வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

March 15, 2012

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்



நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன்

- மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தெரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். - கார்ல் மார்க்ஸ்


பகுதி 1

ஈழப்போராட்டம் - ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக - மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை முழுமையாக அளவிட்டு விடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்களுடையதும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடையதும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே - அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் - அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை. அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் - அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு - போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கு - பங்கு கொண்டவர்களுக்கு - பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆதாரங்கள்.

ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான இவ்வகைக்குள் வரக்கூடிய பிரதிகளும் உண்டு. இவற்றில் புஸ்பராஜனுடைய பதிவும் கணேசன் ஐயரின் பதிவுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் - ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானது என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது 'உள்வீட்டு விடயங்களை'ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே எஞ்சும்.

இவை தவிர பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் அற்புதன் எழுதிய 'துரையப்பா முதல் காமினி' வரை என்ற தொடரும் மணியம் எழுதிக்கொண்டிருக்கும் 'புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்' என்ற தொடரும் 'வதைமுகாமில் நான்' என்ற ரயாகரன் எழுதிக்கொண்டிருக்கும் தொடரும் கூட முக்கியமான பதிவுகளென்பேன். ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோருடைய 'முறிந்த பனை' என்ற நூலும், அதனைத்தொடர்ந்து அவர்களால் மனித உரிமை நோக்கிலிருந்து பதிவாக்கப்பட்ட அறிக்கைகளும் கூட பிறிதொரு தளத்தில் முக்கியமான பதிவுகளே. இதுதவிர புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவக்குறிப்புக்கள், புனைவுகள் போன்றவை எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. புலிகளால் உட்சுற்றுக்கு விடப்பட்ட ஏராளமான முக்கிய ஆவணங்களும் ஏனைய பிரதிகளும் பல இன்று அழிக்கபப்ட்டுவிட்டன. எஞ்சியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எம் சமூகத்திற்கு உண்டு. ஒரு சமூகம் கடந்து வந்த பாதையையும் அனுபவத்தையும் பின்னொருக்கால் நின்று தேட முடியாது.

செ. யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட 'தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும்' என்ற நூல் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டங்கள் கருக்கொள்வதற்கு முன்னரும் கருக்கொண்டு தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட காலப்பகுதி வரைக்குமான பிறிதொரு மாற்று வரலாற்றை எழுதிச் செல்வதையும் அவதானிக்க வேண்டும். சாதியொழிப்புடன் கூடிய இடதுசாரி அரசியல் செயற்பாடுகளையும் அவற்றை முதன்மைப்படுத்திய போராட்டங்களையும் ஆவணப்படுத்திய மிக முக்கிய நூலாகக் கருத வேண்டும்.

இவை தவிர, நாவல் வடிவில் சில விடயங்கள் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' மற்றும் கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்க முடியாமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியும் சாரக்கட்டுமாக உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதே சோகமான உண்மை.

கணேசன் ஐயரால் எழுதப்பட்ட 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற நூலில் மேற்கூறிய பதிவுகளுக்கு மேலதிகமாகத் தனித்துவமான அம்சங்கள் உண்டு. ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் தோற்றம் தொடர்பான பதிவு என்பதும், அமைப்பை விட்டு வெளியேறி சுய விமர்சனத்துடன் கூடியதாக அமைந்திருக்கின்றது என்பதும் பிரதான அம்சங்கள். இந்நூலைப்பற்றிய பார்வையை ஒரு சில சொற்கள் மூலமோ கட்டுரை மூலமோ தெளிவுபடுத்திவிட முடியாது. இந்நூலில், அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம், அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். அதாவது, அக்காலப்பகுதியில் - அக்காலச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை அதன் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்வது மற்றும் அச்சூழல் தொடர்பான அதன் பின்பான விமர்சனம் என்ற இரு விடயங்களுக்கிடையிலான போராட்டமே இப்பிரதி என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவ்விரண்டு நோக்குநிலைகளுக்கிடையில் அவற்றை உண்மையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலாசிரியர் போராடியுள்ளதை நூலெங்கிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதே நேரம் போராட்டத்தில் அவரது வரலாற்றுப் பாத்திரத்தின் பின்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இவ்விரு எண்ணப் போக்கிற்கிடையிலும் நூலாசிரியர் நூல் முழுவ்வதும் ஊடாடிக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


