இயங்குவெளி

வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

July 10, 2016

மறந்துபோன கவிதைகள்

[ இக்கவிதைகள் ஏறத்தாழ பத்து வருடங்கள் பழமையானவை. இக்கவிதைகளின் பின்னாலுள்ள படைப்புஊக்க மனநிலையை ஒருவித ஏக்கத்துடன் மீட்டிப் பார்க்க முடியுமே தவிர அதனை அணுக முடியாது. அந்நேரத்து மனநிலையை வெளிப்படுத்த போதுமான சொற்கள் இருக்கவில்லை. அக்காலத்தில் மீண்டும் மீண்டும் படித்த சேரன், மனுஷ்யபுத்திரன் , நட்ஷத்திரன் செவ்விந்தியன் போன்ற கவிஞர்களுடைய சொற்கள் ஊடாகவும் வடிவத்தின் ஊடாகவும் வெளிப்படுத்தியிருப்பேனோ என்ற தயக்கத்தில் எங்கேயும் பிரசுரிக்கும் எண்ணம் தோன்றவில்லை. ]






பிரிவு - 1

ஏற்கனவே நிச்சயமான
என்னுடையதும் உன்னுடையதுமான
பிரிவின் பொழுதொன்றில்
நம் கண்கள் சந்திப்பதை
தவிர்க்கவே விரும்பினோம்.

அப்பொழுதுகளில்
உன் கண்கள் அழுதிருக்கவில்லை

இனியொரு பொழுதில்
உன்னைச் சந்திப்பதென்பது
நிச்சயமற்றதொன்று

நாம் விடைபெறுகின்றோம்.
சொற்கள் உதிரவில்லை
துயரம் வழிந்தோடும் கரிய இரவு

நீ என்னை விட்டு விலகி
நடக்கத் தொடங்குகிறாய்
பெரிதாய் ........... சிறுத்து
சிறு புள்ளியாய்
மறைந்து போகின்றாய்

சூடான
கண்ணீர்த்துளி ஒன்று
தெறித்து வீழ்கின்றது

எங்கோ தொடங்கிய
ஆட்காட்டிக் குருவியின் குரல்
தேய்ந்து..... அறுந்து போயிற்று.

இருள் சூழ்ந்த பெருவெளியில்
ஒற்றைப் பனை
தனிமையில் வாடுகின்றது.




பிரிவு - 2

நமது பிரிதல் பொழுதை
என்னால் மீண்டும் ஞாபகப்படுத்தமுடியும்

நீ எனக்காக விட்டுச் சென்றதெல்லாம்
இன்பம் தோய்ந்த துயர நினைவுகளைத் தாம்
எனது ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும்
நிறைந்திருக்கிறது எனது காதல்
நிறைந்திருக்கிறது எனது துயரம்
குழந்தைத்தனமான
எனது ஒவ்வொரு துளிக்காதலிலும்
நிறைந்திருக்கிறது உனது கண்ணீர்
நிறைந்திருக்கிறது உனது துயரம்

தனிமை என்னை விழுங்கிக்கொண்டிருக்கிறது

மீண்டும் நிகழும்,
இன்னுமொரு பிரிவில்
இதை விட அதிகமான துயரத்தை நீ விட்டுச்செல்வாய்
இதை விட அதிகமான கண்ணீரை நீ விட்டுச்செல்வாய்
இதை விட அதிகமான காதலை நீ விட்டுச்செல்வாய்
அப்போது,
தனிமை
என்னை
முழுமையாக விழுங்கிவிட்டிருக்கும்.
 

