்திக் கொண்ட 'மூன்றாவது தரப்பு' எப்போதும் பெருமளவான எண்ணிக்கையாக இருந்து கொண்டேயிருக்கும். அதாவது, மேற்கூறிய இரண்டு தரப்புக்களையும் இரண்டு எதிரெதிர் புள்ளிகளில் நிலைநிறுத்துவோமேயாக இருந்தால் இடையில் உள்ள ஏராளமான புள்ளிகளில் அலைவுறுவோரின் எண்ணிக்கையே அதிகமானது. கறுப்பு - வெள்ளை பிரதேசங்களில் இயங்கும் - எவருடைய வெற்றியும் கறுப்பும் வெள்ளையும் அல்லாத சாம்பல் வெளியில் உள்ளவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது, தனது கருத்தியல் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையாகவே நினைக்கும் தரப்பு - சாம்பல் வெளிகளை வெற்றி கொள்வதைப் பற்றிய அக்கறையுடன் செயற்படும். அதற்கு மாறாக, வெளியொதுக்கலுடன் கூடிய மனதுடன் இயங்கும் தரப்பிற்குத் தனது கருத்தியல் சார்ந்த அக்கறையை விட - வெறுமனே தனது இருப்பு சார்ந்த அக்கறையே அதிகமானதாக இருக்கும்.
இன்று, தம்மை தமிழ்த்தேசியத்தின் காவலர்களாகவும் பிரதிநிதிகளாகவும் கருதிக்கொள்ளகூடிய பலர் மூன்றாவது வெளியை வெல்வதை விடுத்து, அவ்வெளியை முற்றாக தமிழ்த்தேசியத்தில் சட்டகத்தில் இருந்து அந்நியப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே, தேசியவாத்தின் அடிப்படைக் குணாம்சத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டே அதனை கையிலெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையான செயற்பாட்டாளனுக்கே, பல தரப்புக்களையும் வெற்றி கொள்ள வேண்டியதன் அவசியமும் - அதன் தேவையும் புரியக்கூடியதாக இருக்கும். தமிழ்மக்கள் சார்ந்து அக்கறை உள்ளவர்கள் நிச்சயமாக பல்வேறு தரப்புக்களையும் வெற்றி கொள்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் போன்று ஈழத்தமிழர்களும் - அதே பாணியில் 'வெளியொதுக்கலுடன்' கூடிய அரசியலை முன்னிறுத்தி வருவது ஆபத்தானது. முற்றுமுழுதாக தமிழ்நாட்டு அரசியலில் இருந்து வேறுபட்ட - ரத்தமும் சதையுமான அரசியல் நம்முடையது. 'வெளியொதுக்கல்' அணுகுமுறையால் நாம் எதனையும் அடைய முடியாது. எம்மிடம் இருக்க வேண்டியது மற்றைய தரப்புக்களை வெல்லும் நோக்குடன் கூடிய அணுகுமுறையே. கறாரான - அல்லது தெளிவான வரையறைகளுடன் கூடிய உரையாடல்கள் நிகழ்வது பிரச்சனையல்ல. ஆனால், அவை மற்றைய தரப்புக்களை களத்தில் இருந்து அகற்றுவதில் போய் முடிவடையக்கூடாது.
கடந்த காலங்களில் தேசியவாதம் தொடர்பான ஏராளம் உரையாடல்கள் தமிழிலேயே நடைபெற்றிருந்தது. தேசியவாதத்தின் சரி / பிழை தொடர்பாக போதுமான உரையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவே கருத வேண்டும். ஆயினும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு கருத்தியலின் உருவாக்கம் தொடர்பாகவும் நிபந்தனைகள் தொடர்பாகக விசேட கவனத்தைச் செலுத்தவில்லை. ஒரு கருத்தியலை அக்கருத்தியலின் தோற்றம் - பின்னணி - சூழல் போன்றவற்றுடன் இணைத்து பார்க்கப்பட வேண்டியது மிக அவசியமான நிபந்தனையாகும். உதாரணமாக மேற்கத்தைய இடதுசாரிகளின் தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின்னவீன நிபந்தனைகளுடன் கூடிய தேசியவாதம் தொடர்பான பார்வைகள், பின் காலனித்துவ கால பார்வைகள் என்று பலவிதமாக வகைப்படுத்த முடியும். ஈழத்தமிழ் தேசியவாதத்தின் நிபந்தனைகளை சரியாகப் பட்டியலிடும் போது - அதன் பிரயோக வடிவம் சார்ந்து சரியான வரையறைகளுக்கு வர முடியும். வெறுமனே அமெரிக்கா, சீனா, இந்தியா என்ற அரசியல் அதிகார ஒழுங்குநிபந்தனைகளை முன்வைத்து மாத்திரம் பேசுவதில் நிறைய போதாமைகள் உண்டு. அடையாள அரசியலின் எழுச்சி, பின்னவீன - பின்காலனித்துவ கருத்தியல் தொடர்ச்சி, இறையாண்மை நோக்கிய பயணம், தேசியவாதத்தின் சக பயணிகள் போன்ற பல்வேறு நிபந்தனைகளையும் இணைத்தே இன்றைய ஈழத்தமிழ்த்தேசியவாத்தின் பிரயோக வடிவத்தை மீள்வரையறை செய்ய முடியும்.