சசீவன் கணேசானந்தன்
சசீவன் கணேசானந்தன் அவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்க்ழகத்தில் ஒரு திட்டப்பணியான 'தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆசியாவில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு' என்ற தலைப்பில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றார். இவர் ஆய்வு மற்றும் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்கான மையத்தினத்தும் நூலகம் பவுண்டேசனினதும் தலைமை நிர்வாகியாகவும் செய்யபட்டு வருகின்றார். இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணங்களைப் பாதுகாக்கூம் ஆவணக்காப்பாளராகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்.
முதலில் www.noolaham.org வலைத்தளத்தைப் பற்றிக் கூறுங்கள்
www.noolaham.org என்கிற இணைய முகவரியில் இயங்கும் “நூலகம்” வலைத்தளம் ஓர் எண்ணிம நூலகம் ஆகும். அதாவது www.noolaham.org என்ற ஆட்களப்பெயரில் இயங்கும் இணையநூலகத்தை, கணினியும் இணைய இணைப்பும் உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இப்போது 8,500 க்கும் அதிகமான எழுத்தாவணங்களின் விபரங்களும் இணைப்புக்களும் இந்த இணைய நூலகத்தில் உள்ளன. பருமட்டாகச் சொல்வதானால் இன்றைய தேதியில் 3000 நூல்கள், 3000 சஞ்சிகைகள், 1500 பத்திரிக்கைகள், 1000 சிறுவெளியீடுகள் என 8500 ஆவணங்கள் சகலராலும் பார்க்க்கக்கூடியவாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் ஈழத்து ஆவணங்கள். ஈழத்து ஆவணங்கள் என்னும் போது ஏதோவொருவகையில் ஈழத்துடன் தொடர்புள்ளவை. அவ்வகையில் ஈழத்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டதோ அல்லது ஈழத்துப் பதிப்பகங்களால் பதிப்பிக்கப்பட்டதோ அல்லது ஈழம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதோ என்றவாறு அமையும்.
இங்கு நான் பயன்படுத்தும் ஈழம் என்ற சொல் பன்மைத்துவ நோக்கிலான இலங்கைத் தமிழ் என்ற அடையாளத்தைப் பிரதிபலிப்பதாகவே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். நூலகத்திலுள்ள ஆவணங்களது அரசியல் அடையாளங்களது வரைபடத்தை காட்சிப்படுத்த எத்தனிக்கும் ஒருவரால் நிச்சயமாக அதை உணர்ந்து கொள்ள முடியும். தமிழகத்தில் தற்போது பிரயோகிக்கப்படும் 'ஈழம்' என்ற சொல்லின் அர்த்தம், நான் பயன்படுத்தும் அர்த்தத்துடன் பொருந்த முடியாது என்றே நினைக்கின்றேன்.
இவை தவிர சங்க இலக்கியங்கள் முதல் சோவியத் நூல்கள் வரை என பல்வேறுவகையான, ஏறத்தாழ 300 வெளியீடுகளுக்கான இணைப்புக்களும் உள்ளன. இந்த நூலகம் இலவசமானது. திறந்த அணுக்கம் (Open Access) உள்ளது. அதாவது எவரும் எங்கிருந்தும் இதனைப் பயன்படுத்தலாம்.
உங்களுடைய நூலகம் தொடர்பான வேலை தமிழ் மக்களிடம் எப்பொழுது தெரிய வந்தது?
2007 ஆம் ஆண்டு அளவிலேயே ஒரு நாளைக்கு 300 வாசகர்கள் என்ற அடைவை தொட்டிருந்தோம் என்றளவில் இது தொடர்பாக பலர் அறிந்திருந்தார்கள்; பயன்படுத்தினார்கள் என்றே கூறவேண்டியுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியிலேயே நாங்கள் இன்று பயன்படுத்தும் மீடியாவிக்கி (Mediawiki) என்ற மென்பொருளைப் (Software) பயன்படுத்தத் தொடங்கினோம். அதற்கு முன்னர் சாதாரண HTML பட்டியல்களே காணப்பட்டன. தேடுவசதிகளற்ற சாதாரண பக்கங்களைக் கொண்ட தளமாகவே காட்சியளித்தது. ஆனால், மீடியாவிக்கி பயன்படுத்தத் தொடங்கியதன் பிற்பாடு இதன் உபயோகம் என்பது பல மடங்கு பெருகியிருக்கின்றது. ஏனெனில் பல்வேறு விதமான முறைகளில் ஓர் ஆவணத்தை அணுகமுடியும் என்பதும் பல்வேறு வகைப்பட்ட Access points அங்கு இருப்பதென்பதும் தேடலுள்ள வாசகனைப் பொறுத்தவரை சாதாரண விடயங்கள் அல்ல. ஆய்வாளர்களுக்கு உபயோகப்படக்கூடிய அளவிற்குக் கட்டமைப்பு முற்றுமுழுதாக மாற்றியமைக்கப்பட்டதன் காரணமாக சாதாரண வாசகர்கள் கூட பெருமளவில் பயன்பெற்றிருக்கின்றார்கள். சாதாரணமாக, ஒரு பிரதியை இணையத்தில் காட்சிப்படுத்துவதுடன் இணைய நூலகத்தின் பங்கு முடிவடைந்துவிடுவதில்லை. பிரதியை வாசகனுடன் ஊடாட வைப்பதும் அதன் மீது கேள்விகளைக் கோரும் பிரதிகளை உற்பத்தி செய்வதும் கூட நூலகத்தின் பணியாக இருக்க முடியும். மரபார்ந்த நூலகங்கள் பிரதிகளைக் கட்டடங்களின் பிரமாண்டத்திற்குள் அமுக்கிவிடுகின்றன. அதற்கான மாற்றுவழிகளைக் கண்டடைய வேண்டியது இம்மாதிரியான இணைய நூலகங்களின் பணியெனக் கருதுகின்றேன். ஆக, அத ஊடாட்ட திறனின் பெறுமானத்தை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேநேரம், அதனை உச்சத்தில் வைத்திருக்க வேண்டியுமுள்ளது.
