வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 30, 2009

பதிவுகளின் தொகுப்பு - 2009 டிசம்பர்

இம்மாதம் பதினோராம் திகதி அளவிலேயே நான் எனது பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். ஆயினும் ஒருபதிவுக்கு 100 இல் தொடங்கிய வாசகர் எண்ணிக்கை அவதார் தொடர்பான பதிவுடன், பதிவுக்கு 250 என்ற அளவில் காணப்பட்டது. facebook மற்றும் twitter மூலமான காட்சிப்படுத்தல்கள் இத்தொகைக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இம்மாதத்தின் இருபதாவது பதிவாக இப்பதிவு அமைகின்றது. இம்மாதம் எழுதிய பதிவுகளில் பல விடயங்கள் ஏற்கனவே எழுதப்பட்டவை. சிறிய அளவில் மாற்றங்கள் செய்து இடப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதத்தில் இருந்து மாதாந்தம் பத்து தொடக்கம் இருபது பதிவுகள் வரை மேற்கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்திருக்கின்றேன். விடயப்பரப்புக்களை இன்னும் விரிவாக்க வேண்டும். வழமையான எழுத்தாளர்களின் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற பெருவிருப்பு எனக்குண்டு. இலக்கியம் என்ற எல்லைக்குள் எழுதுபவர்களே ஏராளம் பேர் உள்ளார்கள். சிலர் அதைத்தாண்டி சமூகம், தத்துவம் என்ற எல்லை வரை செல்பவர்கள் இன்னும் சிலர். அவற்றையும் தாண்டி அபிவிருத்தி, செயற்பாடு என்ற எல்லைகளை நோக்கி போகவேண்டியது அவசியமானது. இதனைத் தொடர்ச்சியாக வலியுறுத்த விரும்புகின்றேன்.

எதிர்வரும் காலங்களில் புனைவுகளை எழுதும் எண்ணம் உண்டு. இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் புனைவுக்கும் உண்மைக்கும் இடையிலான ஊடாட்டமாக அமையும் என எதிர்பார்க்கலாம். உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு புனைவுகளைப் போல் சிறந்த ஊடகம் எதுவும் இல்லை என்றே தோன்றுகின்றது. புனைவுகளூடாக நிலைத்துவிட்ட கட்டமைப்புக்களைக் இலகுவாகக் கரைத்துவிட முடியும் என்று தோன்றுகின்றது.

இதுவரையான பதிவுகள்.

முதல் இடுகை என்ற பெயரில் இரண்டு இடுகைகளை இட்டுள்ளேன். முதலாவது ஏற்கனவேயான எனது உரையாடல்கள் தொடர்பானது. அண்ணளவாக 20 மாதங்கள் நான் வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்திய உரையாடல்கள் தொடர்பானது. மற்றையது இவ்வலைத்தளத்திற்கான அறிமுகமாக அமைகின்றது.

முதல் இடுகைக்கு முன் இடுகை
வெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு

அடுத்து நூலகம் திட்டம் தொடர்பாக நேத்ரா தொலைக்காட்சி என்னிடம் இரண்டு நேர்காணல்களை நிக்ழ்த்தியிருந்தது. அந்நேர்காணல்களின் எழுத்துவடிவங்களே அடுத்துவரும் இரண்டு பதிவுகளுமாகும்.

நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008)
நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (20.12.2008)

மார்க்சியம் தொடர்பான வாசிப்புக்களை அதிகளவில் மேற்கொண்ட காலப்பகுதியாக 2002 ஆம் ஆண்டைக் குறிப்பிட முடியும். அக்காலப்பகுதிகளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தீவிரமாக மார்க்சியம் தொடர்பாக வாசித்துக் கொண்டிருந்தேன். மார்க்சியம் எவ்வாறு வேத நூல்களைப் போல பலராலும் உள்வாங்கப்பட்டிருக்கின்றது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன். மார்க்சியம் சார்பானதும் அதன் மீதான விமர்ச்னங்கள் தொடர்பாகவும் தொடர்ச்சியான வாசிப்பு இருந்தாலும், மே 18 இற்குப் பின்னர் மார்க்சியத்தை உள்வாங்கி இடதுசாரித்துவத்தை நாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றவகையில் எவ்வாறு செழுமைப்படுத்துவது என்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினேன். அதன்வழி வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுத நினைக்கின்றேன். முதல் இரண்டு பகுதிகள் எழுதிய பின்னர் பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விரிவாக எழுதத் தொடங்கியிருக்கின்றேன். அதனால் சிறிய இடைவெளி ஏற்பட்டிருக்கின்றது.

இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 1
இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 2

அடுத்து கருத்துச் சுதந்திரம் தொடர்பான ஒரு பதிவு. முரளி அவர்கள் தனது கருத்தொன்றிற்காக அரசாங்க வேலையில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பானது.

Dr. முரளியின் பணிநீக்கம்

2007 ஆம் ஆண்டளவில் நானும் துவாரகனும் சிவதாஸ் அவர்களும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களைச் சந்தித்து உரையாடியிருந்தோம். இவ்வுரையாடல் பின்னர் துவாரகனால் நேர்காணலாக்கபட்டு காலம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாலானவை துவாரகனது கேள்விகளே. நானும் சிவதாசும் உரையாடல் தொடர்ந்து செல்வதற்கான ஊக்கியாக இருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 4

2009 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக நூலகம் தொடர்பான கட்டுரை கேட்கப்பட்டிருந்தது. சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் ஆவணப்படுத்தல் ஆகிய வெளிகள் ஊடாடும் வகையில் விரிவான கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். அதைச் சில திருத்தங்களுடன் வலைப்பதிவில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்க முடிந்தது.

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 0
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 2
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 3
சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 4

அடுத்து அண்மையில் வெளிவந்த ஜேம்ஸ் கெமரூனின் அவதார் திரைப்படம் தொடர்பான பதிவுகள். அவதார் தொடர்பான பதிவுகளை மேலும் விரிவாக எழுதிச் சென்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது. அவதார் தொடர்பான முதலாவது பதிவு அதன் அறிமுகமாக இருந்த போதிலும் இரண்டாவது பதிவு சூழலியல் சார்பான பார்வையையும் மூன்றாவது பதிவு காலனித்துவம் - பின்காலனித்துவம் சார்பான பார்வையையும் முன்வைத்திருக்கின்றது.

அவதார் (Avatar) - 1
அவதார் (Avatar) - 2
அவதார் (Avatar) - 3

December 28, 2009

அவதார் (Avatar) - 3

அவதார் (Avatar) - 1
அவதார் (Avatar) - 2

'அவர்கள் ஒரு தேசத்துள் நுழைவார்கள்
யோனிகளைப் பிளப்பதற்கான பத்திரத்துடன்

ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்

குறிகளை வெட்டும் அனுமதியுடன்..'

- கற்பகம் யசோதர


காலனித்துவம் என்பது தனியே நில ஆக்கிரமிப்புடன் மட்டும் பார்க்கப்பட முடியாதது. மூன்றாமுலக நாடுகளின் அனைத்து வாழ்வு முறைகளும் காலனித்துவ காலத்தில் மாற்றியமைக்கப்பட்டன. ஆங்காங்கே உதிரிகளாக இயற்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்த மூன்றாமுலக மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு 'தேசம்' என்னும் கருத்தியலுக்குள்ளும் அதன் முகாமைத்துவத்திற்குள்ளும் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் படிப்படியாக தம் வாழ்முறைகளையும் அறிவுப்பாரம்பரியத்தையும் இழந்து ஐரோப்பியர்களாக மாறிப்போனார்கள் - ஐரோப்பியர்களாக மாற்றப்பட்டார்கள். காலனித்துவ போராட்டங்கள் பெரும்பாலும் தந்தைமை நோக்கில் நிகழ்த்தப்பட்டவை. பின்காலனியச் சிந்தனைக்கு ஊன்றுகோலாக இருந்த ஃபிரான்ஸ் ஃபனான் இனது கருத்துக்களை ஐரோப்பிய காலனித்துவம் என்பது 'அந்நிய ஆண்களது' நில ஆக்கிரமிப்பு எதிரானது என்ற அளவில் மட்டுப்படுத்திவிட முடியும். ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலைக்காக ஆண்களை நோக்கிய பார்வையாகவே கருதவேண்டியுள்ளது. பின்காலனியச் சிந்தனையின் பிறிதொரு முக்கியமான கருத்தாளர் எட்வார்ட் சைட் ஆவார். சைட் இனது கருத்தியலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மீதான பாலஸ்தீனர்களின் துயரம் - துயரத்தில் இருந்தும் நில ஆக்கிரமிப்பில் இருந்துமான விடுதலை என்பதாக நோக்க முடிகின்றது. எட்வார்ட் சைட் இனது மேற்கிற்கு எதிரான 'கீழைத்தேயவாதக்' கருதுகோள் ஒருவகையில் 'ஐரோப்பிய ஆண்களுக்கு' எதிரான 'கீழைத்தேய ஆண்களது' கருத்தாகப் பார்க்கக்கூடியது. நிலம் என்பதைப் பெண்ணுடனும் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை ஆண்களுடனும் இணைத்துப் பார்க்கும் போது 'நிலம்' போராட்டங்களில் மௌனமாகவே இருக்கின்றது. நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக 'நிலம்' இன் குரலை நாம் ஆண் பிரதிகளில் இருந்து மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். நிலத்தின் மௌனம் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இவ்விடத்தில் காந்தியை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

காந்தி தன்னை ஆணாக உணர்வதைத் தவிர்த்தார். அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்தார் - பெண்ணாகப் பாவனை செய்து கொண்டார். அது மட்டுமல்லாது முதலீட்டியத்தின் மையப்பண்பான நுகர்வுக்கலாச்சாரத்திற்கு காந்தி எதிர்ப்புக் குறியீடாக இருந்தார். முதலீட்டியமும் சந்தை தொடர்பான கலாச்சாரமும் தந்தைமை நோக்கிலான பொருளாதார வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றது. காந்தியின் அரசியல் இதன் சகல அம்சங்களையும் எதிர்த்தது. காந்தியின் அரசியலை நாம் மேலும் விரிவாக்க முடியும். காந்தியின் அரசியல் காலனித்துவ எதிர்ப்பு, தந்தைமை ஆதிக்க எதிர்ப்பு, சூழலியல் மற்றும் வளங்கள் மீதான சுரண்டுலுக்கான எதிர்ப்பு, பால்நிலை சார் சமத்துவம், இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்று பன்மைத்துவ ஆய்வு முகங்களை உடையது. 'காலனிய எதிர்ப்பு அரசியல், தீவிர சமூக சீர்திருத்தம் இல்லாமல் மிகக்குறுகிய எல்லையில் நின்றுவிடும் என்ற முன்னுணர்வு காந்திக்கு இருந்தது. அவர் இந்திய சமூகத்தைச் சீர்திருத்த விரும்பினார். இந்திய சமூகத்தில் வேரோடியிருந்த சாதியம், சமூகப் பாலின அசமத்துவம், வெள்ளையர் ஆதிக்கம் ஆகியவற்றை ஒருங்கே எதிர்த்தார். அந்த அளவில் பின்காலனித்துவப் பெண்ணியச் செயற்பாட்டின் அரசியல் தந்திரங்களை, பெண்கள் உரிமைக்கான போராட்ட முறைகளை அவர் முன்கூட்டியே எதிர்நோக்கினார் எனலாம். அவரது அகிம்சைக் கோட்பாடு பிரிட்டிஷாரைச் சமாளிக்கும் தந்திரம் மட்டுமல்ல. அது ஆண் - பெண்ணுக்கிடையான சமபகிர்வு கொண்ட உறவின் அடிப்படை. சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பு வளையம். உணவு, இயற்கை மருத்துவம் போன்றவற்றால் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான கோட்பாடு ஆகும்.' - என்று கூறுகிறார் ரொபேர்ட் ஜே.சி.யங்

மேற்கூறிய விடயங்களில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வந்தடைய முடியும். ஆக்கிரமிப்பு - தந்தைமை ஆதிக்கம் - சூழலியல் சமநிலையைக் குலைத்தல் - காலனித்துவம் - முதலீட்டியம் - நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய புள்ளிகளுக்கிடையேயான தெளிவான கோட்டை வரைய முடிகின்ற அதே நேரம் அதற்கு எதிர்த்திசையில் ஆக்கிரமிப்பு மீதான எதிர்ப்புணர்வு - பெண்ணியல்பு - தாவரங்கள், நிலம், நீர் இணைந்த சூழலியல் சமநிலை, காலனித்துவ எதிர்ப்பு மனநிலை - சமவுடமை - தேவைகளின் அளவான நுகர்வு போன்ற புள்ளிகள் இணைந்ததான கோடொன்றையும் வரைய முடிகின்றது. இப்போது எமக்குத் தெளிவான வரைபடம் ஒன்று கிடைத்திருக்கின்றது. இவ்விடத்தில் மேற்கூறிய புள்ளிகள் சார்ந்து அவதார் திரைப்படத்தை நோக்க முடியும். இப்புவிக்கோளத் தொகுதியின் தற்போதைய நகர்வு முதலாவதாகக் கூறிய விடயங்கள் சார்ந்தது - ஐரோப்பியர்களது செயற்பாடுகள் சார்ந்தது. நகர்வு இருந்திருக்க வேண்டிய விதம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்தது - காந்தி உருவாக்க விரும்பிய உலகு சார்ந்தது. அவதார் சித்தரிக்கும் நாவிகளின் பண்டோரா கிரகத்தொகுதி நாம் தவறவிட்ட உலகாகி எம்முன் விரிகின்றது. கண்டங்கள் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு ஐரோப்பியர்களது கப்பல்கள் கிளம்பிய நேரமே இப்புவித் தொகுதி தனக்கான அழகிய வாழ்வைத் தொலைத்த முதல் கணமாகின்றது.

பண்டோராவினதும் நாவிகளினதும் வழிகாட்டும் தெய்வமாக Eywa அறியப்படுகின்றாள். பண்டோராவின் சூழலியல் சமநிலையை Eywa வே பேணுவதாக நாவிகள் நம்புகின்றார்கள். புவியில் இருந்து சென்ற விஞ்ஞானிகளின் கருத்துப்படி பண்டோராவில் உள்ள அனைத்து உயிரினங்களும் Eywa வுடன் உயிரியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. Pandora கிரகத்தொகுதி ஊதா மற்றும் நீலம் சேர்ந்த உயிரியல் இராசயனக் கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி Pandora வின் ஈர்ப்புவிசை பூமியைவிடக் குறைந்தது. சில இடங்களில் பாறைகள் அந்தரத்தில் காணப்படக்கூடியளவு குறைவான ஈர்ப்புவிசை கொண்டது. அத்துடன் வித்தியாசமான காந்தப்புலத்தால் சூழப்பட்டுள்ளது. Tree of Souls தங்களையும் Eywa பிணைத்து வைப்பதாகக் கருதுகின்றார்கள். Tree of Souls இல் இருந்து வெளிவரும் பூ போன்ற உருவமுடைய விதையை - Woodsprites ஐப் புனிதமாகக் கருதுகின்றார்கள். Hometree என்பதே நாவிகளின் வாழ்வியல் ஆதாரமாக உள்ளது. பெரியளவான இம்மரங்களுக்கு கீழே நாவிகள் வாழ்கின்றதாகக் கூறப்படுகின்றது. நாவிகளின் Omaticaya சமூகம் Omaticaya என்ற பெரிய மரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றது. அண்ணளவாக 1,500 இற்கும் மேற்பட்ட நாவிகள் Omaticaya என்ற Hometree இல் வாழ்கின்றன. ஒவ்வொரு Hometree இன் அடியிலும் Unobtainium என்ற விலைமதிக்க முடியாத தாதுப்பொருள் சேமிக்கப்பட்டிருக்கின்றது. இதைக் கொள்ளையடிப்பதே பூமியில் இருந்து வந்த மனிதர்களது நோக்கம். Mo'at என்னும் பெண்ணே நாவிகளின் ஆத்மீக ரீதியான தலைவராகச் செயற்படுகின்றார். இவரை தமது தாய்த்தெய்வமான Eywa விற்கிடையிலான பாலமாக நாவிகள் கருதுகின்றார்கள். இவரது கணவரே Omaticaya இன் தலைவர். இவர்களது மகளே Neytiri. Omaticaya சமூகத்தின் இளவரசி.

நாவிகள் மீதான ஆக்கிரமிப்பாளர்களான மனிதர்களுக்கு எதிரான போரில் நாவிகளுக்கு உதவியவர்கள் அடையாளம் சார்ந்து முக்கியமானவர்கள். ஒருவர் ஊனமானவர் Jake Sully. மற்றையவர் பெண் விஞ்ஞானி Dr. Grace Augustine. Dr. Grace Augustine மனிதர்களை விட தாவரங்களை அதிகம் விரும்புபவர் எனக்குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் ஆக்கிரமிப்பு மனநிலையில் இருந்து - தந்தைமை ஆதிக்க மனநிலையில் இருந்து விலகியவர்களே நாவிகளுக்கு உதவினார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாவிகள் உலகம் மனிதர்களது கையை விட்டுப் போன உலகத்தை எமக்கெடுத்தியம்புகின்றது. முக்கியமாக ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிறதேசங்களில் கண்டடைந்த மக்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அவர்களுக்கு ஐரோப்பியர்கள் செய்த கொடுமைகளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. இயற்கையுடன் ஒன்றிய - தேவைக்கு அதிகமற்ற நுகர்வுடன் கூடிய வாழ்வு முறையில் போட்டிகள் இருக்கவில்லை. சமத்துவநிலை பேணப்பட்டிருக்கின்றது. நாவிகளது வாழ்வும் பண்டோராவின் அமைப்பும் தற்கால வாழ்வினதும் ஐரோப்பிய மையக்கருத்தியலினதும் அதன் தொடர்ச்சியினதும் எதிர்ப்பாகிக் குறியீடாகின்றது. பண்டோரா உயிர்த்தொகுதி முன்வைக்கும் வாழ்வு முறை கீழைத்தேய மக்களுக்கு அவர்களது மூதாதையருக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றது. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமும் இயற்கை வழிபாடும் பெண்தெய்வங்கள் மீதான முதன்மைப்படுத்தலும் இதையே கூறுகின்றன. எமது மூதாதையரது தொன்மங்கள் மீதான மீள்வாசிப்பு நாம் செல்லவேண்டிய பாதையை இலகுபடுத்தும் என நிச்சயமாகவே நம்பலாம். அவ்வாசிப்பில் நாம் நிச்சயமாக Hometree ஐயும் Eywa வையும் Neytiri சந்திக்க முடியும்.


