வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

May 20, 2012

அரசற்ற தேசங்களினது மரபுசார் சட்டங்கள் : தேசவழமைச் சட்டத்தை திருத்துவது யார் என்பதனை முன்வைத்து சில ஆரம்பக் குறிப்புக்கள்




குமாரவடிவேல் குருபரன் [1]
சட்ட விரிவுரையாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.







# அறிமுகம்


தேசவழமைச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தில் நீதித்துறை அமைச்சராக இருந்த திரு. மிலிந்த மொறொகொடவால் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. 2010 பொதுத் தேர்தல்களுடன் திரு. மொறொகொடவின் அமைச்சு கைமாற இக்குழுவின் செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தன. அண்மையில் மீள்சக்தி, வலு அமைச்சரும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவருமாகிய திரு. பாட்டாலி சம்பிக்க ரணவக்க தேசவழமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதே கருத்தை எல்லாவல மேதானந்த தேரரும் அண்மையில் தெரிவித்திருந்தார் [2] . காலத்திற்குக் காலம் தீவிர சிங்கள இனவாதிகளால் இத்தகைய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மே 2009 இற்குப் பின்னராக நிலவுகின்ற தற்கால அரசியல் சூழ்நிலையில் - ஒரு தேசியக் கோட்பாட்டை (one nation theory) உறுதியாக வலியுறுத்தும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் அதியுச்சமான வடிவமாக இன்றைய அரசாங்கம் இருக்கின்ற சூழ்நிலையில் - மீளவும் தேசவழமைச் சட்டம் மாற்றியமைக்கப்படுவது (அல்லது இல்லாதொழிக்கப்படுவது) தொடர்பில பேசப்படுவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவது இயல்பானதே. சிங்கள இனவாதிகள் தேசவழமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறுவது சிங்கள மேலாண்மைக் கருத்தியலிலிருந்து ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது தமிழர் தவிர்ந்த ஏனைய இனத்தவர்களால் யாழ்ப்பாணத்தில் காணி வாங்க முடியாது என்ற பிழையான விளங்கிக் கொள்ளலின் அடிப்படையில் சொல்லப்படுவது [3]. இதுவன்றி தேசவழமைச் சட்டத்தை சீர்திருத்துவதற்கு அல்லது இற்றைப்படுத்துவதற்கான வேறு நியாயமான தேவை இருக்கலாம். அப்படியான சந்தர்ப்பங்களை மட்டும் கருத்தில் கொள்ளும் போது கூட யார் தேசவழமையைத் திருத்தலாம் என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய, சரியான விடையைக் காண வேண்டிய அவசியம் உண்டு.  இக்கட்டுரையின் நோக்கமானது தேசவழமையைத் திருத்துவது தொடர்பிலான  செயன்முறை (process) தொடர்பிலான மேற்கண்ட கேள்வியின்  பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அலசுவதும் ஆரம்ப கட்ட பதில் ஒன்றைப் பதிவு செய்தலும் ஆகும்.



