சயந்தனின் 'ஆறாவடு' என்ற நாவல் ஈழத்து நாவல் வரிசையில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நாவல் என்ற வரிசையில் இடம்பெறும் என்பதை முதலில் குறிப்பிட வேண்டும். சில குறைகள் மற்றும் நாவலின் முதிர்ச்சியற்ற தன்மையைத் தாண்டி அதன் முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல.
நாவல் வெளிவந்த நாளில் இருந்து வெளிவந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நாவலைப் பாராட்டியே அமைந்திருந்தன. ஈழத்துத் தமிழ்ச்சூழலில் இளைய தலைமுறையைச் சேர்ந்த புதிய நாவலாசிரியர் ஒருவரின் வருகையை மனப்பூர்வமாக வரவேற்பதற்காக தவறுகள் கண்டும் காணப்படாமல் விடப்பட்டிருக்கலாம். அதற்காக, இந்நாவல் குறைகளற்ற நாவலை என்று அர்த்தப்படுத்திவிட முடியாது. தவறுகள் சரியாகச் சுட்டிக் காட்டப்படும் போது, நிச்சயமாக ஆசிரியர் தனது அடுத்த நாவலை இன்னும் முதிர்ச்சியோடும் - தவறுகளை நிவர்த்தி செய்து வெளிக்கொணர்வார் என எதிர்பார்க்கலாம். ஆக, காழ்ப்புணவர்வற்ற தவறுகளைச் சரியாகச் சுட்டிக்காட்டக் கூடிய விமர்சனங்கள் மிக அவசியமானவை. நாவலை வாசிப்பதற்கு முன்னர் நாவல் தொடர்பாக வெளியாகிய பெரும்பாலான விமர்சனங்களையே முதலில் படித்துள்ளேன் என்ற வகையில், நாவலை வாசிக்கும் போது நாவல் தொடர்பான சித்திரமொன்று மனதில் இருந்தது. ஆக, எனது விமர்சனக்குறிப்புக்கள் பெரும்பாலும் நாவலுக்கான விமர்சனமாக மாத்திரம் அமையாமல், நாவல் மீதான விமர்சனங்களுக்கான விமர்சனமாகவோ அல்லது எவ்விடங்களில் அவ்விமர்சனங்களுக்குச் சமாந்தரமாகவும் விலத்தியும் எனது பார்வை அமைந்துள்ளது என்பதைச் சுட்டுவதாகவும் அமையும். இப்பதிவை முழுமையான விமர்சனமாக பார்க்காமல், நாவலுடைய சில அம்சங்கள் சார்ந்த விமர்சனக்குறிப்புக்களாக மாத்திரமே பார்க்க முடியும்.
# நாவலின் கட்டமைப்பு
ஆறாவடு என்ற இந்நாவல், பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு போன்ற அமைந்திருப்பதாக விமர்சனம் சொல்லப்பட்டிருந்தது. நாவலின் முதல் நூறு பக்கங்களைப் படித்து முடித்தபோது அவ்வாறான எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. ஆயினும், நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் போது அவ்வெண்ணம் அடிபட்டுப் போய் நாவலாக முழுமை பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. கதைப்பிரதி முழுமையாக பின்னநவீனக் கதை சொல்லல் முறை வடிவமான Nonlinear narrative முறையில் சொல்லப்பட்டுள்ளது. வாசகரே கதையைக் கோர்த்துச் செல்ல வேண்டிய நிலைக்கு 'ஆசிரியரால்' விடப்பட்டுள்ளார்.
எனது வாசிப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் ஒருசில அத்தியாயங்கள் தொடர்புபடுத்த முடியாமல் துருத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. இது ஒரு தோல்வியடைந்த ஒரு வாசகரின் அனுபவமாகக் கூட இருக்கலாம். முக்கியமாக சிவராசனுடைய இடப்பெயர்வு அனுபவமும் தேவியின் கதையும் அக்காலப்பகுதியைப் பிரதிபலிகின்றதேயன்றி, நாவலுடன் பிற வகைகளில் தொடர்புறவில்லை. சற்று கவனமெடுத்திருந்தால் சகல 'கதைகளையும்' ஒன்றுடன் ஒன்றாகச் சரியாகக் கோர்த்திருக்கலாம். ஆசிரியர் அதனைச் செய்திருக்க வேண்டுமென்றில்லைத்தானென்றாலும், வாசகனின் கற்பனைக்காவது அதற்கான வெளியை உருவாக்கி விட்டிருக்கலாம். இவ்வகையான துருத்தல்கள் குறிப்பிட்ட காலப்பகுதியை மையமாகக் கொண்ட வெறும் சம்பவங்களின் தொகுப்பாக பிரதியை எஞ்ச வைத்துவிடுமோ என்ற அஞ்ச வைக்கின்றது.
