இந்தியத் தேர்தலை முன்னிட்டு தமிழ்ச்சூழலில் நரேந்திர மோடி பற்றியும்
அவரது கடந்தகால அரசியற் செயற்பாடுகளையும் மையமாகக் கொண்டு பெரும் வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், நரேந்திர மோடி அங்கம் வகிக்கும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின்
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தமிழ் மனங்களில் ஏற்படுத்திய தாக்கமும் இவ் உரையாடலில் மையச்சரடாக உள்ளது. ஆனால், இக்கட்டுரை நரேந்திர மோடி என்ற உருவகம், அவ்வுருவகத்தின் அரசியல் உள்ளடக்கம் போன்றவற்றை முன்வைத்து ஈழத்து அரசியல் தளத்தில் எழுதப்படுகின்றது. அரசியல் தந்திரோபாயம் என்ற வெளிக்கப்பால் செயற்படும் முற்போக்காளர்கள், இடதுசாரிகள், மனித உரிமைவாதிகள் போன்றவர்கள் எவ்வாறு இவ்வொப்புவமையைக் கவனப்படுத்தாமல் விட்டார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்.
நவீன அரசுகளும் சமூகமும்
சமூகம் தன்னுடைய ஆளுகை
(Governance) என்ற தடத்தில் பல்வேறுபட்ட வகைமாதிரிகளைச் சந்தித்தபடி வந்துள்ளது. ஒவ்வொரு ஆளுகையும் அதன் கட்டமைப்பு சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இனங்கண்டும், எதிர்கொண்டும், போராடியும், மாற்றம் செய்துகொண்டும் தொடர்ச்சியாக தன்னை விருத்தி செய்துவந்துள்ளது. மன்னராட்சி, காலனித்துவ காலம், நவ
காலனித்துவ முதலீட்டியம் என்ற மிக நீண்ட பயணத்தில் `நவீன அரசு` என்ற இடத்தில் வந்து நிற்கின்றோம். குறைபாடுகளுடன் கூடிய மக்களாட்சித் தத்துவத்தின் ஒரு வடிவத்தில், மாற்றங்களுக்கான தேவையின் அடிப்படையில் தன்னை நிலைநிறுத்தியுள்ள இந்த நவீன அரசு (Modern State) என்ற நிறுவனத்தின்
ஆளுகை உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால், நிலப்பரப்பை (Territory) வரையறை செய்தல், பொருளாதாரக் (Economy) கொள்கையை உருவாக்கல், சட்டம் ஒழுங்குகளை (Law and Order) ஏற்படுத்தல், இறையாண்மையை (Sovereignty) உறுதி செய்தல் என்ற அளவில் அவற்றுக்கு வேறுபாடுகளுடன் கூடிய பொதுவான குணாம்சங்கள் உண்டு.
அரசுருவாக்கம் (Sate Formation) என்ற கருத்துருவாக்கமும் அதனோடு ஒட்டிய அரசுருவாக்கம் என்னும் பொறிமுறையும் உலகம் ஒரே மாதிரியாக நடைபெற்றதாகக் கூறிவிட முடியாது. வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு அக - புற காரணிகளுடனேயே அவை நடைபெற்றுள்ளன. அவற்றின் நடைமுறையும் அவற்றின் அனுபவம், பண்பாட்டுக் கூறுகளின் செல்வாக்கால் வேறுபடுகின்றன. அரசுருவாக்கத்தின் உள்ளடக்கமும் போக்கும் வேறுபட்டாலும் அரசு என்ற நிறுவனங்கள் அவற்றின்
செயல்முறை வடிவில் ஐக்கிய நாடுகள் சபை என்கிற
பொதுச்சபைக்கு
கட்டுண்டவை (Technically Bound). பொதுச்சபையில் நிகழும் தர்க்கங்களும், உரையாடல்களும், அழுத்தங்களும் அரசுகளை அவற்றின் உள்ளடக்கம் சார்ந்து பொதுப்போக்கை நெறிப்படுத்த
வேண்டி நிற்பதாகக்கூறலாம். அதேநேரம், திமிறல்களும் உடைப்புக்களும் அரசுகளின்
அம்சங்களில் புதிய போக்குகளை உருவாக்கிவிட எத்தனிப்பதையும் அவதானிக்கலாம். இதுதான் இன்றைய மக்களும் அதிகாரமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் எளிமையான வரைபடமாகும்.