# (அரசற்ற) தேசங்களும் மரபுரிமைச் சட்டங்களும்


தேசமாகத் தம்மைக் கருதும் ஒரு மக்கள் கூட்டத்தினர் சுயாட்சியைக் கோரி நிற்பவர்கள். தம்மைச் சுயாட்சிக்கு உரித்துடையவர்களாக்கும் சுயநிர்ணயத்திற்கான உரிமையையுடையவர்கள் என்ற கூட்டுச் சிந்தனையைக் கொண்டவர்கள். தம்மைத் தேசமாகக் கருதினும் தமக்கென அரசொன்றைக் கொண்டிராதவர்களை அரசற்ற தேசங்கள் (Stateless Nations) என சில புலமையாளர்கள் வர்ணிப்பர் [4]. (தேசமாக தம்மைத் தக்க வைப்பதற்கு கட்டாயமாகத் தனியரசாக இருக்க வேண்டியதில்லை) தம்மைத் தேசமாகக் கருதும் மக்கள் தம்மை அடையாளப்படுத்தும் விடயங்களில் ஒன்றாகத் தம்மால் தமக்கு தமது முன்னோரால் வழங்கப்பட்ட சட்டப்பாரம்பரியத்தைக் கருதும் தன்மையானவர்கள் [5]. ஸ்கொட்லான்ட் தேசத்தைச் சேர்ந்த ஸ்கொட்டிய (Scottish) மக்கள் ஸ்கொட்ஸ் சட்டத்தை (Scots law) பாதுகாப்பதில் வெகு தீவிரமானவர்கள். அதே போன்று கனடாவில் கியுபெக (Quebec) மாநிலத்தைச் சேர்ந்த கியுபெக்கோஸ் தம்மை ஆங்கிலேயரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிவில் சட்டத்தைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டுவார்கள். இந்தப் பார்வையிலேயே தமிழர்களும் தேசவழமைச் சட்டம் தொடர்பில் சிந்திக்கின்றனர் என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தேசவழமைச் சட்டமானது ‘இலங்கை அரசு’[6] என்றவொன்று கருத்தாக்கம் பெறுவதற்கு முன்னர் இருந்தே நிலவுகையிலிருந்த ஒன்று. வேறொரு முறையில் கூறுவதானால் தேசவழமை, அரசுக்கு முந்திய சட்டம் (Pre - State Law). பொதுவாகச் சட்டம் என்பது அரசிடமிருந்து ஊற்றுப் பெறுவதாகக் கருதப்படுகின்றது (state centric conception of the law). நவீன அரசக் கட்டமைப்புக்களின் அதிகாரப் படிநிலையாக்கத்தின் அதியுச்சியில் இருக்கும் அரசாங்கமும் அது சார்ந்த நிறுவனங்களுமே சட்டமாக்கும் தத்துவமுடையதாகப் பொதுப் புத்தியில் உறைந்து போயுள்ளது. சட்டம் என்பது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகவும் நாம் இதனை அவதானிக்கலாம். நிற்க. தேசவழமைச் சட்டமானது அரசுக்கு முந்தியதெனின் அதனைக் காலத்திற்கு ஏற்ப ‘திருத்தும்’ அதிகாரம் / முறை யாது என்ற கேள்வி எழுகின்றது. ஒரு ‘முறையைப்’ பின்பற்றி தேசவழமைச் சட்டம் உருப்பெறவில்லை. வழமைகளின் தொகுப்பாகவே தேசவழமை வருகின்றது. அவ்வாறெனில் வழமைகளில் ஏற்படும் மாற்றங்களிற்கேற்ப அச் சட்டத்தை எவ்வாறு இற்றைப்படுத்தலாம்? வழக்காறுகள் எழுத்தில் தொகுக்கப்பட்டதன் பின்னரேயே இந்தப் பிரச்சினை எழுகின்றது. தேசவழமைக்கும் இது பொருந்தும்.

இன்று நாம் தேசவழமைச் சட்டம் எனக் கருதுவது 1707 ஆம் ஆண்டு அப்போதைய ஒல்லாந்த ஆளுநர் ஜோன் சைமன்ஸ் என்பவரது உத்தரவின் பெயரில் கிளாஸ் ஐசாக்ஸ் (Class Issakz) என்பவரால் தொகுக்கப்பட்டது [7]. அதேவருடம் ஜான் பைரஸ் (Jan Piras) என்பவர் இந்தத் தேசவழமைக் கோவையினைத் தமிழில் மொழிபெயர்த்தார். கிளாஸ் ஐசாக்ஸ் தன்னால் தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பரிசீலனை செய்வதற்காக அப்போது யாழ்ப்பாணத்தில் வாழந்த / சேர்ந்த கல்வி அறிவு உள்ள முதலியார்கள் பன்னிருவரிடம் அதனைக் கொடுத்திருந்தார். இந்தப் பன்னிரெண்டு முதலியர்களும் இக்கோவையைப் வாசித்துப் பார்த்ததன் பின்னர் எந்தத் திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இந்த முதலியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பைச் சரிவரச் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. ஐசாக்ஸ் இன் வேண்டுகோளிற்குப் பதிலளிக்கும் விதத்தில் அப்பன்னிருவரும் கூட்டாக எழுதிய கடிதத்தில், ‘தவறிழைத்ததன் காரணமாக ஆங்கிலேயரது சிறைகளில் இருந்த தமது அடிமைகளைப் பேணும் பொருட்டு ஆங்கிலேயரால் தம்மிடம் இருந்து அறவிடப்படுகின்ற பணம் மிதமிஞ்சியது’, என்ற விண்ணப்பத்தைப் பற்றியதாகவே இருந்தது. தொகுக்கப்பட்ட தேசவழமைக் கோவையைப் பற்றிக் காத்திரமாக இவர்கள் ஒன்றையும் சொல்லி இருக்கவில்லை. ஆகவே ஐசாக்ஸ் தொகுத்த வடிவத்திலேயே கோவை பாவனைக்கு வந்தது. பின்னர் ஆங்கிலேயரது காலத்தில், 1799 இல் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றின் மூலம் தமது (ஆங்கிலேயரது) கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிலவுகையிலிருந்த சட்டங்களை அங்கீகரிப்பதாக உறுதியளித்ததன் தொடர்ச்சியாக, 1806 இல் தேவசழமைக் கோவையை ஆங்கிலேயர் அங்கீகரித்தனர்.