# விவரணம்
அடுத்ததாக விவரணம் தொடர்பான விடயத்தைக் கவனித்தோமேயானால், பொதுவாக ஈழத்து நாவல்கள் பெரும்பாலானவற்றில் காணப்படும் குறை இந்நாவலிலும் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வாசகரைப் பிரதியுள் உள்வாங்குவதற்கு பெரும்பாலான ஈழத்து நாவல்கள் பின்னிற்கின்றன. தமது கதைகளைச் சொல்லி முடித்துவிட வேண்டுமென்ற அவாவில் சொல்லப்படுவது போன்று அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அவற்றால் வாசகருடன் ஊடாடவோ அல்லது வாசகரைத் தன்னுள் உள்வாங்கவோ முடிவதில்லை என்பது அவற்றின் மிகப்பெரும் குறையாகும். தீவிர இலக்கியகர்த்தாக்களால் வெகுஜன எழுத்தாளர் என்று கூறப்படும் செங்கை ஆழியான் இத்தடையக் கடந்து தனது நாவல்களைப் படைத்துள்ள போதிலும், தீவிர எழுத்தாளர்கள் இவ்விடயத்தில் திண்டாடுவதைத் தொடர்ச்சியாக அவதானிக்க முடிகின்றது.
சோவியத் ரஸ்யாவின் நிலக்காட்சி தொடர்பான எவ்வித முன் அனுபவமுமற்ற எம்மால் சோவியத் இலக்கியங்கள் மூலமாக ரஸ்யாவில் வாழ முடிந்திருக்கின்றது. அதேநேரம். எம்மால் எப்போதும் எமது நிலப்பரப்பில் - எமது நிலப்பரப்பிற்குத் தொடர்பில்லாத வாசகர்களை வாழ வைக்க முடிவதில்லை. எமது நிலவரைவியலை விளங்கப்படுத்தவோ அல்லது எமது நிலப்பரப்புக்களில் வாழவைக்கவோ வேண்டுமென்றால், நாம் 'வெகுஜன' எழுத்தாளர்களிடம் செல்ல வேண்டியிருப்பது துரதிஸ்டவசமே. இதுதான் ஈழத்து நாவல்களின் நிலமை. மிக முக்கியமாக - எமது வாழ்வியலுடன் மிகவும் ஆழமாகத் தொடர்புபட்ட ஈழப்போராட்டம் தொடர்பான விடயங்களை முதன்மைப்படுத்திய நாவல்களில் இப்போதாமையை நன்குணர முடிகின்றது. எமது துயரங்கள் நிறைந்த வாழ்வு முழுமையும் செய்திக்குறிப்புக்களிலும் - ஆய்வுகளிலும் - அரசியல் ஆவணங்களிலும் - அவதூறுகளிலும் வாழுமாறு சபிக்கப்பட்டிருப்பது துரதிஸ்டவசமானது.
# சம்பவங்களின் உண்மையும் பொய்யும்.
புனைவுகளில் காலத்தைக் கலைத்துப் போடுதல் - சம்பவங்களைக் குலைத்துப் போடுதல் - உண்மையையும் பொய்யையும் கலந்து கொடுத்தல் தொடர்பான விடயங்களில் தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் நெடுங்காலமாக குழப்பத்தில் இருக்கின்றார்கள். கதாசிரியர்கள் தமது அனுபவக்குறைவு - ஆய்வுப் போதாமை போன்றவற்றை நியாயப்படுத்த மாயயதார்த்தவாதம் - பின்னவீனத்துவம் போன்றவற்றைத் துணைக்கிழுப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சயந்தனின் நாவல் தவல்பிழைகளையும் - முரண்களையும் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. அதனை, தத்துவங்களைக் கொண்டு சரிசெய்யும் ஆசிரியர்கள் போல் செயற்படமாட்டார் என நம்புவோம்.