பகுதி 2

பிரபாகரன் மீது முன்வைக்கப்படும் இரு குற்றச்சாட்டுக்கள் சார்ந்து நாம் சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம். இதை மறுதலிக்கும் விதமான முக்கிய சம்பவமாக உமாமகேஸ்வரனை தலமைப்பொறுப்பில் உட்கார வைத்ததைக் கூறலாம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்குகின்றார் பிரபாகரன். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் - அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள். இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயானால் - தீவிர இராணுவப் பார்வையுடைய போராளி தனது அனுபவம் சார்ந்த முடிவுகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் அதன் தொடர்ச்சியில் காலப்போக்கில் தலைமைப் பொறுப்பை தானே கையெலெடுப்பதும் நிகழ்கின்றதெனவே கருதவேண்டியுள்ளது. மத்தியகுழு - செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட - தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு முதன்மைப்படுத்தப்படுவதாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு - தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர, தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் - தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்.

பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாற்பட்டது என்ற விமர்சனம். கணேச ஐயர் பல இடங்களில் வலியுறுத்திச் செல்லும் விடயமொன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படும் ஆரம்ப காலப்பகுதியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இராணுவ அலகாகவே விடுதலைப்புலிகளைக் கட்டியெழுப்பும் நோக்கம் பிரபாகரனுக்கு இருந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியல் அமைப்பாகவும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பாகவும், விடுதலைப்புலிகள் ராணுவ அணியாகவும் செயற்படும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்திருக்கின்றது. இதனை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்த முற்படுகின்றார். அதுமட்டுமன்றி, தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலை பிரபாகரன் அக்காலத்தில் ஏற்றுக் கொண்டுமிருந்தார். ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் தான் கண்ட போதாமையை நிரவுவதற்கான பணியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற நோக்கம் அவருக்கு இருந்திருக்கின்றது. அதாவது தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான அமைப்பொன்று உள்ளது - ஆனால், அதற்குப் பக்கபலமான இராணுவ அமைப்பே இல்லை என்ற குறையே அவர் மனதில் இருந்திருக்கின்றது. அதுவே தனது முதன்மைப் பணியென நினைத்திருக்கக்கூடும். இக்காரணங்களாலேயே அவரது தூய இராணுவவாதச் சிந்தனை முறை கட்டியமைக்கபபட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 2002 இன் பின்பான ஈழப்போராட்ட வரலாற்றைக் கவனித்தால், விடுதலைப்புலிகள் - தமிழர் விடுதலைக்கூட்டணியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் முன்னணியாக ஆக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது பிரபாகரன், 72 இல் தான் கண்ட கனவை சரியாக 30 வருடங்களின் பின்னர் 2002 இல் நடைமுறைப்படுத்தியதாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் நிச்சயமாக மேலும் மேலும் பேசப்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் அண்மையில் டயான் ஜெயதிலக கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொன்று, பிரபாகரனை ஹிட்லரின் வாரிசாக நிறுவுவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. அதுமட்டுமன்றி, அவர் தனது நிறுவலுக்கு கபீலாவில் பிரசுரமான ராகவனுடைய நேர்காணலொன்றையும் இனியொருவில் வெளியான கணேச ஐயருடைய இத்தொடரையும் ஆதாரமாக முன்வைக்கின்றார். இங்கே, உட்கட்சி ஜனநாயகம் - ஜனநாயகம் - மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடி வரும் ஒருவர் இதே விடயத்தைக் கூறுவதற்கும், இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படூம் ஒரு யுத்தத்தைச் சர்வதேச ரீதியாக அரசின் பிரதிநிதியாக நியாயப்படுத்திய ஒருவர் கூறுவதற்கும் நிச்சயம் வேறுபாடுண்டு.

பிரபாகரனை மையப்படுத்திய தமிழ் மக்கள் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற நிறுவலுக்கு தயான் ஜெயதிலக துணைக்கிழுக்கும் இருவர்கள் கணேச ஐயரும் ராகவனும். இதில் கணேச ஐயர் உடகட்சி ஜனநாயகம் - போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டவர். அவ்வாறே ராகவனும் இயக்கத்திற்குள் மிதவாதியாகக் கருதப்பட்டவர். பிளவுகளின் போது இருதரப்பினர் மீதும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியவர். பிளவுகளைச் சரியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இயக்க காலத்தின் பின்னரும் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இவ்விருவருக்கும் பிரபாகரன் தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் முழு உரிமையும் உண்டு. இவ்விருவரின் கூற்றுக்களையும் - நிலைப்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்திய அரசின் பிரதிநிதி போகின்ற போக்கில் பயன்படுத்திவிட்டுப் போக முடியாது. இவ்விருவரும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களை - தமிழ்மக்களின் எதிர்காலப் போராட்டங்களையும் எழுச்சிகளையும் செழுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மக்களது எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கோடு டயான் ஜெயதிலக போன்றவர்கள் முன்வைக்கும் போது, அதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.