ஒல்லாந்தரது காலத்திலேயே ஆங்கில மொழிபெயர்ப்பொன்று செய்யப்பட்டதாயினும் அம் மொழிபெயர்ப்பினது மொழித்தரம் திருப்திகரமானதாக இல்லை எனக் கருதி 1806 இல் இலங்கையின் பிரதம நீதியரசராக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் துரை (Sir Alexander Johnstone) அவர்களால் புதிதாக ஒரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அந்நேரத்தில் அவர் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையொன்றில் ‘வேறெந்த மக்கள் கூட்டம் போன்றல்லாது தமிழர்கள் தமது பண்டைய நிறுவனங்களில் அதீத பற்றுடையவர்களாக இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டிருந்தமை நோக்குதற்குரியது. மேலும் ஆங்கிலேயர்களது நீதி பரிபாலனத்தின் மீது அம்மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனின் அவர்களது மரபுகளை நீதிமன்றங்கள் இறுக்கமாகப் பேண வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். தமது ஆட்சி தொடர்பிலான ஏற்புடைத்தன்மையை தமிழ் மக்கள் மத்தியில் உறுதி செய்வதற்கு தேசவழமையைப் பின்பற்ற வேண்டும் என ஆங்கிலேயர் கருதியமையைக் கவனிக்க வேண்டும்.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனது முயற்சியால் இவ்வாறாக மொழிபெயர்க்கப்பட்ட கோவையின் பிரதிகளை அவர் அனைத்து நீதிமன்றங்களிற்கும் அனுப்பி வைத்ததோடு தமிழில் மொழிபெயர்த்து அவற்றை பனையோலைகளில் எழுதுவித்து கிராமத் தலைவர்களுக்கு அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் சாதாரண மக்களுக்கு விளங்கப்படுத்துமாறு கூறி விநியோகம் செய்தார். இதன் பின்னராக ஆங்கிலேயரது காலத்தில் 1911 இலும் 1947 இலும் [8] கொண்டுவரப்பட்ட சட்டங்கள் மூலம் தேசவழமைச் சட்டத்திற்கு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

