வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 09, 2011

வெள்ளாளமயமாதல்

கடந்த ஜனவரியில் ஒரு இணையச் சஞ்சிகைக்காகக் கொடுத்த மிக விரிவான நேர்காணலின் ஒரு கேள்வியையும் பதிலையும் இப்பதிவில் கொடுக்கின்றேன். நேர்காணல் முழுமையாகச் செப்பனிடப்படாத காரணத்தினால் இன்னமும் வெளியாகவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

கேள்வி : ஈழத்தில் சாதியம் என்பது புலிகளுக்கு முன்பு எப்படி இருந்தது? புலிகள் காலத்தில் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? சாதிய அரசியலின் எதிர்காலம் என்ன?

பதில் : ஒட்டுமொத்த சமூக அசைவியக்கத்தின் போக்கை முன்வைத்து அதை, புலிகளுக்கு முன் - புலிகள் காலத்தில் - புலிகளுக்குப் பின் என மூன்று கூறுகளாக்கி ஆய்வுக்கு உட்படுத்துவதனூடாக இவ்விடயத்தை அணுகமுடியும் என நினைக்கின்றேன். இந்த மூன்று கூறுகளையும் பல்வேறுபட்ட நோக்கு நிலைகளில் இருந்து பார்க்க வேண்டியுள்ளது.

புலிகளுக்கு முற்பட்ட சமூகக் கட்டமைப்பும் அதில் சாதியநிலை பற்றியுமான ஆய்வுகள் பலரால் செய்யப்பட்டுள்ளது. மைக்கேல் பாங்க்ஸ், ஹோம்ஸ், பஃபன்பேர்கர் ஆகிய வெளிநாட்டவர்களில் இருந்து சிவத்தம்பி வரை மிக விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார்கள். அதேநேரம், அவ்வாய்வுகளை இந்திய சமூகக் கட்டமைப்புடன் பொருத்திப் பார்த்து அதன் வித்தியாசங்கள் - ஒற்றுமைகள் பற்றியும் விரிவாகவே பேசியுள்ளார்கள். ஆயினும் புலிகள் காலத்திலும் சரி அதற்குப் பின்னரும் சமூகக் கட்டமைப்பு எவ்வாறான மாற்றத்தைக் கண்டுள்ளது என்ற ஆய்வுகள் முறையாகச் செய்யப்படவில்லை. இதேநேரம், 'அக்கடமிக்' நோக்கிலான ஆய்வுகளுக்கு அப்பால் டானியல், டொமினிக் ஜீவா தொடங்கி இன்றுவரைக்கும் சாதியத்திற்கு எதிரான ஏராளமான அரசியல் பிரதிகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏராளமான வித்தியாசமான பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதியக் கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், சாதியம் எதிர் தேசியம் என்ற கருத்தியலை முதன்மைப்படுத்தும் பிரதிகள், வர்க்க அடையாள முதன்மைப்படுத்தல்களுடன் கூடிய சாதியக்கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், தேசிய அடையாள முதன்மைப்படுத்தல்களுடன் கூடிய சாதியக்கட்டமைப்பிற்கு எதிரான பிரதிகள், பௌத்த பேரினவாத சார்பு நிலையுடைய சாதியக்கட்டமைப்பு எதிரான பிரதிகள், அடையாளம் சார்ந்து ஒடுக்கப்படும் சமூகங்களுக்கெதிரான பிரதிகளில் காணப்படும் சாதியப்பாகுபாட்டுக்கெதிரான குரல் என பல்வேறுவகையான வித்தியாசமான பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஒருவரது வாழ்நிலை, அனுபவங்கள் சார்ந்து பல்வேறு சார்பு நிலைகளில் வெளிப்பட்டுள்ளன.