நவீன அரசுகளில் மதச்சார்பின்மை (Secularism) என்னும் கூறு
ஆளுகைக்கும்
மதத்திற்குமான உறவின் வரலாறு மிகவும் நீண்டதும் பலமானதும் ஆகும். சமூக அறிவு (Social Knowledge) மதத்துடனும் சடங்குகளுடனும் சமாந்தரமாக விருத்தியாகி வந்தது
என்பதால் மதத்தில் இருந்து சமூகம் தன்னை விடுவித்துக் கொள்வதென்பது மனிதகுல பரிணாம வளர்ச்சியில் பெற்று வந்த சமூக அறிவை இழப்பதற்குச் சமமானதாகவே
கருதப்பட்டது. இதனால்
மதத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள மனிதரால் நீண்ட காலமாகத் முடியவில்லை. அறிவியல் ஊடாக சமூக அறிவு தன்னை விருத்தி செய்ததன் மூலமே ஒரு கட்டத்தில் மதத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டது. இத்துண்டிப்பு மிகச்சாதாரணமாக நிகழ்ந்ததொன்றல்ல என்ற குறிப்பு மாத்திரம் இவ்விடத்தில் போதுமானது.
நாம் அதைப்பற்றிப் பேசுவதை ஆளுகை - அரசு ஆகியவற்றுக்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான உறைவைப் பற்றிப் பேசுவது இலகுவானது. ஏனெனில், ஆளுகையில் மதச்சார்பின்மை என்னும் கருதுகோளின் வயது அண்ணளவாக 150 வருடங்களை மட்டுமே. மதச்சார்பின்மையை வழக்கமாகக் கொண்டுள்ள நாடுகளில் மதத்திற்கான இடம் வரையறுக்கப்பட்டுவிடும். மதம் தன்னுடைய செயற்பாடுகளை தாராளமாகத் தொடர இடமளிக்கும் அதேநேரம் மதம் என்ற சமூக நிறுவனத்திற்கும் அரசு என்ற ஆளும் நிறுவனத்திற்குமிடையிலான துண்டிப்பு நுட்பரீதியாக உறுதி செய்யப்படுவதோடு இத்துண்டிப்பு சட்டங்கள் யாப்புக்கள் ஊடாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்ததும் நிறுவனமயப்பட்டிருக்கும் மதம் மிகச் சொற்ப காலமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நவீன அரசு என்ற நிறுவனத்துடன் தன்னுடைய செல்வாக்கை மீள நிலை நிறுத்துவதற்காக தொடர்ச்சியாக
மேற்கொள்ளும் உரையாடலும் அவ்வுரையாடலின் இயங்கியலும்
அவற்றின் விளைவுகளுமே எம்முடைய கவனத்திற்குத் தேவைப்படுபவை. இவ்வுரையாடலில் வெவ்வேறு வகைப்பட்ட உரிமைகள் தம்முடைய பங்கை ஆற்றுகின்றன.
தென்னாசியாவி(ன்)ல் மதச்சார்பின்மை
தென்னாசியாவில் மதங்களுக்கு
இருக்கின்ற செல்வாக்கால் மதச்சார்பின்மையை வழக்காகக் கொள்வது அரசுகளுக்கு பலத்த சவாலானதாக இருக்கின்றது.
