வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

January 12, 2012

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் தகமை விருத்தியும் பிரயோக வடிவமும்


முன்னைய பதிவு : தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்

இலங்கை அரசியல் கணித - சமன்பாட்டின் அடிப்படையிலும் இன்றைய அரசியல் சூழ்நிலையிலும் தமிழ்மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய உணர்வு மழுங்கடிக்கப்படப்போவதில்லை. உணர்வுத்தளத்தில் அது தொடர்ச்சியாகக் கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். "தமிழ்த்தேசிய உணர்வும் தமிழ்த்தேசியமும்" என்ற பதிவில் கூறியுள்ளது போன்று அவ்வுணர்வுக்கான காரணிகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் என்பது மாத்திரமல்லாது அக்காரணிகள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன. அதுமாத்திரமன்றி மெய்நிகர் வெளியில் புலம்பெயர் தமிழ்மக்களுடனும் தமிழ்நாட்டு மக்களுடனுமான ஊடாட்டம் இவ்வுணர்வைத் தொடர்ச்சியாகத் தக்க வைத்தபடியேயிருக்கும். இவ்விடத்தில், இத்தளத்தில் செயற்படுபவர்களுக்கு இருவகையான தெரிவுகள் உண்டு. முதலாவது, தமிழ்த்தேசியத்தை நிராகரிப்பவர்கள் - தீவிர தமிழ்த்தேசிய உணர்விற்கான காரணிகளையும் தேவைகளையும் கண்டடைந்து அவற்றை நிவர்த்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பது. இரண்டாவது தமிழ்த்தேசிய உணர்வையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, அதன் முற்போக்கான பாத்திரத்தை உறுதி செய்வது. இதில், முதலாவது செயற்பாட்டுவெளி பெரும்பாலும் இலங்கை அரசு கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாகவே சாத்தியபடுத்தக்கூடியது. முதலாவதன் அடிப்படையில் தீர்வை விரும்புபவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளும்தான் பெருமளவில் தொழிற்பட வேண்டியுள்ளது. இரண்டாவது தளத்தில் செயற்பட விரும்புபவர்களுக்கான செயற்பாட்டுவெளி பெரும்பாலும் தமிழ்பேசும் சமூகங்கள் மத்தியிலானது. தவிர்க்க முடியாமல் அவ்வுணர்வை ஏற்றுக் கொண்டே செயற்பட முடியும்.

இக்கட்டுரையில் கவனப்படுத்தவிரும்பும் பகுதி இரண்டாவது செயற்பாட்டுவெளியுடன் தொடர்புள்ளது. தமிழ்த்தேசிய உணர்வை அதன் நியாயப்பாடுகளுடன் ஏற்றுக்கொண்டு, அவ்வுணர்வை முற்போக்கான திசைவழி நகர்த்துவதன் அவசியம் தொடர்பாக நீண்ட உரையாடல்களை நிகழ்த்த வேண்டியுள்ளது. காயங்களும் தேவைகளும் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படும் போது அவை வன்மமாக வெளிப்படும். அவற்றின் வெளிப்பாடு வன்முறையாகவும் அடிப்படைவாதத் தன்மை கொண்டதாகவுமே அமையும். இன்றுள்ள தமிழ்த்தேசிய உணர்வை - நிர்மானுசன் குறிப்பிடும் நிலைத்து நிற்றல் (Survival), சுதந்திரம் (Freedom), நல்வாழ்வு (Well being), அடையாளம் (Identity) ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய அடைவாக மாற்றுவது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. தமிழ்த்தேசியம் என்ற பொதுமைப்படுத்திய கருத்தியலின் ஊடாக அணுகுவதின் போதாமைகளை உணர்ந்து கொண்டும் வெவ்வேறு தளங்களில் அணுக வேண்டியதன் தேவையை உணர்ந்து கொண்டும் செயற்பட வேண்டியது அவசியமானது.

