வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

Showing posts with label முதல் இடுகை. Show all posts
Showing posts with label முதல் இடுகை. Show all posts

December 12, 2009

வெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு

நான் 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வலைப்பூக்களின் வாசகனாகிய போதிலும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. எழுத்துத் தொடர்பாக எனக்கிருந்த அவநம்பிக்கைகளும் எழுத்தாளர்கள் தொடர்பான எனது பார்வையில் இருந்த சரிவுகளும் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. ஆயினும் தோழர் ரயாகரன் தொடர்பான பெயரிலி அவர்களது பதிவில் உரையாடியதே எனது முதல் இணைய எழுத்தாகிப் போனது. அவ்வுரையாடலில் இறுகிப்போதலின் வன்முறை தொடர்பாக எனது உரையாடல் அமைந்திருந்தது. 2007 ஒக்டோபர் 27 இல் இருந்து இணையத்தில் பல பெயர்களில் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றேன். எனது உரையாடல்களில் சிலவற்றை அடையாளமற்ற வெளி என்னும் வலைப்பூவில் சேமித்து வைத்துள்ளேன். உரையாடல் களன் ஒன்றைச் சாத்தியமாக்குவது எனது முக்கிய நோக்கமாயிருந்தது. ஆனாலும் அதைச் சாத்தியப்படுத்தல் மிகக்கடுமையான செய்கையாகிப் போயிற்று. 2009 மே 18 இல் அரசியலில் நிகழ்ந்த பெரியளவிலான மாற்றத்துடன் எனது உரையாடல்களை முடித்து மௌனித்துக் கொண்டேன்.

எனது உரையாடல்களின் மூலம் பல புதியவர்களைச் சந்திக்க முடிந்தது. சமூகம் சார்ந்து அக்கறை கொண்ட பலருடன் எனது உரையாடலை நிகழ்த்த முடிந்தது. பெயரிலி, மு. மயூரன், ப. வி. சிறீரங்கன், ரயாகரன், டி.ஜே தமிழன், பேய்ச்சி, அற்புதன், மீராபாரதி, ரதன், திவாகர், வளர்மதி, கொன்ஸ்டன்டைன், த. ஜெயபாலன், பொன். சிவகுமார், ஜெ. ஜென்னி, ரஃபேல் வின்ஸ்டன், தூயவன், சேனன், சபா. நாவலன், நாகர்ஜுனன், ஜமாலன், றஞ்சினி, ராஜன் குறை, ஹரி, சுந்தர், பெருந்தேவி, சுகன் போன்றோரது கருத்துக்களுடனான உரையாடல் பல புதிய விடயங்களை அறிந்துகொள்ள உதவியது. ஆயினும் மீண்டும் நான் முன்னரான மனநிலைக்கே தள்ளப்பட்டேன். இவ்வுரையாடல்களால் எம்மைச் சார்ந்த சமூகம் எதை அடைந்தது என்ற கேள்வி த
விர்க்க முடியாதது. அந்நிலையில் மௌனம் தவிர்க்க முடியாத விடயமாகிப் போனது. யாராலும் தடுத்துநிறுத்த முடியாத அழிவுக்குப் பின்னரான மக்களும் அவர்களது அவலமும் எதையும் பேசவிடாமல் தடுத்தது.