தேச வழமைக் கோவையில் உள்ளடக்கப்பட்டவை தேச வழமை தொடர்பிலான பூரணமான கோவையாகக் கருதப்படுவதற்கில்லை. ஆங்கிலேயரது காலத்து நீதிமன்றங்களில் ஏதேனும் விடயம் தொடர்பில் தேசவழமைக் கோவையில் பதில் பெற முடியாதவிடத்து அவ்விடயம் தொடர்பிலான மரபுசார் வழக்காற்றை விசேட சாட்சிகளின் (Expert Witness) கூற்றுக்களின் வாயிலாக ஸ்தாபிக்கலாம் என்ற நடைமுறை இருந்தது [9]. எனினும் வழக்கின் எத்தரப்பினால் நீதிமன்றத்திற்கு சாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதோ அத்தரப்பிற்குச் சாதகமான வகையில் சாட்சிகள் வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்பட்டு இம்முறை கைவிடப்பட்டது. அதனால் இவ்வாறாக தேசவழமைக் கோவைக்கப்பால் உள்ள தேசவழமை மரபுகளைச் சட்டத்தினால் / நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போனது. இன்று, தேசவழமைக் கோவையில் இடைவெளிகள் இனங்காணப்படும் போது தேசவழமைச்சட்டத்தின் பொதுவான பண்புகளை வைத்து நீதிமன்றம் முடிவொன்றுக்கு வர முயற்சிக்கும். இல்லாவிடின் ரோமன் - டச்சுச் சட்டத்தை வைத்து இடைவெளி நிரப்பப்படுகின்றது. மேலைத்தேய சட்டமொன்றை வைத்துத் தேசவழமையில் இருக்கின்ற ‘இடைவெளிகளை’ நிரப்ப முயற்சிக்கின்றமையானது தேசவழமைச் சட்டத்தின் சுயாதீனத்தைப் பாதிப்பதாக உள்ளது. உண்மையில் ‘இடைவெளிகள்’ என்று பேச வேண்டி வந்ததே தேசவழமை கோவைப்படுத்தப்பட்டதனாலேயே. காலம் காலமாக, காலத்திற்கேற்ற வண்ணம் இயைபடைந்து வளர்கின்ற ஓர் முறைமையில் ‘இடைவெளிகள்’ இருப்பதில்லை. ஆனால் எழுத்துருவாக்கத்தை நாம் முற்றிலுமாக வேண்டத்தகாததாகவும் பார்க்க முடியாது. எழுத்துருவாக்கம் செய்யப்படாதிருப்பின் விரைவாக நவீன மயப்பட்டுக் கொண்டிருந்த அரச கட்டமைப்பில் தேசவழமை என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கலாம். ஆகவே எழுத்துருவாக்கம் என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். ஆனால் எழுத்துருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளே தேச வழமையைச் சீர்திருத்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்பதனையும் கவனிக்க வேண்டும். முதலாவது தேசவழமை எழுத்துருவாக்கம் செய்யப்பட்ட காலகட்டத்திலிருந்த  சமூகத்தையே தேசவழமை பிரதிபலிக்கின்றது என்ற பிரச்சினை. இரண்டாவது தேசவழமைக் கோவையானது யாழ்ப்பாணத் தேசவழமை என்று ஒல்லாந்தர் கருதிய விடயங்களையே உள்ளடக்குகின்றது என்பது.



# இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமையைத் திருத்த முடியாதா?


இலங்கைப் பாராளுமன்றம் தமிழர் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழர்கள் மத்தியில் ஓர் ஏற்புடைத் தன்மைப் பிரச்சினை (legitimacy problem) இருப்பது ஏற்கனவே குறிப்பால் உணர்த்தப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்படுவது  முற்றிலும் ஓர் பெரும்பானமை முடிவெடுக்கும் முறையைப் (majoritarian decision-making) பின்பற்றியதாகும். ஆகவே பாராளுமன்றம் தேசவழமையை இற்றைப்படுத்தும் முயற்சியை நியாயமாகச் செய்யும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. மேலும் அரசிற்கு முந்திய சட்டம் என்ற வகையில் தேசவழமையை இற்றைப்படுத்தும் தார்மீக உரிமையும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கில்லை.  முன்னர் குறிப்பிட்டவாறு 1947 இற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தினால் தேசவழமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலைமைக்கு மேற்சொன்ன காரணங்களும் பங்களித்துள்ளனவா என்பது ஆராயத்தக்கது.

அனைத்து மரபுசார் சட்டங்களையும் ஒழித்து அதன் கூறுகளை உள்ளடக்கியதாக ஓர் சீரான சிவில் கோவையை (ரnகைழசஅ உiஎடை உழனந) ஒன்றை உருவாக்க முடியாதா என்ற கேள்வி கேட்கப்படுகின்றது. அப்படியானதோர் முயற்சியின் விளைவாக உருவாக்கப்படும் கோவை இந்த நாட்டில் அரசியலில் மேலாண்மையைக் கொண்டிருக்கும் சமூகத்தின் சமூக வழக்காறுகளையே கூடுதலாகப் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இத்தகைய சிவில் கோவையை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதனை அரசியல் புலத்தில் வலியுறுத்துபவர்கள் அதிதீவிர வலதுசாரி இந்துத்துவ கட்சிகள் என்பது கவனிக்கத்தக்கது. இலங்கையில் இத்தகைய கோரிக்கைகள் ஜாதிக ஹெல உருமய போன்ற கட்சிகளிடமிருந்து வெளிக்கிளம்புவதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