தமிழ்த்தேசிய உணர்வினது முற்போக்கான திசைவழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், தமிழ் பேசும் சமூகங்களது இன்றைய நிலையின் குறுக்குவெட்டுப்பரப்பை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. கடந்த பதிவில் தமிழ்பேசும் சமூகங்கள், கடந்த 30 வருடங்களில் மாற்றம் பெற்று வந்த முறை ஓரளவு சுட்டப்பட்டிருந்தது. அதேநேரம், தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்கள் என்றளவில் வைத்து தமிழ்பேசும் மக்களை அணுகிவிட முடியாது. தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் இன்று மூன்று தேசிய இனங்களைக் கொண்ட கட்டமைப்பே என்ற உணர்வுடனேயே, அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக யோசிக்க முடியும். அதே போன்று 1990 களுக்குப் பின்னரான உலக ஒழுங்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் - முதலீட்டிய விரிவாக்கமும் 'அரசு' கட்டமைப்புக்களுக்கு வழங்கியிருக்கும் பாத்திரம் தொடர்பான புரிதல்களை மேலும் வளர்த்துச் செல்ல வேண்டியுள்ளது. முதலீட்டிய விரிவாக்கத்தின் 'உள்ளூர் முகவர்' என்ற பாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசுகளுக்கு அமெரிக்கா தலமையிலான 'நிலையான' உலக ஒழுங்கும் தொழில்நுட்பமும் - வழங்கியுள்ள அதிகாரமும் அதன் சட்டபூர்வ தன்மையும் (legitimacy) அதனை உறுதிசெய்யும் நோக்கில் உலகமெங்கும் உருவாக்கிவிட்டுள்ள என்.ஜி.ஓ செயற்பாட்டுகளும் இணைந்து உருவாக்கியுள்ள புதிய அதிகார ஒழுங்கு தொடர்பான புரிதல்களின் மத்தியிலேயே, நாம் இலங்கையில் 'தமிழ்' செயற்பாடுகளை மீள்வரையறை செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form)

தமிழ்த்தேசியவாதம் : வாழ்வியல் நடைமுறை (praxis)

வாழ்வியல் நடைமுறையில், தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் மக்கள் கூட்டத்தினரிடையே - தமிழ்த்தேசியவாதமானது எவ்வாறான நிலமையில் உள்ளது என்பது அதன் முற்போக்கான பிரயோகவடிவத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். அதாவது இனவரைவியல் (Ethnography) அடிப்படையிலான நோக்கில், அதன் வாழ்வுமுறை எத்தகையது என்ற அம்சம், அதன் பிரயோகவடிவத்தின் முற்போக்கான அம்சத்தைத் தீர்மானிமானிக்கும் முக்கியமான காரணியெனலாம். பண்பாட்டு மானிடவியல் (Cultural Anthropology) துறையின் எழுச்சியில் உருவாகிய ஆய்வுகள் போராட்டத்தின் தேவைகள் - போக்குகளின் அடிப்படையாக இனவரையிலையும் அதனூடான வாழ்வியல் நடைமுறையையும் முன்வைக்கின்றன. இவ்வடிப்படைகளைத் தெளிவாக இனங்காணும் போதே, அதன் பிரயோகவடிவத்தைத் தீர்மானிக்கும் போது - பிற்போக்குக் கூறுகளை உதிர்த்து வெளியேறுதல் தொடர்பான உரையாடலுக்குள் உள்நுழைய முடியும். பிற்போக்கான கூறுகளை 'உரித்து' வெளியேறுவதென்பதை விட, அவற்றை 'உதிர்த்து' வெளியேறுதல் என்ற சொற்பிரயோகத்தைக் கவனிக்க. அதாவது முற்போக்கான பிரயோகம் என்பது சடுதியான திணிப்பின் மீதாக அல்லாமல் இயல்பான பரிணாமமாக (Organic evolution) இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது அவசியமானது.