இவ்விடத்தில், சாதியம் தொடர்பாகச் சில விடயங்களைத் தொட்டதாக "சாதியின்மையா? சாதிமறைப்பா?" என்ற நூலில் இடம்பெற்ற 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதிப் பாகுபாடு' என்ற கட்டுரையை மையமாகக் கொண்டு சிலவிடயங்களைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். புலிகளுக்கு முன்னர் அந்தஸ்து மற்றும் அதிகாரப் படிநிலைகளுடன் கூடிய சாதியக்கட்டமைப்பாகவே யாழ்ப்பாணச் சமூகம் இருந்தது. சமூகக் கட்டமைப்பிற்குள் நிகழ்ந்த அசைவியக்கம் பற்றிய விடயங்களை வேறாக அணுகுவது உகந்தது. மேற்கூறிய கட்டுரையாளர் கூறுவது போன்று புலிகள் காலப்பகுதி, சமூகத்தில் சாதிப்படிநிலை ஒரு வலிமைமிக்க சக்தியாக இருப்பதனை இல்லாதுசெய்தது. அதற்காகப் பல காரணங்களை அவர் பட்டியலிடுகின்றார். யுத்தகாலப்பகுதி, விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர்கள் பலர் வெள்ளாள சாதிக்கு மாறாக பிற சாதிகளில் இருந்து வந்திருந்தமை, தமிழ்த்தேசிய இராணுவம் என்ற புலிகளது நகர்வில் சாதியப்பாகுபாடுகளும் கதையாடல்களும் ஏற்படுத்தக்கூடிய உடைவு, சாதியப்பாகுபாட்டிற்கு எதிரான கதையாடல், தமது இலக்கில் முற்றுமுழுதாகக் கவனம் குவிப்பதை குழப்பும் என்ற கருத்துநிலை போன்றவற்றால் அது தொடர்பான கதையாடல்களை முற்றுமுழுதாகத் தடை செய்திருந்தனர்.

புலிகள் செய்தது சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் மூழ்கிவிடுவோமேயானால், நமது நிலைப்பாடுகளுக்கான காரணங்களைப் பட்டியலிடுவதோடு அதன் நீட்சியில் சம்பவங்களைப் பட்டியலிடத் தொடங்குவோம். கட்டுரையாளர் பரம்சோதி தங்கவேல் அவர்கள் புலிகள் செய்த விடயங்களைக் கோட்பாட்டுருவாக்கம் செய்ய முற்பட்டிருந்தால், ஆய்வின் பிற திசைகளுக்குப் போயிருக்க வேண்டியிருக்கும். சாதியை ஓரளவு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் என்று புலிகளுக்குக் கொடுக்கும் வெகுமதியைக் கொடுக்க முடியாதிருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். கட்டுரையாளர் கூறும் விடயங்களுடன் என்னால் முற்றுமுழுதாகச் சில காலங்களுக்கு முன்புவரைக்கும் ஒத்துப் போக முடிந்திருக்கின்றது. புலிகள், சாதியின் அதிகாரப் படிக்கட்டுக்களை நீர்த்துப் போகச் செய்துள்ளார்கள் - அவற்றை முற்றாக உடைக்க முடியவில்லையே தவிர அவற்றின் கொடுமையை இல்லாமல் ஆக்குவதற்கு பெரும்பங்களிப்பைச் செய்திருக்கினார்கள் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. இதேநேரம், ஒரு ஆய்வுநிறுவனத்திற்கூடாக இவ்வாய்வை மையப்படுத்தி அதனை விரிவாக்கி, தொடாத புள்ளிகளையும் இணைத்து விரிவான ஆய்வொன்றைச் செய்வதற்கான செய்யும் நோக்கில் - முன்வடிவ மாதிரியொன்றை உருவாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் போக முடியவில்லை. மாறாக பிறிதொரு திசைவழி பயணிப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றியது.

இவ்விடயத்தை மேற்கொண்டு பார்த்தால், மீண்டும் புலிகளது வளர்ச்சிப் போக்குத் தொடர்பான எனது ஏற்கனவேயான சட்டகத்திற்கே வர வேண்டியுள்ளது. பல்வேறுபட்ட இயக்கங்களும் இருந்த காலப்பகுதியில் சாதிய விடுதலை தொடர்பாக அதிகம் ஆர்வம் கொண்டிருந்த இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகும். ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏராளமான தலித் இளைஞர்களைக் கொண்டிருந்த காரணம் அதில் ஒன்றாக இருந்திருந்ததாகக் கூறுகின்றார்கள். அதேநேரம் 1920 இல் இருந்து 60 கள் வரை நிகழ்ந்த கோவில் உள்நுழைவுப் போராட்டங்கள் காரணமாக, தலித் விடுதலை தொடர்பான பிரக்ஞை சமூக மட்டத்தில் ஓங்கியிருந்திருக்கின்றது. தேசிய விடுதலை என்ற நோக்கம் பிற இயக்கங்கள் சாதிய விடுதலை தொடர்பாக அக்கறைப்படாமல் இருப்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது ஆதிக்கசாதியைச் சேர்ந்த இளைஞர்களால் நிரம்பியிருந்த முற்போக்கான இளைஞர்கள் கூட சாதிய விடுதலை தொடர்பில் அக்கறையற்று இருந்திருக்கலாம். பல்வேறு இயக்கங்களும் காணப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் அவர்களது பின்னணி சார்ந்து வர்க்கம், சாதி, பால் விடுதலைகள் தொடர்பாக, வெவ்வேறு சதவிகிதங்களில் ஆர்வம் இருந்திருப்பத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும், நான் ஏற்கனவே கூறியபடிக்கு 90 ஆண் ஆண்டிற்குப் பின்பான விடுதலைப்புலிகளின் இரண்டாவது வளர்ச்சிக் காலப்பகுதியை நோக்கினால், அது அவர்கள் குறைநிலை அரசாக தங்களை வடிவமைத்துக் கொண்ட காலப்பகுதி. இக்காலப்பகுதியில் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதே நான் கவனப்படுத்தவிரும்பும் பகுதி.

தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பாத்திரத்தைத் தொடர்ந்து தமிழர்களுக்கான அரசு என்ற பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார்கள். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ சட்டக் கோவையைத் தயாரித்தார்கள். காவல்துறையை உருவாக்கினார்கள். நீதிமன்றத்தையும் உருவாக்கினார்கள். தமிழீழ சட்டக் கோவையில் சில முக்கியமான விடயங்களை உள்ளடக்கினார்கள். யாழ்ப்பாண படிநிலைச் சமூகக்கட்டமைப்பிற்கு ஆதாரமாக இருக்கின்ற தேசவழமைச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தியதோடு, சீதனத் தடைச் சரத்துக்கள், குடிமைத்தொழிலை ஒழிப்பதற்கான சரத்துக்கள், சாதிப்பாகுபாட்டிற்கு எதிரான சரத்துக்கள் போன்றவற்றை இயற்றினார்கள். தமிழீழ அரசு என்ற தமது பாத்திரத்தில், அசமத்துவங்களுக்கு எதிரான விடயங்களை சட்டம், காவல்துறை, நீதிமன்றம் என்ற போக்கில் அணுக முற்பட்டார்கள். அதாவது, சட்ட அமுலாக்கத்தின் மூலம் சாதியப்பாகுபாட்டை எதிர்கொள்ள முற்பட்டனர். குறைநிலை அரசு தனது சகல பலவீனங்களுடனும் தொடர்ச்சியாக இயங்கியது என்றுதான் கூற வேண்டும். கட்டுரையாளர் விடுதலைப்புலிகளை விடுதலை இயக்கம் என்ற கருத்துநிலையில் இருந்தே இறுதிவரைக்கும் அணுகியிருக்கின்றார். தனது அணுகுமுறையில் குறைநிலை அரசு என்ற என்ற விடயத்தைச் சேர்த்திருந்தால் தனது ஆய்வில் மேலும் சில சாதகமான கருத்துநிலைகள் நோக்கி நகர்ந்திருக்கலாம் என்பதே எனது கருத்து.

ஆனால், எனது கருத்தியல் மேற்கூறிய ஆய்வாளரது பாதையில் வழி பயணிப்பதல்ல. 90 இற்குப் பின்னரான குறைநிலை அரசுருவாக்கக் காலப்பகுதியில் புலிகள் சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை வேறுவிதமாக அணுகமுற்படுகின்றேன். மேற்கொண்ட நடவடிக்கைகளது விளைவுகளைக் கொண்டு, அதன் சாதக நோக்கிற்கு மாற்றான வேறொரு புள்ளியை வந்தடையலாம். ஒரு அரசு என்ற பாத்திரத்திலான புலிகளது அணுகுமுறை சாதிய ரீதியான பாகுபாடுகளைச் சட்ட விரோதமாக்கிய அதேநேரம், அவர்களது 'ஆட்சியில்', பன்மைத்துவக் கதையாடல்களோ சுதந்திரமான சிவில் சமூக இயக்கங்களோ தொழிற்பட வாய்ப்பிருக்கவில்லை. இவ்விடத்தில், சாதிய நோக்கில் விடுதலைக்கான கதையாடல்களும் தடுக்கப்பட்டன. சாதிய இயக்கங்களது செயற்பாடுகளும் இல்லாமலாக்கப்பட்டன. இருந்து கொண்டிருந்த அசமத்துவ சமூக அமைப்பு அந்தரத்தில் விடப்பட்டது.