இந்தியா, மதச்சார்பின்மையை தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருப்பினும் இந்தியாவின் “மதச்சார்பின்மை” வழக்கத்திலுள்ள மதச்சார்பின்மைக்கு சமானமானது அல்ல. பொதுவாக மதச்சார்பின்மை என்பது மதத்தை அரசு நிறுவனத்தில் இருந்து துண்டித்துக் கொள்வது
என்ற வழமையில் இருக்க இந்தியா
மதச்சார்பின்மையை அனைத்து மதங்களும் சமமாமனவையாக அணுகப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் கைக்கொள்ளுகின்றது. குறிப்பாக
இந்தியாவில் அரச நிறுவனங்களில் (முக்கியமாக கல்விநிறுவனங்களில்) மதத்தின் பிரசன்னம் மறுதலிக்கப்படாமல் அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் போக்கே
மதச்சார்பின்மை
என்று கடைப்பிடிக்கின்றது.
இந்தியா சுதந்திரமடையும் போதே அரசின் மதச்சார்பின்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. ஆரம்பகால காங்கிரஸ் கட்சி, மதச்சார்பின்மையை தமது கோட்பாடாக வரித்துக் கொண்டு ஆட்சியமைத்த போதிலும் சமூகமட்டத்தில் நீண்டகாலமாக ஆழ வேரூன்றி நிறுவனமயப்பட்டிருந்த மதத்தின் செல்வாக்கைமீறி அதை வழக்கமாக்க முடியவில்லை. மதச்சார்பின்மை என்பதையே கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இந்துத்துவத்தை அரச நிறுவனத்துடன் இணைத்து ஆளுகையில் பங்கெடுக்கும் முனைப்புகளின் வெகுஜன அரசியல் அடையாளத்தின் குறியீடாக உருவானதே பாரதிய ஜனதா கட்சியாகும். இந்தியாவில் மதச்சார்பின்மை கொண்டிருக்கும் நீண்ட வரலாற்றைப் போலவே
மதச்சார்பின்மைக்கு எதிரான, வலுவான மதச்சார்பு சக்திகளும் தமது வரலாற்றை கட்டியெழுப்பியுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை, அது தன்னுடைய யாப்பில் அரசு மதம்
ஒன்றினைக் கொண்டிராதபோதிலும் யாப்பின் ஒரு பகுதியில் இலங்கை அரசு பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதோடு, பௌத்த சாசனத்தை பாதுகாப்பது அதன் கடமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் மதமானது, பொது அரங்கில் பேசு பொருளாக இருந்திராதபோதும் மதச்சார்பின்மை மாற்றுசக்தியாக இருந்து வந்த இடதுசாரிகளால் (ஜே.வி.பி உள்ளடக்கப்படவில்லை.) மட்டுமே கோரிக்கையளவில் பேசப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள தேசியவாதம் பிரதான பேசு பொருளாக இருந்திருக்கின்றது. இலங்கையில் சிங்கள தேசியவாதமும் பௌத்த மதவாதமும் இரட்டைப் பிறவிகள் போன்றவை. சிங்கள தேசியவாத - பௌத்த பேரினவாத இணைபிரியாத இரட்டையர்களின் சுவாசப் பொறிமுறை சற்று வித்தியாசமானது. ஒருவருடைய சுவாசம் மற்றைய இரட்டையரின் நுரையீரலைச் சென்றடையும். இந்த இரட்டையர்களின் தாயாகவும் தகப்பனாகவும் கருதப்பட வேண்டியவர் அநகாரிக தர்மபால. காலனித்துவ எதிர்ப்பு என்ற புள்ளியில் அநகாரிக தர்மபால இவ்விருவரையும் இரு முகங்களுடைய ஒரே நபராக மாற்றினார். ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தேசியவாதத்தையும் அவற்றின் சிந்தனை மரபாக்கினார். அதன் உள்ளடக்கம் சிறுபான்மையினர் - வெளிச்சக்திகள் மீதான வெறுப்பாகும். பொதுவாகவே மதவாதங்கள் தமக்குத் தேவையான வளங்களை உண்டாக்கும் பொறிமுறையைத் (Generating
Mechanism) தம்மகத்தே கொண்டிருப்பவை. தம்முடைய சித்தாந்தத்திற்கு முழுநேரமாகச் செயற்படக்கூடிய வளங்களை இலகுவாக ஒருங்கிணைக்கக்கூடிய தன்மை அவற்றுக்கு
இயல்பாகவே உண்டு. இலங்கையில் சிங்கள தேசியவாதத்திற்குத் தேவையான வளங்களில் கணிசமான அளவு, அதன் மத உள்ளடக்கத்தின் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றது. மேலதிகமாக, அரசு என்ற நிறுவனம் மதவாதத்தை ஆதரிப்பதன் மூலம் வளர்த்திருக்கின்றது. ஆக, இலங்கையில் பௌத்த மதவாதம் - சிங்கள தேசியவாதம் - அரசு என்ற ஆளுகை நிறுவனம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களும் ஒன்றையொன்று ஆதரித்தும் பலப்படுத்தியும் ஒன்றாக வளர்ந்து வந்திருக்கின்றன.