சடங்குகளும் வழிபாடுகளும், கலை - கலாச்சார வெளிப்பாடு, மருத்துவ அறிவும் உணவுப் பழக்கவழக்கமும், தொழிற்கலைகள், விளையாட்டுக்கள் என்ற ஆறு விடயங்கள் சார்ந்த ஆய்வுகள் மிக அவசியமானவை. மேற்கூறிய ஆறு வகை மாதிரிகளூம் நாட்டாரியல், தொன்மங்கள், பாடல்கள், சொல் விளையாட்டுக்கள், கட்டுக்கதைகள் என்று ஏராளமான வகைகளாகப் பிரிக்கப்படக்கூடியவை. இவை ஒவ்வொன்றினதும் பயன்பாடும் நடைமுறையும் இன்று சமூகத்தில் எத்தகையவையாக உள்ளன? எவ்வகையான விடயங்களை சமூகங்கள் தூக்கியெறிந்துவிட்டு நகர்ந்திருக்கின்றன போன்ற விடயங்களை நாம் தமிழ்த்தேசியவாதத்தின் பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது உள்வாங்கி வைத்திருக்க வேண்டியது அவசியமானது. சடங்குகள் வழிபாடுகள் எவ்வாறான வளர்ச்சிக்கு உட்பட்டு வந்திருக்கின்றன? ஆன்மீகத்தில் நிகழ்ந்த சமஸ்ஹிருதமயமாக்கல் எவ்வாறான விளைவுகளைக் கொடுத்துள்ளது? தமிழ்த்தேசியவாதத்தின் கலை - கலாச்சார வெளிபாடுகள் எவை? வெவ்வேறு சாதிகள், பிரதேசம் சார்ந்த மக்களிடையே எவ்வாறான வகைகளில் வித்தியாசப்பட்டிருந்தது? பிரதேச ரீதியாக மாறுபட்டிருந்த உணவுப் பழக்க வழக்கங்கள் என்ன? தமிழ் சமூகங்கள் கொண்டிருந்த மருத்துவ அறிவு எத்தகையது? எவ்வாறான தொழிற்கலைகள் அதன் உள்ளடக்கத்தில் இருந்தன? எவ்வகையான விளையாட்டுக்கள் காணப்பட்டன? எவ்வாறான சட்ட முறைமை சமூகங்கள் மத்தியில் பின்பற்றப்பட்டது? உறவுமுறைகள் சமூக உறவுகளில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது போன்ற ஏராளமான விடயங்கள் - உள்ளடக்கம் சார்ந்ததுதான் தமிழ்த்தேசியம். பல்வேறு வித்தியாசங்களின் - பன்மைத்துவ வெளிப்பாடுகளின் கூட்டு ஒன்றிணைவாகவே தமிழ்த்தேசியம் உருவாகியிருக்க வேண்டும்.

தமிழ்த்தேசியவாதம் : தகமை விருத்தி (capacity building)

வாழ்வியல் நடைமுறை என்ற விடயத்திற்கு அடுத்ததாக தமிழ் சாணக்கியனின் 'தகமை விருத்தி' தொடர்பான விடயத்திற்கு வருவோம். வாழ்வியல் நடைமுறையில் இருந்து உருவாகும் சமூகக்குழுக்கள் பெருமளவான உரையாடல்கள் மத்தியில் உருவாக்கும் சமூக நிறுவனங்களே 'தகமை விருத்தியின்' அடிப்படையாக அமைய முடியும். ஐரோப்பிய நாடுகளில் இன்று தனி மனிதனுக்கும் அரசிற்கும் உள்ள உறவென்பது சடுதியாக ஏற்பட்டதல்ல. அதன் வளர்ச்சியான நூற்றாண்டுகால பரிணாம வளர்ச்சி. ஏகப்பட்ட படிநிலைகளையும் படிப்படியான மாற்றங்களையும் கொண்டது. ஜனநாயக ரீதியாக உருவாக்கப்படும் சமூக நிறுவனங்களே தேசியவாத அரசியலின் அடிக்கட்டுமானமாக அமையும். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களில் கூட்டு வேலைத்திட்டங்களுடன் கூடிய சமூக நிறுவனங்களாக கோயில்களைத் தவிர வேறெவற்றையும் காட்ட முடியாத துரதிஸ்டவசமான சூழலை யுத்தம் எமக்குத் தந்துள்ளது. ஆன்மீகத்தேவையின் பூர்த்தியைத் தாண்டிய சமூக நிறுவனங்கள், எமது சமூகத்தில் எவ்வளவு தூரம் இயங்கிவருகின்றன என்ற பட்டியலிட முயற்சித்தால் அவற்றின் விளைவு பூச்சியமாகவே இருக்க முடியும். இலங்கை அரசு கட்டமைப்பிற்குள் இயங்கி வரும் பாடசாலைகளும் இதர அரச நிறுவனங்களுமே இன்று தமிழ் மக்களுடைய நிறுவனங்களாக எஞ்சிப் போயுள்ளன. சமூக நிறுவனங்களின் பெருக்கம் வகைதொகையற்று நிகழ வேண்டிய தருணமிது. வாசிகசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் தம்மை வேகப்படுத்திக் கொள்ள வேண்டும். 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தத்தைச் சந்திக்காத யாழ்ப்பாணத்தில் கூட எவ்வகையான சமூக நிறுவனங்களும் மக்கள் சார்ந்து தோற்றம் பெறவில்லை என்னும் நிலையில், யுத்தத்தால் முழுமையாக துடைத்து அழிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் சிவில் சமூகமும் சமூக நிறுவனங்களும் எவ்வாறு தொழிற்படும் என்று எதிர்பார்க்க முடியும்?