ஜூலை மாதத்தில் நெல்லுகள் பற்றியெரியும் காட்சியும் 2002 இல் போய்ஸ் பட இறுவட்டுக்களை எரிக்கும் காட்சியும் 'சம்பவங்களையும் காலத்தையும் புனைவுகளூடாகக் கலைத்துப் போடுதல்' வகைப்பட்டது என்று புருடா விட முடியாது. 'நொன்-லீனியர்' மற்றும் 'காலத்தைக் கலைத்துப் போடுதல்' தொடர்பாக இதை விட்டால் சிறுமைப்படுத்தும் செயற்பாடுகள் வேறெதுவும் இருக்க முடியாது.
மிக அண்மையில் சோபாசக்தி எழுதிய கப்டன் கதையில் வரும் ஒரு சம்பவம் தொடர்பாகவும் இதேமாதிரி சில விமர்சனங்கள் முன்வைக்கபப்ட்டது. 'சோபாசக்தி அடிச்ச ஆட்லறி' என்று ஒரு பதிவும் எழுதியிருந்தேன். புனைவென்றால் அப்படித்தானிருக்கும் என்றவாறாக சில விமர்சகர்களாலும் ஆய்வாளர்களாலும் எனது பதிவும் பல்வேறுபட்டோரது விமர்சனங்களும் எதிர்கொள்ளப்பட்டது, அறியாமையின் உச்சமென்றே கருத வேண்டும். இவ்வாறான கருத்துக்கள் இன்றைக்கும் ஏராளமான மானிடவியல் ஆய்வுகளைத் தரவுகளாகக் கொண்டு கடின உழைப்பின்பால் உருவாக்கப்படும் காவல்கோட்டம் போன்ற பிரதிகளையும் அவற்றை உருவாக்கும் நாவலாசிரியர்களையும் மறுப்பது போலாகிவிடும்.
# நாவல் எதிர் சிறுகதை
நாவலுக்கும் சிறுகதைக்குள் உள்ள வேறுபாடுகள் தொடர்பாகவும் சில விடயங்களையும் இந்நாவலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. புனைவிற்கு வடிவமேயில்லை - நாவல்/கவிதை/சிறுகதை என்ற வடிவங்களே அபத்தம் என்ற பிரகடனங்களுக்கும் புனைவு / அ-புனைவு என்ற வேறுபாடே சுத்த பைத்தியக்காரத்தனம் என்ற பிரகடனங்களுக்கும் பின்னரான காலத்தில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றோம். மேற்கூறிய கருத்தியல்கள் தோன்றிய காலம் / தேவை / சூழல் போன்றவற்றையும் அக்கருத்தியல்களில் அடியிலோடும் கனதியையும் விளங்கிக் கொள்ளாமல் வழமை போன்று எளிதாக விளங்கிக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டதன் பின்னரே இவ்விடயத்திற்குள் செல்ல முற்படுகின்றேன்.
சிறுகதையை எழுதுவதற்கு நீங்கள் ஒரு கத்தியுடன் எளிதாகக் களமிறங்கிவிட முடியும். குயுக்தியான - சகலதையும் நிராகரிக்கும் - குரூர மனம், நீங்கள் சிறுகதை ஆசிரியராக இருப்பதற்குத் தடையாக இருக்கப்போவதில்லை. மிகச்சிறந்த புத்திசாலி / தந்திரசாலி ஒருவரால் ஒரு சிறந்த சிறுகதையைப் படைத்துவிட முடியும். ஆனால், ஒரு நாவலை எழுதுவதற்கு மேலதிகமான சில தகைமைகள் தேவைப்படுவதாகவே நினைக்கின்றேன். தெளிவான பார்வையும் சகலதையும் தவறுகளுடன் அங்கீகரிக்கும் மனநிலையும் தாய்மையுணர்வும் அவசியமானதெனத் தோன்றுகின்றது.