மஹிந்த ராஜபக்சவும் மதச்சார்பின்மையும்
சிங்கள தேசத்தின் பாதுகாவலராக, இந்திய விரிவாக்கத்தின் எதிர்ப்பாளராக, ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விடுபவராக, அபிவிருத்தியின் தூதுவராக என்று
பல்வேறு பிம்பங்கள் மஹிந்த ராஜபக்சவை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு இக்கட்டுரைக்குத் தேவைகருதி
மதச்சார்பின்மை என்னும் பார்வைக்கோணத்தில் வைத்து மஹிந்த ராஜபக்சவை மதிப்பிட வேண்டியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் பாத்திரம் தனிநாடு கேட்டுப் போராடிய - பௌத்த மதத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகிய இலங்கைத் தீவை பிளவுபடுத்தும் நோக்கமுடைய - விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்ததையும் அதனூடான வெற்றியையும் கொண்டே அதிகம் மதிப்பிடப்படுகின்றது. இந்த வெற்றி வாகையில் முக்கிய பாத்திரம் வகித்தவர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோதபாய ராஜபக்ச. இலங்கையில் அதிக அதிகாரம் படைத்த
அவரே பொது பல சேனா போன்ற சிறுபான்மை மதங்களை அச்சுறுத்தும் பௌத்த காவல்படையின் ரகசிய போசகராக இருக்கின்றார் என்ற தகவல் பெரும்பாலோனோர் அறிந்ததே. ஆனால், இக்கட்டுரை பேசும் விடயம் கருதி அதிகமானோர் அறிந்திராத விடயங்களைக் பார்ப்போம். கோதபாய ராஜபக்ச பௌத்த மதத்தை தீவிரமாக கடைப்பிடிப்பவர். சைவ உணவுப் பழக்கத்தை உடையவர். “Gotabaya was never flashy person. He was simple and very humble.
A family man who never even ate cake because he is a true vegetarian.” என்கிறது.
“கீரீஸ் மனிதன்”
பிரச்சனை பெரும் பிரச்சனையாக பேசப்பட்ட போது ஆங்கில சிங்கள பத்திரிகைகள் கோதபாய ராஜபக்ச மீது, மஹிந்த ராஜபக்சவிற்கு ரகசியமான பூசை ஒன்றுக்காக இரத்தம் தேவைப்படுவதாகவும் அதற்காகவே கிரீஸ் மனிதன் பதற்றத்தை உருவாக்கி அதன் மூலம் இரத்தம் சேகரிக்கப்படுகின்றது என்றும் இதன் பின்னணியில் இருப்பவர் கோதபாய ராஜபக்ச என்றும் குற்றச்சாற்றொன்று முன்வைக்கப்பட்டது. அக்குற்றச்சாற்றிற்கு கோதபாய ராஜபக்ச “நான் சுத்த சைவன். இந்த நாட்டில் சுத்தமான இரத்தம் என்னுடையதாகும். என் அண்ணனுக்குத் தேவையெனில் எவ்வளவு இரத்தத்தையும் எடுத்துக் கொள்ளலாம். என்னிடமிருந்தல்லாமல் வேறொருவரிடமிருந்து இந்த சுத்தமான இரத்தத்தை எடுத்துவிட முடியாது.” என்று பதிலளித்திருந்தார். இவ்வார்த்தைகளை பார்ப்பனிய - பாசிச மனநிலை உள்ள ஒருவரால் மாத்திரமே உதிர்த்துவிட முடியும். அண்மையில், கோதபாய ராஜபக்சவின் நம்பிக்கைக்குரியவரான யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவத்தளபதி “வடக்கில் இப்போது சுத்தமான தமிழ் இரத்தம் என்றெதுவும் இல்லை” என்கிற கருத்தினை உதிர்த்திருந்தார். சிங்கள இரத்தம் தூய்மையானது என்ற கருத்தாக்கம் இங்கே உருவாக்கப்படுகின்றது. அதேநேரம்,
சிங்கள இரத்தத்தால், தமிழ் இரத்தம் அசுத்தமாக்கப்படுவதாகவும் இப்பிரகடனத்தை அர்த்தம் கொள்ள முடியும்.