அண்ணளவாக 20 மாதகால உரையாடல்களை நிகழ்த்தியிருந்த நிலையில் ஆழ்ந்த மௌனத்திற்குப் போக வேண்டியநிலை ஏற்பட்டிருந்தாலும் அதன் பின்னர் வாசிப்பை அதிகப்படுத்தியிருந்தேன். கடந்த ஏழு மாதங்களாக வாசிப்பும் போதையும் அதிகமாகியிருந்தன. குறிப்பாக இடைப்பட்ட காலத்தில் திசை மாறியிருந்த மார்க்சியம் தொடர்பான விடயங்களை அதிகமாக வாசிக்க நேர்ந்தது. மார்க்சியம் தொடர்பாக அதிகப்படியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எனது வாசிப்பைச் செழுமைப்படுத்தியிருந்தேன். மார்க்சியம் தொடர்பாக இருவழிப்பட்ட நோக்கோடு வாசிப்பை மேற்கொண்டேன். முதலாவது சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் இருந்து மார்க்ஸ் வரை பின்னோக்கிய திசையில் பயணித்தேன். இவ்வனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதே நேரத்தில் அவ்வாசிப்பிற்குச் சமாந்தரமாகச் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான மார்க்க்சியத்தின் போக்குப் பற்றி வாசிப்பை மேற்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை தற்காலச் சூழலில் மார்க்க்சியத்தை அதன் தூய தன்மையோடும் செழுமையோடும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது என்பது முக்கியமான விடயமாக இருந்த அதே நேரம் இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து மார்க்சியத்தின் வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் என்பது அதிகம் முக்கியமானதாக இருந்தது.

பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அப்பால் இதர அடையாளங்கள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை இணைந்ததான செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியம் என்னும் கருதுகோளை கடந்த ஏழு மாதங்களில் முழுமைப்படுத்த முடிந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களுக்கு அப்பால் செயற்பாடுகள் மற்றும் தீவிரமான அறிவுழைப்புப் போன்றவற்றின் முக்கியத்துவங்கள் தொடர்பான எனது ஏற்கனவேயான கருத்தியல் வலுவடைந்துள்ளதாகவே கருதுகின்றேன். அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக மானுடவியல் துறைகளுக்கிடையிலான இணைவுகள் மற்றும் சாத்தியமான அசைவியக்கங்கள் தொடர்பாகவும் தீவிர கவனம் செலுத்த முடிந்திருக்கின்றது. இது பல புதிய அனுபவங்களையும் உணர்வுகளையும் தீர்மானங்களையும் எனக்குத் தந்துவிட்டிருக்கின்றது.

சொந்தப்பெயரில் எழுதும் புதிய அனுபவத்துடன் என்பயணம் இன்னும் நீண்டகாலத்திற்குத் தொடரப்போகின்றது என்பதை உணரமுடிகின்றது.

December 11, 2009

முதல் இடுகைக்கு முன் இடுகை

அமீபா என்பது எம்முன்னோர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட பெயராகும். அவர் பரவலாக அமீபா என்றே அழைக்கப்பட்டார். அவர் காடு, மேடு, இணையம், பார் எங்கும் அலைந்து திரிந்தார். அவரை தன்னால் எவ்விடத்திலும் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காரணமாக, எம்மூதாதையரான தனித்த அமீபாவின் தன்னிலை இறுக்கம் கொள்ள எத்தனித்த நிலையில் அமீபா தன்னைத்தானே பிளந்துகொண்டார். அதில் இருந்து இருவகையானோர் தோற்றம் பெற்றனர். அவர்கள் நாளெல்லாம் தம்மீது படர்ந்திருந்த அமீபாவின் நிழல்களை உரிந்துகொண்டிருந்தனர். நிழல்களை உரிக்க உரிக்க அமீபாவின் நிழல்கள் தம்மீது கவிவதைக் கண்டு அச்சமுற்றனர். தம்மில் இருந்து அமீபாவின் வாசம் வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அமீபாவின் நிழல்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கருத்த போர்வைகளை போர்த்தவாறு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஒருவர் மிகப்பெரும் புகையில் மாட்டிக் கொண்டு புகையின் வாசத்தை தனக்காக்கிக் கொண்டார். தனக்கு புகை எனப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மற்றவர் சுனாமியில் அகப்பட்டு, சுனாமியை நினைத்து சுனாமி என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார்..