சின்னஞ்சிறிய சமூக நிறுவனங்களுடைய உருவாக்கத்தின் பின்னரே அரசு கட்டமைப்பிற்கு மாற்றிடான சமுக நிறுவனங்கள் உருவாக முடியும். உதாரணமாக, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் அமுல்படுத்த யோசிக்கப்படுகின்றதெனில், அதனை முழுமையாக ஆய்வு செய்து அவறிற்கு மாற்றீடான திட்டங்களை முன்வைக்கும் வல்லமையைப் பெற்றுக் கொள்ளும் அளவிற்குத் தகமை விருத்திச் செயற்பாடுகள் அவசியமானவை. வெறுமனே தேசியவாதத்தை அரசியல் பரப்பிற்குள் சுருக்கும் போது - அவ்விடயத்தை எதிர்ப்பதென்ற ஒரே தெரிவே எம்மிடமிருக்கும் என்பது துரதிச்டவசமானது. புலம்பெயர் சமூகம் இலங்கையில் செயற்பட முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வெறுமனே அரசிற்குச் சார்பான கோரிக்கையல்ல. அக்கோரிக்கையில் தமிழ்த்தேசியவாத்தின் ஆரோக்கியமான எதிர்காலமும் தங்கியுள்ளது என்ற புரிதலை வளர்க்க வேண்டியுள்ளது.

தமிழ்த்தேசியவாதம் : பிரயோக வடிவம் (applicable form)

இன்றைய தமிழ்த்தேசியக் கோரிக்கை என்பது வானத்தில் இருந்து குதித்த விடயமல்ல. அக்கோரிக்கை வெறுமனே தமிழ் அடையாளம் சார்ந்த அரசியல் கோரிக்கையுமல்ல. சமூகத்தின் அடையாள உறுதியாக்கம் நிகழ்ந்த போது - அதன் வெளிப்பாட்டு வடிவமாகவே இக்கோரிக்கை முதன்மை பெற்றிருக்க முடியும். இன்று அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான புரிதல்கள் அற்று வெறுமனே கோரிக்கையை காவித்திருவதென்பது, உயிரற்ற உடலை அலங்கரித்து கொண்டு திரிவதைப் போன்ற செயற்பாடன்றி வேறெதுவும் இல்லை. மேலும், மேற்கூறிய 'வாழ்வியல் நடைமுறை' மற்றும் 'தகமை விருத்தி' ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே பிரயோக வடிவம் தொடர்பான தீர்மானத்திற்கு வர முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சரியான பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்க முடியும். இப்பிரயோக வடிவத்தின் கூறுகள், ஏற்கனவேயான வரலாற்றுப் போக்கில் எஞ்சிய கூறுகளை தற்காலத்தைய சிந்தனைக்கூறுகளின் உதவி கொண்டு செப்பனிட்டபடி நகர வேண்டியுள்ளது. இது, மிகவும் சவாலான பணியென்பதை யாராலும் மறுக்க முடியாது.