சட்டத்தில் பல்வகைமையை (uniform civil code) கண்டு அச்சப்படுகின்ற அல்லது விரும்பாத மனப்பான்மை தான் இத்தகைய ஒரு சீரான சிவில் கோவையொன்றுக்கான கோரிக்கையின் அடிப்படையாக இருக்கின்றது. சட்டப் பல்வகைமையானது தனித்துவங்களை அங்கீகரிக்கும் தன்மையது. பல்தேசிய (legal pluralism)[10] நாடொன்று சட்டப் பல்வகைமையை அங்கீகரிக்கும். இலங்கையைப் பல்தேசிய நாடொன்று என்று அங்கீகரிக்க மறுக்கும் நிலை இருக்கும் வரை, ஒரு தேசியக் கொள்கையைக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சமூகத்தாலும் அதன் பாராளுமன்றத்தினாலும் மற்றையவொரு தேசியத்தின் மரபுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதனை அனுமதிக்கக் கூடாது.



# நீதிமன்றங்களினால் தேசவழமைச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரமுடியாதா?


சட்டத்தின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் நீதிமன்றங்களிற்கு குறிப்பாக உயர் நீதிமன்றங்களிற்கு (Superior courts) பெரும் பங்கு உண்டு. நீதிபதிகளால் தீர்ப்புக்களின் வாயிலான இயற்றப்படுகின்ற சட்டம் (Judicial - law making) இன்று சட்டவாக்கத்தில் பெரும் பங்காற்றுகின்றது. கனடாவிலும் ஸ்கொட்லாண்டிலும் மரபுசார் அல்லது ஓர் குறிப்பிட்ட சமூகம் தொடர்பான தனித்துவமான சட்டங்கள் இருப்பதாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்விரு இடங்களிலும் நீதிமன்றங்கள் அத்தகைய தனித்துவமான சட்டங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுகின்றன எனப் பார்த்த பின் இலங்கை நீதிமன்றங்கள் தொடர்பில் பார்ப்பது நன்று.

கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மூவர் கியூபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் [11]. கியூபெக்கில் கனடாவின் மொத்த  சனத்தொகையின் 24 சதவீதமானோரே வாழ்கின்ற போதிலும் அவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் 1/3 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. கியூபெக் சிவில் சட்டத்தைப் பின்பற்றுகின்ற அடிப்படையில் இவ்வேற்பாடு நியாயப்படுத்தப்படுகின்றது. கியூபெக் சிவில் சட்டம் தொடர்பில் வருகின்ற மேன்முறையீடுகள் யாவற்றையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு விசாரிக்கும். இவ் ஐவருள் மூவர் கியுபெக்கைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஐக்கிய இராச்சியத்தினது உச்ச நீதிமன்றத்தின் பதவி வகிக்கின்ற 12 நீதிபதிகளில் இருவர் ஸ்கொட்லண்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகின்றது. ஐவரைக் கொண்ட உச்ச நீதிமன்றின் குழுவொன்று ஸ்கொட்லாண்டிலிருந்து வரும் மேன்முறையீடுகளை விசாரிக்கும் போது அந்த ஐவருள் இருவர் இந்த இரண்டு ஸ்கொட்டிய நீதிபதிகளாக இருக்க வேண்டும் என்பதும் மரபாக இருந்து வருகின்றது. இவ்வாறான ஏற்பாடு இருக்கின்ற போதிலும் ஸ்கொட்டிய தேசியவாத கட்சியினர் (ஸ்கொட்லண்டின் ஆளும் கட்சி) அண்மைக் காலத்தில் இங்கிலாந்தின் உச்ச நீதிமன்றமானது தேவையற்ற வகையில் ஸ்கொட்டிய நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிடுவதாக குற்றஞ் சாட்டுகின்றனர் [12]. உச்ச நீதிமன்றில் பதவி வகிக்கும் ஸ்கொட்டிய நீதிபதிகளும் ‘இங்கிலாந்தின் மனநிலையில்’ இருந்து செயற்படுவதாக ஸ்கொட்லாண்டின் தேசியவாதிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்திலும் கனடாவிலும் இவ்வாறாக நீதிமன்றங்களின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகளிற்கு நிகரான ஏற்பாடுகள் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் இல்லை. தேசவழமை தொடர்பிலோ முஸ்லிம் சட்டம் தொடர்பிலோ வழக்கொன்று விசாரணைக்கு  வரும் போது தமிழ், முஸ்லிம் நீதிபதிகள் அவற்றில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை. இது தொடர்பில் ஏற்படக்கூடிய சிக்கல்களை 1986 - 1988 இல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் [13].