அவர்களால் அதே வாசத்துடனும், இயல்புகளுடனும், பெயருடனும் இறுதிவரை இருக்க்வே முடியவில்லை. அடையாளமற்று தாம் இருக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒருவிதமான அடையாளங்கள் தம்மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். அடையாளம் இழந்து போகும்போதெல்லாம் போகும் இடங்களில் உள்ளது அவர்கள் தொடர்புபடுவதுமான அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மைப் பிளந்து அடையாளமற்ற தன்னிலைகளை உருவாக்கி விட்டு கரைந்து மறைந்து போனார்கள். தமது மூதாதையான அமீபா உடைந்து தாம் இருவராகத் தோன்றியதை விரும்பாத இவர்கள் தம்மை ஒவ்வொருவரும் மூன்றாகப் பிளந்து கொண்டார்கள்.

சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகிய ஆறு பேரும் தோன்றினார்கள். ஆயினும் எவரில் இருந்து யார் தோன்றினார்கள் என்பதை மறைத்துவிட்டே போனார்கள். எம்மீது சுமத்தப்பட்ட ஞாபகங்கள் கூட புகை, சுனாமி ஆகிய இருவரினதுமே. எம்மால் எம்மை வேறுபிரித்து அறிய முடியவில்லை. நம் எல்லோர் மீதும் புகையில் மணமும், சுனாமியின் பயங்கரமும் தெரிகின்றது. இந்த ஞாபகங்களை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் எம்மைச் சந்தித்துக் கொள்வதை தவிர்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களில் உலாவித்திரிகின்றோம்.

ஆயினும், எமது மூதாதையான அமீபா தனது கட்டமைக்கப்பட்ட தன்னிலையை தாங்க முடியாது பிளந்த நாளில் எதேச்சதிகரமாக நாம் 6 பேரும் சந்தித்துக் கொள்கின்றோம். அமீபா எதற்காக தன்னைப் பிளந்து மறந்தாரோ, அவ்வுறுதியை நாமும் எடுத்துக் கொள்கின்றோம். நாம் தன்னிலைகள் இறுக்கமடைவதை விரும்பவில்லை. நாம் அடையாளமற்றவர்கள். எம்மீது அடையாளங்கள் சுமத்தப்படுவதை விரும்பவில்லை. ஒடுக்கப்படவர்கள் எல்லோருடனும் எம்மைத் தற்காலிகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது 'நிரந்தரமாக' இறுக்கம்பெறும் தருணத்தில் எம்மைப் பிளந்து மறைந்துவிடுவோம். அடையாளங்களைச் சுமப்பது எமக்கு மிகவும் வேதனை தருவதாயிருக்கிறது. ஆயினும் செல்லும் இடங்களின் மூலம் அடையாளங்கள் சுமத்தபடுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. அவ் அடையாளங்கள் இறுக்கம் பெறுவதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒவ்வொரு முறையும் எம்மை அடையாள நீக்கம் செய்து கொள்கின்றோம். நாம் எம்மை ஒவ்வொரு முறையும் எம்மை அரசியல் நீக்கம் செய்து கொள்கின்றோம். நம்மை இடைகொரு முறை பால்நீக்கம் செய்து கொள்கின்றோம்.

அப்போது மட்டுமே, புதிய விடயங்களை புதிதாக அணுக முடிகின்றது. நிலைப்பட்ட விடயங்களும், தேங்கிக் கொண்டிருக்கும் அடையாளங்களும் அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்துவிடும் என்பதை நாம் அறிவோம். எமது முன்னோரான அமீபாவின் நோக்கம் அதாக இருந்தது எனக் கூறுகின்றார்கள். விரைவில் நாம் எம்மையும் பிளந்து கொள்வோம். நாம் யார் என்பது எமது பிளவுறும் தன்னிலைகளுக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக ஞாபகப்பரப்புக்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம். எம்மைப்பற்றிய கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் அழிக்கும் நோக்கில் எமது முனோர்களான அமீபா, புகை, சுனாமி ஆகியோரை நினைவில் நிறுத்தியும்-அழித்தும் நாம் கூட்டாக இவ்விடயங்களை எல்லோருக்கும் தெரிவிக்க நினைத்தோம்.

Statcounter