நூலகம் தொடர்பான அறிமுகங்கள் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டன. நூலகத்துடன் தொடர்புள்ளவர்களால் நிகழ்த்தப்பட்ட அறிமுகங்கள் போக, அதன் பங்களிப்பு வெளிகளுக்கு அப்பால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் அதிக முக்கியமானவை. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களால் ஒரு சிறிய அறிமுகம் தீராநதி நேர்காணலில் செய்யப்பட்டது. அந்நேரத்தில் அதை மிக முக்கியமான அறிமுகமாகக் கருதினோம். அது தவிர ‘உங்கள் நூலகம்’ இதழில் செ. தனபாலன் விலாவரியாக கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ஆனந்தவிகடனில் நூலகம் தொடர்பாக சிறிய அறிமுகக் குறிப்பொன்று பிரசுரமாகியிருந்தத்து. இவை தமிழ்நாட்டு மக்களை எமது பயனாளர்களாக்கிய அறிமுகங்கள். இதே மாதிரிப் புலம்பெயர் சமூகங்களிலும் சில அறிமுகங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. பல வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் நூலகத்திற்கான தொடுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வகையான தொடுப்புக்கள் ஊடாகப் பலர் தளத்தை வந்தடைந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் புலம் பெயர் தமிழர்ளே நூலகத்தின் பெரும்பான்மையான பாவனையாளர்களாகவிருந்தார்கள். இப்போதும் கூட புலம்பெயர் சமூகத்தவரது பாவனையின் அளவு குறைந்து விடாத போதும், அதில் பெருமளவான வளர்ச்சிப் போக்குக் காணப்படவில்லை. ஆனால், இப்போது பார்வையாளர்களில் பெரும்பாலானோர் இலங்கை, இந்திய நாடுகளிலிருந்தே வருகை தருகின்றார்கள். இப்போதுள்ள பாவனையாளர்களில் 40 சதவிகிதமானவர்கள் இலங்கையிலிருந்தும் 40 சதவிகிதமானவர்கள் இந்தியாவிலிருந்தும் மிகுதி 20 சதவிகிதமானவர்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் என எமது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மற்றையது, அறிமுகங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அதில் செயற்படுபவர்களே நிகழ்த்திக் கொண்டிருக்க முடியாது. அவை பரவலாக பாவனையாளர்களாலும் இதனால் பயன்பெறப்போகும் சமூகங்களாலும் நிகழ்த்தப்பட வேண்டியவை. தன்னார்வலர்களது சிறிய பங்களிப்புக்களை ஒருங்கிணைத்து இவ்வாறான விடயங்களைச் செயற்படுத்துவதே மிகக்கடினமான பணியாகவுள்ளது. இந்நேரத்தில் கிடைக்கப்பெறும் குறைந்தளவு வளங்களை அறிமுக நிகழ்வுகளுக்கும் ஒதுக்க முடியாது. இவ்வாறான செயற்றிட்டங்களைப் பொறுத்தவரை அறிமுகம் / பரவலாக்கம் என்பவை அதிக முக்கியமானவை என்ற போதிலும், இவற்றிற்காக அதிகளவான வளங்களை ஒதுக்குவதற்கு மனம் ஒப்பவில்லை என்பதே உண்மை. உங்களைப் போன்ற செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் அறிமுகங்கள் நிச்சயமாக எம்மைப் பொறுத்தவரை மிகப்பெறுமதியானவை.
நூலகத்தின் ஆரம்ப காலத்தில் பெருமளவில் இலக்கியம் சார்ந்த வாசகர்களே பயனாளர்களாக இருந்த நிலமை படிப்படியாக மாறி, தற்போது அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பயனாளர்களின் வடிவம் வெகுவாக மாறியுள்ளது. அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களைப் பெருமளவு பயனாளர்களாக மாற்ற வேண்டிய தேவையின் நிமித்தமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், பாடசாலை மாணவர்களைப் பயனாளர்களாக மாற்றும் போது நீண்ட காலப்போக்கில் அதிகமானோருடன் பரிச்சயமான தன்மை ஏற்படுத்தப்பட்டுவிடும் என்பதோடு, பலதரப்பட்டவர்களாலும் நாளாந்தம் பாவிக்கப்படும் நிலமையை எட்டிவிடும் என்பது முக்கியமானது. அதேநேரம், தனித்தனியான துறைசார்ந்த ஆர்வமுள்ளவர்களை அவர்களுக்கு ஏற்றவாறு அணுக வேண்டிய தேவையும் குறைந்துவிடும்.
உங்கள் நூலக வலைத்தளம் 2005 ஆம் ஆண்டு தொடங்கியதன் பின்னணி என்ன என்பதை பற்றி கூறமுடியுமா?
2005 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னராக மதுரை திட்டம் போன்ற செயற்திட்டங்களில் நண்பர்கள் இயங்கி வந்திருக்கின்றார்கள். இயங்கி வந்த வேளையில் ஈழத்துக்கென, ஈழத்து நூல்களை தனியே பாதுகாப்பதற்கான ஒரு செயற்திட்டம் தேவை என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கின்றது. அவ்வேளையில் முக்கியமாக இலக்கியம் சம்பந்தமான நூல்களை மையமாக வைத்து இச்செயற்திட்டம் தொடங்கப் பெற்றிருக்கின்றது. ஆரம்பத்தில் தட்டெழுதப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பிற்காலத்தில் நூல்கள் என்ற வரையறையைத் தாண்டி சஞ்சிகைகளும் சேர்க்கப்பட்டன. அதன்பின்பு பத்திரிகைகள், சிறுவெளியீடுகள் என இதர எழுத்தாவணங்களும் உள்வாங்கப்பட்டு இன்று இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் சகல எழுத்தாவணங்களும் ஆவணப்படுத்தப்படும் ஓர் ஆவணக்காப்பகமாக இது பரிணமித்துள்ளது. எதிர்காலத்தில், எழுத்தாவணங்களைத் தாண்டி இதர ஆவணங்களையும் உள்ளடக்கிய ஆவணக்காப்பகமாக மாற்ற, அதைச் செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டுள்ளோம். அவ்வகையில் ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), படங்கள் (images), தரவுகள் (data) போன்றவற்றையும் நாங்கள் எதிர்காலத்தில் சேர்த்துக் கொள்ள இருக்கின்றோம்.
மற்றையது, இந்த மின் நூலகம் (ஏன்) தேவை என்ற விடயம். இலங்கைத் தமிழ்ச் சமூகங்கள் ஏதோவொருவகையில் முற்று முழுதாக சிதைக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகக் காணப்படுகின்றன. தமது நிலம் தொடர்பான ஆதாரங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் பெயர்க்கப்பட்டுள்ள ஒரு சமூகம். இலங்கையில் வாழும் எண்ணிக்கைக்குச் சற்றும் குறைவில்லாத அளவானோர் புலம் பெயர்ந்து பல்வேறுபட்ட நாடுகளிலும் திக்கு திக்காக வாழுகிறார்கள். யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் புலம்பெயர்தல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. அதே நேரம், புவியியல் அமைவிடம் சார்ந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களுக்கென ஓர் ஆவணக்காப்பகத்தை அமைப்பதற்கான சூழ்நிலை எங்கும் காணப்படவில்லை. அவ்வாறு குறித்த இடத்தில் அமையப்பெற்றாலும் அதன் மூலம் எல்லோரும் பயன்பெறுவார்கள் எனக்கூற முடியாது. ஆக, இணையமூலமான ஆவணக்காப்பகம் மாத்திரமே ஒரே தெரிவாக உள்ளது. இவ்வாறான காரணங்கள் எமது செயற்திட்டங்களுக்கும் இயக்கத்திற்கும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றன. ஒருவகையில் இதன் மூலமான அதீத பயனென்பது எம்மை மூர்க்கமாக இயங்க வைக்கின்றது என்றுகூடக் கூற முடியும். ஏனெனில் நீண்டகாலப் போக்கில் இதன் பயனென்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம். தகவல் சமூகமும் அதன் நகர்வும் எமக்கு எடுத்தியம்புவதும் அதைத்தான். இவ்வாறு சிதைந்துபோயுள்ள இந்த சமூகங்கள் இணையம் மூலமாக மாத்திரமே ஏதோ ஒரு வகையில் ஒருங்கிணைக்கப்படுகிறது. அவ்வகையில் இச்செயற்திட்டம் - இச்செயற்பாடு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. என்னைப் பொறுத்தவரை தொடங்கியதன் பின்னணி அதன் நகர்வுகளில் பல்வேறுபட்ட காரணங்களையும் சேர்த்துக் கொண்டு இன்று அதன் பெறுமானத்தை அதிகமாக்கியிருக்கின்றது என்றுதான் கூறுவேன்.
2005 இல் தொடங்கும் பொழுது எப்படி உங்கள் குழு எவ்வாறு செயல்பட்டது? செயற்பாடுகள் எப்படி இருந்தது?