முஸ்லிம் தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளை ஒன்றிற்கு அத்தம்பதிகளின் இறப்பிற்குப் பின்னர் அவர்களது சொத்துக்களின் மீதான உரித்து உண்டா என்ற கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னர் வந்த போது, உண்டு எனப் பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். (நீதியரசர் செனவிரட்ண மற்றும் நீதியரசர் சிவா செல்லையா) ஆனால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த நீதியரசர் ஒருவர் (நீதியரசர் ஜமீல்) பெரும்பான்மையினரது தீர்ப்போடு உடன்படாமல் புனித குரானில் இது தொடர்பில் சொல்லப்பட்டுள்ளவை பற்றிய நீண்ட விளக்கமளித்துத் தனித் தீர்ப்பொன்றை - தத்தெடுத்த பிள்ளைக்கு உரிமை இல்லை - எனத் தீர்ப்பளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதியரசர் ஜமீலின் தீர்ப்பை அடியொற்றி பிரதம நீதியரசர் சர்வானந்தா தீர்ப்பளித்தார். அவரது தீர்ப்போடு வேறு மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இணைந்து கொண்டனர். இந்தத் தீர்ப்போடு இணங்காத ஒரேயொரு உச்சமன்ற நீதிபதி, நீதியரசர் வனசுந்தர மட்டுமே. நீதியரசர் வனசுந்தர ஒரு போற்றத்தக்க நீதியரசர். ஆனால் இந்த நீதியரசர் வனசுந்தரவே முன்னர் 13 ஆம் திருத்தம் அரசியலமைப்போடு இயைபானதா என்ற வழக்கின் போது தான் வழங்கிய தீர்ப்பில் மாகாணங்களுக்கு சட்டவாக்க அதிகாரம் வழங்கப்படுமானால் வடக்கு கிழக்கில் உள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற கவலையைத் தனது தீர்ப்பிலேயே தெரிவித்தவர் [14]. நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் இவர் சிங்கள அதிதீவிர தேசியவாத மேலாண்மைவாதிகளால் அமைக்கப்பட்ட சிங்கள ஆணைக்குழுவிற்குத் தலைமை வகித்து இலங்கை அரசின் ஒற்றையாட்சி முறைமைகளில் மாற்றங்கள் கொண்டுவரக் கூடாது என அறிக்கை எழுதினார். நீதியரசர் வனசுந்தர மேற்படி வழக்கின் தீர்ப்பை சிங்கள மேலாண்மை மனநிலையிலிருந்து எழுதினார் என்பதைத் திடமாகக் கூற முடியாது. அவ்வாறு எழுதவில்லை என்றும் உறுதியாகக் கூற முடியாது. இலங்கை உச்ச நீதிமன்றத்திடம் தேச வழமையை வளர்த்தெடுக்கும் பொறுப்பை விடுவதில் உள்ள சிக்கலுக்கு இந்த வழக்கு நல்லதோர் உதாரணம் என்பதையே இந்தக் கட்டுரையாளர் சொல்ல வருவது.



# தேச வழமையைத் திருத்தம் செய்யக்கூடியது யார்?


ஒரு சமூகத்தினது வழக்காறுகளை அந்தச் சமூகம் தான் திருத்த வேண்டும். மாற்றங்கள் என்பது உள்ளிருந்து வரும் போது தான் அம்மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்படும. தேச வழமையைத் திருத்துவதும் தமிழ்ச் சமூகமாகவே இருக்க வேண்டும். நவீன அரச கட்டமைப்பில் இதற்கான வழிமுறை தமிழர்களுக்கான சுயாட்சி அலகு ஒன்றின் மூலமாக வரவேண்டும். இந்த சுயாட்சி அலகுக்கு வழங்கப்படுகின்ற பொறுப்புக்களில் ஒன்றாக விசேட சட்டங்களைத் திருத்துதல் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழருக்கான சுயாட்சி அரசாங்கம் ஒன்றை அமையப் பெறும் போது பல்வேறு தரப்புக்களது ஆலோசனைகளைப் பெற்று ஓர் வெள்ளை அறிக்கை ஒன்று இது தொடர்பில் தயாரிக்கப்பட வேண்டும். அவ்வாறாக ஆலோசிக்கப்படுகின்ற தரப்பில் பெண்களும் தமிழர் மத்தியில் காணப்படும் ஒடுக்கப்படும் சமூகத்தவர்களுக்கும் கூடியளவு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இன்றைய தமிழ் சமூகத்தினது வழக்காறுகளை சமூக நீதியுடன் இயைபுபட்டதாக அமையும் வண்ணம் நாம் ‘புதிய தேசவழமை’ ஒன்றை உருவாக்கலாம்.

