வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

November 29, 2011

சோபாசக்தி : மாற்றுக்கருத்து மாணிக்கம்



1989 இல் இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய இராணுவ சிப்பாய் ஒருவர் தாகத்திற்கு ஒரு வீட்டுக்குச் சென்று தாகத்திற்கு நீர் கேட்கின்றார். அந்த வீட்டிலுள்ளவர்கள் அச்சிப்பாய்க்கு நீர் கொடுக்கின்றனர். நீரை அருந்தியவர்கள் சென்றுவிட்டனர். இதுவும் ஒரு கதையென்று யாரோ இயக்கத்திற்குப் போய்ச் சொல்லிவிட்டார்கள். அந்த ஊருக்குப் பொறுப்பாக இருந்தவனுக்கு ஏற்கனவே அந்த வீட்டாருடன் சிறு சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று துவக்குடன் அந்த வீட்டிற்குச் செல்கின்றான். இங்கே இந்தியன் ஆமிக்கு 'அடைக்கலம்' கொடுத்தது யாரென்று கேட்கின்றான். (வார்த்தையைக் கவனியுங்கள். அடைக்கலம் என்ற வார்த்தைதான் அவன் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைக்கான ஆதாரமாக அமையும் சொல்.) அந்த வீட்டில் யாருமே பதில் பேசவில்லை. எந்த இந்தியன் ஆமிக்கு யார் அடைக்கலம் கொடுத்தது என்று அவர்களுக்கே ஒரே சந்தேகம். நாங்கள் யாருக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று அந்த வீட்டுக்காரர்கள் ஒருமித்த குரலில் பதில் சொல்கின்றனர். இவனும் விடாமல் திரும்பத் திரும்ப யார் அடைக்கலம் கொடுத்தது என்று கேட்கின்றான். அவர்கள் விக்கித்து நிற்கின்றனர். பொறுப்பாளரின் உதவியாளருக்கு உண்மை தெரிந்தபடியால் 'இங்கே யார் தண்ணி கொடுத்தது' என்று கேட்கின்றார். அந்த வீட்டுக்காரர்கள் 'அவன் தண்ணி கேட்டவன். நாங்கள் கொடுத்தனாங்கள்' என்று சொல்கின்றனர். அதுவரை அமைதியாக இருந்தவன் 'அப்ப அடைக்கலம் கொடுத்தனீங்கள் எண்டு ஒப்புக் கொள்ளுறீங்கள் தானே' என்று கூறுகின்றான். 'நாங்கள் தண்ணி தான் கொடுத்தனாங்கள்' என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். இவனோ மீண்டும் 'இந்தியன் ஆமி எங்கள் மண்ணை ஆக்கிரமித்துள்ளான். அந்நிய இராணுவத்துக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று தெரியாதோ? என்று மீண்டும் தனது பாணியில் கேட்கின்றான். தண்ணி என்ற சொல்லை அவன் மறந்தும் உச்சரிக்கவில்லை பாருங்கள். முன்பொருமுறை அந்த வீட்டிற்கு இரவு களவுக்கு வரும்போது தன்னை உதைத்த இரண்டாவது மகன் சாரத்துடன் அவன் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றான். அவனைப் போய்த் தர தவென்று இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து விட்டு, கூடி நின்ற சனத்தை நோக்கி 'அந்நிய இராணுவத்துக்கு அடைக்கலம் கொடுத்தால். இதுதான் நிலமை என்று கூறிவிட்டு மண்டையில் சுடுகின்றான். கபாலம் பிளந்து இரத்தம் தெறிக்கின்றது. துவக்கை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு உதவியாளர் மோட்டார் சைக்கிள் ஓட பின்னால் இருந்து செல்கின்றான். சேட்டில் இருந்த இரத்தத்தைத் துடைக்கும் போது நல்லவேளை அடைக்கலம் என்ற வார்த்தைக்குப் பதிலாக தண்ணி என்ற வார்த்தையை ஒருக்காலும் உச்சரிக்கவில்லை என்ற மனதிற்குள் நினைத்துக் கொள்கின்றான்.

ஏற்கனவே கேட்ட கதை போன்று உள்ளதே என்று மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள் தோழர்களே. சோபாசக்தி இரவும் பகலும் யாரும் பார்க்காத நேரத்தில் கசங்கிய கடதாசித் துண்டொன்றை எடுத்து மனப்பாடம் செய்து கொள்வதைப் பலர் கண்டிருக்கின்றார்கள். பின்னர் அதை அறுணாக்கொடியில் ஒளித்து வைப்பதைக்கூட கண்டிருக்கின்றார்கள். சோபாசக்தி மிகப்பெரிய எழுத்தாளனாக உலாவருவதற்கான மந்திரமே இந்தக்கதைத்தான் என்ற விடயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இப்போது நேரம் போதாது. அதுமட்டுமல்லாது இப்போது அது பிரச்சனையுமல்ல.

உண்மையில் நடந்தது என்ன?