இச்செயற்திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டபோது இதை செயற்படுத்தியது ஆக இரண்டே இரண்டு பேர் மாத்திரம்தான். எவ்விதமான பின்னணியுமற்ற சமூக நோக்குள்ள ஆரம்பமாக அமைந்திருக்கின்றது. 2005 ஆம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தில், ஒரு மின்நூலகமாக நூலகத் திட்டம் என்ற விடயத்தில் தொடங்கப்பட்டிருக்கின்றது. இரண்டே இரண்டு நபர்கள் ஒரு மடலாடல் குழு ஒரு வலைத்தளம் ஏராளமான மன உறுதி ஆகியவையே நீங்கள் இன்று காணும் 500,000 பக்கங்களை ஆவணப்படுத்தியுள்ள நூலகத்தின் மூலதனமெனில் நம்பக் கடினமாகவே இருக்கும். படிப்படியாக பல்வேறுபட்ட ஆர்வலர்களையும் நலன்விரும்பிகளையும் இணைத்துக் கொண்டு நகர்ந்திருக்கின்றது. 'இணைத்துக்கொள்ளுதல்' என்ற தன்மை - தாய்மையுடன் தொடர்புள்ள அதன் தன்மையே இன்றைய வளர்ச்சி வரைக்கும் காரணமாக இருந்திருக்கின்றது என்றே நம்ப வேண்டியிருக்கின்றது.
நான் நினைக்கின்றேன், முதல் இரண்டரை ஆண்டு நிறைவுறும் காலப்பகுதியில் 60 தன்னார்வலர்கள் பங்களிப்பாளர்களாக இருந்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய வேலையையும் சமப்படுத்தி நோக்கமுடியாது. ஒவ்வொருவரும் பல்வேறு விதமான பங்களிப்பை வழங்கி இருக்கின்றார்கள். ஒருவிதத்தில் தன்னார்வ்வப் பங்களிப்புக்களில் சமனற்ற பங்களிப்புக்களே அதன் விசேட அம்சம் என்று கூறுவேன். அதுதான் அதன் அழகு பொருந்திய அம்சமும் கூட. சிலர் ஆலோசகர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள், தட்டெழுதி நூல்களை இணைத்திருக்கின்றார்கள், தட்டெழுத நூல்களை வழங்கியிருக்கின்றார்கள், தொழில்நுட்பப் பங்களிப்பில் உதவியிருக்கின்றார்கள் என்றவாறாக ஒரே தளத்தில் வைத்து அணுக முடியாத பல்வேறுபட்ட பட்ட பெறுமதியுடைய பல்வேறு தளங்களில் அமைந்த பங்களிப்புக்கள். ஏன், மடலாடல் குழுவில் மடல்களை எழுதுவதன் ஊடாகத் திட்டத்தைச் செழுமைப்படுத்துபவர்களாக உதவியிருக்கின்றார்கள். ஆரம்ப கட்ட பங்களிப்பு நிலவரங்கள் இவ்வாறுதான் அமைதிருந்தன.
அதன் பின்னர், பங்களிப்புக்கள் அல்லது பங்களிப்பு வடிவங்கள் சற்று வித்தியாசப்படுத்தப்படுகின்றன. எல்லோராலும் நூல்களை தட்டெழுதி இணைப்பது என்பது இயலாத காரியம். அதே சமயம் சிலரால் நிதி பங்களிப்பு செய்யக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் அந்த நிதியை கொண்டு, எங்கள் முயற்சிக்கு வேகம் அளித்தனர். தன்னார்வ குழுவில் இருந்தவர்களிடமிருந்து சிறுதொகை நிதி உதவிகளை பெற்று உள்நாட்டில் சில செயற்திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டன. அந்த வகையில் பங்களிப்புவடிவம் மாற்றம் பெற்றது. பங்களிப்பு வெளி தனிநபர் பங்களிப்பைத் தாண்டி தனிநபர் மூலமான கூட்டுப் பங்களிப்பு என்னும் கட்டத்தை அடைந்தது. இதில் சில பாதகமான அம்சங்கள் அவதானிக்கப்பட்ட அதே நேரம் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதிகாரப் படிநிலைகள் விலக்கப்பட்ட நிலையில் செயற்பட்டுக் கொண்டிருந்த செயற்றிட்டம் தன்னை விரைவுபடுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்ட முயற்சிகளால் ஏதோவொரு விதத்தில் தன்னை அதிகாரப்படிநிலைகளுக்குள் உட்புகுத்திக் கொண்டது. கூட்டுச் சமூகச் செயற்பாட்டு நிகழ்வில் இவ்வகையான அணுகுமுறைகள் பாதகமான நிலமைகள் என்ற போதிலும் விரைவுபடுத்தும் நோக்கோடு பங்களிப்பு வடிவங்கள் மாறத்தொடங்கின. பொறுப்புக்கள் மற்றும் முகாமைத்துவங்கள் தொடர்பாகவும் அதிக பங்களிப்புக்களை வழங்கியவர்கள் முக்கியத்துவம் பெற்றார்கள்.
என்னைப் பொறுத்தவரை, இரண்டாவது வருட கால நிறைவின் பின்னரே இச்செயற்திட்டம் தொடர்பாக கூடுதல் அக்கறை செலுத்தத் தொடங்கினேன். நூலகத் திட்டத்தின் முதல் இரண்டு வருட பயணத்தின் பெறுபேற்றைப் பார்த்தோமேயானால், இது மிக மெதுவான பயணம் என்றே கூறமுடியும். அத்துடன் பயன்பாட்டுரீதியில் முழுமையடைய வாய்ப்பு இல்லாத ஒன்றாகக் காணப்பட்டது. அக்காலத்தில் நான் ஈழத்துக் கவிதைகள் - கவிஞர்கள் தொடர்பிலான தேடலில் இருந்தேன். என் தேடலிற் கிடைக்கும் ஆவணங்களை நூலகத்தில் இணைக்க முயன்றேன். இதுதான் நூலகத்துடனான எனது ஊடாட்டத்தின் ஆரம்பமாக அமைந்தது. அந்நேரத்தில் நிறையப் போதாமைகளை அடையாளங் காண முடிந்தது. செயல் ஒழுங்குமுதல் சிந்தனைமுறை வரை நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே உருவாகியிருந்த அதிகாரப்படிநிலைகள் ஏதோவொருவகையில் தேக்கமுற்று அவை நிலைக்கத்தான் போகின்றன என்பதை மனதில் வைத்து பொறுப்பு சார்ந்து அவற்றை வரையறுத்த பின்னர் அதற்கு வெளியே பிறிதொரு பெருமளவானோர் பங்களிக்கக் கூடிய தன்னார்வ வெளியை உருவாக்குவது என்ற எண்ணத்தில் செயற்படத் தொடங்கினேன். இதற்கு விக்கிமீடியா மற்றும் விக்கிபீடியா மாதிரிகளை மனதில் வைத்து நூலகத்தை நகர்த்திச் செல்ல முயன்றேன். தற்போதைக்கு நூலகத்தின் பங்களிப்பாளர்களை, அவர்களின் பங்களிப்பை வைத்து பொறுப்பு சார்ந்த உறுதியான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் நூலகத்திட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஆசைப்பட்டது போன்று தன்னார்வ வெளிகளை இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்கள் ஊடாடும் பல்வேறு தளங்களிலும் கட்டமைக்க வேண்டியது மாத்திரமே மிச்சமிருக்கின்றது. பல்வேறுபட்ட நாடுகள் சார்ந்தும் பிரதேசங்கள் சார்ந்தும் பரவலான அறிமுகங்களை நிகழ்த்துவதன் ஊடாக தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. உருவாக்கப்படும் தன்னார்வக்குழுக்களை, தங்கள் பிரதேசங்கள் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற வைப்பதே நாம் தற்போதைக்கு எதிர்பார்க்கும் விடயமாகும். வெளியிலிருந்து பார்ப்போருக்கு, இதன் வரைபடம் மேலிருந்து கீழான அணுகுமுறையாகக் காணப்படும் போதிலும் அவ்வரைபடங்கள் கீழிருந்து மேலான அணுகுமுறைகளிலேயே வரையப்பட வேண்டும் அல்லது இறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நான் மிக அவதானமாயிருக்கின்றேன். எவ்வகையான ஆவணங்கள் எவ்வாறு ஆவணப்படுத்த வேண்டும் என்பது அப்பிரதேசக் குழுக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விடயமெனக் கருதுகின்றேன்.
நூலக நிறுவனம் எப்போதிருந்து, எவ்வாறு இயங்கி வருகிறது?
நூலக நிறுவனம் (www.noolahamfoundation.org) பதிவுசெய்யப்பட்டது சென்ற ஆண்டு, 2010 மே மாதம்தான். 2008 இலிருந்து முக்கிய பங்களிப்பாளர்களை இணைத்துக் கொண்டு நிறுவனமாக இயங்கிவருகிறோம். நூலகத் திட்டத்துக்கு வெளியேயானதாகவே நிறுவனம் உள்ளது. ஆனால் நிறுவனத்தின் பெரும்பாலான வளங்கள் நூலகத் திட்டத்துக்குச் செலுத்தப்படுகின்றன. அவ்வகையில் நூலகம் வலைத்தளத்தை 2009 இல் பொறுப்பெடுத்து அதனை மிகப் பயனுள்ளதொன்றாக வளர்த்தெடுத்துள்ளோம். நிறுவனம் என்பது வேறொருவிதமான விடயம். அந்த நிறுவனம் நூலகம் போன்ற வேறுவகையான செயற்திட்டங்களுக்கும் உதவிபுரிய கூடிய ஒன்றாகும். பல்வேறுதரப்பட்ட நூலகவியல், ஆவணப்படுத்தல் தொடர்பான நிறுவனங்களுடன் ஏதோ ஒரு வகையில் நாங்கள் ஊடாடிக் கொண்டிருக்கின்றோம். அவர்களுடைய உதவியை பெற்றுக் கொண்டுள்ளோம் - பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அதே நேரம், எங்களால் இயன்ற உதவியை பிற நூலகம் சார்ந்த அமைப்புக்களுக்குச் செய்து கொண்டிருக்கின்றோம். நிறுவனமாக இயங்கினாலும் தன்னார்வ வெளியை (Volunteer space) இயலுமான வரைக்கும் குறுக்காத வரையில் பார்த்துக் கொள்கிறோம். அதை மேலும் மேலும் எவ்வாறு அகலித்துச் செல்வதென்பதே எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில், தன்னார்வ வெளிதான் இந்த செயற்பாட்டின், இந்த சமூக இயக்கத்தின் அடிநாதம். தன்னாவர் வெளியை நாங்கள் குறுக்க முயல்வது ஏதோவொரு கட்டத்தில் எமக்குப் பாதகமானதாகவே அமையும். நாம் அடைய வேண்டிய இலக்கை மாத்திரம் மனதில்கொண்டு நகரும்போது, பல்வேறு விதமான தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சரியான பாதைகள் சிலவேளை பயணிக்கக்கூடிய சாத்தியமான பாதைகளாக இருப்பதில்லை. அதேநேரம் பயணிக்க இலகுவான பாதைகள் சரியானவையாக இருப்பதில்லை. இவற்றிற்கு இடையிலான புள்ளிகளைக் கண்டடைந்து எமக்கான பாதைகளை வரைந்தவாறு முன்னோக்கிச் செல்வது மிகக்கடினமானது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்ட்டுள்ளோம்.
தற்போது மொத்தமாக தன்னார்வ பங்களிப்பாளர்கள் என்று பார்த்தால் 500 லிருந்து 600 பேர் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. நூலகம் நிறுவனம் என்ற அளவில் வைத்து பார்க்கும் போது அதன் வடிவமே எமது தேவைகள் சாந்தே உருவாக்கப்பட்டது தான். பிற நிறுவன முன்மாதிரிகளைக் கூட நாம் முற்றுமுழுதாகப் பின்பற்றவில்லை. தொழில்நுட்பம் தொடர்பான பொறுப்புக்கள், பரவலாக்கல் தொடர்பான பொறுப்புக்கள், நிறுவன நிதிக்கையாள்கை தொடர்பான பொறுப்புக்கள் என பொறுப்புக்களை வரையறுத்து ஏற்கனவே அவ்வெளிகளில் இயங்கியவர்களை அதற்குப் பொறுப்பாக நியமித்துள்ள அதேநேரம், அவர்கள் சுயமாக தாங்கள் மற்றும் தங்கள் பொறுப்புக்கள் சார்ந்து தன்னார்வக்குழுக்களை அமைத்து செயற்படுகின்றார்கள். இதன்மூலம் அதிகாரப் படிநிலைகளில் இறுக்கத்தை குறைத்து இயங்குவதற்கான பொறிமுறையைக் கட்டமைப்பதே முக்கிய நோக்கம். இவ்வகையான அதிகாரப் பிரிப்புக்களும் அவற்றின் இயங்குகைக்கான வெளிப்படைத்தன்மைகளும் ஜனநாயக ரீதியான அமைப்பை உருவாக்குவதோடு ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்குக் களம் சமைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அடுத்து, செயல்பாட்டுத்தளத்தில் மாணவர் தரப்புக்களை உள்வாங்குவது மிகமுக்கியமானது. முதலாவது அவர்களுக்கு இது தொடர்பான அக்கறையை உண்டாக்குகின்றோம். இரண்டாவது, அவர்களால் சமூகம் சார்ந்த விடயங்களைப் பொறுப்பேற்றுச் செய்யக்கூடிய திறனையும் வளர்க்கின்றோம். மாணவர்கள் இன்றி Volunteerism என்ற விடயம் ஒரு விதத்தில் அடிப்பட்டு போகும் நிலைமை காணப்படுகின்றது. இன்றை முதலீட்டியச் சமூகத்தில் Volunteerism என்பது தொழில்நுட்ப வெளிகளுக்கப்பால் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. மாணவப்பருவம் மாத்திரமே ஓரளவிற்கு Volunteerism சார்ந்த சாதகமான காலப்பகுதியாகும். தொழில்துறையை வளர்க்கும் நோக்குடைய கல்விமுறைமை, மாணவர்களது சமூகச் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற அதேநேரம், கிடைக்கும் மெல்லிய இடைவெளிகளில் அவர்களை ஈடுபடுத்தித்தான் ஆக வேண்டியிருக்கின்றது. மூன்றாவது, மாணவப்பருவச் செயற்பாடுகள் ஏதோவொருவகையில் அதற்குப் பின்னைய காலத்திய செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தும். வெவ்வேறு பரப்புக்களில் இயங்க நினைப்பவர்களுக்கான களமாக இதனை வளர்த்தெடுத்தவாறிருக்கின்றோம்.
2005 இருந்து தொடர்ந்து Digitize செய்து கொண்டு வருகின்றீர்கள். Gradualize ஆகி வந்தீர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அதிக முயற்சி செய்து அதிக ஆவணங்களை Digitize செய்தீர்களா?
முதல் வருடத்தில் 100 (நூறு) ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இரண்டாம் வருடத்தில் 262 (இருநூற்று அறுபத்தியிரண்டு) ஆவணங்கள். மூன்றாம் வருடம் 1256 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 1270 ஆவணங்கள். நான்காம் ஆண்டு 2190 ஆவணங்கள். ஐந்தாம் ஆண்டு 3109 ஆவணங்கள். இப்போது ஆறாண்டு முடிவில் எண்ணாயிரத்து நூறு ஆவணங்களை எங்களால் ஆவணப்படுத்த முடிந்திருக்கின்றது.