பொது பல சேனா என்ற அமைப்பு தோன்றியதன் பின்னர், “இந்த நாட்டில் சிறுபான்மை என்ற கருத்துக்கு இடமே இல்லை” என்ற மஹிந்த ராஜபக்சவின் பிரகடனத்திற்குச் சமாந்தரமாக கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இஸ்லாமியர்கள் மீது 241 தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது 61 தாக்குதலும் நடைபெற்றுள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் சமர்ப்பித்த அறிக்கை தெரிவிக்கின்றது. மிக அண்மையில் மூதூர் பிரதேசத்தில் தமிழ் மக்களால் வணங்கப்பட்டு வந்த இந்து வணக்கத்தலம் ஒன்றுக்குச் செல்வதை பௌத்த பிக்குவின் தலைமையில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். ஒட்டுமொத்தமாக, சிறுபான்மை மதங்களுக்கு அச்சுறுத்தலளிக்கக்கூடியதாக இலங்கைத்தீவு உருமாற்றம் பெற்றுள்ளது; அல்லது சிறுபான்மை மதக் கருத்தியலுக்கெதிரான உள்ளடக்கத்தைக் கொண்ட சிங்கள தேசியவாத - பௌத்த மதவாதக் கருத்தியல் தன்னை நிர்வாணமாக்கியுள்ளது. காலனித்துவத்திற்கு எதிராக அநகாரிக தர்மபாலவால் உருவாக்கப்பட்ட சிங்கள தேசியவாத - பௌத்த பேரினவாத உள்ளடக்கம் கொண்ட கருத்தமைவு அரசு என்ற ஆளும் நிறுவனத்தின் ஆசியுடன் தனது கோர முகத்தை
முழுமையாக வெளிப்படுத்தியபடியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவும் நரேந்திர மோடியும்
அரசியல் பொருளாதார தளத்திலும் மதச்சார்பு தளத்திலும் மஹிந்த ராஜபக்சவிற்கும் நரேந்திர மோடிக்கும் பல்வேறு ஒற்றுமைகளை அவதானிக்கமுடியும்.
இருவரும் வெவ்வேறு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சிறுபான்மை மதங்கள், மதச்சார்பின்மைக்கு எதிரான நிலைப்பாடு, தாம் சார்ந்த மதத்தை ஆளும் அரசநிறுவனத்துடன் நெருக்கமுறவைத்தல் போன்ற விடயங்களில் எந்த வேறுபாடும் இல்லாதவர்கள். நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ அரசை உருவாக்கும்
நோக்கோடு செயற்படும் இயக்கத்தின் வெகுஜன கட்சியான பி.ஜே.பி இல் அங்கம் வகிக்கின்றார். மஹிந்த ராஜபக்ச, பொது பல சேனா என்ற பௌத்த இராச்சியத்தை அமைக்கும் கனவோடு செயற்படும் அமைப்பின் இரகசிய போசகராகச் செயற்படுபவருடன் நெருங்கிச் செயற்படுகின்றார்.