இதன் அடுத்த கட்டத்தில் நிகழ்ந்ததை நான் "வெள்ளாளமயமாதல்" என்ற வார்த்தையால் குறிப்பிட விரும்புகின்றேன். இக்காலப்பகுதியை நான் சிறீனிவாசனின் "சமஸ்கிருதமயமாக்கல்" என்ற கோட்பாட்டை பயன்படுத்திப் பொருத்திப் பார்க்க முற்படுகின்றேன். ஏற்கனவே வழிபாட்டு முறைகளின் மாற்றங்களூடாக 'மேல்நிலையாக்கல்' எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனநாயகச் சமூகச் சூழலில் நிகழ்ந்த அவ்வகையான சமூக அசைவியக்கங்களுடன் ஒப்பிடும் போது, 90 களின் பிற்பட்ட காலப்பகுதி என்பது விசேட நிபந்தனைகள் நிரம்பியதாகும். நிபந்தனைகளின் விளைவுகள் தொடர்பாகவே நாம் அதிகமாகப் பேச வேண்டியிருக்கின்றது. அண்மையில், நண்பரொருவர் தெரிவித்த கருத்தை முக்கியமானதாகக் கருதுகின்றேன். அதாவது "சகல ஆலயங்களும் தமது முகப்பையும் அலங்காரத்தையும் நல்லூர் கோயிலை முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றத்திற்கு உட்படுத்தி வருகின்றமை". ஏற்கனவே வல்லியக்கன், வல்லிபுரநாதராக மாறியதைப் பற்றி ரகுபதி எழுதியிருக்கின்றார். சிறுதெய்வ வழிபாடுகள் பெருங்கடவுளரை நோக்கி நகர்ந்தமையை சமஸ்கிருதமயமாகல் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக்கூடியதாக இருந்தாலும், சாதியக் கதையாடல்களை முற்றாகத் தவிர்த்தன் பின்னர் வழிபாட்டு முறைகள் முற்றாக வெள்ளாயமயமாகின என்ற புள்ளிக்கே வந்தடைய முடியும். அதாவது, தலித் சமூகங்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கேயான தனித்துவமான வழிபாட்டு முறைகளையும், வாழ்வுமுறைகளையும், தனித்துவமான கலை வெளிப்பாடுகளையும் கரைத்து வெளியேறி வெள்ளாளமயமாகினர் என்று தான் கூற வேண்டியுள்ளது. ஒருவகையில் தலித் சமூகங்கள் நிலம் சார்ந்தல்லாமல், தமது பண்பாடு சார்ந்து புலப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவே கருதவேண்டும். உள்ளூர் அறிவுப் பாதுகாப்பு என்ற தளத்தில் இயங்கிவரும் ஜெயசங்கர் போன்றவர்கள் சமூக அசைவியக்கத்தின் போது இழக்கப்படும் சமூகப்பெறுமானங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலித் சமூகங்கள் 'அடையாளத்துறப்பை' மேற்கொண்டமையை வெவ்வேறு புள்ளிகளில் வைத்து பரவலாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான சமூக இயக்கம் ஒருவகையில் அவரவர் தெரிவு என்ற போதிலும் அவற்றின் சாதக பாதங்களைப் பேசுவதும் பாதகங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயற்படுவதும் மிக முக்கியமானது.

தலித் விடுதலை என்பது தலித் அடையாளத் துறப்பை மேற்கொள்வதல்ல. தலித் அடையாளப் பேணுகையுடன் தலித் பண்பாடு, தலித் வரலாறு, தலித்திய வாழ்வுமுறைகளுக்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதனூடான சமத்துவமே. தலித் மக்களைத் பண்பாடற்றவர்களாகவும், தனித்துவமான வாழ்வுமுறையற்றவர்களாகவும் நினைக்கும் போக்கே 'வெள்ளாளமயமாதல்' மனநிலையின் அடியில் இருப்பது. ஆதிக்க சாதிகள் மத்தியில் வேலை செய்பவர்கள் கரிசனை கொள்ள வேண்டிய பகுதி 'மற்றமையை ஏற்றுக்கொள்ளுதல்' தொடர்பானது. மாறாக 'மற்றமையைத்' தனக்குள் கரைத்துக்கொள்ளுதல் ஒரு வித 'காலனித்துவமாகவே' கருத வேண்டும். கடந்த தேர்தலில் 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' போட்டியிட்ட போதிலும், வாக்குகளை பெறமுடியாமைக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று என்பது எனது நிலைப்பாடு. தலித் அடையாளங்கள் கரைக்கப்பட்ட சமூகமாகவே தற்போதைய தலித் சமூகம் காணப்படுகின்றது. ஆக, இனிமேல் தலித் விடுதலை தொடர்பான செயற்பாடுகளின் போது வேலை இரட்டிப்பாகின்றது. 'வெள்ளாள நீக்கம்' செய்வதனூடாக - அதாவது தலித் சமூகங்களது தனித்துவத்தை மீட்டெடுப்பதுன் ஊடாகவே தலித் அரசியலைச் செய்ய முடியும். பின் காலனித்துவம் மற்றும் பெண்ணியப் பிரதிகள் தத்தமது அரசியலில் மேற்கண்ட விதத்தில் இயங்கியிருப்பதைக் காணலாம். 'எட்வேர்ட் சைட்' இன் ஓரியன்டலிசம் கருத்தியலில் இருந்து 'சபல்ரன் குழுவின்' பிரதிகள் வரை 'காலனிய நீக்கம்' தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது. மூன்றாமுலக நாடுகள் தம்மை 'காலனிய நீக்கம்' செய்து கொள்வது தொடர்பான ஏராளமான பிரதிகளை உற்பத்தி செய்துள்ளதை நாம் அறிவோம். இதற்குச் சமாந்தரமாகவே ஈழத்து தலித் சமூகங்கள் தொடர்பான விடயங்களைப் பார்க்க முற்படுகின்றேன்.