பகுதி 3

ஜனநாயம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் - எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த 'ஜனநாயகம்' என்ற எண்ணக்கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்களில் - அரசு உட்பட - ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இன்று, தமிழ் பேசும் சமூகங்களில் குடும்பம் என்ற நிறுவனம் சார்ந்து ஜனநாயகம் எவ்வகையில் நடைமுறையில் உள்ளது என்பதிலேயே பல்வேறு மக்கள் இணைந்து உருவாக்கும் பொது நிறுவனத்தில் ஜனநாயகம் எந்தளவு தூரம் நடைமுறையில் இருக்கும் என்பது தங்கியுள்ளது. நாம் அன்றாடாம் ஊடாடும் பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதவழிபாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுடைய நிர்வாக சபைகள் போன்றவற்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே - இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு அமைப்பிலும் இயக்கங்கள் - கட்சிகளிலும் ஜனநாயகம் நடைமுறையில் சாத்தியமாகும். தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த எத்தனிக்கின்ற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த ஒவ்வொரு சமூக நிறுவனங்களிலிருந்தும் அதனை அமுல்படுத்தத் தொடங்க வேண்டியுள்ளது.

ஈழப்போராட்டத்தில் அமைப்பாகிய - நிறுவனமாகிய இயக்கங்களது நடவடிக்கைகள் தொடர்பாக அதில் அங்கம் வகித்தவர்களாலும், அதிருப்திகளால் வெளியேறிய மறுத்தோடிகளாலும் ஏராளமான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதியதோர் உலகம் என்ற கோவிந்தனின் நாவல், சமூகத்தின் மீது முகத்திலறைந்து கேட்ட முதல் பிரதியெனலாம். அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் இவ்விவாதங்கள் ஓயாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. மறுத்தோடிகள் என்னும் மரபே தனகான அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டதையும் ஜனநாயகமின்மைகளுடன் இயங்கியதையும் வரலாற்றில் கண்டுள்ளோம். அதிகார அமைப்பாக நிறுவனமயமாகிய அலகுகளுக்கெதிரான மறுத்தோடிகளது பாத்திரத்தை நாம் வரலாற்றில் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற தெளிவிற்கு வர வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. மிதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிகழ்காலத்தில் ஒரேமாதிரியாகவே தோற்றம் காட்டுவார்கள். அவர்களை வரலாற்று ஓட்டத்தில் வைத்து - நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்னணியில் வைத்தே வேறுபடுத்தி அறிய முடியும். ஏராளமான ஜனநாயகப் போராளிகள் நிறுவனமாகிய அதிகாரத்தின் சேவகர்களாகச் செயற்பட்டதைச் சமகாலத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம். இவ்விடத்தில் தான் நூலாசிரியர் வலியுறுத்தும் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பான விடயத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார். அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். இனிமேலும் முடியாது என்ற கட்டம் வரும்போது, இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார். அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியிலுமான அவருடைய செயற்பாடுகள் அமைகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடியாக ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் - அங்கும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது. கணேசன் ஐயர் இறுதிவரை போராட்டத்திற்கான தேவையை மறுதலிக்கவும் இல்லை - அதேநேரம் தொடர்ச்சியாக வெகுஜன மக்கள் இயக்கங்களின் தேவையை வலியுறுத்திக் கொண்டும் செல்கின்றார் என்பதை நாம் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் - ஒரு சமூகத்தின் வகிபாகம் குறித்தும் எமது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. இயக்கங்களைக் குற்றம் சாட்டுவதுடன் எமது பணி முற்றுப்பெறவில்லை என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.