வரலாற்றுப் போக்கில், தமிழ்த்தேசியம் என்ற அடையாள உறுதியாக்கம் ஒற்றை பரிமாணமானதல்ல. பல்வேறுபட்ட வாழ்முறைகளினது வித்தியாசங்களது கூட்டிணைவினால் உருவாகிய அடையாள உறுதியாக்கம். அதேநேரம், அரசியல் ரீதியான தேவைகள் அவ்வுறுதியாக்கத்தை விரவுபடுத்தியோ அல்லது இயல்பான வளர்ச்சிக்கு மாற்றாகவோ ஒன்றிணைத்திருக்கக்கூடும். பண்பாட்டுப் போக்கில் கீழிருந்து மேலான செயற்பாடாக இருக்க வேண்டிய பொறிமுறையைக் கொண்டது. அடையாள உறுதியாக்கம் மேன்மேலும் இறுக்கமாகி ஒற்றை பரிமாணத்தை அடையும் போதும் - அது மேலிருந்து கீழாக இயங்க எத்தனிக்கும் போதும் வன்முறையாக மாறிவிடுகின்றது. பிரயோக வடிவத்தைத் தீர்மானிக்கும் போது, இவ்வகையான வித்தியாசங்கள் அனுமதிக்கப்பட்ட வெளியாக - சமத்துவ ரீதியானதாக இருக்கும் போதே அது தனது முற்போக்கான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

ஏற்கனவே கூறியபடிக்கு, 'இறையாண்மை அடைவுடன் கூடிய - இன்றைய அரசு வடிவத்தில் உள்ள தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' இற்கும் 'இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலபகுதியில் தேசியவாதத்தின் பிரயோக வடிவம்' ஆகிய இரண்டு விடயங்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியமானது. முன்னையதில் தேசியவாதம் - இறையாண்மையான அரசை அமைத்ததன் பின்னணியில் தனது அடையாள உறுதியாக்கத்தை சிதறடிக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகின்றது. 'அரசு' 'குடிமகன்/ள்' என்ற உறவு வித்தியாசங்களை பெருக்கத்தில் மேன்மை பெற வேண்டியது அவசியமானது. ஆயினும், இரண்டாவது வகையான இறையாண்மைக்கான நகர்வுடன் கூடிய காலப்பகுதியில் உள்ள தேசியவாதச் சிந்தனைகளின் நகர்வோ இக்காலப்பகுதியில் மிகவும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அச்சிந்தனை முறை இரண்டுவகையாக கட்டமைக்கப்பட வேண்டியுள்ளது. அடையாள உறுதியாக்கங்களை முன்வைத்து நகர வேண்டிய அதேவேளை அதே அடையாள உறுதியாக்கம் காரணமாக நிகழும் பன்மைத்துவ மறுப்பை சிதறடித்தவாறு - தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டும் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அடையாள அரசியல் சிந்தனைப் போக்குகளின் எழுச்சியும் பெண்கள், தலித்துக்கள், இதர சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக எழுந்துள்ள கருத்தியல்களும் ஏற்கனவேயான ஒற்றைப்படையான உறுதியாக்கங்களை உடைக்கக்கோருபவை. அதாவது, ஒரே நேரத்தில் Deconstructive அணுகுமுறையும் Constructive அணுகுமுறையும் தமது பிரயோக நடைமுறையாகக் கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை 'உலக சிந்தனை போக்கு' உருவாக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த முரணியக்கமே பின்- காலனித்துவ தேசங்களது - தற்காலத் தேசியவாதத்தின் ஆரோக்கியமான பண்பாக இருக்க முடியும்.

[ இக்கட்டுரையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் விரிவாக்கி எழுத முயற்சிக்கின்றேன். வாழ்வியல் நடைமுறையும் (praxis) தகமை விருத்தியும் (capacity building) பிரயோக வடிவமும் (applicable form) என்ற விடயங்கள் சார்ந்து அரசியல் பரப்பிற்கு வெளியேயுள்ள புலமையாளர்களும் துறை சார் தொழில் அறிஞர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது. நான் இங்கே சுருக்கமாகக் கொடுத்திருப்பது வெறும் சட்டகமே (framework). இவ்விடயத்தை வளர்த்துச் செல்ல வேண்டிய பணி சகலருக்குமானது. ]

மேற்குறித்த பதிவிற்கான அடிப்படை 'அ. மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல்: வித்தியாசங்களின் பெருக்கமா? காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா?' என்ற வளர்மதியின் கட்டுரையே.

No comments:

Post a Comment

Statcounter