இருவருமே சிறுபான்மையினருடனான பங்கேற்பு ஜனநாயகத்திற்கு மாற்றீடாக அபிவிருத்தி அரசியலை முன் வைப்பவர்கள். சிறுபான்மை அடையாளங்கள் தொடர்பான கரிசனைக்குப்
பதிலாக, அபிவிருத்தி என்பதன் ஊடாக ஒற்றை அடையாளத்தை முன்வைப்பவர்கள். அபிவிருத்தி தொடர்பான இருவருடைய அணுகுமுறையும் கூட ஒரே மாதிரியானது. பல்வேறு காரணிகளூடு விளிம்புநிலையாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பதிலாக
பெருந்தெருக்கள், பெரு நிறுவனங்களின் வளர்ச்சி, வங்கிகள் - நிதி நிறுவனங்களின் விருத்தி போன்ற அபிவிருத்தியாக வெளிப்படுத்துவதன் ஊடாக வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை முதலீட்டியத்தின் மாயக்கரத்திற்கு பலி கொடுக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுபவர்கள். முதலீட்டியத்தின் காவலர்களான அதேநேரம் பொருளாதாரக் கொள்கையில் தராண்மைவாதத்தையும் உரிமைகள் என்னும் தளத்தில் ஒடுக்குமுறையையும் பிரயோகிப்பவர்கள்.
மனித குல வரலாற்றில் அதிகாரம் பகிரப்படுவதும் தனி மனித
உரிமைகள் பேணப்படுவதும் மிக நீண்டகால மக்கள்போராட்டத்தின் விளைவுகளாகும். குறிப்பாக, மேற்கத்தேய நாடுகள் போன்று தேசிய அரசாக உருவாகாமல் நுட்ப ரீதியாக அரசாக பரிணமித்த காலனித்துவ நாடுகளின் ஜனநாயகத்தின் அடிப்படையே அதிகாரம் பகிரப்படுவதும் பல்வேறு அடையாளங்கள் அரசியல் ரீதியாக பாதுகாக்கப்படுவதும் தான். அதிலும்
இந்தியா போன்ற பல்தேசிய நாடொன்றில் அதிகாரம் மாநிலங்களுக்குப் பகிரப்பட்டிருப்பதும் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியுடன் கூட்டாட்சியை நோக்கி நகர்வதுமே அதன் ஒருபடித்தான வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது, மத்திய அரசு தன்னுடைய அதிகாரங்களை படிப்படியாக மாநிலங்களுக்கு வழங்கி கூட்டாட்சி எனும் எண்ணக்கருவை விருத்திசெய்வது ஆரோக்கியமான அணுகுமுறையாகக் காணப்பட்டது. இலங்கையிலும் தேசிய இனங்களுக்கான சமஉரிமை என்ற எண்ணக்கருவை நோக்கிய நகர்வே முற்போக்காளர்களால் முன்வைக்கப்ப்ட்ம் தீர்வாக
இருந்துவந்தது.
இவ்விடயத்தில், நரேந்திர மோடியும் மஹிந்த ராஜபக்சவும் சம உரிமை என்ற கோசத்தை வைக்கும் அதேநேரம் ஒற்றை அடையாளத்தை (இந்தியர் / இலங்கையர்) முன்னகர்த்துவது என்ற ஒரே அணுகுமுறையையே கொண்டுள்ளார்கள். ஒருவர் பல்அடையாளங்களை (தமிழர் / இந்தியர்) அரசியல்ரீதியில் பேணும் முறைமையை மறுதலிப்பதே இதன் சாராம்சமாகும். இவ் ஒற்றை அடையாள வலிதாக்கம் ஒடுக்குமுறைக்கூடாக திணிக்கப்படுவது இருவரும் கொண்டுள்ளது
இன்னும் ஆபத்தான அரசியல் அணுகுமுறையாகும். இரு நாடுகளிலும் மிக நீண்டகாலமாக உருவாகியிருக்கும் சிறுபான்மையினர் சார்ந்த உரிமைகள் என்ற எண்னக்கருவை - சிறுபான்மையினர் பல்வேறு போராட்டங்களூடாகப் பெற்று வந்த உரிமைகளை அதன் ஆரம்ப கட்டத்தில் கொண்டு போய் நிறுத்துவதே இதன் விளைவாக அமையும். பிறிதொரு வகையில் சிறுபான்மையினர் உரிமைகள், சலுகைகளாகக்
கருதப்பட்டு மீண்டும் பறிக்கப்படுவதாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதாவது, பல்வேறு மட்டங்களில் பகிரப்பட்டிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டு திருப்பி எடுக்கப்பட்டு ஒருங்குவிக்கப்படுவது இருவருடைய அரசியல் அணுகுமுறையாகும். இலங்கையின் இவ்வணுகுமுறையை நவநீதம்பிள்ளை அவர்கள் தன்னுடைய அறிக்கையொன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.