கடந்த நவம்பர் 17 ஆம் திகதியன்று இரவு 9 மணியளவில் ஃபேஸ்புக்கில் இருந்தேன். அந்நேரத்தில் ஷோபாசக்தி ப்ரகீத் எக்னொலிகொட தொடர்பாக இட்டிருந்த நிலைத்தகவலுக்கு நாடோடிப் பாடகன் ஒரு மிக முக்கியமான கருத்தொன்றை இட்டிருந்தார். அந்தக் கருத்தை நான் 'லைக்' செய்திருந்தேன். அதன் பின்னர் என்.எல்.எஃப்.ரி யுடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதன் பிற்பாடு மீண்டும் ஃபேஸ்புக் கை நோட்டமிட்ட போது இவ்வளவு சம்பவங்களும் நடைபெற்றிருந்ததைக் கண்டு திணுக்குற்றேன். உரையாடலில் சோபாசக்தி நான்தான் நாடோடிப் பாடகன் என்ற கருத்துப்பட உரையாடியிருந்ததை உணர்ந்து கொண்டேன். உடனடியாகக் சோபாசக்தியின் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி அழைப்பெடுத்தேன். எடுத்து உண்மையைக் கூறினேன். குறித்த என்.எல்.எஃப்.ரி உடன் தொடர்புள்ள நபர் எனக்கு கடந்த 6 மாதகாலமாகவே அறிமுகம். ஆனால், சோபாசக்தியின் நண்பருக்கோ கடந்த 20 வருட காலமாக அறிமுகம். நீங்கள் உண்மையை அறிந்து கொள்வதற்கு உங்களுக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம். உடனடியாகக் குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து சசீவன் இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதெல்லாம் பெரிய விடயமல்ல. ஃபேஸ்புக் சண்டையால் ஒன்றும் நடைபெற்றுவிடப் போவதில்லை என்ற சாரப்பட்ட சோபாசக்தியின் நண்பர் கூறினார். அதன்பின்பு, எனது நிலைப்பாடுகளைக் கருத்தாக இட்டுவிட்டு இவ்விடயத்தை முடித்துக் கொண்டேன். அடுத்தநாள், சோபாசக்தியின் நண்பர் அதே இழையில் கருத்தொன்றை இட்டிருந்தார். தொலைபேசியில் பேசும் போது தான் பகிடியாக ஒரு கருத்தை இட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், அதே கருத்தை ஆதாரமாக முன்வைத்து சோபாசக்தி தனது ஃபேஸ்புக்கில் இருந்து என்னைத் தடைசெய்ததோடு நான்தான் நாடோடிப் பாடகன் என்ற தனது கருத்தை எதுவிதமான ஆதாரமுமற்றுப் பதிவு செய்திருந்தார்.

சோபாசக்திக்கும் மேலுள்ள கதைக்கும் என்ன சம்பந்தம்?

இந்தக் கதையைத்தான் சோபாசக்தி கடந்த 20 வருடங்களாகப் பாத்திரங்களையும் இடத்தையும் மாத்தி மாத்தி எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று யாராவது நினைக்கக்கூடும். அதைவிட வேறு என்ன சம்பந்தம் இருக்கின்றது? கதையில் உள்ள பாத்திரங்களையும் சம்பவங்களையும் உடைத்துப் பார்ப்போம் தோழர்களே...!

இந்தியன் ஆமி, இயக்கப் பொறுப்பாளர், தண்ணி கொடுத்த சம்பவம், 'அடைக்கலம்' கொடுத்ததாகக் கேட்ட தோரணை, போட்டுத் தள்ளப்பட்டவன், களவெடுக்கும் போது பிடிபட்ட சம்பவம் போன்றவற்றை பின்னர் ஃபேஸ்புக்கில் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பொறுப்பாளர் - சோபாசக்தி
போட்டுத்தள்ளப்பட்டவன் - சசீவன்
இந்திய இராணுவச் சிப்பாய் - நாடோடிப் பாடகன்
தண்ணி கொடுத்த சம்பவம் - சசீவன் நாடோடிப் பாடகனின் கருத்துக்கு 'லைக்' செய்தது
அடைக்கலம் கொடுத்ததாகக் கேட்கப்பட்ட தோரணை - 'லைக்' செய்ததற்காக நீதான் நாடோடிப் பாடகன் என்று கூறியமை.
களவெடுக்கும் போது பிடிபட்ட சம்பவம் - புலிகளின் பாசிச நடவடிக்கையால் வெளியேறினேன் என்று இவ்வளவு காலமும் கூறிக் கொண்டிருந்த சோபாசக்தி 1993 ஆம் ஆண்டுவரை புலிகளுக்கு எதிராகப் பேசவில்லை என்று கூறியதும், அதற்கு நான் கேட்ட கேள்விக்குக் கொடுத்த சளாப்பல் பதில்களும்.

இப்போது மேலுள்ள கதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள் தோழர்களே..! சோபாசக்தியின் மனக்கட்டமைப்பு எவ்விதத்தால் அமைந்தது என்பதைப் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரம் கிடைக்காத - அதிகார வேட்கை கொண்ட மனமே அன்றி வேறெதுவும் அல்ல.

அடுத்த பதிவு - சோபாசக்தி : குற்றச்சாட்டா? அவதூறா?

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment

Statcounter