"The sky people have sent us a message,
That they can take whatever they want, and no one can stop them.

Well, we will send them a message.

You ride out as fast as the wind will carry you.

You tell the other clans to come.

You tell them Toruk Makto calls to them!

That you fly now, with me! My brothers! Sisters!

And we will show the sky people,

That they cannot take whatever they want!

And that this, this is our land!"

- Neytiri, Omaticaya Clan, Pandora

(முடிந்தது.)


December 27, 2009

அவதார் (Avatar) - 2

அவதார் (Avatar) - 1

'இயற்கைக்கு எதிராக மனிதன் அடைந்த வெற்றிகளுக்காக நாம் நம்மை அதிகமாகப் பாராட்டிக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்கிவிடுகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த விளைவுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாவது மூன்றாவது கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட நாம் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன. முதல் கட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை அவை பெரும்பாலும் நிராகரித்துவிடுகின்றன.' - ஏங்கல்ஸ்

'இந்தச் செவ்விந்தியத் தலைவன் அமெரிக்கப் பெருந்தலைவரிடம் சொல்லப்போவது, பருவங்கள் உள்ளவரை வானில் நட்சத்திரங்கள் உள்ளது போல் முக்காலமும் உண்மையாகும். உங்களால் வானத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? நிலத்தின் கதகதப்பை வாங்க முடியுமா? நீங்கள் கேட்பது எங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இந்தத் தென்றல் காற்றின் வாசமும், இந்தத் தெளிந்த நீரின் ஒளியும் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவற்றை எப்படி உங்களால் எங்களிடமிருந்து வாங்க முடியும்? இது பற்றிக் காலம்தான் சொல்ல வேண்டும். இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானவை. ஒவ்வொரு ஊசி இலையின் பளபளப்பும், கரைகளின் மணலும், அடர்ந்த காடுகளின் பனி மூட்டமும், வண்டுகளின் ரீங்காரமும் எங்களுக்குப் புனிதமானவை. நெஞ்சை விட்டு அகலாதவை.'
- சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..


ஐரோப்பியர்களுக்கு இயற்கை எப்போதும் நண்பனாக இருந்ததில்லை. அவர்களும் இயற்கையைத் தம் நண்பனாகக் கருதியதில்லை. இயற்கையை வென்று வாழ்வதே அவர்களது வாழ்க்கை முறையாக இருந்தது. இயற்கையை வென்று வாழும் நோக்கிலான வாழ்க்கைமுறையே அவர்களை அதீதமான தொழில்நுட்பப் பாவனையாளர்களாக்கியது. இவ்வாழ்வுமுறை ஐரோப்பியர்களை கருவிகளை மையப்படுத்திய அதிகாரவர்க்கத்தையும் அதன்மூலமான சமூக அதிகாரப்படிநிலைகளையும் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியே ஐரோப்பியர்களது இன்றைய சந்தையைக் கையகப்படுத்தும் முதலாளித்துவ பொருளாதார முறை என்பது. சந்தை மையப் பொருளாதார முறையின் அடிநாதமாக விளங்குவது போட்டியும் கையகப்படுத்துவதுமே. இயற்கை மீதான பற்றின்மையும் போட்டியுமே அவர்களை ஐரோப்பியக் கண்டங்களில் இருந்து பிற கண்டங்களை நோக்கிச் செல்ல வைத்தது எனலாம்.

தென்னமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களைச் சார்ந்த மக்களது வாழ்க்கை முறை ஓரளவு இயற்கையுடன் ஊடாடிய வாழ்க்கைமுறையாக இருந்தது. இயற்கை அம்மக்களின் நண்பனாக இருந்தது. இயற்கையை அவர்கள் தெய்வமாகக் கருதினார்கள். அவர்கள் தம்மை இயற்கையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மாறாகத் தம்மை இயற்கையின் ஒருபகுதியாகவே கருதினார்கள். இதனால் அவர்கள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவர்களால் ஐரோப்பியர்களை வெல்ல முடியாமல் போனது. வட அமெரிக்காவின் செவ்விந்தியர்களும் அவுசஸ்திரேலியாவின் பூர்வகுடிகளும் காலனித்துவத்தால் இவ்வுலகில் இருந்து அவர்களது அடையாளங்கள் களையப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டார்கள். தென்னமரிக்க, ஆபிரிக்க, ஆசிய கண்டங்கள் காலனித்துவத்திற்கு எதிரான நீண்டகாலப் போரைச் செய்ததன் மூலம் நிலரீதியான ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றன. ஆயினும் கருத்தியல் ரீதியான மேலாண்மையில் இருந்து இன்றுவரை அவர்களால் விடுபட முடியவில்லை. கருத்தியல் மேலாண்மையை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் ஐரோப்பியர்கள் இன்றுவரை நிறுவிக்கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையில் காலனியாதிக்கம் இன்றுவரை தொடர்வதாகவே கருத வேண்டியுள்ளது.

முதலீட்டியத்தின் அடிப்படையான அதீத நுகர்வுக்கலாச்சாரமும் இயற்கையை மீறிய அபிவிருத்திகளும் ஐரோப்பியர்கள் கற்றுக்கொடுத்தவைகளே. காலனியாதிக்கத்தின் போது ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிரதேசங்களில் இருந்து நினைத்துப் பார்க்க முடியாதளவு வளங்களைக் கொள்ளையடித்துத் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். அதையே காலனியாதிக்க மக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இதன் தொடர்ச்சியில் முதலீட்டியமும் நுகர்வுக்கலாச்சாரமும் பெருமளவுக்கு வளர்ந்தன. இவ்வளர்ச்சி என்பது இயற்கையை மீறியே உருவாக்கப்பட்டது. அதன் விளைவே இன்றைய சுற்றுழ்சூழல் பிரச்சனைகளும் மனித அழிவுகளுமாகும். இன்று இயற்கை பற்றிய பார்வைகள் மாறிக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். தத்துவப்பரப்புக்களில் இயற்கையுடனான உரையாடலை மனிதன் நிகழ்த்த முற்படுவதை நாம் காண்கின்னோம்.

அவதார் திரைப்படம் ஒருவகையில் காலனித்துவ காலப்பகுதியை மீள்வாசிப்புச் செய்கின்றது. பண்டோரா கிரகத்தைச் சேர்ந்த நாவிகளின் ஊடாக நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த எம்மூதாதையரைக் காணமுடிகின்றது. எமது மூதாதையர் ஆக்கிரமிக்கப்பட்ட வேதனைமிகு நிகழ்வைக் காண முடிகின்றது. ஐரோப்பியர்கள் எம்மைச் சிக்கிச் சின்னாபின்னமாக்கியதை எம்மால் காணமுடிகின்றது. நாவிகள் மனிதர்களை வென்றபோது தோற்றுப்போன எம் மூதாதையர்கள் சார்பாக நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். ஐரோப்பியர்கள் சென்றபோது விட்டுச் சென்ற அனைத்தையும் நாம் எம்கூடவே வைத்திருக்கின்றோம். எம்மால் இன்றும் எமது மூதாதையர் தொலைத்த வாழ்வை மீளக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துபெற்ற அனுபவங்களூடான அறிவைக்கூட நாம் தொலைத்துவிட்டு ஐரோப்பிய அறிவை எமது மூளைகளில் சுமந்து திரிகின்றோம். இன்று பிரதேச ரீதியான அறிவுகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

பண்டோரா கிரகத்து நாவி மக்களது இயற்கையுடனான தொடர்பாடல்திறன் மனிதன் நினைத்துப் பார்க்க முடியாதளவு அதிகமானது எனக்கூறப்படுகின்றது. அதனாலேயே மனிதன் நாவிகளைத் தாக்குவதற்கு அஞ்சினான். பண்டோராவில் காணப்படும் மிருகங்களுக்கும் நாவி மக்களுக்கும் கொண்டையின் முடிவில் காணப்படும் உயிரியல் ரீதியான அங்கம் இருவரையும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள வைக்கின்றது. அவ்வாறே தாவரங்களும் நாவிகளும் உயிரியல் ரீதியான பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றார்கள். இது இயற்கைக்கும் நாவிகளுக்கும் இடையிலான தொடர்பாடலைக் காட்டுவதற்கான குறியீடாகின்றது. இவ்வாறாக நாவிகளை இயற்கையின் அங்கமாகக் காட்ட திரைப்படமெங்கும் அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருக்கின்றது. காடு நாவிகளின் நண்பனாக இருக்கின்றது. நாவிகள் காட்டில் உள்ள ஒரு மிருகத்தையேனும் தேவைக்கதிகமாகக் கொல்வதில்லை. தமது உணவுத் தேவைகளுக்காகக் கொல்லும்போதும் அவ்விலங்கின் உயிர் இயற்கையுடன் கலப்பதாகவே கருதுகின்றார்கள். மேலும் இக்கிரகம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்படாத உயிரியல் - தாவரவியல் தொகுதியாக இயங்குகின்றது எனக் கூறப்படுகின்றது. இத்தொகுதியைப் பிரித்து நோக்க முடியாது. ஒருவிதத்தில் ஒன்றனது அங்கமாக இன்னொன்று எனக்கிரகத் தொகுதி முழுவதும் பிணைக்கப்பட்டிருக்கின்றது. அது bio-botanical neural network எனக்குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாகவே நாவிகளின் விரோதியாக இருந்த நாய் மாதிரியான உருவம் கொண்ட விலங்குகள் கூட இறுதியில் ஒன்றுபட்டு மனிதர்களை எதிர்க்கின்றன.

பண்டோரா கிரகத் தொகுதி திரையில் விரியும் போது தவிர்க்க முடியாமல் மிஷேல் ஸெர் உம் புரூனோ லத்தூரும் ஞாபகத்தில் வருகின்றார்கள். அவர்களது கனவுலகு பண்டோராவாக்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கத் தோன்றுகின்றது. இயற்கை மற்றும் புற - உலகு என்ற வேறுபாடுகளைக் களையும் நோக்கிலானவை இன்றைய தத்துவத்தின் போக்குகள். நாகர்ஜுனனின் மொழியில் சொல்வதானால் ' "இயற்கை" என்பதான "புற - உலகும்" மனிதர்களின் "அரசியல்-சமுதாய உலகும்" ஒரே வலைப்பின்னலில் இயங்குபவை என்று லத்தூர் கூறுகிறார்'. மேலும் 'அறிவு என்பதை, புற-உலகை வென்று கைப்பற்றும் விஞ்ஞானமாக மாத்திரமே எண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்டிருக்கிறோம். ஆனால், இந்தப் புற-உலகு என்ற வரையறைக்கு சமுதாய-ஒப்பந்தத்தில் இடமில்லாமல் போகும்நிலை வந்திருக்கிறது. அதாவது, இந்தச் சமுதாய-ஒப்பந்தத்தின் விரிவாக்கத்தின் போக்கில் இந்தப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறோம். இந்த நிலையில் நாம் விட்டுவைத்திருப்பதே இயற்கை என்பதாகியிருக்கிறது! இயற்கைமீது நாம் பெற்ற வெற்றி ஒருவாறாக நம்முடைய எல்லைகளை, இயற்கையில் நாம் தங்கி-நிற்கிறோம் என்பதை, தெளிவாக்கியிருக்கிறது. இந்த நிலையிலாவது இயற்கையைத் தன்னிலையாக அங்கீகரிக்க வேண்டும், அது நம்முடன் இணைந்தும் எதிர்த்தும் செயல்பட வல்லது எனபதை அங்கீகரிக்கும் ஓர் புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' மேலும் 'சொல்லப்போனால், இயற்கையை வெல்கிற வல்லமையையே வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது மனிதஇனம். இயற்கையை வென்று, கைப்பற்றி, அதற்கு ஏதும் அளிக்க முடியாமல் இருப்போரை அடுத்துண்ணிகள் (parasites) என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார் ஸெர். இந்த அடுத்துண்ணி-நிலையைக் கடக்க வேண்டி, இயற்கை-சமுதாயம் என்ற பிளவைக் கடக்கிற புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' என்று கூறிச் செல்கின்றார் நாகர்ஜுனன்.

ஒருவகையில் பார்த்தால் புருனோ லத்தூரும் மிஷேல் ஸெர் உம் இன்றைய உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கண்டவற்றைக் கொண்டு தனது பண்டோரா என்ற கற்பனைக்கிரகத்தை ஜேம்ஸ் கெமரூன் உருவாக்கியிருப்பது ஆச்சரியமாகவிருக்கின்றது. இயற்கை, சுற்றுச் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான இன்றைய பிரச்சனைகளுக்கு ஐரோப்பியர்களே மூல காரணமாகின்றனர். இன்றவர்கள் இயற்கையை மீறிய தம் வாழ்வை நிராகரித்து, தாம் காலனித்துவப்படுத்திய இயற்கையுடன் ஒன்றிய வாழ்வைப் பரிந்துரைக்கின்றார்கள். இதுவே வாழ்வின் முரண்நகையாகும். பூமியில் உள்ள வளங்களை இழந்து புதிய வளங்களைத் தேடியே மனிதர்கள் பண்டோரா கிரகத்திற்கு வருகின்றார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் மனிதகுலம் இன்று சென்றுகொண்டிருகும் தவறான பாதையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதோடு தான் விட்ட தவறின் ஊடான இலட்சிய உலகாகப் பண்டோராவைக் காட்சிப்படுத்துகின்றது.

'வெள்ளையனின் பசி இந்த நிலம் அனைத்தையும் விழுங்கிவிட்டு வெறும் பாலைவனத்தை மட்டுமே விட்டுச் செல்லப் போகின்றது. வெள்ளையனின் நகரங்களில் அமைதியே கிடையாது. இலைகள் காற்றில் அசைவதால் ஏற்படும் ஒலியும், வண்டுகள் பறப்பதால் அவற்றின் சிறகுகள் ஏற்படும் ஒலியும் அங்கே கேட்பதில்லை. குயில்களின் கூவுதலையும், தவளைகளின் உரையாடல்களையும் கேட்க முடியாத இடத்தில் என்னதான் இருக்கிறது? தாமரைக் குளத்தின் மீது தவழ்ந்து வந்து முகத்தில் வீசும் தென்றலும், மழைக்குப் பின் மண்வாசனையுடன் வரும் காற்றும், வேப்பம் பூ மணத்துடன் வரும் காற்றும் எங்களுடன் மிகவும் பிடித்தமானவை. இந்தக் காற்று செவ்விந்தியனுக்கு விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம். இந்தக் காற்றைத்தான் விலங்குகளும் செடி கொடிகளும், மனிதர்களும் சுவாசிக்கிறார்கள். பிறந்த குழந்தை தனது தாயை நேசிப்பது போல் நாங்கள் இந்தப் பூமித்தாயை நேசிக்கிறோம்.'
-சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..

(இன்னும் வரும்)


அவதார் (Avatar) - 1

கடந்த வாரத்தில் ஜேம்ஸ் கெமரூன் இன் 'அவதார் (Avatar)' திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது. வெகுஜன சினிமாவின் இயக்குநர்களில் கெமரூன் முக்கியமானவராகையால் அவதார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பிரமிப்பூட்டும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் அவதார் திரைப்படத்தின் தொழில்நுட்பத்தை முன்வைத்து பலவிதமான விமர்சனங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தையும் பிரமாண்டத்தையும் மையப்படுத்தி அவதார் 'அம்புலிமாமா' ரகக் கதை என்ற கருத்தே பல இடங்களிலும் கூறப்படுகின்றது. ஜெயமோகன் மாத்திரம் அதன் பிறிதொரு பரிணாமம் சார்ந்து சிலவிடயங்களைக் கூறியிருந்தார். ஆயினும் ஜெயமோகன் மேலதிகமாகப் பலவிடயங்களைக் கூறியிருக்கலாம். 'ஐரோப்பமைய வாதம்' என்னும் கருதுகோளைத்தாண்டிப் பலவாசிப்புக்களை அவதார் இல் இருந்து மேற்கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது.

இன்று சூழலியல் நெருக்கடிகள் கவனம்பெறத் தொடங்கியுள்ளன. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வலுப்படுத்தும் நோக்கிலான கருத்தியல்கள் மேன்மைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருக்கின்றது. இத்திரைப்படம் ஒற்றைவாசிப்பிற்கு உட்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பன்முக வாசிப்பை மேற்கொள்வதற்கான அனைத்துவெளிகளையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது. உதாரணமாக ஐரோப்ப மையவாதம் - காலனித்துவம் - பின்காலனித்துவம் என்னும் தொடர்ச்சியில் இத்திரைப்படத்தை வாசிக்க முடியும். அவ்வாறே ஆக்கிரமிப்பு - ஏகாதிபத்தியம் என்னும் தொடர்ச்சியிலும், சூழலியல் - இயற்கை வழிபாடு என்னும் தொடர்ர்சியிலும் தந்தைமைச் சமூகம் - சூழலியல் பெண்ணியம் என்னும் தொடர்ச்சியிலுமென பலதளங்களில் அவதாரை முன்வைத்து வாசிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

அவதார் இன் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போமேயானால், இக்கதை 2154 ஆம் ஆண்டளவில் Pandora என்னும் கிரகத்தில் நிகழ்கின்றது. அங்கே 'நாவி' என்ற மக்கள்வகையினர் வாழ்கின்றார்கள். நாவிகள் மனிதர்களை விட உயரமானவர்கள் மட்டுமல்லாது கூரிய அறிவுத்திறன் கொண்டவர்கள். அதுமட்டுமல்லாது இயற்கையுடனான அவர்களது வாழ்வு அவர்களுக்கு இயற்கையுடனான ஊடாட்டத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. மனிதர்களுடன் ஒப்பிடும் போது இயற்கையுடனான அவர்களது தொடர்புகொள்ளும் திறன் பலமடங்கு என்று கூறப்படுகின்றது. Pandora என்னும் கிரகமே அனைத்துடனும் தொடர்பாடக்கூடிய கட்டமைப்பாக இயங்குகின்றது. உயிரியல் ரீதியாக அனைத்தும் சிந்தனைத்திறன் மிக்கதாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. நீலநிற மேனி கொண்ட நாவிகள் இயற்கையையும் பூமியையும் குறியீடுகளாக்கித் தாய்த்தெய்வமாக வழிபடுகின்றார்கள்.