தனிமை

ஆளரவமற்ற
நேரான நீண்ட தெரு
தனிமையில் நடந்து கொண்டிருக்கிறேன்
முன்பு,
நீயும் நானும் நடந்த
அதே ஆளரவமற்ற தெரு
இருளும் ஒளியும் கலந்த
மஞ்சள் நிற மாலைப்பொழுதொன்றில்
உயர்ந்த மரங்களினின்றும் உதிர்ந்த,
மஞ்சள் பூக்களை
மெதுவாகவே கடந்து சென்றோம்
மாலைப் பொழுதின்,
தூறல் மழையின்
ஒவ்வொரு துளியையும் ரசித்தவாறே,
இன்றும்,
இனிய சங்கீதம் நிறைந்த
மஞ்சள் நிற மாலைப்பொழுதொன்றில்
இலேசான தூறல் மழையின்
ஒவ்வொரு துளியையும் ரசித்தவாறே
முன்பு,
நீயும் நானும் நடந்த
ஆளரவமற்ற அதே தெருவில்
நான்,
தனிமையில் நடந்துகொண்டிருக்கிறேன்.



ஏக்கம்

உன்னை,
ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போகும்
கூடவே ஒவ்வொரு முறையும் பிரிய நேரிடுகிறது
அர்த்தமேயில்லாமல்
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம்
விடை பெறும் நேரம் நெருங்க
மௌனங்கள் எம்மைச் சூழ்ந்து கொள்ளும்
காற்றில் இனிய சங்கீதம் பரவிச்செல்லும்
துயரம் நிறைந்த ஏக்கத்துடன்
கண்கள்,
மறுபடி மறுபடி பார்த்து மீளும்
எம்மால் எதுவுமே பேசமுடிவதில்லை
திடீரென்று,
நீ விடைபெற்றுக் கொள்வாய்
மெதுவாக நடந்து காணாமல் போவாய்
அக்கணமே
மீண்டுமொரு சந்திப்பிற்காய்
மனம் ஏங்கத் தொடங்கியிருக்கும்



வருகை

அனல் தெறித்த தெரு.
வரண்ட முகில்கள் அசைந்திருக்கவில்லை
இலைகளற்று விறைத்த மரங்கள்
வெப்பக்காற்றில் சுழல்கின்றன குப்பைகள்
இப்படியானதொரு வரண்ட பொழுதில்,
குளிர்ச்சியான பூவுடன்
நீ நடந்து வருகின்றாய்
என் மீதான காதலைச் சொல்ல
புழுதிகள் நிறைந்த
நீண்ட பாலைவனமொன்றில்
செத்துக்கொண்டிருக்கும்
சிறு செடி மீது மட்டும்
குளிர்ந்த மழை
பொழிந்துகொண்டிருக்கிறது.



வெறுமை


மேசையில் கிடக்கிறது
உனது கைப்பை
நீயில்லாத பொழுதொன்றில்....

நீ எழுதிய பேனாவோ,
உனது உதடு துடைத்த
கைக்குட்டையோ ,
கைப்பையினுள்
இருக்க கூடும்.

ஆனால்,
மேசையில்
உனது கைப்பை மட்டும்
இருந்து கொண்டேயிருக்கறது...

எனது விசாலமான
மனசெங்கும்
நீயில்லாத
வெறும் வெறுமை
சதா உதிர்ந்துகொன்டேயிருக்கிறது.



தலைப்பிடப்படாத கவிதை - 1

ஒற்றை நட்சத்திரம்
ஒளிரத் தொடங்கும் தருணமொன்றில்
உன்னை நான் நினைத்திருப்பேன்

அப்போது நீ
சிறிய கைக்குட்டையொன்றால்
மூக்கைத் துடைத்தபடி
படித்துக்கொண்டிருக்ககூடும்

பின்

முகில்கள் மட்டும் அசையும்
பின்னிரவொன்றில்
நான் உன்னை நினைக்கும் போது
ஒரு சின்ன தேவதையைப் போல
ஒருக்களித்தபடியே
தூங்குவாய் நீ

அக்கணத்தினதாலான
எனது உதட்டோரப் புன்னகையை
நீ ஒரு முறையேனும்
தரிசித்திருக்க முடியாது.



தலைப்பிடப்படாத கவிதை - 2
  
பின்னிரவின் பொழுதொன்றில்
விட்டு விட்டு மழை தூறும்
குளிர் உறையும்'

இருளும் குளிரும் பிரிக்கும்
நம்மை.