பகுதி 4

இடதுசாரியப் பாரம்பரிய அரசியல் தொடர்பாக இந்நூலாசிரியர் கணேசன் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார். அக்காலப்பகுதியில், இடதுசாரியப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் இயக்கங்களான 'சிறுபான்மை தமிழர் மகாசபை' மற்றும் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' போன்றவை சாதிய ஒழிப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தன. இந்நூலில் இவ்விடயங்கள் சார்ந்து எவ்விடத்திலும் எக்குறிப்புக்களும் இல்லை. அதேநேரம், கணேச ஐயர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போமேயானால் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் முக்கியமானவை. இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன. இன ரீதியான முரண்பாடுகளை முதன்மையான முரண்பாடுகளாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தில் இருந்து மாறி, இன ரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது.

கொலைகளில் நல்ல கொலை / தீய கொலை என்ற பாகுபாடு எவ்வளவு அபத்தமானதோ, அதேபோன்று ஒடுக்குமுறைகளில் நல்ல ஒடுக்குமுறை / தீய ஒடுக்குமுறை என்ற வாதமும் அபத்தமானதே. நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் - ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இன ரீதியான ஒடுக்குமுறையோ / மத ரீதியான ஒடுக்குமுறையோ / சாதிய ரீதியான ஒடுக்குமுறையோ / வர்க்க ரீதியான ஒடுக்குமுறையோ / பால் ரீதியான ஒடுக்குமுறையோ - அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அடையாள அரசியலின் தீமையான பக்கங்கள் குறித்து நாம் கவனப்படுத்தாமல் விட முடியாதபோதிலும், அடையாள அரசியலின் நியாயங்களை தார்மீக ரீதியில் உணர்ந்து கொள்ளும் போதும் செயற்படும் போதும் - அதன் தீமையான பக்கங்களிலிருந்து விலகிச்செல்ல முடியும் என நம்புகின்றேன். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரட்சியை உருவாக்குவதே உண்மையான இடதுசாரிய அரசியலாக இருக்க முடியும். பிரதிநித்துவ அரசியலாகச் சுருங்கிப் போய், முதலாளித்துவ ஜனநாயக கட்சி அரசியலாக எஞ்சிப்போன இடதுசாரிய அரசியலே ஒடுக்கப்பட்டவர்களுடைய திரட்சியை அசாத்தியமாக்கியது. இடதுசாரிய அரசியல் வெகுஜன அரசியல் தளத்திற்கு அப்பால் நகரும் போது, அதுவும் இதர கட்சி அரசியல் போன்று எஞ்சிப்போகும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

மேற்கூறிய காரணங்களே, ஒடுக்கப்பட்டவர்கள் இணைந்த முற்போக்கு அரசியலைச் சாத்தியமாக்க விடவில்லை. இன ஒடுக்குமுறையை உணர்ந்திருந்தால் - அதனை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் முதலில் கையெலெடுக்க வேண்டும். அல்லாது போனால் மக்கள் சார்ந்து அரசியல் செய்ய அனுபவமில்லாதவர்கள் கைகளில் அவ்வொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சிக்கிக்கொள்ளும் என்ற ஏக்கத்தில் இருந்தே ஐயருடைய இடதுசாரிகள் தொடர்பான விமர்சனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை ஒரு விமர்சனமாகப் பார்க்க முடியாது. பிணங்களின் மேல் நின்று விரக்தியில் கூறும் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இன்றிருக்கும் எந்த ஒடுக்குமுறையையும் மறுதலிக்கும் ஒருவர், நிச்சயமாக முற்போக்கான போராட்டம் ஒன்றைச் சாத்தியமாவதை விரும்பாதவராகவே இருப்பார். ஈழத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறையே இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும், ஈழத்தில் இன ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - சாதிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் வர்க்க ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து முற்போக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை விரும்பாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. நாம் ஒடுக்குமுறைகளை தரவரிசைப்படுத்தாமல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் போதே, அதிகாரத்திற்கெதிரான ஐக்கிய முன்னணிகளையும் அதனூடான விடுதலையையும் சாத்தியப்படுத்த முடியும்.

1 comment:

  1. "இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை"....

    "தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன" ....

    என்பதை ஏற்கும் அதே வேளையில் பல எனக்குத்தெரிந்த இடதுசாரி பத்திரிகைகள், இடதுசாரிகள் கருத்துக்கள் ஏற்க்கப்படாமல் கொலையும்செய்தார்கள்.மேலும் தண்டனைக்குளானார்கள், நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்பது மறைக்கமுடியாதவை. அண்ணாமலை ஒரு உதாரணம்.

    ரட்னம் கணேஷ்

    ReplyDelete

Statcounter