இருவமே புனிதநிலம் சார்ந்த எண்ணக்கருவைக் கொண்டுள்ளவர்கள். அதாவது, தம்மை அதிகாரத்திற்கு கொண்டு வந்த / வரக்கூடிய அல்லது தம்முடைய அதிகாரத்தைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்கக்கூடிய சித்தாந்தத்தின் குருட்டுவாதத்தின் மீது கேள்விகேட்காத நம்பிக்கை கொண்டுள்ள அணுகுமுறையைக் குறிப்பிடலாம். இந்தியா இந்துக்களின் புனிதபூமி, அதை ஒத்துக் கொள்ளாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என்ற கருத்தியலும் இலங்கைத்தீவு பௌத்த சாசனம் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான புனிதபூமி, அதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்கள் வாழலாம்; அவ்வாறு வாழ முடியாதவர்கள் இந்தியாவிற்கு போகலாம் என்ற கருத்தியலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். குறிப்பிட்ட நிலத்தை புனிதமாக நம்பும் சித்தாந்தத்தை பின்பற்றாதவர்களை வெளியொதுக்கும் தன்மை கொண்ட அணுகுமுறைக்கு ஆதரவான கருத்தியலை இருவருமே கொண்டிருக்கின்றார்கள்.
இருவருமே தம்முடைய சித்தாந்தத்திற்கு ஒவ்வாத கருத்துடைய சமூகக்கூட்டத்தை இனப்படுகொலை செய்த அனுபவத்தை கொண்டுள்ளார்கள். நரேந்திர மோடி, குஜராத் கலவரத்திற்கும் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலைக்கும் உடந்தையானவர். அவ்வாறே மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி.
நரேந்திர மோடியும் ஈழத்தமிழரும்
இம்முறை இந்தியத் தேர்தலில் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோர் மோடியை பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தார்கள். ஈழத்தமிழ்த்தேசத்தின் மீதான இனப்படுகொலையில் சூத்திரதாரியாக காங்கிரசைக் கருதும் தமிழர் தரப்பு அதற்கான மாற்றாக
மோடியை ஆதரிப்பதை நியாயப்படுத்துகின்றனர். நடைமுறையில் எதிரிக்கு எதிரி என்ற எளிய சூத்திரத்தின் வழி இந்த ஆதரவைப் புரிந்துகொள்ள முடிகின்ற
அதேவேளை ஈழத்தமிழரின், நரேந்திர மோடி ஆதரவை இரு வேறு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவது அறம் சார்ந்த தளம். இரண்டாவது தந்திரோபாயத் தளம்.
அறம் சார்ந்த தளத்தில் ஈழத்தமிழர் மோடியை எப்புள்ளியிலும் ஆதரிக்க முடியாது என்பதற்கு இக்கட்டுரையில் ஏராளமான ஆதாரங்களும் தர்க்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக ஆதரிப்பதென்பது ராஜபக்சவை ஆதரிப்பதற்குச் சமனானது என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, தம்முடைய நலனுக்காக 120 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாழும் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கக்கூடிய சித்தாந்தத்தைக் கொண்டுள்ளவரை ஆதரிப்பதென்பது, ஈழத்தமிழ்த்தேசியம் ஒடுக்குமுறைகளுக்கெதிரானதாகத் தன்னை கட்டியெழுப்பவில்லை என்ற கருத்து வலுப்படவே வழிசெய்யும். ஒரு ஒடுக்குமுறைக்கு உட்படும் சமூகம் பிற ஒடுக்குமுறைக்கு உட்படும் சமூகங்களுக்கு ஆதரவளிக்காமல் தன்னுடைய ஒடுக்குமுறைக்கான அறம் சார்ந்த நியாயத்தை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திவிட முடியாது.