இனிவரும் காலங்களில் தனியே ஆவணங்களின் எண்ணைக்கையை அதிகரிப்பது என்பதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், ஆவணங்களைப் பாதுகாப்பது தொடர்பான அக்கறையை பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலான செயற்பாடுகளையும் சமாந்தரமாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது உண்மையான வெற்றி தனியே ஆவணப்படுத்துவதிலும் ஆவண எண்ணிக்கையைக் கூறிப் பெருமைப்படுவதிலும் மாத்திரம் தங்கியில்லை. ஆவணப்படுத்தல் தொடர்பான ஆர்வத்தை சமூகத்தில் எவ்வளவு தூரம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதிலும் ஆவணப்படுத்தல் தொடர்பான பிரக்ஞையின் மூலமான வெளிப்பாடுகள் எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கின்றது என்பதிலும் தான் தங்கியிருக்கின்றது.
எக்காரணங்களினால் ஆவணப்படுத்துவதில் இரண்டு வருடகாலத்திற்கு பிறகு ஒரு பெரும் பாய்ச்சல் (Gigantic leap) ஏற்பட்டது?
ஆரம்பக்கட்டத்தில் தட்டெழுதப்பட்டு மட்டும் ஆவணங்கள் இணைக்கப்பட்டன. ஒரு கட்டத்திற்குப் பின்னர் எமது வளர்ச்சிப்படியில் Digital Library என்ற கருத்தியலைத்தாண்டிச் சிந்திக்கத் தொடங்கினோம். Digital Library என்ற எண்ணக்கரு ஆவணக்காப்பகமாக மாற்றம் பெற்றது. ஆவணங்களை ஆவணங்களாக அதேவடிவத்தில் அப்படியே காட்சிப்படுத்தல் - பாதுகாத்தல் என்பது தொடர்பான அக்கறையின் காரணமாக மின்பிரதியாக்கம் (Scan) செய்யும் ஒரு முறையை நோக்கி நாம் நகர வேண்டி வந்தது. மின்பிரதியாக்க முறையின் மூலம் தட்டெழுதுவதை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமான ஆவணங்களை ஆவணப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது முதலாவது முக்கியமான விடயம். இரண்டாவது முக்கியமான விடயம் நூல்கள் என்ற நிலையைத்தாண்டி சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தக்கூடிய நிலைமை மின்பிரதியாக்கம் மூலமே சாத்தியமானது. ஆக, தட்டெழுதுவதை விட மின்பிரதியாக்கம் செய்வதன் மூலம் ஆவணப்படுத்துவது அதிகம் வசதியானதாகக் கருதப்பட்டது. ஆவணப்படுத்தலில் துல்லியம், வேகமாக ஆவணப்படுத்தல் ஆகிய காரணங்களால் ஒருகட்டத்தில் தட்டெழுதுவதன் மூலமான ஆவணப்படுத்தல் முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டு மின்பிரதியாக்க முறைமை ஆதிக்கம் பெற்றது.
அதே நேரம் அந்நேரத்தில் பெரியளவிலான செயற்றிட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது இன்னொரு முக்கிய காரணமாகும். 20 இற்கும் மேற்பட்ட மின்பிரதியாக்கிகளைப் பயன்படித்திப் பரந்தளவிலான ஆவணப்படுத்தலைச் செய்யவது மூன்றாவது வருடத்திலேயே நிகழ்ந்தது. இதன் காரணமாக பெரும்பாய்ச்சல் நிகழ்ந்தது போன்ற தோற்றம் உருவாகியிருக்கின்றது.
அதேநேரம், எமக்குத் தன்னிடமிருந்த முழு சேகரிப்பையும் தந்துதவிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்கள் இச்சடுதியான மாற்றத்திற்கு ஒரு காரணமென்று கூறுவேன். ஏனெனில் அந்நேரத்தில் அவர் தன்னிடமிருந்த முழுச்சேகரங்களையும் எமக்கு தந்துதவினர். அதன் காரணமாக ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை இணையத்திற்குக் கொண்டுவருவது சாத்தியமானது. அதேநேரம், அதற்குப் பின்னர் வந்த வருடங்களில் வருடாந்த ஆவணப்படுத்தல் எண்ணிக்கையைக் குறையாமல் பார்த்து கொண்டோம். இனிவரும் காலங்களில், மாதத்திற்கு ஆயிரம் ஆவணங்கள் என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றொரு உந்துதலுடன் செயற்பட்டு கொண்டிருக்கிறோம். அது சாத்தியமாகுமா, இல்லையா என்பது தொடர்பாக நிறைய கேள்விகள் இருந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை சாத்தியமாக்கி விடுவோம் என்று நம்புகிறோம். என்னைப் பொறுத்தவரை அவ்வெல்லையையே, உச்ச எல்லையாக வரையறுக்க நினைக்கின்றேன். அவ்வெல்லையை அடைந்ததன் பிற்பாடு நாம் ஆவணப்படுத்தலுடன் சார்ந்த பிற தளங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாக உள்ளது. ஆவணங்களை பல்வேறுவகையாக ஒழுங்குபடுத்தல், ஒழுங்குபடுத்தப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்திய ஆய்வுகள், அரிதான ஆவணங்களைத் தேடிச் செல்லுதல், எழுத்தாவணங்கள் தவிர்ந்த பிற ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் கவனத்தைக் குவித்தல் என்பது போன்ற பலவிதமான பொறுப்புக்கள் எம்முன் குவிந்துள்ளன.
தற்போது 8000 இற்கும் மேற்பட்ட Digitized files இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இதில் முதலில் தட்டெழுதப்பட்டு இணைத்ததையும் மின்பிரதியாக்கம் (Scan) செய்து இணைத்ததையும் பார்க்க முடியும் அல்லவா?
தட்டெழுதப்பட்டவை HTML வடிவத்தில் மாத்திரம் காணப்படும். மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை PDF வடிவத்தில் காணப்படும். முதல் 380 நூலக இலக்கங்களுக்குள் உள்ள ஆவணங்கள் முழுவது தட்டெழுதப்பட்டவை. ஆயினும் நாம் பின்வந்த காலங்களில் மின்பிரதியாக்கம் செய்யும்போது அவற்றில் பெரும்பாலான பிரத்திகளை மின்பிரதியாக்கம் செய்தும் இணைத்துள்ளோம். அதனால், 380 என்ற நூலக இலக்கங்களுக்குள் உள்ளவற்றில் பெரும்பாலானவற்றை HTML மற்றும் PDF ஆகிய இரண்டு வடிவங்களிலும் பார்வையிடலாம். 380 இற்குப் பின்னரான நூலக இலக்கமுள்ளவை அனைத்தும் மின்பிரதியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றில் ஒரு சில மாத்திரம் அச்சுக்குச் சென்ற மூலவடிவத்திலேயே காணப்படுபவை. ஆக மொத்தம் 380 இற்குப் பின்னுள்ள இலக்க ஆவணங்களை PDF வடிவத்திலேயே பார்க்கலாம். தட்டெழுதப்பட்டு இணைக்கப்படுபவை, தேடுபொறிகள் மூலம் குறித்த சொற்களைத் தேடி வருபவர்களுக்கு உதவிய போதிலும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. எழுத்துப் பிழைகள் மாத்திரமல்லாது, ஆவணங்களின் சில பகுதிகள் கூட இல்லாமல் போயிருக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதேநேரம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமக்குத் தேவையில்லாத பகுதிகளை நீக்கவும் வாய்ப்பு உண்டு. மேற்குறித்த காரணங்களால் என்னைப் கேட்டால் மின்பிரதியாக்கம் செய்யப்படுவதே சிறந்தது என்பேன். எழுத்துணரி (OCR) தமிழில் சாத்தியப்படும்போது PDF வடிவத்தில் உள்ள அனைத்தையும் உரைக் கோப்புக்களாவும் மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எண்ணிமப்படுத்தி இணைப்பதற்கு ஆவணங்களை எப்படி நிர்ணயம் செய்வீர்கள்?