தமிழ்த் தேசம் என்று நாம் கருதுகின்ற சமூகம் எத்தகையது என்பது பற்றிய ஆக்கபூர்வமான கருத்துருவாக்கத்தை நாம் இன்றைய சூழ்நிலையில் செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இக்கட்டுரையாளர் வேறொரு இடத்தில் வலியுறுத்தியுள்ளார். தமது அரசியலின் எதிர்காலம் தொடர்பில், முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் விரக்தியுற்றுள்ளவொரு சூழலில் அவ்விரக்தி நிலையை முறியடிப்பதற்கான சமூக ஒன்றுதிரட்டல் ஒன்று அவசியமானது. அந்த ஒன்று திரட்டல் ஆக்கபூர்வமானதாக இருத்தல் வேண்டும். தமிழ்த் தேசியம் என்பது வெற்றுக் கோசமாக அல்லாமல் எமது எதிர்கால ஆட்சியியலைப் பற்றி காத்திரமான பார்வைகளை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமாகவே இக்கட்டுரையாளர் தேசவழமை தொடர்பான ஓர் பரந்துபட்ட உரையாடலை நாம் செய்ய வேண்டியதான அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

தேசவழமை பற்றிய இந்தச் செயன்முறையில் இந்தத் தீவில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பங்குபற்ற முடியும். பெல்ஜியத்தில் ஆள்புல சமஸ்டிப் பாராளுமன்றம் என்பதற்கு மேலதிகமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் (அந்த சமூகத்தவர்கள் எங்கு வாழ்கின்றனர் என்ற வரையறைக்கப்பால்) சமூகப் பாராளுமன்றம் (Community Parliament) ஒன்றில் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு உண்டு [15]. இத்தகைய முறைமையைப் பற்றி நாம் சிந்திக்கலாம். மனமும் செயலூக்கமும் இருக்குமானால் தீர்வைத் தேடுவது கடினமான காரியமன்று. கிழக்கைச் சேர்ந்த தமிழர்களின் முக்குவர் சட்டத்தை துயிலெழுப்பவும் அதனை தேசவழமையைப் போன்று புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகையைப் பற்றியும் சிந்திக்கலாம்.



# முடிவுரை


தேச வழமையின் இப்போதைய வடிவத்தையோ உள்ளடக்கத்தையோ ஓர் பழமைவாதப் பார்வையிலிருந்து இந்தக் கட்டுரை வக்காலத்து வாங்க முயற்சிக்கவில்லை. ஓர்மைப்படுத்தும் முயற்சிக்கெதிராகவும் பன்மைவாதத்தைப் பாதுகாக்கும் பார்வையிலுமே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. தேசவழமையை சீர்திருத்துவதில் உள்ள வரைமுறைப் பிரச்சினைக்குத் துணிச்சலாக ஓர் தீர்வை முன்வைக்க முயற்சித்துள்ளது. வைக்கப்பட்டுள்ள தீர்வு நடைமுறைச் சாத்தியமானதா என்ற கேள்வி எழக்கூடும். நடைமுறைவாதத்தை முன்வைத்தால் இன்று எமது சமூகத்தின் மத்தியில் நிலவக்கூடிய அடக்குமுறைச் சூழலை ஒட்டியே சிந்திக்க வேண்டிவரும். அவ்வாறான சிந்தனை ஒடுக்குமுறைக்குத் துணை செய்வதாகவே முடியும்.