ஏற்கனவே கூறியபடிக்கு ஈழத்து நாவல்களில் நாம் சில போதாமைகளைத் தொடர்ச்சியாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம். எம்மால் நல்ல சிறுகதைகளை எழுதிவிட முடிகின்ற போதிலும் ஏன் நல்ல நாவல்களை உருவாக்க முடிவதில்லை என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. எமது வாழ்வு முழுமையும் போராட்டச் சூழலுக்குள் அமைந்ததன் காரணமாக, சற்று அதிகமாகவே சமூகமும் மனிதர்களும் அரசியல் மயப்பட்டுள்ளது. அரசியல் என்ற கத்தியால் சிறுகதையை வேண்டுமானால் சீவிச்செதுக்கிவிட முடியும். ஆனால், நாவலில் அவ்வாறான அணுகுமுறை சாத்தியமில்லை. இதுதான், இவ்வளவு துயரங்கள் நிரம்பிய வாழ்வைக் கொண்டுள்ள ஈழத்தில் இருந்து வரவேண்டிய நாவல்கள் வராமல் போனதற்கான காரணமோ தெரியவில்லை.
மேலும், சற்றுப் பெரிய சிறப்பான சிறுகதைகளை வெளியிட்ட சோபாசக்தியை நாவலாசிரியர் என்று கொண்டாடியது எமது சமூகத்தில் எவ்வாறான தவறான முன்னுதாரணமாகப் போகின்றது என்பதை இனிமேல் தான் அனுபவிக்க வேண்டும் போலுள்ளது. அரசியல் சம்பவங்களின் கோர்வையால் ஒரு நாவலைப் படைத்துவிட முடியும் என்ற துணிவு சயந்தனிற்குச் சோபாசக்தியிடமிருந்தே கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். நாவல் எழுதுவதற்கு அரசியல் கருத்துக்களும் சம்பவங்களும் போதுமானவை அல்ல என்பது எனது கருத்து. சமூகம் தனியே மனிதர்களாலும் அரசியலாலும் நிரம்பிய எளிய சூத்திரமல்ல.
# சயந்தனுடையதும் ஆறாவடுவினதும் இடம்
சயந்தனின் நாவலை, ஈழத்து நாவல் வரிசையிலும் - சயந்தனை ஈழத்து நாவலாசிரியர் வரிசையிலும் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற விவாதங்களைச் சில இடங்களில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பல்வேறு உரையாடல்களில் சோபாசக்தியுடன் ஒப்பிடுவது நிகழ்திருக்கின்றது. எனது கணிப்பின்படி, சிறுகதைகளில் சோபாசக்தியை எப்போதுமே முந்த முடியாத சயந்தன், நாவல் வரிசையில் முதிர்ச்சியின்மை என்ற விடயத்தைத் தாண்டி - உயரத்தில் நிற்கின்றார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டியுள்ளது. அதேநேரம், விவரணம் சார்ந்து செங்கை ஆழியான், விமல் குழந்தைவேல் போன்றோருடைய நிலவரைவில் மனதில் அகலாமல் உள்ளது போன்று, சயந்தனுடைய நாவலின் பின்புலம் மனதில் பதியவில்லை.
இவ்விடத்தில் புதியதோர் உலகம் என்ற கோவிந்தனது நாவலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. அரசியல் முதன்மையான நாவலென்றாலும் கூட, மிகச்சிறந்த நாவலாக புதியதோர் உலகத்தைத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம். போராட்டம் மற்றும் மனிதநேயம் தொடர்பான கோவிந்தனது பார்வைகளே அவரால் இவ்வாறான உன்னதமான நாவலைப் படைக்க முடிந்தது. 'அனார்கிஸ்ட்' இற்குரிய மனநிலையில் இருந்து அரசியல் பிரதிகளை தொடர்ச்சியாக பிரசவிக்க முடியுமே தவிர, நிச்சயமாக நல்ல நாவல்களை உருவாக்கிவிட முடியாது. வாழ்வைக் குரூரமாக அல்லாமல் மிகவும் திறந்த மனதோடு எதிர்கொள்ளுவது அவ்வளவு இலேசானது அல்ல. வாழ்வில் நாம் காணும் அசமத்துவங்களையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் வெறுமனே எதிர்ப்பை வெளிப்படுத்திவிட்டோ அல்லது வெறுப்பை உமிழ்ந்துவிட்டோ அப்பால் நகர்ந்து செல்வதும் - பின்பு அந்த யதார்த்தத்திற்குள் எம்மைத் தொலைத்து விடுவதுமே பல புரட்சியாளர்களின் கதையாக இருப்பதை கண்ணால் கண்டு கொண்டிருக்கின்றோம். மாறாக, கோவிந்தன் ஒடுக்குமுறைகளின் யதார்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கெதிராகப் போராடும் வலுவையும் மனநிலையையும் கொண்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தேவைப்படும் உழைப்பையும் கொடுக்கக்கூடிய போராளியாக மனதில் நிற்கின்றார். இதனால் தான் 'புதியதோர் உலகம்' என்ற நாவலை ஈழத்து போராட்ட அரசியல் நாவல்களில் அளவுகோலாக என்னால் கொள்ள முடிகின்றது. எனது அளவுகோல் சகலருக்கும் இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்கும் இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