மேற்படி இருவித பார்வைகளிலுமுள்ள சாதகங்களும் பாதகங்களும் மிக விரிவாக உரையாடப்பட வேண்டியுள்ளது. முதலாவது, தீண்டாமையின் வீரியத்தைக் குறைக்கும் நோக்கோடு செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பானது. அதன் காரணமான சாதகமான விளைவுகள் எவை? பாதகமான விளளவுகள் எவை? என்பது தொடர்பான உரையாடல்கள் மேலும் மேலும் நிகழ்த்தப்பட வேண்டியுள்ளது. அதே நேரம், இரண்டாவது பார்வையில் இருந்தான உரையாடல்கள் கருத்தியல் தளத்தில் தலித் அரசியலை மேலும் பலப்படுத்தும் என்றே நினைக்கின்றேன். இழக்கபட்ட தலித் வாழ்வு தொடர்பான - தலித் ஆவணகம் என்ற ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் ஒன்றை நூலகத்தூடாக முன்னெடுக்க உள்ள அதே வேளை, இவை தொடர்பான - தற்போதைய சமூகக் கட்டமைப்புத் தொடர்பான விரிவான ஆய்வொன்றையும் செய்வதற்கான வகையில் நகர்ந்து கொண்டிருக்கின்றேன். இச்செயற்பாடுகள் தலித் அரசியல் தொடர்பாக மேலும் பல புதிய வெளிகளைத் திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.

கேள்விக்கான பதில் மிகவும் நீண்டுவிட்ட போதிலும், இயன்றவரை சுருக்கமாக அளிக்கப்பட்டுள்ளதாகவே கருதுகின்றேன். புலிகள் காலத்தைய நடவடிக்கைகளில், சமூகத்தில் சாதியத்தின் விளைவுகள் தொடர்பாக இன்னமும் விரிவான பார்வையில் உரையாடப்பட வேண்டியுள்ளது. சம்பவங்களை மட்டும் மையமாக வைத்து, இடம்பெறும் உரையாடல்கள் தலித் அரசியலுக்கு வலுச்சேர்க்கும் என்று நினைக்கவில்லை. 'எதிரியை வரையறை செய்து கொண்டு' தலித் கருத்தியலை வளர்த்தெடுக்கப்படுவதை விட, சகல ஒடுக்குமுறைப் புள்ளிகளில் இருந்தும் கட்டமைக்கப்படும் நிலை சாத்தியப்படும் போது ஈழத்து மைய அரசியலாக தலித்திய அரசியல் மாற்றம் பெறும் என்று கூற முடியும். தலித்திய அரசியலின் அத்திவாரத்திலேயே இனத்துவ அரசியல் கட்டமைக்கப்பட வேண்டும். இனத்துவ அரசியலின் நிழலில் தலித்திய அரசியல் சாத்தியப்படாது. இவ்விரு அரசியல் போக்குகளுக்குமிடையிலும் நேச முரண்களை உருவாக்கி, முரணியத்தைச் சாத்தியப்படுத்த வேண்டியது தலித்திய விடுதலை விரும்பிகளது முக்கிய கடமையாகும்.

No comments:

Post a Comment

Statcounter