அடுத்து, ராஜதந்திரம் என்ற தளத்தில் மோடியை ஆதரிப்பதற்கான நியாயங்கள் கூறப்படுகின்றது. இவ்விடயம் பற்றிச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பங்காளி என்ற வகையில் காங்கிரசைப் பழிவாங்கும் நோக்கத்தைத் தவிர வேறென்ன வகையில் மோடியை
ஆதரிக்கலாம் என்பது சற்று யோசிக்க வேண்டிய விடயமே. ஏனெனில், நரேந்திர மோடி எச்சந்தர்ப்பதிலும் ஈழத்தமிழர்களை ஆதரித்துப் பேசியிருக்கவில்லை. அரைகுறைத் தீர்வான 13 ஆம் சட்டச் சீர்த்திருத்ததை அமுல்படுத்தப்போவதாகவே அவருடைய கட்சி கூறியிருக்கின்றது. முக்கியமாக, இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில், ஆளும் அரசாங்கத்தால் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்த முடியும் என்பதும் கேள்விக்குறியே. அத்துடன் இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சனையின் உண்மையான ஆதரவாளர்களும் கருத்துருவாக்க சக்திகளும் இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானவர்களே. இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழ்தேசியக் கருத்தியலை ஆதரிக்கும் சிறுபான்மை கருத்தியலுக்கு பல்வேறு விதங்களிலும் சேதம் விளைவிக்கக்கூடிய ஒருவரை எவ்வாறு ராஜதந்திரம்
ஆகும்?
யாருக்கு ஆதரவளித்திருக்க வேண்டும் என்ற யதார்த்தமான கேள்வியை யாராவது முன்வைக்கக்கூடும். காலனித்துவ விளைவான இந்தியா போன்ற நாட்டில் உள்ள தேசங்கள் தம்முடைய உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்று கூட்டாட்சியை நோக்கி நகர்வதே நீண்டகால இலக்காக இருக்கமுடியும். இந்தியாவில் மாநிலங்கள் அதிகாரங்களை வலுப்படுத்தி கூட்டாட்சியை நோக்கி நகர்வதே இலங்கையில் அதிகாரப் பகிர்விற்கான நெருக்கடியைக் கொடுக்கவல்லது. இந்தியா, சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரத்தை மத்தியில் குவித்து ஒற்றை அடையாளத்தை வலுப்படுத்துவது, இலங்கையின் தற்போதைய நகர்விற்கு கோட்பாட்டு பலத்தைக் கொடுத்துவிடும் என்பதை ஈழத்தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
ஒரே அலைவரிசையில் இயங்கும்
இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துகொள்வதற்கான புள்ளிகளே அதிகம் உள்ளன. உதாரணமாக இஸ்லாமிய எதிர்ப்பு என்பது இருவருக்கும் பொதுவான புள்ளியாகும். ஒரே சித்தாந்தமும் நடைமுறையும் அலைவரிசையும் உடைய இரு நபர்கள் இணைந்து செயற்படுவது இலகுவானதாகும். உடன்பாடுகள் எட்டப்படும் சாத்தியமும் அதிகமாகும். ஒரே விதமான அரசியல் பொருளாதாரக் கொள்கையுடன் ஒரே படகில் பயணம் செய்யும் இவர்கள் மோடியும் ராஜபக்சவும் ஒன்றிணைந்துகொள்ளும் சாத்தியமே அதிகம் என்பதை மோடியை
ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் கவனிக்கத்தவறிவிட்டார்கள். இந்த ஆதரவின் மூலம், மோடியை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அறம் சார்ந்த பாத்திரத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்தை தந்திரோபாயத்திலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என்பதே உண்மை.
No comments:
Post a Comment