பிரதியின்பம் மட்டும் நாவலாகிவிடாது. அவ்வாறெனில், நாம் ராஜேஸ்குமாரையும் பட்டுக்கோட்டைப் பிரபாகரையும் நல்ல நாவலாசிரியர்கள் என்று கூறிவிடுவோம். தமிழ்நாட்டு வாசகர்களை முதன்மையாகக் கொண்ட தமிழ் வாசகப்பரப்பு தனக்கு அண்மையில் உள்ள நிலப்பரப்பின் - தன்னில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலை அறியப் பேராவல் கொண்டுள்ளது. இங்கேதான், ஈழத்து நாவல்கள் - அதுவும் அரசியல் பிரதிகள் - அவற்றின் தவறுகளுடன் கொண்டாடடப்படுவது நிகழ்கின்றது. சாகசம் நிரப்பிய கதைகள் தமிழ்ப்பரப்பில் நல்லகதைகளாக நிலைபெற்றுவிட்டன. அதாவது, இன்றைய நிலையில் ஈழத்தின் நிலவரத்தை அதன் நிலவரைவியலுடன் - ஈழத்துப் பண்பாட்டு வாழ்வியலுடன் கூறுவதை விட - ஈழத்தின் சாகசங்களையும் ஈழத்தின் துயரங்களையும் தமிழ்நாட்டு வாசகர்களுக்குக் கூறுவதே இலக்கியம் என்றாகிப் போனது துரதிஸ்டவசமான நிலையென்பேன். இச்சூழல், தொடர்ச்சியாக ஈழத்தில் தமிழ்நாட்டுக்குக் 'கதை' சொல்பவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
சயந்தனிடம் தமிழ்நாட்டிற்குக் கதை சொல்லும் அணுகுமுறை காணக்கிடைப்பதாகச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதனை அவர் நிவர்த்தி செய்து, தனது அடுத்த நாவலைப் படைப்பார் என நம்புகின்றேன்.
# நாவல் விருத்தியடைந்த சூழல்
ஒரு போராளியின் வாழ்வினூடாக இந்நாவல் வளர்ந்து செல்கின்றது. இந்நாவலின் ஊடாக சமூகத்தில் சாதாரண தரத்தில் உள்ள போராளியின் நிலையைத் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. போராளி எப்போதும் அதிகாரம் நிரம்ப்ப பெற்றவன் என்ற பொதுப்புத்தியை ஆசிரியர் கடந்து செல்கின்றார். போராளிகளுடைய அளவற்ற அதிகாரங்கள் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் 1990 களுக்கு முன்னர் இயக்கங்களில் இருந்தவர்களும் - அதன் பின்பு ஈழச்சூழலில் இருந்து அந்நியப்பட்டவர்களுமேயாவார்கள். 1990 களின் பின்னர் நிறுவனமயப்பட்ட ஒரேயொரு போராளி இயக்கத்தில் இருந்த சாதாரண போராளியொருவர் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே கொண்டிருந்தார் என்பதை எமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்.
ஆறாவடுவில் வரும் பிரதான பாத்திரமான போராளி, பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கும் நிரம்பப்பெற்ற சாதாரணனாகவே வந்து செல்கின்றார். ஒரு போராளியின் அன்றாட வாழ்க்கையை சயந்தனால் மிகைப்படுத்தப்படாமல் பதிவுசெய்ய முடிந்திருக்கின்றது. போராளி தான் சார்ந்த அமைப்பை நம்புவதும் - அதனை வெறுப்பதும் - அதனை நக்கலடிப்பதும் - அதனால் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் யதார்த்தபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நாவலின் பின் காலப்பகுதியைத் தவிர மிகுதியான - பெரும்பாலான காலப்பகுதியை நானும் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதன் அடிப்படையிலும் குறித்த காலப்பகுதியில் வசித்த ஒருவருக்கு இருக்கக்கூடிய அனுபவங்கள் என்ற வகையிலும், பல்வேறுபட்ட விடயங்களை மீள ஞாபகப்படுத்திப் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்நாவலை புதிய தலைமுறையொன்றைச் சேர்ந்த நாவலென்று துணிந்து சொல்ல முடியும். 90 களுக்குப் பின்பான ஈழத்துச் சூழலுடைய நேரடி அனுபவங்களைக் கொண்டு படைக்கபப்ட்ட இப்பிரதி, அக்காலப்பகுதியில் தமது வாழ்க்கையின் ஆரம்பத்தைத் தொடங்கிய தலைமுறையொன்றினுடைய கதைகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும் என்பதை நேர்மையாகக் கூறியுள்ளது. நான் ஒரு நாவலை எழுதுவேனாக இருந்தால், இதே கதைக்களனையும் காலப்பகுதியையும் கொண்டதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும்.