போர்வை விலக்கி
ஒரு காற்றைப் போல
உன்னிடம் வருவேன் நான்.

கழுத்தை ஒரு பக்கம் சரித்தவாறே
புன்னகைத்தபடி தூங்குவாய் நீ

உன் தலைதூக்கி
நெற்றியில் முத்தமிடுவேன்
கண்ணில்.....
கன்னத்தில்....
கழுத்தில்....
தொடரும் முத்தம்.

நீ கண் விழித்து சிணுங்கி
உதடு சுழிக்கும் தருணமொன்றில்
உன் உதட்டை என் உதடு
மெதுவாகத் தொட்டுப்
பின் உறிஞ்சத் தொடங்கும்.

எனது நாக்கை உனது வாயினுள்
இழுத்துச் சுவைப்பாய் நீ

பின்

அம்மாவைப் போல
என்னைக் கட்டிக் கொள்வாய்
அவ்வாறே தூங்கிப்போவோம்
நாம்.



தலைப்பிடப்படாத கவிதை - 3
  
எந்த ஒரு மாலைப்பொழுதுகளிலும்
எனது உணர்வுகளையோ
எனது மிகு அன்பையோ
நீ உணர்துகொள்வதேயில்லை

நானும் நீயும் சந்தித்த
இன்னொரு மாலைப்பொழுதில்
உன்னை நான் பார்க்காத
நீ என்னைப் பார்த்த
ஒரு கணப்பொழுதில்
எனது மொத்த அன்பையும்
உனக்கு தந்தேனே

வாங்கிக் கொண்டாயா
என் செல்லப் பெண்ணே.



தலைப்பிடப்படாத கவிதை - 4

நமது பிரிவின் பின்பான
இன்னொமொரு பொழுதில்
நான் உன்னைக் காண்பேன்

மஞ்சள் பூக்களை சொரிந்துகொண்டேயிருக்கும்
விசாலமான மரத்தின் கீழோ,
வளைந்து வளைந்து செல்லும்
நூலகத்தின் நடைபாதை வழியிலோ
அல்லது
உண்வுச் சாலைகளின்
இருக்கைகளில் ஒன்றிலோ

அப்பொழுதுகளிலெல்லாம்
புறங்கையால் வாய்பொத்தி
யாருடனாவது
பேசிச் சிரித்துக் கொண்டேயிருப்பாய்

நம் கண்கள் சந்தித்துக் கொள்ளும்
ஒரு கணப்பொழுதில்
எனது கண்ணில்
எதையோ தேடுவாய்
உன்மீது மச்சமிருக்கும்
எனது காதலையா?

அல்லது

எதிர்ப்படும் ஒரு கணப்பொழுதில்
எனக்கு
எதையோ சொல்ல முயல்வாய்
எதைப் பெண்ணே?
இப்பருவ காலத்தின்
உனது புதிய காதலையா?


தலைப்பிடப்படாத கவிதை - 5

எந்தவொரு நாளினதும்
எந்தவொரு மணிகளினது
எந்தவொரு வினாடிகளிலும்
உன்னை நான்
நினைக்காமலிருப்பதில்லை
ஒவ்வொரு நாளினதும்
இனிய மாலைப்பொழுதுகளில்
நாம் சந்திக்காமலிருப்பதுமில்லை
அப்பொழுதுகளிலெல்லாம்
காதலைப் பற்றி மட்டும்
நாம் பேசுவதேயில்லை
பின்,
மாலை மறைந்த இராப் பொழுதின்
துயரம் நிறைந்த கனவுகளில் மட்டும்
நீ என்னைப்
பார்க்காமலேயே போகின்றாய்
எனது
காதலின்
சூடான ஒவ்வொரு கண்ணீர் துளியும்
படிக்கட்டுக்களில் இறங்கி
இலைகள் உதிர்ந்த தெருக்களெங்கும்
உன்னைத் தேடியலைகின்றன

Statcounter