அடிக்குறிப்புக்கள்.
[1] LL.B (Hons) (Colombo), B.C.L (Oxford) ; சட்டத்தரணி
[2] உதயன், 04 நவம்பர் 2011
[3] இந்த விளங்கிக் கொள்ளல் தவறானது என்பதற்கு பார்க்க : Dr Shivaji Felix, ‘Introduction’ appearing in Dr. H.W. Thambiah, The Laws and Customs of the Tamils of Jaffna, (Revised Edition, Women’s Education and Research Centre, 2001), pp. vi-vii
[4] பார்க்க : Michael Keating, Plurinational Democracy: Stateless Nations in a Post Sovereignty Era (Oxford: Oxford University Press, 2001)
[5] இத்தகைய சட்டங்களை ‘மரபுசார் சட்டங்கள்’ என வகைப்படுத்துவது காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்ட ஒன்று. தமது சட்டங்களை பிரதான நீரோட்டத்திற்கு உரியவை எனவும் தாம் காலனியாதிக்கத்திற்குட்படுத்திய மக்கள் சட்டங்கள் மரபுசார்ந்தவை என வகைப்படுத்தியதில் காலனியாதிக்க மனநிலை வெளிப்படுகின்றது.
[6] சிலோன் அல்லது சிறீலங்கா அரசு என்ற கருத்தாக்கத்தினது நவீன செயன்முறை வடிவம் 1815 உடன் ஆரம்பமாகின்றது எனலாம்.
[7] தேசவழமையைக் கோவைப்படுத்திய வரலாறு தொடர்பில் பார்க்க: H.W Thambiah, ‘The History of Codification’, (Chapter 2), n. 3.
[8] Jaffna Matrimonial Rights and Inheritence Ordinance of 1911 as amended by Oridnance no 58 of 1947.
[9] தேசவழமை தொடர்பிலான முத்துக்கிருஸ்ணா என்பவரது நூலில் மேற்கோள காட்டப்பட்ட Vyrewanadan v Vinasi, Kander v Ramaswamy போன்ற வழக்குகளை கலாநிதி. தம்பையா உதாரணமாகக் காட்டுகின்றார். n. 3இ p. 40இ 41
[10] Legal Pluralism தொடர்பான சுருக்கமானதோர் புலமைத்துவ ஆய்வுக்குப் பார்க்க :  Brian Z Tamanaha, ‘Understanding Legal Pluralism: Past to Present, Local to Global’, 29 Sydney Law Review (2007)
[11] பிரிவு 6, கனடிய உச்ச நீதிமன்றச் சட்டம்
[12] பார்க்க : Guardian, ‘Alex Salmond provokes fury with attack on UK Supreme Court’, 01 June 2011: http://www.guardian.co.uk/uk/2011/jun/01/alex-salmond-scotland-supreme-court
[13] Ghouse v Ghouse 1986 1 Sri. L. R 48 (Court of Appeal), 1988 1 Sri. L. R 25 (Supreme Court)
[14] In Re the Thirteenth Amendment to the Constitution 1987 2 Sri. L. R 312 at 364, 365, 366.
[15] பார்க்க : Ann L. Griffiths (Ed), Handbook of Federal Countries 2005 (Forum of Federations, 2005), pp. 58-72



[[ 1707 இல் ஒல்லாந்தரால் எழுத்து வடிவிற்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் குருபரன் குறிப்பிடுவது போன்று வழமைகளின் தொகுப்பாகவே இருந்திருக்கின்றது. அவ்வாறான வழக்கம் நெகிழ்ச்சியான மாற்றங்களுக்குட்படக்கூடிய நிலையிலேயே இருந்தது. ஒல்லாந்தரால் எழுத்தாவணமாக உருவாக்கப்பட்ட நிகழ்வின் மூலமான நிறுவனமயப்படுத்தல் - அதுவரையிலான நெகிழ்ச்சித்தன்மையைக் கட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது. 1707 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தவாறான பிற்போக்கான கூறுகளுடனேயே தேச வழமையின் நிறுவனமயமாதல் நிகழ்ந்தது. 30 அக்டோபர் 2003 தமிழீழ சட்டத்துறையின் முக்கியஸ்தரான பரராஜசிங்கம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் தேசவழமை தொடர்பான பல முக்கியமான விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் தமிழீழ சட்டவாக்கத்துறையினரால் தேசவழமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அடிமைத்தனம், சாதியம் போன்றவை காலத்திற்குப் பொரித்தமற்றவை / அருவருப்பூட்டக்கூடியவை என்பதை மாற்றத்திற்கான காரணமாகக் குறிப்பிடுகின்றார். குருபரனின் கட்டுரை இவ்விடயங்களையும் தொட்டிருக்கலாம். - சசீவன் ]]

No comments:

Post a Comment

Statcounter