2154 அளவில் Pandora இன் சிலபகுதிகளைப் பூமியில் இருந்து சென்ற மனிதர்கள் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். அக்கிரகத்தில் உள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கில் நாவிகளைத் துரத்தியடிப்பதே மனிதர்களின் நோக்கமாக உள்ளது. அக்கிரகத்தில் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை. செயற்கை முறையிலேயே சுவாசிக்கின்றார்கள். ஆக்கிரமிக்கும் நோக்குடன் சென்ற மனிதர்கள் பிரமாண்டமான தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆய்வுகூடங்களில் வாழ்கின்றார்கள். செயற்கையாக நாவிகள் உருவத்திலான உடல்களை உருவாக்கி அதை மனிதர்களின் மூளைகளை வைத்தே இயக்குகின்றார்கள். இதன்மூலம் நாவிகளுடன் ஊடாடி அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது மனிதர்களின் முக்கிய நோக்கமாகின்றது. அதன்மூலம் நாவிகளை வென்று வளங்களைச் சூறையாடுவதை இறுதி இலக்காகக் கொண்டுள்ளார்கள். ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட மனிதர்கள் குழுவில் ஏராளமான ஆயுதங்களைக் கொண்ட படையணிகளும் அதற்கான ஆயத்தப்படுத்தல் மேற்கொள்ளும் நோக்கிலான ஆய்வுகூடமும் காணப்படுகின்றது. Colonel Miles Quaritch என்பவர் பாதுகாப்பு படையணிகளின் தலைவராக இருக்கின்றார். Dr. Grace Augustine என்னும் பெண் ஆய்வாளர் ஆய்வுகூடத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கின்றார். நாவிகள் தொடர்பாக அவர்களது உயிரியல் பண்புகள் சார்ந்த ஆய்வுகளே இவரது முக்கிய கருப்பொருளாகின்றது.

Jake Sully என்னும் போலியோவால் பாதிக்கப்பட்டுப் பூமியில் வாழ்ந்துவரும் இளைஞனின் சகோதரன் பண்டோராவில் இருக்கும் ஆய்வுகூடத்தில் பணியாற்றியிருக்கின்றான். அவன் இறந்து விட்டதனால் அவனது மரபணுக்களைவைத்து உருவாக்கப்பட்ட நாவி உடலை இயக்குவதற்காக Jake Sully பூமில் இருந்து பண்டோரா ஆய்வுகூடத்திற்கு வருகின்றான். நாவி உருவத்தில் பண்டோராக் காடுகளுக்குச் சென்ற Jake Sully ஐ நாவிகளின் இளவரசி Neytiri காப்பாற்றுகின்றாள். அதன் மூலம் Jake Sully இற்கும் Neytiri உறவுவலுப்படுகின்றது. இவ்வுறவின் மூலம் நாவிகளைப் பற்றிய தகவல்களை அறிந்து Colonel Miles Quaritch இற்கு Jake Sully சொல்லிக்கொண்டிருக்கின்றார். நாவிகளைப் பற்றி அறியமுடியாமல் இருந்த மனிதர்களுக்கு Jake Sully இன் தகவல்கள் பெருமளவில் உதவிபுரிகின்றன. மனிதர்களுக்குத் தேவையான கனிமம் நாவிகளின் 'தாய்வீடு' என்னும் மரத்தின் அடியில் காணப்படுகின்றது. அதை நாவிகள் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை Jake Sully, Colonel Miles Quaritch இற்குத் தெளிவுபடுத்துகின்றார். Colonel Miles Quaritch அதைச் செவிமடுக்காமல் நாவிகளின் ஆதாரமான அம்மரத்தை அழிக்கின்றார். ஒருகட்டத்தில் Jake Sully நாவிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதை olonel Miles Quaritch அறிந்து கொள்கின்றார். இதன்பின்பு Jake Sully சிறைவைக்கப்படுகின்றார். அதன்பின்பு அச்சிறையில் இருந்து தப்பும் Jake Sully யும் Dr. Grace Augustine உம் நாவிகளுடன் சேர்ந்து மனிதர்களை வெற்றிகொள்வதே அவதார் திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.

அவதார் திரைக்கதை மிக எளிய கதையாகத் தோன்றுகின்ற போதிலும் இக்கதையை நாம் பல்வேறு கோணங்களில் வாசிக்க முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, இயற்கை சார்பாக, காலத்தினித்துவ எதிர்ப்பு சார்பாக, தந்தைமைச் சமூகம் மீதான எதிர்ப்புணர்வு சார்பாக, சூழலியல் பெண்ணியம் சார்பாக, கீழைத்தேய வாதம் சார்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சார்பாக என்பதாகப் பல்வேறு தளங்களில் குறியீட்டு ரீதியாக அணுகமுடியும். அவ்வகை வாசிப்புக்களை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)


December 26, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 4

4. தகவற் சேமிப்பில் இருந்து ஜனநாயக ரீதியான உரையாடலை நோக்கி...

கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளும் மூன்று வெவ்வேறு விடயங்களுடன் சிறுபான்மைச் சமூகம் கொள்ளும் உறவு மற்றும் ஆவணப்படுத்தல் என்ற விடயங்களைப் பேசியுள்ளன. முதலாவது ஐரோப்ப மைய வாதமும் அதன் வழியேயான சமூக அறிவும் அதன் பின்னர் ஐரோப்ப மையவாதத்தை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மைக் கதையாடலான, பின்காலனித்துவக் கதையாடல் தொடர்பாக சிறுபான்மைச் சமூகங்களின் ஆவணப்படுத்தல் தொடர்பாக பேசியது. இரண்டாவது இலங்கை என்ற பரப்பிற்குள் மொழிரீதியாகச் சிறுபான்மையாக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்கள் தொடர்பாகவும் அதனுடன் தொடர்புள்ள சிறுபான்மை ஆவணங்கள் என்ற அளவில் பேசியது. மூன்றாவதாக இலங்கைத் தமிழ் அடையாளம் என்ற பெரும்பரப்பு தன்னுள் உள்ளடக்கிய சிறுபான்மைத் தமிழ்ச்சமூகங்கள் தொடர்பாகவும் இலங்கைத் தமிழ் அடையாளம் சார்ந்தான ஆவணப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் நூலகத்திட்டத்தின் நகர்வுகள் சார்ந்தும் பேசியது.

சமூகத்தை ஆவணப்படுத்துவதன் தேவை தொடர்பாகப் பல்வேறுபட்ட பார்வைகள் இருப்பினும் இக்கட்டுரையில் ஆவணமாக்கலுடன் சிறுபான்மைச் சமூகங்களையும் மாற்றுக்குரல்களையும் தொடர்படுத்தும் விடயங்களே கூறப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆவணப்படுத்தல் என்பது 'வரலாறு' என்ற பதத்தின் அளவே சுருங்கிவிடுகின்றது. தனியே வரலாறு எழுதுதல் அல்லது கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளல் என்பதுடன் இக்கட்டுரை முற்றுப்பெறவில்லை. நான்காவதாக ஆவணப்படுத்தல் என்பதையும் சமூக அறிவு என்பதையும் அதைப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது தொடர்பாகவும் வரலாறு அல்லது தொல்லியல்/கடந்தகால மோகம் என்பதற்கான குறுகிய பார்வையை தரும் நோக்கம் இக்கட்டுரையில் இல்லை. மேற்கூறிய மூன்று பகுதிகளிலும் அவற்றின் மீள்வாசிப்புத் தொடர்பான விடயங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும் நான்காவது பகுதியில் இணைய நூலகத்தின் மூலமான ஆவணப்படுத்தலின் இதர சாதக நிலைகளையும் இக்கட்டுரை கூற நினைக்கின்றது.

தகவல் சேமிப்பு என்பதற்கப்பால் அவற்றைப் பொதுக்களத்தில் காட்சிப்படுத்துவது என்பதும் அதன் மூலம் உரையாடல்களைச் சாத்தியப்படுத்துவதும் (தகவல் சேகரத்தில் இருந்தான நம்பகமான உரையாடல்கள்) அதன்மூலம் உருவாக்கப்படும் அறிவுத்திரட்சியும் செயற்பாட்டுக்களத்தை ஆரோக்கியமான போக்கில் செலுத்தவல்லவை. சமூக மாற்றம் என்பதை உருவாக்க நினைக்கும் தரப்பினரும் அதிகார மேலாண்மையினால் சிக்குண்ட சிறுபான்மை மற்றும் மாற்றுக் குரல்களும் இவ்வகையான தேவைப்பாடுகளை உணர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

4.1 தகவல் சேமிப்பும் உரையாடல் களமும்.
சமூகம் பிரசவித்த அறிவும் தகவல்களும் அவற்றின் தேவை காரணமாக தொடர்ச்சியாகப் பல்வேறு விதங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. பாறைகளில் கல்வெட்டுக்களாகச் செதுக்கப்பட்டும், ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டும் பிற்காலத்தில் பத்திரிகைகளில் அச்சிடப்பட்டும் அறிவுப்பாரம்பரியம் பேணப்பட்டது. இவை தொட்டுணரக்கூடிய பொருள்களில் சேமிப்பாக இடம்பெற்றன. அவ்வகை அறிவுகள் அதிகாரவர்க்கத்தின் கைகளில் கட்டுண்டிருந்தன. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அறிவை கதைகளாகவும் சடங்காக்கல் மூலமும் வாய்வழிப் பாடல்கள் மூலமும் இன்னும் மௌனத்தின் மூலமுமே பேணிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதிகார வர்க்கத்தின் கைகளில் முழு அதிகாரமும் கையகப்பட்டிருந்ததே இதற்கான காரணமாகும்.

ஆயினும் இன்று தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கும் வெளிகளை ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகங்கள் தமது அரசியல் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் ஒவ்வொருவருக்கும் அவர்களது இடத்திலேயே நூலகங்களையும் உரையாடல்களங்களையும் கொண்டுவந்து சேர்த்து விட்டிருக்கின்றது. செயற்பாடு என்னும் விடயம் வேறுதளத்தில் அமைந்திருக்கும் போதிலும் அதிகாரவர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மையை தகர்க்கும் கருத்தியல் ரீதியான அறிவுழைப்பிற்கான சாத்தியங்களும் சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் குரல்கள் தமது குரலை சுலபமாகப் பதிவுசெய்யவுமான சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தொழில்நுட்பம் உலகமயமாதலை இலகுபடுத்தி உதவியிருக்கின்றது என்ற வாதம் ஒடுக்கப்படும் சமூகங்கள் சார்பாக முன்வைக்கப்பட்டாலும் உலகமயமாகும் ஐரோப்ப மைய உற்பத்தி அறிவை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு வழங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழில்நுட்பமும் உலகமயமாதலும் பின்காலனித்துவ காலத்தின் நுண்வடிவக் காலனியாதிக்கம் என்ற கருத்தை முற்றாக மறுப்பதற்கில்லை. ஆனால், அதை எதிர்ப்பதற்கான சாத்தியத்தையும் அவ்வெளி தன்னகத்தே கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
அதே நேரம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பின்பு சிறுபான்மை மக்கள் மீதான உரையாடல்கள் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் தனியொருவருக்குள் கட்டுண்டு இருந்த அதிகாரக்குவிமையங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. மூடுண்ட செயற்பாட்டுக்களங்களைத் தொழில்நுட்பம் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கின்றது. ஓரிருவரின் கைகளில் கட்டுண்டு இருந்த ஊடகவெளி இன்று சகலருக்கும் திறந்துவிடப்பட்டிருக்கின்றது. சகலரும் உரையாடுவதற்கான களம் திறந்துவிடப்பட்டிருக்கின்றது.

4.2 நம்பகமான உரையாடல் களனைச் சாத்தியமாக்கல்.
பிராங்பேர்ட் பள்ளியின் மார்க்சிய அறிஞர் ஹேபர்மாஸ் கூறும் 'பொதுக்களம்' (Public Sphere) என்பது 'ஜன்நாயக் கோட்பாட்டின் மீது அமைந்திருப்பது அவசியம் என வலியுறுத்தும் வேளையில் அதில் தனி நபர்கள் கூடி எவ்வித பலவந்தமுமின்றி வெளிப்படையாக விசயங்களை விவாதிப்பார்கள்' என்கின்றார் இரா. முரளி. மேலும் 'பொதுக்களத்தில் நடைபெறும் விவாதங்கள் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்கின்றார். பொதுக்களங்களே சமூக விமர்சன அறிவை வளர்க்கும் பூமி ஆகும்.' என்கின்றார். நூலகத்திட்டம் 'இலங்கைத் தமிழ்' தொடர்பான ஆவணப்படுத்தல் செயற்பாடு என்ற வகையில் அதன் மூலமான தகவல் சேமிப்பில் இருந்து தமிழ்ச்சமூகங்களுக்கிடையில் பொதுக்களத்தை உருவாக்க முடியும்.

உரையாடல்களின் ஜனநாயகத்தன்மை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு நம்பகத்தன்மையும் முக்கியமானவை. பொதுக்களங்களிலான உரையாடல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நூலகத்திட்டத்தில் காணப்படும் தகவல் சேகரிப்பைப் பயன்படுத்த முடியும். நூலகம் 'இலங்கைத் தமிழ்' பிரதேச எல்லைகளைத் தாண்டி விரிவடைந்திருப்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டினேன். அதை இன்று பலவகைகளிலும் தொழில்நுட்பம் இணைத்துக் கொண்டுள்ளது. ஹேபர்மாசும் 'தொழில்நுட்பப் புரட்சி என்பது பொதுக்களங்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளன. அதை ஜனநாயக செயல் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பொதுக்களத்தின் பலனை உருவாக்கும்' என்கின்றார் ஹேபர்மாஸ். நம்பகமான உரையாடல்கள் சமூக அக்கறையுள்ள பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும் சாத்தியமுள்ளவை. அவை உருவாக்கும் சமூகப் புரிதலிலும் அறிவுத்திரட்சியும் சமூக மாற்றம் தொடர்பாக உதவக்கூடியவை. 'சமூக ஒப்புதல் என்பது, புரிதலின், பகிர்வின் மீது அமைவது. இப்புரிதலை உருவாக்குவது எது என்று பார்த்தால் அது தொடர்பறிவே (Communicative Rationality) என்பது புரியும்' என்கின்றார்.

ஹேபர்மாஸ் தனது 'பொதுக்களம்' என்னும் கருத்தியலுக்கு தகவலையே அடிப்படையாகக் காண்கின்றார். தகவலில் இருந்து ஜனநாயகம் நோக்கிச்செல்வது அவரது பாதை. ஹெபர்மாஸ் கூறும் 'இலட்சியப் பேச்சுச் சூழல்' என்பதிலேயே சரியான ஜனநாயகபூர்வமான உரையாடலை நிகழ்த்த முடியும். ஃபூக்கோ கூறும் உரையாடல் என்பது தொடர்புச்செயலின் அடுத்த கட்டவடிவம் என்பது ஹேபர்மாசின் நம்பிக்கை. ஐரோப்பிய சூழலை அதிலும் குறிப்பாக மேற்கு ஜேர்மனியின் சூழலை மையமாக வைத்ததே ஹேபர்மாசின் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. மூன்றாமுலக நாடுகளின் சூழல் அதைத்தாண்டி வேறு சூழலில் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை உரையாடல் களத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் தகவல் சேகரங்களை தன்னுள் கொண்டியங்கும் எனக்கூற முடியும். இன்றைய சூழலுக்குத் தேவையான பங்கேற்பு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை நூலகத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்படமுடியும். உரையாடலில் நம்பகத்தன்மை இருப்பின்போது மட்டுமே ஜனநாயகத்தன்மை உருவாக முடியும். அவகையில் உரையாடலின் நம்பகத்தன்மையை ஏற்கனவேயான ஆவணங்களையும் எழுத்துக்களையும் பரிந்துரைப்பதன் ஊடாக ஏற்படுத்த முடியும். தமிழில் அச்சுவடிவில் ஏராளமான உள்ளடக்கங்கள் உள்ள போதிலும் மின்வடிவில் அதாவது இணையம்மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதான உள்ளடக்கங்கள் அச்சுவடிவில் காணப்படும் உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவானவை. நம்பகமான உரையாடலின் சாத்தியத்திற்கு மின்வடிவ உள்ளடக்கங்களின் தேவை அதிகமானது. அவ்வகையில் ஏற்கனவேயான அச்சுவடிவ உள்ளடக்கங்களை மின்வயப்படுத்தும் போது மட்டுமே மின்வடிவ உள்ளடக்கங்களை அதிகரிக்க முடியும். அதுவே நம்பகத்தன்மையான உரையாடலையும் அதன் மூலமான ஜநாயகபூர்வமான உரையாடல் களனையும் சாத்தியப்படுத்தும் எனக்கூற முடியும்.

4.3 உரையாடலுக்கான தொழில்நுட்பச் சாத்தியம்.
இணையவழியான உரையாடலுக்கான சாத்தியத்தை தொழில்நுட்பம் இன்றைக்கு நினைக்க முடியாத அளவிற்குச் சாத்தியமாக்கியுள்ளது. வழங்குபவன், பெறுபவன் என்ற இடைவெளி பெரும்பாலும் அழித்துவிடப்பட்டிருக்கின்றது. பார்வையிடுபவனே பங்காளிப்பாளனாகிய திட்டங்கள் பெரும்வெற்றி பெற்றிருக்கின்றன. நேத்ரா தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலின் சசீவனால் கீழ்வருமாறு கூறப்படுகின்றது. 'வெப் 2.0 இனது வரவு இணையத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கிய நிகழ்வு. வழங்குபவன் X பார்வையிடுபவன் என்ற துவித எதிர் இருமை நிகழ்வின் உடைவும், பார்வையிடுபவன், பங்களிப்பவன் என்ற நிலை நோக்கிய நகர்வும் உள்ளடக்கங்களின் கட்டுமானங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாது இணையப்பாவனையாளர்கள் அனைவரையும் பங்களிப்பாளர்களாக மாற்றியது. தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்வற்றை எளிய நிலைக்கு கொண்டுவர உதவியது. அதுமட்டுமல்லாது பாவனையாளர்களை பங்களிப்பாளர்களாக மாற்றிய கட்டத்தில் பாவனையாளர்களின் பாவனையின் இலகுத்தன்மையை கட்டற்றுச்செழுமைப்படுத்தியது. இவ்விடத்தில் நூலகம் 2.0 என்ற கருத்துருவாக்கத்தை நூலகத்திட்ட இணையத்தளத்தில் சாத்தியப்படுத்துவதென்பது அதன் பாவனையாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கனவே அதன் சில கட்டங்களை சாத்தியப்படுத்தியுள்ள போதிலும், அதன் முழுமையை அடையும் எமது முன்னெடுப்புகள் தொடர்ந்தவாறேயிருக்கின்றன.'