இந்நாவல், அரசியல் நீக்கம் செயபட்ட பிரதி என்ற கூற்று மிக மோசமானது என்றே கூறுவேன். இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் - 'எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்' தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். இந்த தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத / அறிந்திருக்காத ஏராளமான இளைஞர்களை இத்தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதிகளை அரசியல் நீக்கம் செய்யப்பட்டவை என்று சவடால் வசனங்களால் எட்டித்தள்ளும் மனநிலை 'அரசியல் நீக்கம்' ஐ தொடர்ச்சியாக வாழ வைப்பதற்குத்தான் உதவக்கூடும்.
நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள். அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை ஏந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும் - தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்ன்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கபப்டுத்தினார்கள். 'அரசியல் நீக்கம் செய்யபப்டாதவர்கள்' ஒன்றில், வெளிநாட்டுக்குச் சென்றார்கள் அல்லது இன்னொரு அதிகாரத்தின் துப்பாக்கிகளின் நிழலில் பதுங்கிக் கொண்டார்கள். இன்னும் சிலர் இறந்து போனார்கள்.
# பாத்திர வார்ப்புக்கள்.
நாவல்களில் முக்கியமானவை பாத்திர வார்ப்புக்கள். இன்று, சில சிறுகதையாசிரியர்களே தமக்கான மிகச்சிறிய அவகாசத்தில் மனதில் நீங்காமல் நிற்கக்கூடிய மிகச்சிறப்பான பாத்திரங்களை உருவாக்குகின்றார்கள். இந்நாவலில் சயந்தனால், மிகச்சிறப்பான ஆளுமையுடன் கூடிய பாத்திரமொன்றை உருவாக்க முடியாமல் போனது வருத்தமே. ஏராளமான சிறப்பான பாத்திரங்களாக உருவாகக்கூடியவர்கள் கூட சயந்தனின் கவனமின்மையினாலோ அல்லது வேறாதவது விசேட காரணங்களாலோ ஆளுமையான பாத்திரங்களாக முழுமை பெறவில்லை. அமுதன், நேரு ஐயா, பெரிய ஐயா, வெற்றி, அகிலா, நிலாமதி, நந்தகுமாரன், தேவி, பண்டார, பண்டார வன்னியன் ஆகிய பாத்திரங்கள் எதுவும் முழுமை பெறவில்லை என்பதை மரபார்ந்த கதைசொல்லல் முறையில் குறையாக முன்வைக்க முடியும்.
அதேநேரம், எந்தப் பாத்திரமும் நாவலை ஆக்கிரமிக்காமல் கதாசிரியர் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டாரா அல்லது அவரது அனுபவப் போதாமைதான் அதற்குக் காரணமா என்பதை ஆசிரியர் வாய்திறந்தால் மாத்திரமே கண்டு கொள்ளலாம். பாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக அல்லது தவறுகள் நீங்கிய இலட்சியத்தன்மையுடைய பாத்திரங்களாக உருவாக்கபப்டவில்லை. சுய எள்ளல் நிரம்பியதும் - தவறுகளைக் கொண்டதுமாகவே பெரும்பாலான பாத்திரங்கள் உருவாக்கபப்ட்டுள்ளன. அல்லது இயல்பாக நாவலில் வந்து போகின்றன என்று கூற முடியும். நாவலின் பிரதான பாத்திரம் மிகுந்த சுய எள்ளலுடனும் யாதார்த்தபூர்வமாகவும் படைக்கப்பட்டுள்ளது முக்கியமானது.