ஆரம்ப காலக்கட்டத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த நூல்களே ஆவணப்படுத்தப்பட்டன. புனைவுகள், அபுனைவுகள் என்று பார்த்தால் கூட பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. திட்டத்துடன் தொடர்புள்ளவர்களது தெரிவுகள் முதன்மை பெற்றிருந்ததனால் அவ்வாறு காணப்பட்டிருந்தாலும் பிரேத்தியேகமான காரணங்கள் இருந்திருக்கும் என நினைக்கவில்லை. அதன்பின்பு, சஞ்சிகைகள் மற்றும் இதர எழுத்தாவணங்கள் என எவ்வகையான எழுத்தாவணங்களாக இருப்பினும் அவை அச்சில் வெளிவந்திருப்பின், ஆவணப்படுத்தத் தகுதியானவை என்றவாறாக மாற்றம் பெற்றது. அச்சில் வெளிவந்திருக்க வேண்டும் என்பது மாத்திரமே எமது நிபந்தனையாகத் தொடர்கின்றது.
தரமானது / தரமற்றது, பயனுள்ளது / பயனற்றது போன்ற தணிக்கைகள் எதனையும் நாம் பின்பற்றுவதில்லை. அது எமது வேலையும் அல்ல. அவை விமர்சகர்களும் சமூகமும் தீர்மானிக்க வேண்டியவை. எதிர்காலச் சந்ததிக்கு இன்றைய காலப்பகுதியிலும் கடந்த காலப்பகுதியிலும் அச்சில் வெளிவந்த ஆவணங்களை விட்டுச் செல்வது மாத்திரமே நூலகத்திற்கூடான எமது பணியாகும். உதாரணத்துக்குச் சொல்வதானால் இன்றைக்கு நாங்கள் 'கல்வெட்டு' என்று அழைக்கப்படும் நினைவுமலர்களைக் கூட ஆவணப்படுத்துகின்றோம். ஏனெனில் கல்வெட்டுக்களில் கூட முக்கியமான விடயங்கள் காணப்படக்கூடும். நாம் ஆவணப்படுத்தும் நினைவுமலரொன்று சிலவேளை ஒரேயொரு ஆய்வுக்காவது மாத்திரமே எதிர்காலத்தில் பயன்படக்கூடும். உதாரணமாக ஒரு கல்வெட்டிலிருந்து வம்சாவளி, பரம்பரை சம்பந்தமான தகவல் எதிர்காலத்தில் ஆய்வுகளுக்குத் தேவைப்படக்கூடும். ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அப்படியான ஆய்வுகள் எதிர்காலத்தில் நிச்சயமாக முக்கியத்துவம் பெறக்கூடியவை. சிதைவுக்குள்ளாகிப் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு மொழிகளைப் பேசி வாழும் சமூகம் தனது உறவுகளை தேட முற்படும்போது இவ்வாறான நினைவுமலர்கள் பயன்படக்கூடும்
மற்றொரு முக்கியமான விடயம் வரலாறு தொடர்பானது. இன்றைய வரலாறு இன்று அதிகாரத்தில் உள்ளவர்களால் எழுதப்படும் வரலாறு. பல்வேறு வகையில் பிளவுற்று அதிகாரப்படிநிலைகளைக் கொண்டுள்ள சமூகம் என்றளவில் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்காலத்தில் இன்றைய அதிகார வர்க்கத்தால் எழுதப்பட்ட பிரதிகளில் இருந்தே தமது வரலாற்றை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியிருக்கும். ரணஜித் குகா அவர்களால் எழுதப்பட்ட 'சந்திராவின் மரணம்' என்ற கட்டுரை மிக நல்ல உதாரணம். எந்தவொரு ஆவணத்தையும் அழிய விடப்போவதில்லை என்ற குறிக்கோளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
மருத்துவப் பதிவேடு (Medical Records), நில உரிமைப் பதிவுகள் (Landrights documents) போன்ற ஆவணங்களைக் கூட ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எதிர்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Institution) போன்றவற்றின் ஆவணங்களையும் நாங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என்று கரிசனையுடன் செயற்பட்டு நினைக்கின்றோம். எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. ஆயினும் நாம் சாத்தியங்கள் தொடர்பிலும் அலட்டிக் கொள்வதில்லை. அசாத்தியங்களைச் சாத்தியமாக்குவது தானே செயற்பாட்டாளர்களின் பணி.
உங்களின் திட்டம் இலங்கை அரசுக்கு தெரிந்திருந்ததா?
அரசாங்கத்திற்கு இப்படி ஒரு திட்டம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது தெரியுமோ, தெரியாதோ என்று எனக்கு தெரியாது. எமது நிறுவனம் இலங்கையில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது எனற வகையில் அரசாங்கத்திற்கு நாம் தெரியப்படுத்தியிருக்கின்றோம் என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது. மேலும், அரசாங்கத்தைக் கண்டு பயப்பட, நாம் அரசாங்கத்திற்கு எதிராக இயங்கவில்லையே. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையைத்தான் நாம் செய்துகொண்டிருக்கின்றோம். தமிழ் பேசும் மக்களின் ஆவணக்காப்பகம் என்றளவில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள், அரச ஆதரவாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள் என பலரது பங்களிப்பும் நூலகத்தில் உண்டு. நூலகத்தை, அதன் பயன் சார்ந்து அரசியல் நோக்கோடு அணுக முடிந்தாலும், அதை உருவாக்கும் எமது செயற்பாடுகள் நிச்சயமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை.
அதேநேரம், மிகவும் வெளிப்படையாக இயங்குகின்றோம் என்றளவில் எமது செயற்பாடு தொடர்பில் அச்சப்பட ஏதுமில்லை. ஆனால், எமது செயற்பாடுகள் பெருமளவில் நிகழ்ந்தால், சில வேளை ஏதாவதொரு வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சிறிய அளவில் செயற்பட்டுக் கொண்டிருந்தோம் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. சில வேளைகளில் தமிழர்களின் அடையாளம், தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்துவதென்பது அதில் ஈடுபடுபவர்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடும் என்ற பயம் இன்று வரைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்காக முழுவதுமாக இயங்காமல் இருக்கவும் முடியாதே.
தமிழ்நாட்டில் உங்கள் முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு ஊக்கம் கிடைத்திருக்கிறது?
இன்று வரைக்கும் எந்த விதமான ஆதரவும் தமிழக அரசாங்கத்திடம் இருந்தும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதிலும் பார்க்க நாம் அணுகவில்லை என்பதுதான் உண்மையானது. ஆயினும், இம்முறை எனது இந்த இந்திய பயணத்தின் நோக்கங்களில் ஒன்று, தமிழ்நாட்டில் காணப்படும் ஈழத்து ஆவணங்களை பட்டியலிடுவதும், அவற்றை சேகரித்து ஆவணப்படுத்துவதும். அதற்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
அதே நேரத்தில் சில ஆவணப்படுத்தலுடன் தொடர்புடைய நிறுவனங்களை - அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான அடித்தளத்தை இடும் நோக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். பலர் பல்வேறு உதவிகளை அளிப்பதாக உறுதி அளித்திருக்கின்றார்கள். காலப்போக்கில் ஒரு செயற்திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்க முயற்சி எடுக்கும் போது பல்வேறு தரப்பட்டவர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். ஆயினும் தமிழ்நாட்டு அரசை நேரடியாக இதுவரை அணுகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் சிலவற்றை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன். பெரும்பாலும் சாத்தியப்படும் என நம்புகின்றேன். சாதகமான சூழ்நிலைகள் அமைந்தால் மேற்கொண்டு பெரியளவிலான செயற்றிட்டங்களை ஆரம்பிக்க முடியும்.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. இவ்வந்தஸ்து கிட்டிய பிறகு மத்திய அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தமிழ் செவ்வியல் இலக்கியம் என்று கூறும் பொழுது ஈழத்து அறிஞர்களின் பங்களிப்பும் அதில் அடங்கியுள்ளது. அக்கூறுகளை பாதுகாப்பதும் அரசின் கடமையாகின்றது. அவ்வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதா?
தமிழ் என்ற ஒட்டுமொத்த பரப்பில் இயங்கும்போது இந்த ஏட்டுச்சுவடிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீங்கள் கூறியவாறு தமிழக அரசுக்கும் உண்டு. நீங்கள் கூறுவது தொடர்பாக சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன். எமது நிறுவனத்துடன் தொடர்புடைய ஆய்வாளர் ஒருவர் அதற்கான முயற்சிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இவ்விடயம் எவ்வளவு தூரம் செயற்பாட்டுத்தளத்தை நோக்கி நகரும் என்பதைப் பற்றி இப்பொழுது கூற முடியாது.
இலங்கையில், வடக்கு கிழக்கு எங்கும் பல ஏட்டுச்சுவடிகள் அழிந்துபோகும் நிலைமையில் உள்ளன. கிழக்கில் சுனாமியின் போது பல ஏட்டுச்சுவடிகள், முக்கியமாக மருத்துவக்குறிப்புக்கள் அடங்கிய ஏட்டுச்சுவடிகள் பல அழிந்து போனதாக கூறப்படுகிறது. இன்று எவ்வித பராமரிப்பும், பாதுகாப்பும் அற்று பல்வேறு இடங்களில் ஏட்டுச் சுவடிகள் அநாதரவாக விடப்பட்டிருக்கின்றன. யுத்தம் காரணமாக பல்வேறு வகைப்பட்ட ஏட்டுச் சுவடிகளும் அரிதான ஆவணங்களும் அழிந்து போயிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய சேகரத்திற்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. பெரும்பாலும் முற்றாக அழிந்து போயிருக்கலாம். இவ்வாறு ஏதோவொருவகையில் அழிந்து போயுள்ளவற்றில் இருந்துதான் எஞ்சியவற்றைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டியிருக்கின்றது. யுத்தத்தின் பின்னைய காலப்பகுதியில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களே சகல தரப்புகளாலும் அநாதரவாக விடப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதை நினைத்து குற்றவுணர்வுக்குள்ளாகிய சந்தர்ப்பங்களும் உண்டு.
உங்கள் நிறுவனத்தை நடாத்துவதற்கு நிதி எவ்வாறு சமாளிக்கப்படுகிறது? ஒரு புத்தகத்தை எண்ணிம வடிவத்திற்கு (Digital Format) மாற்றுவதென்பது நீண்ட செயற்பாடல்லவா? அதற்கு நிதியும் அதிகமாக தேவைப்படும் அல்லவா?
நாம் நிறுவனமயமாகாமல் இயங்குவது என்ற விடயத்தில், கவனம் செலுத்தி வந்திருந்த போதிலும், ஒரு கட்டத்தில் நிறுவனக் கட்டமைப்பிற்குள் உட்படாமல் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியாது என்ற நிலமை வந்தபோதே நிறுவனமாகப் பதிவு செய்தோம். நிறுவனமாகப் பதிவு செய்த போதிலும், வழமையான நிறுவனங்களுக்குள்ள பண்புகளுடன் இயங்காமல் இச்செயற்பாட்டை ஒரு சமூக இயக்கமாக வளர்த்து செல்லும் பாணியில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறோம். எமக்கென அலுவலகம் எதுவுமில்லை. பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் உதவிகளைப் பெற்றவாறே இயங்கிக் கொண்டிருக்கின்றோம். செலவுகளை இயன்றவரை மிகவும் கட்டுப்படுத்தியவாறே இயங்குகின்றோம். எமது வரவு செலவு விபரங்களை வெளிப்படையாக வலைத்தளத்தில் வெளியிடுகிறோம். எமது செயற்பாடுகளை நிறுவன தளத்தின் மூலமாக வெளியுலகிற்குத் தொடர்ச்சியாகத் தெரியபப்டுத்திக் கொண்டிருக்கின்றோம்.
எமக்குக் கிடைக்கும் நிதியுதவிகள் அனைத்தும் எமது செயற்பாடுகளைப் பார்த்தவர்களும் பயனடைந்தோரும் வழங்கியவை தான். ஓரிருவரே மிகப்பெரிய நிதியுதவியை அளிக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்க நினைக்கின்றோம். மாறாக, ஆயிரக்கணக்கான பயனாளர்களது சிறிய அன்பளிப்புக்களைக் கொண்டு இயங்குவதே ஆரோக்கியமானது. இவ்வகையான அணுகுமுறை பெருமளவான உழைப்பைக் கோரும் செயற்பாடென்ற போதிலும் இயன்றவரை பங்களிப்பாளர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது. இயன்றவரை நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் மூலமான செயற்பாடுகளை இழிவாக்கி, இதர பங்களிப்பு முறைகளை ஊக்குவித்தவாறிருக்கின்றோம். சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தொடர்ச்சியாகப் பெருமளவு நிதி கையாளுகை இருக்காது என்ற போதிலும், பத்திரிகைகளை ஆவணப்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு இன்னும் அதிகமான நிதி தேவைப்படும். அதுமட்டுமல்லாது அசைபடங்கள் மூலமான ஆவணப்படுத்தல்கள் இன்னும் அதிகமான நிதியைக் கோரும் செயற்பாடுகளாகும்.
பல்வேறுபட்ட சமூக அக்கறையுள்ளவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒரு சில நிறுவனங்களிடமிருந்துமே நிதி பெறப்படுகின்றது. இன்றைய தேதி வரையில் பெரியளவான நிறுவனங்களது எவ்வித நிதியுதவியையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருவகையில் இச்செயற்றிட்டத்தினூடான எமது ஆத்மார்த்தமான பிணைப்பிற்கு இதுவே காரணமென்பேன். பெரும் நிதிக்கையாள்கை நிச்சயமாக இச்செயற்றிட்டத்தின் உயிர்ப்பைச் சிதைத்துவிடும் தன்மை கொண்டது.
நிறுவனமான பிறகும் உங்களுக்கு நிதியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகி இருக்கின்றது அல்லவா? நிறுவனம் என்ற பெயரில் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது. அதன் மூலம் உங்கள் திறமையான செயல்பாடுகளைத் கொண்டு நிதியை கேட்கலாம். அதற்காக விண்ணப்பிக்கலாம் அல்லவா?
அப்படியிருந்தும் கூட நாங்கள் இன்று வரைக்கும் தனிப்பட்ட நபர்கள் அல்லது தனிப்பட்ட நபர்கள் சார்ந்த மிகச்சிறிய நிறுவனங்கள் ஊடாகத்தான் நிதியைப் பெற்று வருகின்றோம். எதிர்காலத்தில் பெருமளவு நிதித்தேவையுள்ள செயற்திட்டங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கமிருப்பினும் கூட நிறுவனத்தை பல தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய பங்களிப்புக்கள் மூலம் இயக்குவதே சிறந்தது. குறிப்பிட்ட செயற்றிட்டங்களுக்கு மாத்திரம் நிதி கேட்டு விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் அடிப்படைச் செயற்பாடுகள் எப்போது தன்னார்வலர்களாலும் தன்னார்வலர்களது சின்னஞ்சிறிய நிதிப்பங்களிப்புகளாலும் மாத்திரம் நிறைந்திருக்க வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.
தொழில்நுட்ப விடயங்களுக்கு நீங்கள் எங்கிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?
ஆரம்பத்தில் பெரும்பாலான தொழில்நுட்ப விடயங்களை மயூரன் பார்த்துக் கொண்டிருந்தார். மீடியாவிக்கியை நூலகத் தளமாக ஒழுங்கமைத்தவர் கோபிநாத் என்றபோதிலும், அதன் பின்னர் அதனை ஒவ்வொரு விடயங்களையும் மாற்றம் செய்தவாறு, அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஓர் இளைஞர் - வினோத்ராஜன் என்னும் தோழர். தமிழ் விக்கிப்பீடியாவினூடாக அறிமுகமாகிய அவர் தன்னார்வலராக இன்று வரைக்கும் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். அவரைப் போன்றோரது தன்னார்வ உதவிகள், எமக்குப் பெரிய உந்து சக்தியை அளித்ததோடு, நாம் இன்று இவ்வளவு தூரம் வளர்வதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. நிமலபிரகாசன் போன்றோருடன் இணைந்து வினோத் தன்னார்வத் தொழில்நுட்பக் குழுவொன்றை செயற்படுத்தி வருகின்றார். தொழில்நுட்பம் தொடர்பான விடயங்கள் என்று வரும்போது பல்வேறுபட்ட தொழில்நுட்பத் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்பதோடு அவர்களது பங்களிப்பின் மூலம் அவற்றைச் செயற்படுத்தியும் வருகின்றோம்.
தமிழா முகுந்த் என்ற தமிழ்நாட்டு இளைஞர் (தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றார்) தனது Server இல் Host பண்ணலாம் என்று கூறி, நூலகத்திற்கொரு இடத்தை ஒதுக்கித் தந்தார். அதன்பின்னர் லோகேஷ் எனும் இன்னொரு இந்தியர் அந்த உதவியை இன்றுவரைக்கும் தொடர்கின்றார். தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னார்வப் பங்களிப்பாளர்களாகிய சுந்தர் போன்றோரும் நுட்ப உதவிகளை வழங்குகின்றனர். இன்றுவரைக்கும் நுட்பப்பிரச்சனைகளையும் நுட்பச் செயற்பாடுகளையும் தன்னார்வலர்கள் மூலமே பெற்றும் தீர்த்தும் வந்திருக்கின்றோம்.
நூலக வலைத்தளத்தின் பயன்பாடு, நிறுவனமாக இதுவரை சாதித்தவை என்று எவற்றைச் சொல்லலாம்?
நூலகத் தளத்தின் பயன்பாடு தொடர்பில் நேரடியாக அளவீடு சாத்தியமில்லை. ஆனால் பல வலைப் பதிவுக் கட்டுரைகளிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும், தமிழ் விக்கிப்பீடியா போன்றவற்றிலும் நூலகம் பெருமளவில் உசாத்துணையாகப் பயன்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல இலங்கை, இந்தியப் பயன்பாடு மிக அதிகரித்துள்ளது. எண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பில் தமிழ்ச்சூழலில் முன்மாதிரிச் செயற்திட்டமாக உள்ளோம் என்பதைக் குறிப்பிடலாம். இதற்கு நல்ல உதாரணங்கள் பொள்ளாச்சி நசனின் நாள் ஒரு நூல் திட்டம், தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் ஆகியவை. பொள்ளாச்சி நசன் எண்பதுகளிலிருந்தே சிற்றிதழ்ச் சேகரிப்பாளராக, ஆவணக் காப்பாளராகச் செயற்படுபவர். அவர் நூலகத்தை முன்மாதிரியாகக் கொண்டு தொடங்கிய நாள் ஒரு நூல் எனும் செயற்திட்டம் இப்போது 2000 ஆவணங்களைக் கொண்டிருப்பதோடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுபோல தமிழரங்கத்தினர் நூலகத்துக்கு நிதியுதவி செய்பவர்கள். இப்பொழுது தாமும் ஆவணப்படுத்தலில் செயற்படுகின்றனர். அவ்வகையில் நல்லதொரு முன்மாதிரியாக, ஊக்குவிப்பாக இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. இன்னும் நிறைய, இன்னும் வேகமாக இத்தகைய செயற்பாடுகள் நடைபெற வேண்டும்.
நிறுவனமாக நாம் சாதிக்க வேண்டியவை பல. வெறும் ஆவணப்படுத்தல் நிகழ்வுகளைத் தாண்டி அவற்றின் தேவை தொடர்பாகத் தொடர்ச்சியாக சமூகத்தின் மத்தியில் இயங்குவதோடு, ஆவணப்படுத்தல் என்னும் புள்ளிகளைத் தாண்டிய செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், கல்வி மேம்பாடு என நாம் இயங்கவேண்டிய தளங்கள் எம் கண்முன்னே எண்ணற்றுப் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவ்விடயங்களை தனிமனித நிகழ்வு என்ற புள்ளியில் இருந்து நிறுவனத்தின் செயற்பாடு என்ற புள்ளியை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இவ்விடைநிலைப்புளியில் இருந்து சமூகப் பேரியக்கமாக மாற்ற வேண்டிய மிகப்பெரும் கடப்பாடு எமக்குள்ளதாகக் கருதுகின்றோம்.
நம்பிக்கையளிக்கும் சூழல் நிலவுகிறது என்றே நினைக்கிறேன்.
வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்
Subscribe to:
Post Comments (Atom)
Category
- அரசியல் (1)
- அவதூறு (2)
- ஆவணக்காப்பகம் (2)
- ஆவணப்படுத்தல் (6)
- இடதுசாரித்துவம் (3)
- உரையாடல் (4)
- உளவியல் (4)
- எதிர்வினை (3)
- கருத்துச் சுதந்திரம் (1)
- கல்வி (1)
- கவிதை (2)
- குருபரன் (2)
- சாதியம் (1)
- சிறுபான்மை அரசியல் (5)
- சூழலியல் (1)
- செயற்பாட்டியக்கம் (1)
- சோபாசக்தி (2)
- தகவல் அறிதிறன் (1)
- தமிழ்த்தேசியவாதம் (3)
- தலித்தியம் (1)
- திரைப்படம் (3)
- தேசவழமை (1)
- நூலகத்திட்டம் (7)
- நூலகம் (4)
- நூல் விமர்சனம் (1)
- நேர்காணல் (4)
- பதிவுகளின் தொகுப்பு (1)
- பிறரது படைப்புக்கள் (8)
- பின்காலனித்துவம் (1)
- பின்மார்க்சியம் (3)
- போர் (4)
- மரபறிவுப் பாதுகாப்பு (1)
- மார்க்சியம் (2)
- முதல் இடுகை (2)
- மொழிபெயர்ப்பு (1)
- வர்க்கம் (1)
- விமர்சனம் (4)
- வெளிப்படைத்தன்மை (1)
No comments:
Post a Comment