அத்துடன் தகவல் பெருக்கமும் உரையாடல்களும் இணையத்தில் முக்கியபங்காற்றுகின்றன. மீடியா விக்கி போன்ற மென்பொருள்களும் பேஸ்புக் போன்ற நண்பர்களுக்கான தொடர்பாடல் வலையமைப்புகளும் இன்னும் ட்விட்டர் போன்றவையும் இணையவழியாக மனிதர்களை நெருக்கமாக்கி உரையாடலை அதிகப்படுத்தியிருக்கின்றது. தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய விடயங்களே இவையெனலாம். பின்னவீன உலகம் தகவல் சமூகமாக இனங்காணப்படுகின்றது. பின்னவீனத்துவக்கருத்தியல் 'உண்மை'களை 'மொழி'க்கூடாகவே பார்த்தது. ஃபூக்கோ கூறினார் 'உண்மை என்று எதுவும் இல்லை. மொழி மட்டுமே அங்குள்ளது. நாம் மொழியைப் பற்றிப் பேசுகின்றோம். மொழிகளுக்கிடையில் பேசுகின்றோம்.' ரோலன்ட் பார்த் கூறினார் 'மொழி அப்பாவித்தனமானது அல்ல'. மொழி மையப்படுத்திய சிந்தனைமுறை தகவல்களை மையப்படுத்துகின்றது. மொழியும் தகவலும் பின்னவீன உலகில் இணைபிரியாதனவாகின்றன. இதன் மூலமான தகவல்பெருக்கமே பின்னவீன உலகு எனப்படுகின்றது. இத்தகவல் பெருக்கத்தையும் குறியீடுகளது உலவுகையையும் தொழில்நுட்பமே சாத்தியப்படுத்தியிருக்கின்றது.

4.4 அறிவுருவாக்கமும் சமூகச் செயற்பாடும்.
மொழி, அறிவு, அதிகாரம் இவை மூன்றும் நெருங்கிய தொடர்புள்ளவை. மொழியில் இருந்து அறிவுருவாக்கம் பெறுகின்றது. அறிவில் இருந்து அதிகாரம் தோற்றுவிக்கப்படுகின்றது. பின்னர் அதிகாரம் தனக்குச் சாதகமான அறிவை உற்பத்தி செய்கின்றது. அதிகாரம் தனக்குச் சாதகமான முறையில் மொழிக்கு கடிவாளம் போடுகின்றது. இன்றைய உலகின் போக்கு தகவலை மையப்படுத்தியதாகவே உள்ளது. இன்றைய பொருளாதாரம் தகவல் பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய காலம் தகவல் யுகம் என அழைக்கப்படுகின்றது. உலகமயமாதல் தகவல்பெருக்கத்தின் உடாக ஆபிரிக்க கண்டத்தின் காட்டிலுள்ள சமூகம் வரை பாய்கின்றது. ஹேபர்மாஸ் கூறுவதன்படி பல்வேறுபட்ட சமூகங்களின் அடையாளங்களை உலமயமாகும் தன்மை அழிக்க முற்படுவதே பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக உள்ளது. சிறுபான்மைச் சமூகங்கள் தமது அடையாளம் அழிக்கப்படுவதாக நினைக்கின்றன.

இன்றைய யுகத்தை இருவிதமாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவது ஹேபர்மாஸ் கூறும் உலகமயமாதல் தன்மையும் அதற்கெதிரான பயங்கரவாதமும். இவ்வுலகயமாதல் தன்மையை கணனியும் தகவலும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளன. 'உலகமயமாதல் மரபுகளின் வேர்களை பிடுங்கி எறிகிறது. உலகமயமாதல் உலகினை வெற்றியடைந்தவர்கள், தோற்றவர்கள் என்று மட்டுமே பாகுபடுத்துகின்றது.' என்பது ஹேபர்மாசின் வாதம். மேலும் 'ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றின் உண்மைப் பொருளைச் சிதைத்து நுகர்வியக் கலாச்சாரத்தை ஜனநாயகமாக முனிறுத்துவதும் பயங்காரவாதத்திற்கு மற்றொரு காரணமாகும்' என்கின்றார். இதை வேறொருவிதமாகவும் பார்க்க முடியும். உலகமயமாதலை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கான வெளியையும் சாத்தியப்படுத்தியிருக்கின்றது. அதைப் பயன்படுத்துவதே சிறுபான்மையினரிடம் உள்ள முக்கிய சவாலாகும். தகவல் யுகத்தில் சிறுபான்மையினர் சார்பான தகவல் பெருக்கத்தை நிகழ்த்துவதும் அதிலிருந்தான அறிவுருவாக்கம் என்பதைச் சாத்தியமாக்கக் கூடிய வெளியையும் அதே தாராளவாதம் வழங்கியுள்ளது. 'அறிவில் இருந்து அதிகாரம் உருவாகின்றது. அதே அதிகாரம் தனக்குச் சார்பான அறிவை உற்பத்தி செய்கின்றது.' என்ற ஃபூக்கோவின் கருத்தியலை நாம் ஹேபர்மாசின் கருத்திற்கு எதிர்நிலையில் பிரயோகிக்கும் போது சிறுபான்மை மக்களின் அறிவை அவர்களது பார்வையில் உற்பத்தி செய்ய முடியும். இவ்வறிவுருவாக்கம் ஒற்றை அதிகாரத்தை தகர்வுக்குள்ளாக்குகின்றது. சிறுபான்மைச் சமூகங்களது அறிவுருவாக்கம் என்பது அவர்களது சமூகச்செயற்பாட்டுக்க்கான ஆரம்பப் புள்ளியாகும். தகவல் என்பது அறிவுருவாக்கத்தின் ஆரம்பநிலையாகும். இதுவே இச்சுழற்சியின் மூலமாகும். உலகமயமாதல் - தகவல் பெருக்கச் சுழல் அதிகாரவர்க்கம் சார்பானதாக இருந்தாலும் அது ஏற்படுத்தியிருக்கும் இடைவெளிகளில் தம்மை நிலைநிறுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இச்சுழற்சியில் அது ஏற்படுத்தியிருக்கும் வெளியில் தம்மைப் பொருத்திக் கொள்வதேயாகும். அதன் மூலமான சமூகத்தின் ஆதாரமான அறிவுருவாக்கச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்வே சமூகச்செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.

உசாத்துணை.
1. ஹேபர்மாஸ், இரா. முரளி
2. Habermas and Public Sphere, Craig Calhoun
3. Jurgen Habermas - Democracy and the Public Sphere, Luke Goode
4. The Theory of Communicative Action: Reason and the rationalization of society, Jürgen Habermas, Thomas McCarthy
5. On Pragmatics of Communication, Jurgen Habermas
6. Theories of the information society, Frank Webster
7. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், டிசம்பர் 2008
8. The Archeology of Knowledge, Michel Foucault


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(முடிந்தது.)


December 25, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 3

3. தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும் நூலகத்திட்டமும்.

'நூலகத்திட்டம்' இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை எண்ணிம முறையில் சேகரித்து அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதான செயல்முறை வடிவம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் நூலகத்திட்டத்தின் மூலம் தமிழ்ப்பரப்புடன் இடைவெட்டும் ஆங்கில எழுத்தாவணங்களூம் ஆவணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்களும் அடங்கும். தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தை நூலகத்திட்டம் என்றும் குறுக்க முற்பட்டதில்லை. மாறாக அவ்வடையாளம் விரிந்து சென்று ஊடாடும் பரப்புக்களை எல்லாம் சுவீகரித்துக் கொண்டு ஆவணப்படுத்தும் முறையைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இரண்டுவகையான விடயங்களைக் கூறி இக்கருத்தைச் செழுமைப்படுத்த முடியும். முதலாவதாக 'இலங்கைத் தமிழ்' என்ற ஒற்றை அடையாளம் இன்று குறித்த பிரதேசங்களுக்குள்ளோ அல்லது குறித்த மொழிகளுக்குள்ளோ நின்றுவிடுவதில்லை. உலகுதழுவிய பார்வையையும் மொழிகடந்த வீச்சையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சுதந்திரத் தனிநாடு வேண்டிய போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த சமூகங்கள் பலமொழிபேசும் சமூகங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்கள் அந்நாட்டு மொழிகளைப் பேசுவதோடு சிலர் எழுதவும் செய்கின்றார்கள். நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமொழியைத் தற்போது உள்வாங்கினாலும் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் என்னும் அடையாளம் ஊடாடும் அனைத்து மொழி எழுத்தாவணங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கோடு செயலாற்றுகின்றது. அதற்கான வெளியை அனுமதிக்கும் நோக்கத்தோடு உள்ளதை நூலகத்திட்டம் தொடர்பான அறிமுகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இரண்டாவதாக 'இலங்கைத் தமிழ்' அடையாளம் பல்வேறு சமூகங்களை உள்ளடக்குகின்றது. தனித்துவமான சமூகக்கருத்தியலுடன் ஆதிக்கக் கதையாடலுக்கு உட்பட்ட சிறுபான்மைச் சமூகங்களாக காணப்படும் முஸ்லிம் சமூகம், மலையகச் சமூகம், கிழக்குச் சமூகம் இன்னும் தலித்துக்கள், பெண்கள், ஏழைகள், மாற்றுப் பாலியலாளர்கள் போன்றோர் சிறுபான்மையினராக* உள்ளார்கள். 'இலங்கைத் தமிழ்' என்ற அடையாளம் தான் ஊடாடும் களங்கள் மீதான தனித்துவத்தைப் பேணும் போது மட்டுமே இப்போதிருப்பது மாதிரியான தொடர்ச்சியைப் பேண முடியும் என்பதில் நூலகத்திட்டம் கரிசனை கொண்டுள்ளது.

3.1 தமிழ்ச்சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தல்.
ஐரோப்பிய மரபே எழுத்து மூலமாக ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதையும் அவற்றில் இருந்து அறிவுருவாக்கம் பற்றிய செயற்பாட்டில் ஈடுபடுவதையும் கொண்டிருந்த சமூகமாக அறியப்படுகின்றது. எழுத்து மூலமாக ஆவணப்படுத்தும் மரபென்பது தமிழ்பரபில் குறிப்பிடும்படியாகக் காணப்படவில்லை. பக்தி இலக்கியம் மற்றும் மருத்துவம் தொடர்பான விடயங்கள் பாடல் வடிவில் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆயினும் ஆவணப்படுத்தன் தொடர்பான தீவிரமான முறைமைகள் தமிழ் மரபில் இடம்பெற்றிருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. இது தனியே தமிழ் மரபிற்கு உரிய விடயம் அன்று. ஐரோப்பா அல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களது நிலை இவ்வாறே காணப்பட்டது. இக்கருத்து மூலம் ஐரோப்பா அல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அறிவுத்தொடர்ச்சி தொடர்பான கரிசனை அற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இவர்கள் தொன்மங்களின் குறியீடுகள் வழியாகவும் தொன்மங்கள் மீதான சடங்குகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் பக்தி வழிபாட்டின் மூலமும் மந்திரங்கள், உச்சாடனங்கள் மூலமும் தமது சமூகத்தின் அறிவுத்தொடர்ச்சியை கையப்படுத்தியிருந்தார்கள். இயற்கையுடன் தமது அறிவை இணைத்து செவிவழியாகவும் சடங்குகள் வழியாகவும் ஆவணப்படுத்தப்பட்டன.

இவ்வாறே தமிழ்மரபும் தனது அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆங்கிலேயர்களது காலனித்துவ காலப்பகுதியில் எழுத்தாவணங்களை முறையாக ஆவணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பியர்கள் இலங்கை வந்த போது இலங்கையில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றி ஏராளமான குறிப்புக்களையும் நூல்களையும் எழுதினார்கள். அவை அனைத்தும் ஐரோப்பியர்களது பார்வையில் அமைந்த பிரதிகளாக மட்டுமே காணப்படுகின்றன. அச்சியந்திரத்தின் வருகைக்குப் பின்னர் ஏடுகள் காகிதத்திற்கு மாற்றலாகின. காகிதத்திற்கு மாற்றலாகாத ஏராளம் ஏடுகள் அழிந்து போயின. நூலகத்திட்டம் பற்றி எழுத்தாளர்களுக்கான கையேட்டில் கூறுவது போன்று 'ஏடுகளில் இருந்த தமிழ் எழுத்துப்பிரதிகள் காகித அச்சில் வெளிவரத் தொடங்கியமை தமிழ்ச்சூழலில் நிகழந்த பெரிய திருப்பம். வரலாற்று ஓட்டத்தில் முக்கியமிக்க மாற்றம். அவ்வாறு மாற்றங்காணாத ஏட்டுப்பிரதிகள் இன்று பயனெதுவும் அற்று அழிந்து போய்விட்டன. காகித அச்சில் இருந்து அடுத்த நிலைமாற்றத்தை நீங்கள் தொடர்புபடுமெழுத்துப்பிரதிகள் எட்டிவிட்டனவா? உங்கள் எழுத்துப் பிரதிகள், மின் ஆவணங்களாக்கப்பட்டு மின்வெளியில் அணுகப்படக் கூடியனவாக இருக்கின்றனவா? இன்னமும் மாற்றங்காணவில்லையானால் அவை காகிதத்தில் ஏறாத ஏடுகளின் இன்றைய நிலையை ஒருகாலத்தில் அடையக்கூடும்'.

தமிழ்ச்சமூகங்கள் தமது சமூகத்தின் வரலாற்றையோ அல்லது சமூகத்தின் தனித்துவத்தையோ கூறும் எழுத்தாவணங்களை வைத்திருக்கக்கூடாது என்பதில் தமிழ்மொழியை இன்றும் புறக்கணிக்க விரும்பும் அதிகார வர்க்கம் கவனமாக இருக்கின்றது. அவற்றைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்றது. யாழ் நூலகத்தின் எரிப்பு மட்டுமே அரசியல் ரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் பெரும்கவனத்தைப் பெற்ற போதிலும் அதைவிட முக்கியமான பழைய ஆவணங்கள் பல போரினால் அழிந்து விட்டன. இடைப்பட்ட போர்க்காலப்பகுதியில் தனி நபர்களது தனிப்பட்ட நூலகங்கள் பலவும் அழிந்துவிட்டன. அதே நேரத்தில் இலங்கை ஆவணக்காப்பகத்தில் கூட தமிழர்களது எழுத்தாவணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. 1981 இற்குப் பின்னர் அச்சிடும் பிரதி ஒன்றை ஆவணக்காப்பகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற நடைமுறைய தமிழ்மொழி மூல வெளியீடுகளை மேற்கொவோரால் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆவணக்காப்பகம் போன்ற இடங்களில் தமிழ்மொழி சார்ந்த சமூகங்களின் தொடர்புக்கு அப்பாற்பட்ட இடங்களாக மாறியதும் முக்கிய காரணமெனலாம்.

தனிப்பட்ட வகையில் சிலர் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்ச்சமூகங்கள் தொடர்பான விடயங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் குரும்பசிட்டிக் கனகரத்தினம் முக்கியமானவர். இவர் இலங்கையில் தமிழ் மொழியில் வெளியாகிய ஏராளமான பருவ வெளியீடுகளின் சேகரிப்பை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது அவற்றை நுண்படச்சுருள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கின்றார். வேறு சிறிய முயற்சிகள் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை அவரவர்களுடன் நின்று போய்விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. எண்ணிம முறையிலான ஆவணப்படுத்தல் என்னும் போது இலங்கைத் தமிழ்ச்சூழலில் நூலகத்திட்டம் சகல ஆவணங்களையும் ஆவணப்படுத்த முயற்சிக்கின்றது. முன்னைய முயற்சிகளைப் போன்று தனிநபர் முயற்சியாக இல்லாமல் கூட்டுழைப்பாக மேற்கொளப்படுகின்றது. இதுவே இதன் சிறப்பு. நூலகத்திட்டத்தின் தொடர்ச்சி இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3.2 தமிழ்வெளி வரையும் சிறுபான்மைக்களங்கள் மீதான ஆவணப்படுத்தல்.
இலங்கைத் தமிழ் அடையாளம் வரையும் சிறுபான்மைவெளிகளைப் பற்றிய விடயங்கள் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பப்பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. நூலகத்திட்டம் சகல எழுத்துப்பிரதிகளையும் ஆவணப்படுத்துவதாகக் கூறியுள்ள போதிலும் அவற்றில் பெரும்பாலும் மைய நீரோட்டக் கருத்துள்ள பிரதிகளே ஆரம்ப காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வடையாளம் வரையும் வெளியில் அவ்வகைப்பிரதிகளே அதிகளவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளமை அதற்கான காரணமாக இருக்கக்கூடும். ஆயினும் அந்நிலை பிற்காலத்தில் மாற்றம் பெற்றிருக்கின்றது.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நூலகத்திட்டம் சார்பாக நேத்ரா தொலைக்காட்சி இடம்பெற்ற உரையாடலில் 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' மற்றும் 'மலையகச் செயற்றிட்டம்' ஆகியவை அறிவிக்கப்பட்டு புலமையாளர்களிடமிருந்து பங்களிப்பும் கேட்கப்பட்டிருந்தது. ஆயினும் எழுந்தமானமாக அல்லாமல் முறையாக ஒரு சமூகத்தை ஆவணப்படுத்துவதற்கு அச்சமூகத்தின் எழுத்தாவணங்கள் தொடர்பான விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அந்நிலையில் அச்செயற்றிட்டங்கள் இன்னமும் தொடங்கப்படாமலே இருக்கின்றன. ஆயினும் பிரதிகள் தெரிவில் விளிம்பு எழுத்தாவணங்கள் அதிகமாக விசேட கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அத்துடன் நூலகம் வலைத்தளத்தில் வலைவாசல் என்னும் பகுதிக்கூடாக விளிம்பு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கூறப்படுவது போன்று 'நூலகத்திட்டம் 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் இடைவெட்டும் அனைத்துப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆவணமாக்கலை மேற்கொள்கின்றது. இவ் ஒற்றை அடையாளம் தெளிவான வரையறைகளைத் தனக்குள் கொண்டிருக்கவில்லை. இலங்கைத்தமிழ் என்ற ஒற்றை அடையாளம் தனக்குள் பல்வேறு உபபரப்புக்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒற்றை அடையாளம் என்பதுடன் நாம் ஆவணமாக்கல் சார்ந்து இயங்கும் போது யாழ்மையவாத ஆவணங்கள் நூலகத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை நினைவுகூரக்கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ் ஒற்றை அடையாளம் அதன் ஆதிக்கசக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் யாழ்-இந்து-வேளாள-ஆண் என்ற ஆதிக்கநிலைப்பட்ட பிரதிகளின் தொகை அதிகமானது மட்டுமல்லாது பரவலானது. அவ்வகையில் அதுசாரப்பட்ட பிரதிகள் பெருமளவில் ஆவணமாக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குறித்த ஒற்றை அடையாளத்தாலும் ஆதிக்கக்கருத்தியலாலும் விளிம்பாக்கப்பட்ட அடையாள ஆவணங்களை நூலகத்திட்டத்தில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை மேன்மேலும் உள்ளது.

வரலாறு என்பது அதிகாரவர்க்கத்தின் வரலாறே என்பது நாம் அறிந்தவிடயமே. ஆவணமாக்கல்- பாதுகாத்தல் செயற்பாடுகள் என்பது அதன் அனைத்துப் பரப்புக்களையும் உள்ளடக்காத போது அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத போது அதனோடு தொடர்புபட்ட அனைவரையும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியவர்களாக அர்த்தப்படவேண்டும். இலகுவாக மறந்து போகும் விடயங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் மீதான மீள்வாசிப்புக்கு விளிம்புக்கருத்தியல்கள் மிக முக்கியமானவை. அவ்வகையில் அவற்றை உரிய முக்கியத்துவத்துடன் ஆவணமாக்க வேண்டியதென்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. ஆவணமாக்கல் செயற்பாட்டில் இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட கவனமே விளிம்பு அடையாளங்கள் சார்ந்த ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கு உதவியது எனக்குறிப்பிடப்படுகின்றது. இவ்வகையில் 'இலங்கைத்தமிழ்' என்ற பெரும்பரப்பால் விளிம்பாக்கப்பட்ட முஸ்லிம், மலையகம், தலித்தியம், பெண், புலம்பெயர்வாழ்வு போன்ற அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 'பெண்' என்ற அடையாளம் சார்ந்து முழுமையான ஆய்வு நோக்குடன் கூடிய செயற்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத போதிலும் 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினுடாக கணிசமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே 'புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினூடாக மாற்றுக்கருத்தைச் சாத்தியமாக்கிய பல சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தினூடாக மேலும் பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய இரு திட்டங்கள் மேற்படி விளிம்பு அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வு என்ற போதிலும் அவை முழுமையானவை அல்ல. அவற்றை முழுமையாக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் போர்ச்சூழல், பிரதிகளின் சிதறல், ஆய்வுமுயற்சிக்கு தன்னார்வலர்களின் போதமை, நிதிப்பற்றாக்குறை, ஒருங்கிணைப்பின் கடினம் போன்வற்றை முக்கியமானவையாகக் கூற முடியும்.

2009 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' ஆகிய இரண்டு திட்டங்களும் ஓரளவாவது முழுமையாகச் செய்யக்கூடியவை. இவ்விளிம்பு அடையாளங்கள் சார்ந்து ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆக, ஆய்வை முழுமைப்படுத்துவதும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதும் ஆவணமாக்கலுமே மிகுதி அம்சங்களாகும்.' சிறுபான்மைக்களங்கள் மீதான விசேட கவனக்குவிப்புக்களை மேற்கொள்ளும் போதே முழுமையை நோக்கி நகரமுடியும். சிறுபான்மைக்களங்களை விசேட கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்துவதன் ஊடாகவே முழுமையை நோக்கி நகரமுடியும்.

3.3 நூலகத்திட்டத்தில் தமிழ்ச்சிறுபான்மையினரின் எதிர்காலம்.
சிறுபான்மைக் கருத்தியல்களே வரலாற்றையும் சமூகங்களையும் முழுமையாக்குகின்றன. ஆதிக்க நிலைப்பட்ட ஆவணங்களில் இருந்து சிறுபான்மைக் கதையாடல்கள் மீள்வாசிப்பு செய்யப்படுகின்றன. எவ்வகையான ஆவணங்களாக இருப்பினும் சமூக மாற்றத்திற்கான உரையாடலை ஆரம்பிக்க அவை பெரும்பங்காற்றும். அவ்வகையில் நூலகத்திட்டத்தின் கவனக்குவிப்பு சிறுபான்மைத் தமிழ்ச்சமூகங்களை மையப்படுத்துவதே சமூக மாற்றத்திற்கு அவசியமானதாகும். வலைவாசல்கள் மூலம் அனைத்துச் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பாகவும் 'கூட்டுநிலை அறிவுருவாக்கத்திற்கு' நூலகத்திட்டம் தயாராகி வருவது சிறுபான்மை மக்களது அரசியல் ரீதியான உரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் நிச்சயமாக உதவும் என எதிர்பார்க்கலாம்.

நூலகத்திட்டம் தனிநபர் கருத்தியலின் செயற்பாடு அல்ல. அதன் கூட்டுமுயற்சியின் பலவிதமான பங்களிப்புக்களும் இருக்கும் போதே அம்முயற்சி முழுமைபெறும் எனலாம். அவ்வகையில் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தலும் அவற்றை இணைத்து கூட்டுநிலை அறிவுருவாக்கத்தை மேற்கொள்வதுமே பொதுக்கதையாடல் கருத்தியல் மேலாண்மையில் இருந்து விடுபட உதவும். விமர்சன மரபின் தொடர்ச்சியாக மட்டும் நின்றுவிடாமல் அதைத்தாண்டிப் அதன் செயற்பாடு மற்றும் பங்களிப்பு என்ற நிலைகளை அடையும் போது மட்டுமே பெருங்கதையாடல்களில் இருந்து விடுதலை பெற உதவும். இவற்றுக்கான சாத்தியங்களை மேலும் அதிகரிப்பதாக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். சிறுபான்மை அறிவுருவாக்கத்தில் கூட்டுப்பங்களிப்பு ஏற்படும் போது அந்நிலையைச் சாத்தியமாக்க முடியும்.

அடிக்குறிப்பு
* இங்கே சிறுபான்மையினர் என்ற பதம் தனியே எண்ணிக்கை சார்ந்து பயன்படுத்தபடவில்லை. இங்கே பயன்படுத்தப்படும் சிறுபான்மையினர் என்னும் பதமானது 'கருத்தியல் மேலாண்மை என்பதில் இருந்து விளிம்பாக்கப்பட்ட' என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.

உசாத்துணை.
1. நூலகம் இணையத்தளம் , http://www.noolaham.org
2. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், யூலை 2008
3. நூலகம் மடலாடல் குழு மடல்கள்

4. எழுத்தாளர்களுக்கான கையேடு, கோபி, மு.மயூரன்

5. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், டிசம்பர் 2008

இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)


December 24, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 2

2.இலங்கையும் தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும்.
இலங்கையில் மொழி ரீதியாக முக்கியமாக இரண்டு சமூகங்கள் காணப்படுகின்றன. சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரும்பான்மைச் சமூகம்1* மற்றும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சிறுபான்மைச் சமூகங்கள்2* . பெரும்பான்மைச் சமுகத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான முரண்பாடு நீண்ட வரலாற்றைக் கொண்டது. மொழிப்பிரச்சனை என்பது காலனித்துவ காலத்தில் இங்கிலாந்து ஆட்சியாளர்களது முகாமைத்துவத்தின் விளைவெனக் கூறப்பட்டாலும் அதைத்தாண்டிய சமூகவியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களும் கூறப்படுகின்றன. மொழி ரீதியான பாகுபாடு இறுதியில் வன்முறை ரீதியான எழுச்சியைச் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்நேரத்தில் 1981 ஆம் ஆண்டு மொழியியல் ஆவணக்காப்பகங்களில் ஒன்றாகவும் அறிவுச் சேகரிப்பாகவும் விளங்கிய யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இச்சம்பவம் சிறுபான்மை மொழிபேசும் மக்களில் மாறாத வடுவை ஏற்படுத்தியது. அடையாள அழிப்பு என்பது குறித்த சமூகத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் அல்லது அதன் தனித்துவத்தை அழிக்கும் நோக்கில் அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் முக்கியமான செயற்பாடாகும். இச்செயற்பாடு இலங்கையில் மாத்திரம் நிகழவில்லை. உலகின் பல பிரதேசங்களிலும் கருத்தியல் ரீதியாக அதிகார மேன்மை பெறும் பொருட்டு அச்சமூகங்களைக் கருத்தியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் பொருட்டும் குறித்த சமூகத்தின் அறிவுருவாக்கத்தை முடக்கிப் போடும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவை தொடர்பான விடயங்களை கீழே விரிவாக ஆய்வுசெய்ய முயல்கின்றேன்.

2.1 மொழியும் சமூகமும்.
ஹேபர்மாசினது கருத்தின்படி 'மொழிச்செயற்பாடு' என்னும் நிகழ்வே சமூகத்தில் புரிதலை ஏற்படுத்தியபடி சமூக இயங்குநிலைக்கு அடிப்படைக் காரணமாகின்றது. ஆயினும் இப்பகுதியில் மொழிச்செயற்பாடு அல்லது சமூக மாற்றம் பற்றிப் பேசப்போவதில்லை. இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் இவ்விடயத்தை விரிவாக ஆராய முடியும். சமூகத்திற்கும் மொழிக்கும் உள்ள இறுக்கமான தொடர்பு சமூகத்திற்கும் மொழிக்குமான உறவின் உளவியல் அவ் உளவியலின் அடிப்படை போன்ற விடயங்களைப் பற்றியே கூற வேண்டும். மொழி உருவாக்கும் பொதுத்தன்மை உளவியல் மற்றும் மொழிக்கும் சமூகச் சிந்தனை தொடர்பாகவும் சில விடயங்களைக் கூற வேண்டும்.3*

மொழியே சமூகத்தின் அடிப்படைத் தொடர்பாடல் அலகாகும். அவ்வகையில் சில இடங்களில் மொழியே சமூகத்தை வழிநடத்திச் செல்கின்றது. ஒரு சமூகத்தின் இன்றைய அடைவுவரை மொழிக்குரிய பங்கு முக்கியமானது. மொழி ஏற்படுத்தும் சமூக உளவியல் ஒருபுறமும் மொழிச்செயற்பாடு மறுபுறமுமாக சமூகத்தின் ஆதிக்க - ஆதிக்கமற்ற வெளிகளை மொழி உள்வாங்கியிருப்பதே அதன் சிறப்பம்சமாகும். நாகர்ஜுனன் கூறுவது போன்று 'உலகின் மொழிகள் ஒவ்வொன்றும் அந்தந்த மக்களின் வரலாறு, சால்பு போன்றவற்றின் உறைபொருள் மட்டுமன்றி உலகு பற்றி, இயற்கை பற்றி, பருவங்கள் பற்றியெல்லாம் பிரத்தியேகப்புரிதல் கொண்டவை. கலை-கதை-விஞ்ஞானம் என்று பிரிபடாத புரிதல். இந்தப் பிரத்யேகப்புரிதலை வெறும் அடையாளம் என்று மாத்திரம் கொண்டுவிட முடியாது. மாறாக, குறிப்பிட்ட ஒரு மொழியின் இந்தப் பிரத்யேகப்புரிதலும் மற்ற மொழிகளின் பிரத்யேகப்புரிதலுடன் இசைந்தும் மாறுகொண்டும் செல்வதாகும். இந்தப்புரிதல்கள், க்ளாட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) கூறுவதைப் போல, மனிதப் பொதுமனத்தின் ஆழ்-அமைப்பைச் சுட்டுவன. ஆக, இவற்றில் எந்த ஒரு மொழி அழிந்தாலும் அதன் சொல், சொற்றொடர், வாக்கியம், இலக்கணம், கதை, பாடல் போன்றவற்றில் எது அழிந்தாலும் நாமும் அழிந்ததற்குச் சமம். ஆக, இந்த அழிவின் விளிம்பில்தான் நிற்பதே இன்றைய மனிதப்பொதுமனம்.' சமூக அடிப்படையான புரிதல் அல்லாதவ்டத்து அச்சமூகத்தைப் பற்றிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மையானது.

'நீங்கள் உங்களது மையமல்ல என்று உளப்பகுப்பாய்வு அறிவிக்கின்றது. காரணம், உங்களுக்குள் இன்னொரு அகநிலையான நனவிலி உள்ளது' என்று லக்கான் கூறுகின்றார். லக்கான் கூறும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அகநனவிலியானது குறிப்பான்களாலும் மொழியாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுவே மொழி அடிப்படையிலான கூட்டுணர்விற்கு வழிகோலுகின்றது. அகநிலயைக் கட்டமைப்பதற்கு மொழிசார் உறவுகளே அடிப்படையாகின்றன. குறிப்பான்களின் தொகுதி தமக்குள் உறவுபடுத்தப்படவையாக மொழியாக வெளிப்படுத்துகின்றன. சமூகத்தின் சடங்காக வெளிப்படும் மொழி ஒரே சமூகத்தில் அதிகளவான புரிதலை ஏற்படுத்துகின்றது. அதேநேரம் 'மற்றமை' என்பதன் மீது அதிகளவான புறவொதுக்கலையும் செய்கின்றது.6*

2.2 சிங்கள சமூகம், தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் மொழிரீதியான பாகுபாடு.
இலங்கையில் மொழிரீதியாக சிங்கள மொழிபேசும் சமூகம் ஆதிக்கம் பெற்றிருந்த அதேவேளை தமிழ்மொழிபேசும் சிறுபான்மைச் சமூகங்களை மொழி ரீதியாக புறக்கணித்தது. 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதே தமிழ்ச்சமூகங்கள் மீதான பெரியளவிலான ஒடுக்குமுறையாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தினர் இரண்டாம் தரப்பிரஜையாக்கப்பட்டார்கள். அரசியல் ரீதியான வெற்றியைப் பெறும் நோக்கிலேயே - சிங்கள மொழிபேசும் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே இநநடவடிக்கை இடம்பெற்றது. அந்நேரத்தில் அந்நிகழ்வு பிற்காலத்தில் பலத்த அழிவுகளை நிகழ்த்தப் போகின்றது என்பதை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.

1956 ஆம் ஆண்டு நிகழ்வே தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்கள் மீதான முழுதான புறக்கணிப்பின் ஆரம்பம் என்பதை சில புலமையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் யாப்பின் மூலம் ஏற்பட்ட மொழி ரீதியான முகாமைத்துவமே மொழி ரீதியான சமூகப்பிளவுக்கு ஆரம்ப வழிகோலியாகியது என்றும் சில புலமையாளர்களால் கூறப்படுகின்றது. காலனித்துவம் ஏற்படுத்திய மொழி ரீதியான பிளவென்பதை பண்பாடு, வரலாறு மற்றும் அதனடிப்படையிலான மானிடவியல் சார்ந்த புலமையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கருத்தியல் மேலாண்மை என்பதில் இருந்து பார்க்கின்றார்கள். அப்பிளவை 2000 வருடங்களுக்கு முன்னரான ஆரியர் வருகைக்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

2.3 மொழிப்பாகுபாட்டிற்கெதிரான தமிழ்ச்சமூகங்களின் எழுச்சி.
மொழிப்பாகுபாட்டிற்கெதிராக - சிங்கள மொழிபேசும் ஆதிக்கக் கருத்தியலுக்கெதிராக தமிழ்ச்சமூகங்கள் எழுச்சி பெற்றன. அரசியல் போராட்டங்கள், ஆயுதப்போராட்டம் என அவ்வெழுச்சிகள் பல்வேறு பரிணாமம் பெற்றன. அரசியல் சட்ட மூலங்கள் தொடர்ச்சியாகத் தமிழ்பேசும் சமூகங்களைப் பாதிப்பதாக தமிழ்ச்சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மீது குறைகூறின. 1958, 1972, 1987, 1988, 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்பேசும் சமூகங்களின் நன்மைகருதிய சட்டமூலங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மொழிரீதியான சமநிலையைக் கொண்டு வரும் நோக்கில் அரசியல் சீர்த்திருத்தங்கள் மூலமாக யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அம்மாற்றங்கள் தமிழ்பேசும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தவில்லை. மொழிரீதியான சமநிலை தமக்குக் கிடைக்கவில்லை என்பதே தமிழ்பேசும் சமூகங்களின் நிலைப்பாடாக இருந்தது.

தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவாக்கம் மேற்படி வரலாற்றுத் தொடர்ச்சியான நிகழ்வுகளின் பால் தோற்றம்பெற்றது. பல சமூகங்களாகவும் தனித்துவம் மிக்கதகவும் விளங்கிய தமிழ்பேசும் சமூகங்கள் சிலபுள்ளிகளில் ஒன்றுபட்டு தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவாக்கத்தைப் பலப்படுத்தின.4* Clifford Geertz தனது The Integrative Revolution: Primordial Sentiments and Civil Politics in the New States என்ற கட்டுரையில் கூறுவது போன்றே தமிழ்ப்பிரிவினைவாதம் தோற்றம்பெற்று வளர்ந்தது. ஒன்றிணைந்த தமிழ்ச்சமூகங்களின் கூட்டிணைவு என்பதை Clifford Geertz இனது 'புதிய தேசம்' கருத்துருவாக்கத்திற்கு நெருக்கமாகப் பார்க்கின்றார் Bryan Pfaffenberge.5*

தமிழ்ச்சமூகங்களின் எழுச்சியின் பின்னர் நடைபெற்ற அரசியல் போராட்டங்களின் போதும் வன்முறை ரீதியான போராட்டங்களின் போதும் அவர்களால் சுயாட்சியுடன் கூடிய முகாமைத்துவ அலகைக்கூடப் பெறமுடியவில்லை. இன்றைய திகதியில் மொழிப்பாகுபாடு மற்றும் போராட்டம் தொடர்பான சரியான ஆய்வுகளை நடாத்தக்கூடிய அளவு இலங்கையின் அரசியல் சூழல் காணப்படவில்லை. தமிழ்ச்சமூகங்களின் மனப்பதிவுகள் கூட முறையாக ஆவணப்படுத்தப்படாதன் காரணமாக எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வது கூடக் கடினமாகவே அமையக்கூடும். தமிழ்ச்சமூகங்கள் தமது அடுத்த கட்டத்தெரிவை மேற்கொள்வதற்கான சூழலை வன்முறைக்கலாச்சாரம் முற்றாக அழித்துவிட்டிருப்பதை வேதனையுடன் நினைவுகூர வேண்டியுள்ளது.

2.4 அதிகாரத்திற்கெதிராக ஆவணப்படுத்தல்.
இப்பகுதியை இரண்டாகப் பிரித்து நோக்க வேண்டும். முதலாவதாக இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்கத்தின் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி தொடர்பான ஆவணப்படுத்தல் தொடர்பானது இரண்டாவது தமிழ்மொழி என்ற பொது அடையாளம் உள்ளடக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் ஆவணப்படுத்தல் தொடர்பானது. இதற்கு முன்னதாக ஐரோப்ப மையவாதக் கதையாடல்களுக்கும் ஆதிக்கத்திற்கும் மாற்றீடான ஐரோப்பா அல்லாத பிரதேசங்களை ஆவணப்படுத்துவது தொடர்பாகவும் அவற்றின் மீள்வாசிப்புத் தொடர்பாகவும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்துமதம் கூறும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சமணமத நூல்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன. தமிழர் மரபின் பெருமளவான ஞாபகங்களும் கடத்தப்பட்ட அறிவும் இல்லாது அழித்தொழிக்கப்பட்டன. அதிகாரங்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள தமக்கெதிரான ஆவணங்களை அழித்தொழிக்கின்றன. இதே தொடர்ச்சியிலேயே யாழ் நூலகமும் எரிக்கப்பட்டது. ரமேஸ் - பிரேம் அவர்களது 'ஏடுகளில் படிந்த இருண்ட காலம்' என்னும் கட்டுரையில் கூறுவது போன்று 'தமிழ் நிலம் மறதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கனவு நிலம். சங்க இலக்கியத் தொகைகளும் சில காப்பியங்களும் இல்லையென்றால் தமிழ் வரலாற்று நினவுதான் என்ன' இன்று 'இனமையக்கணிதவியல்' (Ethnomathematics) போன்ற துறைகளைக் கற்கும் தருணத்தில் தமிழ்க்கணிதம் நினைவுகூரப்படுகின்றது. ஆனால், இவையெல்லாம் பெருந்தொகையான அறிவுத் தொகைகளில் இருந்து எஞ்சியவையே. இன்றைய மேற்கில் சித்த மருத்துவம் தொடர்பான விடயங்கள் ஊன்றி ஆய்வுசெய்யப்படுகின்றன. ஆனால், எம்மிடம் எஞ்சியுள்ளவை மிகச்சொற்பமானவையே. ரமேஸ் - பிரேம் மேலும் கூறிச் செல்கின்றார்கள் 'பக்தி இலக்கியங்களும், கம்பராமாயணமும், சில சிற்றிலக்கியங்களும் தான் தமிழ் நினைவைக் கட்டமைத்து நின்றவை. இவற்றில் இருந்து பெறப்படும் தமிழ் வாழ்வுக் களங்களும், புலங்களும் முற்றிலும் வேறானவை. அன்றைய காலகட்டத்தில் திருக்குறள் கூட தீண்டாமைக்குட்பட்ட ஏடுதான் அல்லவா. திணைச்சமூக வாழ்வும் நினைவும் கனவும் இல்லாததமிழர் அற வரலாறும் எவ்வடிவில் இருந்திதிருக்கும்? எல்லாம் காலத்தின் விளையாட்டு. நினைவில் எஞ்சியவை வரலாகின்றன. வரலாறு மீண்டும் நினைவாக எஞ்சுகின்றது. மீந்த சுவடிகளில் இருந்து உயிர்த்தெழுந்த நமது தமிழ் நினைவுகளில் தான் எத்தனை எத்தனை சிக்கல்களும் சிடுக்கல்களும்.' என்றவாறு.

மேலும் 'இன்று அதிகாரம் பெற்றுள்ள இந்துமதம் தமிழர் வாழ்வின் சமணம், பௌத்தம் சார்ந்த ஏடுகளை அழிப்பதில் கூடிய அக்கறை காட்டின. பிற்காலத்தில் கொடூரமாக வளர்ந்த தீண்டாமை அப்பொழுது இருக்கவில்லை. சாதிப்பிரிவுகள் இருந்த போதிலும் பிறகு வந்த சாதி வன்முறை, ஒடுக்குதல் அக்காலகட்டத்தில் இருக்கவில்லை. இனக்குழு, குடிமரபு, வட்டாரச் சமூகங்கள் தன்னுரிமையுடன் தம் வாழ்வைத்தாமே நடாத்திக் கொண்டிருந்தன.' என்று கூறிச் செல்கின்றார்கள். இன்று இந்துமதத்திற்கு மாற்றீடாக அக்கூறுகளை மீளுருவாக்கம் அல்லது மீள்வாசிப்புச் செய்வதற்கான ஆவணங்களைக் கூட இந்துமத அதிகாரவர்க்கம் விட்டுவைத்திருக்கவில்லை.

இவ்வாறேதான் இதே நோக்கத்துடனேயே யாழ் நூலகமும் தமிழ்மொழிச் சமூகங்களுக்கெதிரான மனநிலையில் இருந்தவாறு அதிகாரவர்க்கத்தால் தீக்கிரையாக்கப்பட்டது. தமிழ் ஆவணங்களையும் அறிவையும் அழித்தால் எதிர்ப்புணர்வு மங்கிப்போகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அப்போதைய நூலக எரிப்பிற்குக் காரணமானவர்களுக்கு இருந்திருக்கக்கூடும். அதற்குப் பின்னர் 25 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ்ச்சமூகங்களிடம் தம் சமூகத்தை முறையாக ஆவணப்படுத்தும் பிரக்ஞை எழவில்லை.

ஆவணங்களும் மொழியும் அதிகாரத்தைக் கட்டமைப்பதாக வாதிடுபவர்கள், அதே ஆவணங்களையும் மொழியையும் அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்கள். இலங்கைத் தமிழ்ச்சமூகங்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தனித்துவமான பேச்சு மொழியைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆதிக்கத்தமிழ் வெளி உருவாக்கிய மொழிப்பயன்படுத்துகையையே எழுத்தில் கைக்கொண்டிருந்தார்கள். சில புனைவுகளில் மாத்திரம் வட்டார வழக்காக தமது சமூகத்தின் பேச்சு மொழியை எழுத்தாக்கியிருக்கின்றார்கள். இது மொழிரீதியாக முஸ்லிம்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். ஆரம்பப்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் போது அ-ம்-மா 'உம்மா' என்று கற்பிக்க வேண்டியளவிற்கு முஸ்லிம்கள் மொழி ஆதிக்கத்திற்கு உடப்பட்டிருந்தார்கள். ஆயினும் அண்மைக்காலத்தில் வட்டார வழக்கை விசேட கவனத்தில் எடுத்து பரவலான பிரதிகளைச் சாத்தியமாக்கிக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் ஆதிக்க மொழிக்கட்டமைப்பில் இருந்து விடுபடுவதையே உணர்த்தி நிற்கின்றது. இதை ஃபூக்கோ கூறும் Archeology of thought என்னும் கருத்தமைவிற்குச் சாதகமகப் பார்க்க முடியும். மொழியானது ஏற்கனவேயான கட்டுக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அது இலக்கணமாக இருக்கலாம் அல்லது அதன் குறித்த சமூகத்தை மட்டும் பிரதிபலிக்கும் குறித்த சொற்களாக இருக்கலாம். இக்கட்டுக்களை மீறிய உரையாடல்களே பொதுப்போக்கின் அல்லது அக்காலத்தையப் பெருங்கதையாடலின் தகர்வுக்கு சாதகமான கருத்தியல் மேலாண்மையைப் பெற்றுக் கொடுக்கும்.

யாழ் ஆதிக்க சமூக அமைப்பில் வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலின் பங்கு முக்கியமானது. அக்கோவிலில் வாழ்ந்த தேவதாசி ஒருவர் எழுதிய பாடல்களின் தொகுப்பு நூலே 'கனகிபுராணம்' ஆகும். அப்பாடல்கள் அத்தேவதாசியிடம் வந்து சென்ற யாழ் மேலாதிக்க சமூகத்தின் பிரதிநிகளைப் பற்றிய பாடல்களாகும். அவர்களே விபச்சாரத்தை பாவச்செயல் என்ற கருத்தியலை யாழ் சமூகம் எங்கும் விதைத்தவர்கள். கனகி புராணம் நூலுருப்பெறுவதை யாழ் மேலாதிக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்று கூற்ப்படுகின்றது. அவர்களை மீறி நூலுருப்பெற்ற பிரதிகள் அதிகார வர்க்கத்தால் அழிக்கப்பட்டன. இன்று கனகிபுராணத்தின் சில பாடல்கள் அடங்கிய தொகுப்பையே வரலாறு எம்முன் விட்டுச் சென்றுள்ளது. அக்காலத்தில் இருந்த அச்சுக்கூடங்கள் ஒருசிலவே. அவையும் அதிகாரவர்க்கத்தின் கைகளிலேயே காணப்பட்டன. ஆனால், நிலமை இன்று மாறியுள்ளது. தொழில்நுட்பம் சில இடங்களில் அதிகாரவர்க்கத்தின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. அதிகாரவர்க்கங்களுக்கு எதிராக ஆவணப்படுத்துவதென்பது சுலபமாகன விடயமாகிவிட்டது. ஒடுக்கபடும் சமூகங்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதே ஒடுக்கப்படும் சமூகங்களின் விரைவான விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.


அடிக்குறிப்புக்கள்.
1* சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சமூகம் தனக்குள் பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும் இக்கட்டுரையில் அதனை பொதுமைப்படுத்தும் மொழியில் 'சமூகம்' என்றே குறிப்பிட விரும்புகின்றேன். இக்கட்டுரையில் சிங்கள சமூகம் உள்ளடக்கும் உள் பிரிவுகளை ஆய்வுசெய்வது எனது நோக்கமல்ல.

2* தமிழ்மொழிபேசும் சிறுபான்மை மக்கள் பற்றிப் பேசுவது கட்டுரையின் இப்பகுதியின் முக்கிய நோக்கம் என்ற காரணத்தால் தமிழ்பேசும் சமூகம் என்ற ஒற்றைத் தளத்தில் பொதுமைப்படுத்திப் பேசாமல் தமிழ்ச்சமுகங்கள் என்ற பன்மைத்துவ வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்கின்றேன்.


3* 'மொழிவழித்தேசியம் என்பது பாசிசமாகும்' என்று யாந்திரிகத்தனமாக அணுகுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே எனது கருத்து. எதிர்ப்பரசியல் என்பது சமூகத்தின் மாற்றம் வேண்டிய கருத்தியலை உருவாக்குவதே தவிர சில யதார்த்தமான நிலைப்பாடுகளை மறுத்தவாறிருப்பதல்ல. சமூகத்தின் பாதகமான நிலைப்பாடுகள் கருத்தியல் ரீதியாக மேலாண்மை பெற்றுள்ள போது எதிர்ப்பரசியலின் மூலம் மட்டுமே அக்கருத்தியல் மேலாண்மையைத் தகர்க்க முடியும். கருத்தியல் ரீதியான மேலாண்மை தகர்க்கப்படும் போது மட்டுமே உண்மையான விடுதலை என்பது சாத்தியமானது. அவ்வகையில் எதிர்ப்பரசியல் சமூகத்தில் மிக அவசியமான பாத்திரத்தை எடுகின்றது. இவ்விடத்தில் சமூகவியல் மற்றும் அறிவியல் மரபையும் பற்றிய சில பார்வைகளை முன்வைத்து விட்டு எடுத்துக் கொண்ட விடயங்களைப் பற்றி ஆய்வு செய்ய முடியும். அறிவியலின் நகர்வை ஐரோப்ப அறிவியலின் நகர்வெனக்கூறுவதில் தவறில்லை. ஐரோப்ப அறிவியல் தர்க்கம் மற்றும் பரிசோதனை முறைமைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் வழி வளர்ச்சியுற்றவை. இன்று அப்போக்கு பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டு 'இனஅறிவியல்' (Ethnoscience) போக்குக்களுக்கு வித்திட்ட போதிலும் ஐரோப்ப மையவாதம் சார் அறிவியலின் போக்கு மேற்கூறியவாறே காணப்பட்டது. மேற்கூறிய அடிப்படையிலான ஆய்வுகளே விஞ்ஞான ரீதியானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமூகவியல் தளம் அத்தளத்தின் தீவிர அரசியலாலும் சமூக மாற்றம் குறித்த உரையாடல்களங்களைக் கொண்டிருப்பதாலும் 'விஞ்ஞான உண்மைகளைத் தாண்டி' பலவிதமான தேவைப்பாடுகளுக்கான உரையாடலைத் தன்னுள் மேற்கொள்வது. இவ்வகையில் 'மாற்றத்தின் தேவையும்' 'உண்மையும்' முரண்படும் புள்ளியே அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் உள்ள முரண்படும் புள்ளியாகின்றது. உதாரணமாக டார்வினையும் ஹிட்லரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வையானது அடிப்படையிலேயே கோளாறானது.


4* அரசியல் ரீதியாக இன்று தமிழ்த்தேசியத்தைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்ப்பரசியல் கூறுகளில் தமிழ்த்தேசியக்கருத்தியல் புறமொதுக்கிய சமூகங்கள் சார்பான பார்வைகள் பதிவாகியுள்ளன. மலையகத்தமிழர், முஸ்லிம்கள், கிழக்குப் பிரதேச மக்கள் என்ற அம்சங்கள் குறித்தான பார்வைகள் இன்று பலவகைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளன. அது மட்டுமன்றி தலித்துக்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பார்வைகளும் இன்று கரிசனையைப் பெற்றுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றை நிறுவப்பட்ட கருத்தியல் மேலாட்சியை தகர்த்து பொதுத்தளத்தில் அமுல்படுத்தக்கூடிய சாத்தியங்கள் பெருமளவில் பரிசோதிக்கப்படாத போதிலும் எதிர்ப்பரசியல் கூறுகளின் அவற்றின் தாக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாகியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.


5* Bryan Pfaffenberge அவர்கள் தமிழ்த்தேசியவாதம் பற்றிய புதிய பார்வை ஒன்றைத் தனது The Political Construction of Defensive Nationalism: The Temple entry crisis in northern Srilanka என்னும் கட்டுரையில் முன்வைக்கின்றார். யாழ் மேலாதிக்கவாதிகளான சைவ வேளாளர்கள் 1968 ஆம் ஆண்டு தலித்துக்களால் நிகழ்த்தப்பட்ட கோவில் பிரவேச நிகழ்வுகளுக்குச் சமாந்தரமாகக் காண்கின்றார்.


6* லக்கானிய ஆய்வு ஆண்வழிப்பட்டது என்ற கருத்தாக்கம் பிற்காலப் பெண்ணியர்களால் முன்வைக்கப்பட்டது. குறிப்பான்களை மையப்படுத்திய கூட்டுணர்வுக் கருத்தியலில் 'விலக்கப்பட்ட பெண்' என்ற கருத்தாக்கம் லக்கான மீது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. லக்கான் இன அடையாளம் என்ற கருத்துருவை அதிகளவில் இறுக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அவ்வாறே ஒரே குறிப்பான்களை மையமாக வைத்தியங்கும் சமூக குழுக்களுக்குள் இயங்கும் படிநிலை வேறுபாடும் (சாதியம்) குறிப்பான்களின் அதீத கவனப்பாடுகளை விளக்கப் போதுமானதாக இருக்கவில்லை.


உசாத்துணை.
1. ஹேபர்மாஸ், இரா.முரளி
2. மெல்லக்கனவாய், மொழியாய்ப் பழங்கதையாய்..., திணை, இசை, சமிக்ஞை - நாகர்ஜுனன் வலைத்தளம்

3. Interview with Jacques Lacan, 1957

4. Lacan and Language

5. Language Discrimination to Language equality - FCE

6. The Integrative Revolution: Primordial Sentiments and Civil Politics in the New States, Clifford Geertz

7. The Political Construction of Defensive Nationalism: The Temple entry crisis in northern Srilanka, Bryan Pfaffenberge

8. ஏடுகளில் படிந்த இருண்ட காலம், ரமேஸ் - பிரேம்

9. Hinduism: past and present, Axel Michaels, Barbara Harshav

10. The Archeology of Thought, Thomas J. Hubschman

11. கனகி புராணம், நட்டுவச் சுப்பையனார்

12. Nature knowledge: ethnoscience, cognition, and utility, Glauco Sanga, Gherardo Ortalli


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)


December 23, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 1

இறந்து போன ஓர் உலகத்தை அதன் முழுமையான வடிவில் மீட்டுருவாக்க தங்களால் இயலாது என்ற வேதனை உணர்வுடன், என்றென்றும் நிழல்களைத் துரத்தும்படி விடப்பட்டுள்ளார்கள் வரலாற்றாசிரியர்கள். - சைமன் ஷாமா

1. சிறுபான்மைச் சமூகங்களும் ஆவணங்களும்.
'வரலாறு' என்னும் கருத்தியலின் சொந்தக்காரர்களாக ஐரோப்பாச் சமூகம் அறியப்படுகின்றது. எழுத்தாவணங்களையும் தொல் பொருள்களையும் ஆதாரங்களாக வைத்து வரலாறு எழுதும் முறையைத் தோற்றுவித்தது ஐரோப்பியச் சமூகமே. ஆதாரங்களை முன்வைத்து எழுதப்படும் வரலாறாக இருக்கும் போதிலும் அவ்வரலாறு எப்போதும் முழுமையானதாக இருக்கப் போவதில்லை என்ற போதிலும் கூட ஆவணங்களில் இருந்து 'மீள்வாசிப்பு' என்ற புதிய வகைமாதிரி தோற்றுவிக்கப்பட்டது என்ற அளவில் ஆவணங்கள் முக்கியமானவை ஆகின்றன. அதிகார வர்க்கத்தின் கதையாடலே வரலாறு என்ற எண்ணப்பாடு 1980 களில் வலுப்பட்டது. அதிகார வர்க்கம் வரலாற்றுக்கு ஆவணங்களையும் தொல்லியல் பொருள்களையும் சான்றாக முன்வைத்த போதிலும் பிற்காலத்தில் அதே ஆவணங்களில் இருந்து 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்கு' மாற்றீடான அல்லது 'ஒற்றை வரலாற்றுப் போக்கிற்குச்' சமாந்தரமாகச் சிறுபான்மையினரால் உப வரலாறுகள் எழுதப்பட்டன. ஐரோப்பிய - தந்தைமை ஆதிக்க வரலாற்றுப் போக்கானது புறமொதுக்கிய பெண், அடிமைத்துவம், சமப்பாலுறவு , கிறிஸ்தவ எதிர்ப்பு போன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகப் பிற்காலத்தில் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்ட அதே ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டது முக்கியமான முரண்நகையான விடயமாகும்.

ஐரோப்பிய சமூகங்களில் மட்டுமல்லாது பிற்காலத்தைய ஐரோப்பிய சமூகமல்லாத பிற சமூகத்தவர்களது வரலாறுகளும் ஐரோப்பிய சமூகத்தால் எழுதப்பட்டவை. ஐரோப்பிய சமூகமல்லாத இப்பிற சமூகங்களும் தமது மீளுருவாக்கத்திற்கு அதே வரலாற்றையும் ஆவணங்களையும் பயன்படுத்தின என்பதே முக்கியமாக்கப்படுகின்றது. இதுவே ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. பின்காலனித்துவ சிந்தனைகளின் அடிப்படை காலனிய எதிர்ப்பு நிலை என்பதைத் தாண்டி தம் சமூகங்கள் மீதான ஐரோப்பியர்களது பார்வையை மறுதலிப்பதாகவே அமைந்தது. 'அடித்தட்டு மக்களது' பார்வையை முன்வைத்த Sabaltern கருத்தியலை முவைப்பவர்கள் ஐரோப்பிய ஆவணங்களில் இருந்து தம்மை மீள்வாசிப்புச் செய்தது இங்கே கவனிக்கத்தக்கது. ஒடுக்கப்படும் அனைத்து சிறுபான்மையினரும் அதிகார வலையமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் தமது சமூகம் பற்றிய பார்வையை முன்வைப்பதற்கும் அவர்களது சமூகம் மீதான ஆவணப்படுத்தல்கள் அவசியமாகின்றன. இவை பற்றிய விரிவான பார்வையை கீழ்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

1.1 வரலாறு, தொல்லியல் மற்றும் ஆவணங்கள்.
வரலாற்றை உருவாக்குவதற்கு வரலாற்றாசிரியர்கள் தொல்லியல் பொருள்களையும் எழுத்தாவணங்களையும் பயன்படுத்தினர். வரலாறு தமக்குச் சாதகமாக அல்லது தமது அதிகாரத்தை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டன. எழுதப்பட்ட அவ்வரலாறுகள் தமக்குச் சாதகமற்ற ஆவணங்களை அழித்தது அதிகார வர்க்கம் சார்பான கருத்தியலை நிறுவ முயன்றன. கருத்தியல் ரீதியான மேன்மையை வலியுறுத்துவதற்காக அதற்குப் பாதகமான ஆவணங்கள் அழிக்கப்பட்டது என்றும் கூற முடியும். இவ்விடயம் சார்பாகப் பல உதாரணங்களைக் கூற முடியும். இவ்விடத்தில் ஒரு உதாரணத்தைக் கூறி விளக்க முற்படுகின்றேன்.

கி.பி 275 ஆண்டை அண்மித்தே பைபிள் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்றது. கிறிஸ்தவ மேன்மைவாதம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அக்காலத்தைய அதிகார வர்க்கம் புதிய ஏற்பாட்டை எழுதுவித்ததாகக் கூறப்படுகின்றது. அப்புதிய ஏற்பாட்டில் பலவிடயங்கள் மறைக்கப்பட்டதாகவும் யேசுநாதரை புனிதராகக் காட்டும் பொருட்டு பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ மேன்மை வாதம் பைபிளுக்கு மாற்றீடான எதுவித கருத்துருவாக்கங்களையும் அனுமதிக்கவில்லை. தான் உருவாக்கிய கருத்துருவாக்கத்திற்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் அழித்தொழித்தது. அதன் மூலம் சமூகத்தில் தன்னைத்தக்க வைப்பதற்கான கருத்தியல் மேலாட்சி ஒன்றை நிறுவிக் கொண்டது. 2000 வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்கருத்தியல் மேலாட்சி எவ்வகையில் தொழில்படுகின்றது என்பதை நாம் அனுபவ பூர்வமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

கிறிஸ்தவ மேலாதிக்கத்தை அசைத்துப் பார்க்கும் நோக்கில் மீள்வாசிப்புச் செய்யப்பட்ட பலவிதமான வாசிப்புப் பிரதிகளும் கிறிஸ்தவ சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பால் பலத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டன. புறமொதுக்கல் செய்யப்பட்டன. 1960 களில் Nikos Kazantzakis எழுதப்பட்டு வெளியாகிய Last temptation of christ என்னும் நூல் யேசுநாதரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் கூற முற்பட்டது. ஆயினும் பலத்தை கண்டனத்துக்கு உட்பட்ட அந்நூல் கிறிஸ்தவ அதிகார சமூகத்தால் தடைசெய்யப்பட்ட நூலாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் மேலும் பல எழுத்துக்கள் வெளிவந்த போதிலும் கிறிஸ்தவ மேலாட்சியை அசைப்பதென்பது கடினமானதாகவே அமைந்தது. ஆவணங்களால் வரலாறு உருவாக்கப்பட்டு கருத்தியல் மேலாட்சியை சமூகத்தில் ஏற்படுத்த்தியதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஜோன் எச். ஆர்னல்ட் கூறுவதை இவ்விடத்தில் கூற வேண்டும். 'அதிகாரத்தின் மீது தமக்கிருந்த உரிமையை நிலைநாட்ட புரோடஸ்டண்டுகள், கத்தோலிக்கர்கள் ஆகிய இருவருமே வரலாற்றைத் தமது ஆதாரமாகப் பயன்படுத்தினார்கள். காலத்தால் முற்பட்டவர்கள் என்று கூறிக்கொள்வதன் மூலமோ அல்லது ரோமன் திருச்சபை கண்டனத்துக்குரியது என்று நிறுவுவதன் மூலமோ தமது பிரிந்தியங்கும் உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கான கருவியாக புரோடஸ்டண்டுகளால் வரலாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.' அதிகாரப் போட்டி என்ற வகைமாதிரியில் இக்கருத்து விளங்கிக் கொள்ளப்படக்கூடியதாக இருப்பினும் ஒன்றனது அதிகார மேலாதிக்கம் குறித்த ஒருவிடயத்தால் நிறுவமுற்படுத்தப்படும் போது அதே விடயத்தைக் கொண்டு விளிம்பு நிலைச்சமூகம் தன்னை காத்துக் கொள்வது என்ற அடிப்படையிலும் வாசிப்புச் செய்ய முடியும்.

அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக ஆவணங்களும் அதன் வழி உருவாக்கப்பட்ட வரலாறும் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களால் எதிர்ப்பரசியல் செய்யும் பலராலும் ஆவணங்கள் என்பதே ஒட்டுமொத்த அதிகார வர்க்க வடிவமாக நோக்கப்படுகின்றது. இவ்வாதத்தில் ஒடுக்கப்படும் சமூகத்தை மேன்மேலும் ஒடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து விடும் அபாயம் இருக்கின்றது என்பதைக் கூறியாக வேண்டும். அதற்கு மாற்றீடாக சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது ஆவணங்களையும் பதிவுகளையும் அதிகாரத்திற்கு முன் நிலைநிறுத்துவதே அதிகாரத்தை எதிர்ப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியும். அது மட்டுமல்லாது நிறுவப்படும் அதிகாரத்திற்கு எதிரான கருத்தியல் தளத்தை ஆவணங்கள் மூலம் உருவாக்குவதன் மூலம் அதில் இருந்து மீண்டெழ முடியும் என்பதே எனது கருத்து.

ரங்கே போன்ற வரலாற்றாசிரியர்கள் ஆவணங்களில் இருந்து தேசங்கள், அரசுகள், போர்கள் என்பவற்றுக்கூடாக வரலாறு என்பதை எழுதிச் சென்றார்கள். ஆவணங்களில் இருந்து வரலாற்றை எழுதும் வரலாற்றாசிரியர்கள் என்ற பொதுமைக் கருத்தாக்கம் இன்று பெரும்பாலும் மறைந்து போய்விட்டது. ஜோன் எச். ஆர்னல்ட் கூறுவது போன்று வரலாறு என்னும் பெரும்துறை இன்று பலவிடயங்களிலும் பலபிரிவுகளாக அணுகப்படுகின்றது. 'சமூக வரலாற்றாசிரியர்கள்', 'கலாச்சார வரலாற்றாசிரியர்கள்', 'பெண்ணிய வரலாற்றாசிரியர்கள்', 'அறிவியல் வரலாற்றாசிரியர்கள்' என்ற பலவிதமான வகைகளில் வரலாற்றாசிரியர்கள் நோக்கப்படுகின்றார்கள். சமூக ஆய்வில் புதிய துறைகளின் தோற்றத்திற்கும் புதிய வகை வாசிப்பிற்கும் இப்பார்வை முக்கியமானதாகின்றது. தொல்லியல் ஆய்வில் முக்கியமாகப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளுதல் என்ற வாதம் பிற்கால அறிவுஜீவிகளிடம் வலுப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக புதிய/மாற்று பார்வைகளின் அவசியத்தையும் வரலாற்றுப் போக்கிலான முழுமையான பார்வைக்கு 'பிற' பக்கங்களில் இருந்தான பார்வைகளும் அவசியமானவை என்பதை உணர்ந்து கொண்டதே இதன் முக்கியமான காரணமெனலாம். மருத்துவ ஏடுகளில் இருந்து பெண்ணிய வரலாறு எழுதப்படுவதும் நெசவுத் தொழிற்துறை தொடர்பான ஏடுகளில் இருந்து 'கலாச்சார வரலாறு' எழுதப்படுவதும் இன்றைய உலகின் பன்முகப்பார்வையின் போக்கையும் பன்முகப்பார்வையினூடான முழுமையையும் நோக்கியே என்று உறுதியாகக் கூற முடியும்.

1.2 மானிடவியலின் வரலாறும் ஆவணங்களும்.
சமூக - பண்பாட்டு மானிடவியல் என்ற நூலை எழுதிய ஜோன் மோனகன் மற்றும் பீட்டர் ஜஸ்ட் ஆகியோர் 'மானிடவியலின் வளர்ச்சியானது ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு, காலனியவாதம், இயற்கை அறிவியல் ஆகியவற்றிற்கு இடையேயான ஊடாட்டத்தால் நிகழ்ந்தது.' எனக் குறிப்பிடுகின்றார்கள். இதில் 'ஐரோப்பாவின் கண்டுபிடிப்பு' என்று அவர்கள் கருதியது ஐரோப்பா அல்லாத தேசத்தையே. இவ்வகை 'ஐரோப்ப மையவாதமே' மானிடவியலின் அடிநாதமாக இருந்தது என்கின்ற கருத்தியல் பிற்காலத்தில் ரனஜித் குகா போன்ற பின்காலனிய அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து உலகம் சுற்றக் கிளம்பியவர்களின் 'கண்டுபிடிப்பே' ஐரோப்பா அல்லாத பிறதேசங்கள் என்ற கருத்தியலின் வழியேயே மனிடவியல் தோற்றம் பெற்று வளர்ந்திருக்கின்றது. வி. சுஜாதா அவர்கள் கூறும் 'தம்மையும் தமது சமுதாயத்தையும் ஆராய சமூகவியலையும் பிற்பட்ட சமுதாயங்களைத் தெரிந்துகொள்ள மானுடவியலையும் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் ஏற்படுத்தினர்.' என்ற கருத்தில் பொதிந்துள்ள உண்மையை எடுத்துக் கூற வேண்டியது ஐரோப்பா அல்லாத சமூகங்களின் கடப்பாடாகவும் அவசியமான தேவையாகவும் இருக்கின்றது.

ஆரம்பகாலப் பொதுமைப்படுத்தப்பட்ட மானிடவியல் என்னும் கருத்துருவாக்கத்தில் இருந்து இவ்விடயத்தைச் சிந்திப்போமாயின் இவ்வகைப்போக்குகளை எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். ஐரோப்பாவில் இருந்து உலகின் எல்லாப் பக்கங்களுக்கும் செல்லத் தொடங்கிய ஐரோப்பியர்கள் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா என பெரியளவிலான பிரதேசங்களைக் கண்டார்கள். அவர்களது பார்வையில் அவை கண்டுபிடிப்பாக அமைந்தது. 'அமெரிக்காவைக் கண்டு பிடித்தது கொலம்பஸ்' என்பது மாதிரியான கருத்தாடல்கள் அமெரிக்க பூர்வகுடியினரை எவ்வகையில் அவமதிப்புக்குள்ளாக்கும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. ஐரோப்பியர்கள் சென்றடைந்த பிரதேசங்களில் ஏற்கனவே அந்நிலங்களில் அந்நிலத்து மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது வாழ்வுமுறையை அறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பிற்காலத்தில் மானிடவியலாக அறியப்பட்டது.

ஐரோப்பியர்கள் சென்றடைந்த இடங்களில் எல்லாம் தமது அதிகாரத்தை நிறுவிய அதே நேரம் தமது மரபார்ந்த முறைகளுக்கமைய அம்மக்கள் மீதான தமது பார்வையைப் பதிவு செய்தார்கள். அம்மக்கள் கூட்டத்தில் இருந்து தாம் மேம்பட்டவர்கள் (வேறுபட்டவர்கள் அல்ல) என்னும் மனோபாவத்தில் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட ஆய்வுமுறையே பின்வரும் காலங்களில் மானிடவியலாக வளர்ச்சி பெற்று இன்று தனக்குள் பல உபதுறைகளையும் உருவாக்கி நிற்கின்றது. சமூக, பண்பாட்டு, கலாச்சார, பரிணாம, உயிரியல், மொழியியல் மானிடவியல் என்றவாறான உபதுறைகள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டாலும் அவை அனைத்திலும் 'ஐரோப்பிய மையவாதம்' அடிநாதமாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாதுள்ளது. அப்பார்வைகளின் அடிப்படை ஐரோப்பியர்கள் உருவாக்கிய ஆவணங்களில் இருந்து தோன்றுகின்றது. காலனியாதிக்க காலத்தில் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலங்களெங்கும் பிரயாணம் செய்த இராணுவ அதிகாரிகள், ஆட்சியாளர்கள், மருத்துவர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் போன்றோரது ஆவணங்களின் (முக்கியமாக எழுத்தாவணங்கள்) அடிப்படையில் மானிடவியல் வளர்ச்சி பெற்ற துறையாகியது. காலனியாதிக்கம் இல்லாதொழிக்கப்பட்டதன் பிற்பாடு ஐரோப்பிய மனநிலை சார்ந்த ஆய்வாளர்களது கவனத்தைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத பிரதேசங்களில் ஆய்வுசெய்யும் பொருட்டு ஆய்வு மாணவர்களுக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டு மானிடவியல் ஆய்வு ஐரோப்பிய மைய சிந்தனை முறையில் தொடர்ந்தது.

உதாரணமாக இனவரைவியல் சார் மானிடவியல் ஆய்வுகளுக்கு களப்பணிகள் முக்கியமாக அமைகின்ற போதிலும் களப்பணிகள் அல்லாத ஆய்வுகள் (ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்கப் பிரதேச) பலவற்றைப் பல ஆய்வாளர்கள் ஆவணங்களை மட்டும் மையப்படுத்திச் செய்வதாகக் கூறப்படுகின்றது. இவ்வகையில் ஐரோப்ப மைய வாதக் கருத்துக்களே மேன்மேலும் இதர சமூகங்கள் மீதான பார்வையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசம் நூலுக்குப் பின்னர் ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வைகள் தனித்துவமாக முன்வைக்கப்பட்டாலும் அவற்றின் போதாமை யதார்த்த்தில் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது. பின்காலனித்துவ மானிடவியல் ஆய்வுகள் அதே ஐரோப்பிய ஆதிக்க ஆவணங்களில் இருந்து அதிகாரப் பார்வையை நீக்கி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குச் சார்பாகச் செய்யப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என்ற போதிலும் ஆய்வுக்குத் தேவையான மூலவிடயங்கள் ஐரோப்பிய மைய வாதப் பார்வையில் அமைந்திருப்பதும் இன்னும் ஐரோப்பிய அல்லாத சமூக மூலவிடயங்களின் அளவு அதிகரிக்காமல் இருப்பதும் பாதகமான விடயங்களே.

மானிடவியலுக்கு உறுதுணையாக அமைந்த ஆவணங்கள் தொடர்பான பார்வையை 'ஐரோப்ப மையவாதமும் பிற சமுகங்களும்' என்னும் பகுதியில் விரிவாகப் பார்க்க முடியும். அதிகாரக் கருத்துருவாக்கம் ஆவணங்கள் மூலம் நிறுவப்படுவது எவ்வாறு என்பது மட்டுமே இப்பகுதிக்குரிய நோக்கமாகும்.

1.3 ஐரோப்ப மையவாதமும் 'பிற' சமூகங்களும்.
ஐரோப்ப மையவாதச் சமூகமும் அதன் உற்பத்தியான கருத்தியலுமே உலகு முழுமைக்குமான கருத்தியல் மேலாட்சியாக இருந்தது என்பதை ஆதார பூர்வமாக எட்வார்ட் சைட் நிறுவியதன் பிற்பாடு எட்வார்ட் சைட் இன் கருத்தியலைப் பின்பற்றிப் பின்காலனித்துவ கருத்தியல் எழுச்சி பெற்றது எனக்கூற முடியும். ஐரோப்பா அல்லாத காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலனித்துவ ஆட்சியின் காரணமாக தமது அதிகாரத்தை முற்றிலுமாக இழந்திருந்த அமெரிக்க, அவுஸ்திரேலியப் பூர்வகுடிகள் தொடர்பான கரிசனை என்பதற்குமப்பால் ஆபிரிக்க, தென்னமெரிக்க, ஆசியச் சமூகங்களின் பார்வையுடன் கூடிய கருத்தியல் வளர்ச்சி பெற்றது எனலாம். இதன் தொடர்ச்சியேலேயே தேசிய அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்ட அடையாள அரசியலின் தோற்றங்கள் எனவும் கூற முடியும்.

ஐரோப்ப - ஆண் மையவாத சிந்தனை முறைகளின் எதிர்ப்பரசியலாக பெண்ணியச் சிந்தனைகளும் சமப்பாலுறவுக் கருத்தியல்களும் ஐரோப்ப சமூகத்தில் முன்வைக்கப்பட்டதே ஐரோப்ப மையவாதக் கருத்தியலுக்கெதிரான முதலாவது எதிர்க்கருத்தியல் எனக்கூற முடியும். இதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. அதேபோல் அமெரிக்காவில் 'கறுப்பு அடிமைகள்' தங்களது எழுச்சிகளை முன்னெடுத்தார்கள். அவர்களது போராட்டம் தமது 'வேர்களைத் தேடுவது' என்ற அடிப்படையில் தமது உரிமைகளை வேண்டியதாகக் காணப்பட்டது. இதற்கு முன்னரே காலனித்துவத்திற்கெதிரான போராட்டங்கள் ஆசியப் பிராந்தியத்தில் நடைபெற்றிருந்தாலும் அவற்றின் கருத்தியல் பலம் ஐரோப்ப மையவாதச் சிந்தனைகளைத் தோற்கடிப்பதாக அமையவில்லை. மால்கம் எக்ஸ் போன்ற கறுப்பர்களது உரிமைக்காக அமெரிக்காவில் போராடியவர்கள் கூட அடிமைத்துவத்திற்கெதிரான கருத்தியல்களை முவைத்த போதிலும் அவை ஐரோப்ப சிந்தனை மறுப்பாகப் பூரணமாக வடிவம் பெறவில்லை. அதே நேரத்தில் ஆபிரிக்காவில் இடம்பெற்ற போராட்டங்களும் காலனித்துவ எதிர்ப் போராட்டங்கள் என்ற அளவில் நின்றுகொண்டிருந்தன. பெரும்பாலான நாடுகள் சுதந்திரமும் பெற்றன. ஆயினும் அவர்களாலும் ஐரோப்பச் சிந்தனை மரபை முற்றாக மறுதலிக்க முடியவில்லை. மாறாகா காலனித்துவத்திற்கெதிராக ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் முக்கண்ட கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டன. அதற்கப்பால் அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்நேரத்தில் எட்வார்ட் சைட் இனது கருத்தியல்கள் தோற்றம்பெற்றன. அவை ஆதாரபூர்வமாக ஐரோப்ப சிந்தனை மரபை விமர்சிக்கவும் மறுதலிக்கவும் தலைப்பட்டன. எட்வார்ட் சைட் இன் கருத்தியல், காலனித்துவக் கருத்தியல் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள் தாம் கருத்தியல் ரீதியாகவும் விடுதலை பெறவேண்டும் என்ற மனநிலையைத் தோற்றுவித்தது. காலனித்துவத்திற்குள் ஆட்பட்டிருந்த நாடுகள் ஐரோப்பச் சிந்தனை மரபில் இருந்து விடுபட்டுத் தமக்கான வாசிப்பை மேற்கொள்ள எட்வார்ட் சைட் இனது ஓரீயன்டலிசக் கருத்துக்கள் உதவின எனக்கூறின் அதை யாராலும் மறுக்க முடியாது. அதன் தொடர்ச்சியிலேயே 'சபால்டன் குழு'வின் தோற்றமும் கருத்தியல் பரிணாமமும் முக்கியத்துவம் பெறுகின்றன. ரனஜித் குகா அவர்களது 'மாற்று வரலாறு' எழுத வேண்டிய தேவையின் பாற்பட்ட சிந்தனைகள் இங்கே ஐரோப்பா மையவாதச் சிந்தனையை முற்றுமுழுதாகத் தோற்கடிக்கக் கூடிய சிந்தனை முறைகளாகும். 'விளிம்பு நிலை ஆய்வுகள்' இதை ஓரளவுக்காவது சாத்தியப்படுத்தின என்றே கூற வேண்டியுள்ளது.

ரனஜித் குகாவைப் பின்பற்றிக் குறிப்பாக ஆசியாவில் அதிலும் இந்தியாவில் மாற்று வரலாறு தொடர்பான சிந்தனை முறை வளர்ச்சியடைந்தது. இதில் முக்கியமான ஆளுமைகளாகக் கோஹ்ன் ஐயும் காயத்ரி ஸ்பிவாக் ஐயும் குறிப்பிட முடியும். அமெரிக்க மானுடவியலாளரான கோஹ்ன், ரனஜித் குகாவின்டுடைய பார்வையை மேன்மேலும் செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இவரது களப்பணிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்த போதிலும் இவர் அதனை மையமாக வைத்து கலாச்சாரம், சமூக, தேசம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பை ஆய்வு செய்தார். காலனித்துவ அறிவை மீறும் வகையில் கலாச்சாரப் பகுப்பாய்வு மூலமாக இனம் சார் சமூகவியல் கருத்தை வலுப்படுத்தினார் எனக்கூற வேண்டியுள்ளது. இதன் ஆரம்பமாக கிராம்சியைக் கருத முடியும். Colonialism and its forms of Knowledge என்ற நூல் இது பற்றி விரிவாக ஆய்வுசெய்கின்றது. அதே நேரம் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவாக் பின்காலனித்துவக் கருத்தியலை ஐரோப்ப மையவாதத்திற்கெதிராக வலுவாக முன்னிறுத்தினார். A Critique of Post-Clonial Reason என்னும் தனது நூலில் தத்துவம், கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் காணப்பட்ட காலனித்துவக் கூறுகளையும் ஐரோப்ப மையவாதக் கூறுகளையும் இனம் காண்கின்றார். அது மட்டுமன்றி அதன் இறுதி அத்தியாயத்தில் ழாக் தெரிதாவின் 'மீள்கட்டுமானம்' என்னு கருத்தியலை பின்காலத்துவ சமூகங்கள் உள்வாங்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்துகின்றார். பின்காலனித்துவ சமூகங்களது மீள்கட்டுமானம் என்பது ஐரோப்ப சிந்தனை மரபகன்ற தமது சமூகப் பார்வையுடன் கூடிய பார்வையை வலியுறுத்தல் என்பதாகவே கருத வேண்டியுள்ளது.

ஹெகல் மற்றும் மார்க்ஸ் போன்றவர்கள் எவ்வாறு ஐரோப்ப சமூகத்தின் பிரதிநிதியாக இருந்தார்கள் என்பதை இன்று பலரும் விளக்கியுள்ளார்கள். அவர்களிடம் இருந்த ஐரோப்ப மைய வாதச் சிந்தனை மரபு அவர்களை ஐரோப்பா அல்லாத சமூகங்களின் பார்வையில் சிந்திக்க விடவில்லை. இவ்வகையில் ஐரோப்பா அல்லாத தேசங்களில் மார்க்சியம் மீள்வாசிப்பை வேண்டி நின்றது. பிற்காலத்தில் கலாச்சாரத்தை மையமாக வைத்து மார்க்சியம் செழுமைப்படுத்தப்பட்டதற்கான காரணமாக இவ்விடயத்தைக் கூற முடியும். வரலாறு என்பதைத் தொடர்ச்சியான நிகழ்வாகப் பார்க்கும் தன்மையை ஃபூக்கோ கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றான வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றின் வழிநெடுகிலும் தவறான தெரிவுகளும் மதிப்பீடுகளும் காணப்படுகின்றன என்பது ஃபூக்கோவின் கருத்தாக இருந்தது. வரலாறு பற்றிய ஹெகலிய சிந்தனை மறுப்புக்கான முக்கிய தருணமாக ஃபூக்கோவைக் கூற முடியும்.

1.4 பின்காலனித்துவ காலப்பகுதியும் ஆவணங்களும்.
பின்காலனித்துவ காலகட்டத்தில் ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மைத் தமது பார்வையில் மீள்வாசிப்புக்கு உட்படுத்த காலனித்துவ காலத்து ஆவணங்களைப் பயன்படுத்திய விடயத்தை மேலே கூறியிருந்தேன். ஹெகல் கூறியதைப் போன்று ஐரோப்பா அல்லாத சமூகங்கள் தம்மை நாகரிகமடைந்த அல்லது ஐரோப்பா சமூகத்திற்குச் சமனாக வைத்துப் பேசக் கூடிய அளவிற்கு இல்லை. ஏனெனில் அவர்களிடம் வரலாறோ தேசமோ இருக்கவில்லை. ஆக, அவர்களது வரலாறை ஐரோப்பியர்கள் தமது பார்வையில் எழுதிக் கொண்டார்கள். அவர்களுக்கான ஆவணங்களை தமது பார்வையில் தயாரித்தும் கொண்டார்கள். இன்றைய நிலையில் எங்களைப் போன்ற ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கு, எமது கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய ஆவணங்களும் ஐரோப்பிய வரலாற்றுக் குறிப்புக்களுமே உள்ளன.

ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பூர்வீக சமூகங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்னர் அச்சமூகங்கள் தமக்கான தெரிவுகளுடன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தமக்கான தனித்துவமான மரபையும் அறிவையும் கொண்டிருந்தார்கள். ஆயினும் காலனித்துவ காலத்தின் பின்னர் தமக்கான அறிவை இழந்து ஐரோப்பிய மையமான அறிவு அவர்கள் மீது திணிக்கப்பட்டது. அனைத்து வகையிலும் ஐரோப்ப மையச் சிந்தனை முறை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. ஆயினும் இன்று காலனித்துவ சிந்தனை மரபில் இருந்து விடுபடும் நோக்கிலான சிந்தனை பரவலாக்கப்படும் தருண்ங்களில் அவர்களிடம் தமக்கான அறிவுத் தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டிருக்கின்றது. பாரிய இடைவெளி தோன்றியுள்ளது. இவ்விடத்தில் தனித்துவமான சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்வதற்கு ஐரோப்பிய காலனித்துவ கால ஆவணங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. (தொன்மங்கள் தொடர்பான வாய்வழிக்கதை மரபு அவ்வவ் சமூகங்களுக்கான அறிவுத் தொடர்ச்சியை ஓரளவாவது சாத்தியமாக்கியுள்ள போதிலும் அவை 'முறையாக' ஆவணப்படுத்தப்படவில்லை. இவ்விடத்திலேயே மேற்கின் மருத்துவத்திற்கு எதிராக சித்த மருத்துவத்தை முன்னிறுத்துவதன் சாதகமான அம்சங்களை நாம் பேச வேண்டியுள்ளது.)

பின்காலத்துவ காலச் சிந்தனை மரபிற்கு முக்கியமாக 'சந்திராவின் இறப்பு' என்ற சம்பவத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்திய சமூகத்தில் பின்காலனித்துவத்தை ஆய்வுசெய்த ரனஜித் குகா இவ்விடயத்தை முன்வைத்தார். காலனித்துவ கால பதிவேடுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குகா 'சந்திராவின் மரணம்' என்னும் சம்பவத்தைப் படிக்க நேர்ந்தது. அதன் மீள்வாசிப்பு தலித் அரசியலுக்கு அவசியமான பார்வையைக் கொடுத்தது. சந்திரா என்னும் தலித் பெண்ணின் கருக்கலைப்பை கலனித்துவ காலத்தில் எவ்வாறு அசட்டையாகக் கருதினார்கள் என்பதை அச்சம்பவம் தொடர்பான பதிவேட்டில் இருந்து குகா மீள்வாசிப்புச் செய்தார். அக்கருக்கலைப்பில் சந்திராவும் கருவில் இருந்த குழந்தையும் இறந்து போயினர். இச்சம்பவம் தலித் மக்கள் மீதான காலனித்துவ கால ஒடுக்குமுறையை ரனஜித் குகா கண்டார். சாதாரணமா பதிவேடு என்ற ஆவணத்தில் இருந்து எவ்வாறு ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தம்மை மீள்வாசிப்புச் செய்யமுடியும் அல்லது தமது வரலாற்றை எழுத முடியும் என்பதை இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது. ஒடுக்கப்படும் சமூகங்கள் தமது விடுதலைக்கு அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்து நிற்பதே 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவமாகும். 'மற்றமைகளாலேயே வரலாறு முழுமையடைகின்றது' என்னும் வரலாறு தொடர்பான ரோலன்ட் பார்த்தின் கூற்றுக்கு 'சந்திராவின் மரணம்' என்கின்ற சம்பவம் எவ்வளவு தூரம் உண்மையாகி நிற்கின்றது.

1.5 ஒடுக்கப்படும் சிறுபான்மையினரும் ஆவணங்களும்.
மேலே கூறிய நான்கு பகுதிகளும் ஓரளவுக்குச் சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகக் கூறப்பட்ட கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்தன. அத்துடன் மேற்கூறப்பட்ட பகுதிகளூடாக அதிகார வர்க்க ஆவணங்களில் இருந்து ஒடுக்கப்படும் சமூகங்கள் தம்மை மீள்சாசிப்புச் செய்து கொள்வது எப்படி என ஊகித்திருக்க முடியும். ஐரோப்பா - ஐரோப்பா அல்லாத சமூகங்களுடன் காலனித்துவத்தை இணைத்து கூறப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக ஐரோப்ப சமூகத்திற்குள் ஒடுக்கப்பட்ட நிறுவனமயமாக்கப்பட்ட கிறிஸ்துவ அமைப்பிற்கு எதிரான குரல்கள் தொடர்பாகவும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.

ஐரோப்ப சமூகம் பொதுவாகத் தந்தைமை அல்லது ஆண் அதிகாரமயப்பட்ட சமூகமாக அறியப்படுகின்றது. அதுவே காலனியாதிக்கத்தையும் கிறிஸ்துவ அமைப்பையும் பலப்படுத்தியது எனக்கூறலாம். அதே நேரத்தில் அச்சமூகக் கட்டமைப்பு பெண்கள் மற்றும் ச்மப்பாலுறவாளர்கள் ஆகிய சிறுபான்மைத் தரப்பினரைப் பலமாக மறுத்து வந்திருக்கின்றது. ஆண்வயப்பட்ட சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடுகளில் இருந்தே பெண்ணியம் தோற்றம்பெற்றது. ஆண் மைய ஆவணங்களில் இருந்து பெண்ணியம் தன்னை மீளுருவாக்கம் செய்து கொண்டது அல்லது புத்துயிராக்கம் செய்து கொண்டது. ஆண் மையப்பிரதிகளை மறுக்கும் நோக்கில் பிரதிகள் மீள்வாசிப்புச் செய்யப்பட்டதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

ஐரோப்பா - ஐரோப்பா அல்லாத பிற சமூகங்கள் தொடர்பான வேறுபாடுகள் கணிசமான அளவு கூறப்பட்டாலும் ஐரோப்பா அல்லாத சமூகங்களுக்கிடையில் அல்லது உள்ளே காணப்பட்ட சிறுபான்மை வெளிகள் தொடர்பாக நான் அதிகம் பேசவில்லை. இந்தியச் சமூக அமைப்பில் காணப்பட்ட படிநிலைச் சாதியமைப்பு மற்றும் பெண்கள் அடக்குமுறை தொடர்பான விடயங்கள், ஆரிய மேலாதிக்கம், பிற சமயங்கள் மீதான வெறுப்பு நிலை போன்றவை பற்றி மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். உதாரணமாகத் தொன்மங்களை சிறுபான்மைக் கருத்தியல் சார்ந்து மீளுருவாக்கம் செய்தல் மற்றும் ஆதிக்கக் கருத்தியலுக்குட்பட்ட வாய்வழி ஆவணங்களான புராணங்களை மீள்வாசிப்புச் செய்தல் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும். இங்கே ஆரியக் கடவுகளுக்கெதிராக சிறுதெய்வங்களை முன்னிலைப்படுத்தலும் ஆண்வயப்பட்ட புராணங்களில் பெண்களை முன்னிறுத்தி மீள்வாசிப்புச் செய்வதும் சமூகத்தின் கருத்தியல் மேலாட்சியைத் தகர்த்து விளிம்புக் கதையாடல்களை முன்னிலைப்படுத்த உதவும். 'சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு' என்னும் பிரதியில் பிரேம்-ரமேஷ், புராணங்களை பெண்மையை மையமாக வைத்து அணுக முற்படுகின்றார்கள். இவ்வகை மீள்வாசிப்புக்கள் ஆவணங்கள் மற்றும் வரலாறு வழியாக நிறுவப்பட்ட கருத்தியல் மேலாட்சியைச் சிதைக்கும். அதிகார வர்க்க ஆவணங்களை சிறுபான்மையினர் மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலம் அதிகாரத்தை சிதைக்கும் அசைவியக்கத்தைச் சாத்தியமாக்க முடியும்.

உசாத்துணை.
1. வரலாறு, ஜோன் எச்.அர்னால்ட், தமிழில்: பிரேம்
2. சமூக - பண்பாட்டு மானிடவியல், ஜான் மோனகன் - பீட்டர் ஜஸ்ட், தமிழில்: பக்தவத்சல பாரதி

3. The Secret of world History: Selected Writings on the Art ana Science of History, Leopord von Ranke.

4. Mapping subaltern studies and the postcolonial, Vinayak Chaturvedi

5. The Last Temptation of Christ, Nikos Kazantzakis

6. Power/Knowledge: Selected Interviews and Other Writings, 1972-1977, Michel Foucault

7. Orientalism, Said, Edward (1977)
8. Colonialism and its forms of knowledge: the British in India, Bernard S. Cohn

9. A critique of postcolonial reason: toward a history of the vanishing present, Gayatri Chakravorty Spivak

10. Dominance without Hegemony: History and Power in Colonial India, Ranajit Guha

11. History at the Limit of World-History, Ranajit Guha

12. Subaltern Studies: Writings on South Asian History and Society, Vol. 6

13. Return to the Source: Selected Speeches, Amilcar Cabral

14. Is Hegel's Philosophy of History Eurocentric, Andrew Buchwalter

15. சிலப்பதிகாரம் - மணிமேகலை : பெண்மையின் நாடகம் - பின்னவீனத்துவ ஆய்வு, பிரேம்-ரமேஷ்


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)

Blog Archive

Statcounter