ஈழத்து இலக்கியங்களில் உலாவும் பாத்திரங்களைப் பொதுவாக இரண்டாக வகைப்படுத்த முடியும். முதலாவது, தவறு நீக்கம் செய்யப்பட்ட வீராவேசமுடைய இலட்சியத்தன்மை வாய்ந்த கதாநாயகக் கதாபாத்திரங்கள். பெரும்பாலும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களை பிம்பமாகக் கொண்டு உருவாக்கபப்ட்ட பாத்திரங்களை இவ்வகைக்குள் அடக்கலாம். இரண்டாவது சுயபச்சாதாபம் நிறைந்த ஓயாத துன்பத்தில் உழலும் பாத்திரங்கள். வாசகருக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் பாத்திர வார்ப்புக்களை இவ்வகைக்குள் குறிப்பிடலாம். இவ்விரண்டு வகைகளுக்கு வெளியே யதார்த்தபூர்வமான பாத்திரங்களையுடைய பிரதிகள் எமக்கு அவசியப்படுகின்றன. ஏனெனில், அவற்றின் இருப்பே சமூகத்தை உயிர்ப்புடன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லக்கூடியவை என்று கருதுகின்றேன். அவ்வகையில் சுய எள்ளலும் கதாநாயக பிம்பங்களும் அற்ற சயந்தனது பாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
# போரின் இயல்பு
போரின் நெருக்கடிகளை நாவலாசிரியர் ஒரு சாதாரணனின் பார்வையில் கொண்டு வந்துள்ளார் என்று கருத வேண்டியுள்ளது. இன்று போரிற்கு வெளியில் இருந்தாலும், இந்திய இராணுவக் காலம் - இந்திய இராணுவக் காலத்திற்குப் பின்பான 95 வரையான நிலமை - 95 இடப்பெயர்வு - அதற்குப் பின்பான கெடுபிடிகள் நிறைந்த யாழ்ப்பாண நிலமை - சமாதான காலம் - யுத்த காலக் கெடுபிடிகள் நிறைந்த கொழும்பு போன்றவை எனக்குப் பரிச்சயமானவை. இளமைக்காலம் இக்காலப்பகுதிக்குள்ளேயே தொலைந்திருந்தது. வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் நாவல் மீள் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது.
போர் எப்போதும், ஆயுத வியாபாரிகளைத்தவிர வேறு எவருக்கும் சந்தோசமாக இருக்கப்போவதில்லை. சாதாரணர்கள் யாவரும் அதனால் பாதிக்கப்படுபவர்களாகவே இருப்பார்கள். இருந்திருக்கின்றார்கள். போர் சில அடைவுகளுக்கான படிக்கட்டுக்களாக - மிக அவசியமான நேரங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எமது சிறுபிராயமும் இளமைக்காலமும் போரிற்குள்ளும் அதற்கு வெளியில் இருந்த கெடுபிடிக்குள்ளும் அமைந்திருந்தது. மிகச்சிறிய போர்களையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்த எம்மைப் போன்றவர்களுக்கே வலிகளைத் தரும்போது, மிக உக்கிரமான போரில் அகபப்ட்ட வன்னியைக் கற்பனை செய்து பார்க்க முடியாமல் இருந்தது. இந்நாவல், எமது கடந்த காலத்தையும் நாம் தற்போது மறந்து கொண்டிருக்கும் அதன் குடூரங்களையும் மீண்டும் ஞாபகப்படுத்தியது.
போரின் போதையில், போரைத்தாண்டி எம்மால் அடையக்கூடிய அடைவுகளைக்கூட நாம் மறந்துவிட்டோம். ஆயுதத்தின் மூலமான அதிகாரம் தற்காலிகமானதே. ஆயுதங்கள், மனிதகுலம் - தன்னை நிறுத்தி வைத்திருக்க இயற்கையால் படைக்கப்பட்ட கால்கள் அல்ல. கால்கள் தளர்ந்த போது, நாம் தட்டுத்தடுமாறி நிற்கப் பயன்படும் தற்காலிகமான ஊன்று தடியே என்பதை மறந்து, நிரந்தரக் கால்களாக்கி விடத் துடிப்பதன் அபத்தைத்தை - பாதிப்புக்களை இந்நாவல் ஓரளவிற்காவது வெளிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment