சோபாசக்தி, நான்தான் நாடோடிப் பாடகன் என்ற அடிப்படையில் என்மீதுவைத்த குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது ஒன்றுக்கு மேற்பட்ட பெயரில் கருத்திடுகின்றேன் என்பது. சோபாசக்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கான எந்தவிதமான ஆதாரங்களுமற்று அக்குற்றச்சாட்டை முன்வைத்தது சோபாசக்தி நீண்டகாலமாக போராடிவரும் எந்த அறத்திற்குள் வருமென்று உண்மையிலேயே புரியவில்லை. ஆக, சோபாசக்தியின் இவ்வறிவிப்பு திட்டமிட்ட அவதூறு என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
2009 நடுப்பகுதியின் பின்னர் நான் எந்தவிதமான புனைபெயர்களிலும் எழுதுவதில்லை என்பதைப் பல நண்பர்கள் அறிவார்கள். அதுமட்டுமல்லாது நான் ஏற்கனவே புனைபெயரில் எழுதியவற்றை வலைப்பூவில் சேகரித்தும் வைத்துள்ளேன். அதை யாரும் பார்த்து எனது அரசியல் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். 2009 வரையான எனது அரசியல் நிலைப்பாடுகளின் பின்னர் சில விடயங்களில் எனது கருத்துக்களைப் புடம்போட்டுக் கொண்டேன். அதேநேரம் முன்னைய சில கருத்துக்கள் மேலும் கூர்மையடைந்திருக்கின்றன என்பதையும் கூறிக்கொள்ள வெட்கப்படவில்லை. ஒளித்து வைக்கவும் விரும்பவில்லை. [ http://unidentifiedspace.blogspot.com/ ]
2009 இன் பின்னர், எனது தனிப்பட்ட செயற்பாடுகள் போக பொதுச்செயற்பாடு என்று வரும்போது முற்றுமுழுதாக நூலக இணைய ஆவணக்காப்பகம் என்ற அரசியல் சார்பற்ற செயற்பாட்டில் ஈடுபடுத்திக் கொண்டேன். குறித்த செயற்பாடு அரசியல் சார்பற்ற தளமாக இருக்க வேண்டும் என்பதற்காக அச்செயற்பாட்டில் ஈடுபடும் நண்பர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் உரையாடல்களும் ஏராளமானவை. ஆவணச்சேகரிப்பு - ஆவணப்படுத்தல் செயற்பாடு மூலம் இலங்கை தமிழ்பேசும் சமூகங்கள் சார்ந்த அனைத்து வகையான ஆவணங்களையுமே எண்ணிமப்படுத்தி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்றோம்.
சோபாசக்தியின் குற்றச்சாட்டுக்களைப் பட்டியல்படுத்துவோம்.
# பொதுக்காரியமும் நிதிச்சேகரிப்பும்
குறிப்பாக என்னை இலக்குவைத்து நாடோடிப் பாடகனிடம் கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தாலும், நானும் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டதனாலும் இதற்கான பதில் சோபாசக்தி போன்று சில விடயங்களை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாதவர்களுக்கும் அவசியமாகின்றது. நூலகம் என்ற இணைய ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்கள் என்றைக்கும் புலி சார்பு - புலி எதிர்ப்பு என்ற வகையில் இணைக்கப்படவில்லை. ஆக, அதில் பங்களீப்பவர்களும் நேர்மையாக புலி சார்பு - புலி எதிர்ப்பு கதையாடல்களது தாக்கத்திற்கு உள்ளாகவுமில்லை. யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சியுடன் தொடர்புடைய சி.வி.கே சிவஞானம் பங்களித்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்ட சிவச்சந்திரன் பங்களித்திருக்கின்றார். புலியெதிர்ப்பாளராக அறியப்பட்ட ரட்ணஜீவன் ஜூல் இனது பங்களிப்பு இதில் இருந்திருக்கின்றது. புலியாதரவாளராக அறியப்பட்ட பத்மநாப ஐயர் முக்கிய பொறுப்பில் உள்ளார். இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் கூடிய அரசியலை முன்வைக்கும் ராசநாயகம், கங்காதரன் போன்றோர் நூலகம் : ஐக்கிய இராச்சிய குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள். முறிந்தபனை ஆசிரியர்களில் ஒருவரான தயா சோமசுந்தரம் ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். சேரனது பங்களிப்பு நூலகத்தில் இருந்திருக்கின்ற்றது. ராகவனது பங்களிப்பு நூலகத்தில் இருந்திருக்கின்றது. இதுதான் நூலகம்.
நூலகம் இணைய ஆவணக்காப்பகம் சசீவனது தனிப்பட்ட செயற்றிட்டம் அல்ல. சசீவன் சில காலங்கள் முக்கிய பொறுப்பில் செயற்பட்டிருக்கின்றார். மாபெரும் ஆவணச்சேகரிப்பு இயக்கத்தின் அங்கமாகப் பலரும் செயற்பட்டுள்ளார்கள். இவ்விடயத்த்தில் செயற்படுபவர்கள் தங்கள் அரசியல் கருத்துக்களைக் களைந்துவிட்டு வந்தே இப்பொதுத்தளத்தில் பங்களித்துள்ளார்கள் என்று நான் நிச்சயமாகவே நம்புகின்றேன். சிலவேளை அவர்களது பங்களிப்புக்களை உறிதிப்படுத்துபவனாக நான் செயற்பட்டிருக்கலாம். மற்றபடிக்குச் சகலருடைய பங்களிப்புக்களும் 'தந்திரமாகப்' பெறப்படவில்லை. நூலகச் செயற்ப்பாட்டின் பன்முகத்தன்மை விளங்கப்படுத்தப்பட்டே அவர்களது பங்களிப்புக்கள் உறுதி செய்யப்பட்டது.
# டபுள் கேம் அல்ல ட்ரிபிள் கேம்
அனைத்து தரப்புக்களுடைய நூலகத்தின் பங்களிப்புக்களை உறுதிப்படுத்துவதை - அதனை அரசியல் சார்புகளற்ற பொதுத்தளமாக வளர்த்துச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கிருந்தது. அதனைச் செவ்வனே செய்துள்ளேன் என்று நிச்சயமாக திருப்திப்படவே முடிகின்றது. இது டபுள் கேம் ஆகவோ அல்லது ட்ரிள் கேம் ஆகவோ அர்த்தப்படுமாக இருந்தால், அது அவரவரது புரிதலுடன் தொடர்புபட்ட விடயமாகவே பார்க்க வேண்டும். சமூகத்தில் வித்தியாசமான புரிதல்களுடைய நபர்கள் இருப்பார்கள் என்ற ரீதியில் அவர்களது கேள்விகளுக்குப் பதில் சொல்வதை நினைத்து சந்தோசப்பட முடியுமே தவிர கவலைப்பட முடியாது. அரசியல் சார்பற்ற தளத்திற்கு வெளியே வெறும் அறிவுத்தளத்தில் செயற்படும் ஒருவரது எல்லைகள் தொடர்பான புரிதலை சோபாசக்தி மேலும் வளர்த்துச் செல்வது அவசியமானது. அல்லது, ராஜன்குறை சொல்வதை புரிந்து கொள்ளக்கூட முடியாமல் மீண்டும் மீண்டும் ஒரே எல்லைக்குள் ராஜனை 'இழுத்து வந்து' பேசுவது போல் பேசிக்கொண்டிருக்க வேண்டும். ராஜன் குறை போன்று அனைவரும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
தட்டையாக வரையறை செய்யப்பட்ட ஒற்றை அறக்கருத்தை வைத்துக் கொண்டு உலகத்தையே அளந்துவிட சோபாசக்தி துடியாய்த் துடிப்பது ஏனென்றுதான் புரியவில்லை. இந்த உலகத்தை அரசியல் என்ற அளவுகோலால் மாத்திரம் அளந்துவிட முடியாது. அதைத்தாண்டி பல்வேறு கோணங்களில் உலகைப் புரிந்து கொள்ளும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக வர்க்கநிலைப்பாடு சார்ந்து மாத்திரம் இவ்வுலகத்தை புரிந்து கொண்டு விடலாம் அல்லது அதன் அசமத்துவத்தைப் போக்கிவிடலாம் என்ற மரபார்ந்த மார்க்சியக் கருத்துக்கள் கேள்விக்கு உட்பட்டதையும் அவ்வுடைப்பாற்றில் பல்வேறுபட்ட கருத்தியல்கள் பல்கிப் பெருகியதும் நம் கண்முன்னால் நிகழ்ந்த சம்பவங்களல்லவா?
ஒரு அறிவுத்தளத்தில் - அரசியல் சார்பற்ற பொதுத்தளத்தில் இயங்கும் ஒருவருடைய தொடர்புகளையும் செயற்பாடுகளையும் அதே தளத்தில் உள்ள அறநிலைப்பாடுகளை முன்வைத்தல்லவா அளவிட முடியும்? ராஜன்குறையின் மொழியில் சொல்வதானால் ஒரே கத்தியை எங்கும் பாவிக்க முடியாது என்று கூற முடியும். எம்மிடம் ஒரேயொரு கத்திதான் உண்டென்பதற்காக அதையே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திவிட முடியுமா என்ன?
சோபாசக்தி போன்று அரசியல் தளத்தில் மிகக்கறாராகத் தொழிற்படுவதாக என்னைச் சமூகத்தில் முன்னிறுத்திக் கொண்டு - புலிகளை 100 வீதம் எதிர்க்கின்றேன். அதேநேரம் இலங்கை அரசை 200 வீதம் எதிர்க்கின்றேன் என்று 'அரசியல் ரீதியாகச் சரியான' வெற்று சவடால்களை கூறிக் கொண்டு - நானாக இருந்தால் நிச்சயமாக வாசுதேவ நாணயக்காரவின் மயிருக்குப் பக்கத்தில் நின்று கூடப் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பதை சோபாசக்தியால் புரிந்து கொள்ள முடியாது.
# அரசியல் தளமும் கருத்துக்களும்
சோபாசக்தியின் தலைமுறையைப் பொறுத்தவரை தியாகி - துரோகி கதையாடல் அவர்கள் கண்முன்னால் பிறந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதும் ஒவ்வொருவர் மீதும் இருவேறு நிழல்கள் படர்ந்தன. ஆனால், எமது தலைமுறைக்கோ நமக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இருந்தது. உலகை அறிந்து கொள்ளச் சென்றபோதே இருந்து கொண்டிருந்த யதார்த்தம். அதனை மீறிச் சிந்திக்க முடியவில்லை என்பதிலும் பார்க்க அதனை மீறிச் சிந்திக்கும் வாய்ப்போ சந்தர்ப்பமோ வாய்க்கவில்லை. அதனை நம்பும்படியாகவே புற யதார்த்தமும் இருந்தது. அதாவது சிறீலங்கா இராணுவம் சார்ந்த அனுபவங்களும் அதையே பலமுறை மெய்ப்பித்தன. ஒருகட்டத்தில் மாற்றுக்கதையாடலில் ஈடுபடும் தோழர்களுடனும் உரையாடிப் பார்த்துவிடுவது என்ற முடிவில் அணுகியபோது, துரதிஸ்டவசமாக எம்மைப் போன்று அவர்களும் பெரும் பட்டியலுடன் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தனது நிலைப்பாடுகள் சார்ந்து கருத்தியல் சட்டகத்திற்கு அப்பால் சம்பவங்களின் பெரும்பட்டியலே முன்னுக்கு நின்றது பெரும் சோர்வைக் கொடுத்தது. ஏனெனில் எல்லாரிடமிருக்கும் பட்டியலும் மிக உண்மையானவை. பொய்க்கலப்பற்றவை. ரத்தத்தாலும் சதையாலும் நிரம்பிய பட்டியல்கள் அவை. அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேச வாருங்கள் என்று யாரையும் கேட்க முடியாது. அதேநேரம், இந்த இரத்தப்பட்டியலை வைத்துக் கொண்டு எம்மால் ஒரு அடிகூட நகர முடியாது. பட்டியல்களையும் வைத்துக் கொண்டு முன்னோக்கியும் நகர வேண்டுமெனில் எமது உரையாடல்களின் ஒவ்வொரு சிறிய இடைவேளைகளின் போதும் புன்னகைப்பதையும் கட்டித் தழுவுவதையும் தவிர வேறு எந்தத் தெரிவும் எமக்கில்லை. அப்போதுதான் பரஸ்பரம் நாம் பட்டியல்களை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வோம் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.
அடுத்த பதிவு - சோபாசக்தி : Intellectual status and Political correctness
(இன்னும் வரும்)
No comments:
Post a Comment