வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

December 21, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 4

அல்லைப்பிட்டியில் தியானம் செய்வதற்கு ஒரு இடம் உருவாக்கியிருந்தீர்கள். தனிப்பட்ட ரீதியில் எத்தகைய அநுகூலத்தைப்பெற்றீர்கள் ?

களைப்படைகின்ற போது ஒரு ஓய்விற்காக ஒரு retreat இற்காகவும் இந்த தியான நிலையத்தை அமைத்தேன். இப்போது அது இராணுவமுகாம் ஆக இருக்கிறது.


நீங்கள் தற்போது அவுஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில், இறுதிக் காலத்தில் எங்கு வாழ விரும்புகிறீர்கள்? சமூகத்திற்கு இன்னும் ஏதாவது செய்யலாம் என்று கருதுகிறீர்களா ?

சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் ஒரு விதத்தில் அகங்காரந்தான். உண்மையில் எங்களுடைய திருப்திக்காகத்தான் செய்கின்றோம். சில மாற்றங்களைக் கொண்டுவரவும் சில வேலைத்திட்டங்கள் ஊடாக மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளக் கூடிய நிலையையும் ஏற்படுத்தலாம்.


நீங்கள் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்ததற்கும் இன்று வெளிநாட்டில் வசிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் ?

இப்போது வெளிநாடுகளில் இருப்பதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை உண்மையில் வெளிநாடுகள் எல்லாம் இப்போ எங்கோ போய்விட்டன. Consumer society, தனிமனித தேவைகள் போன்றவற்றை மையப்படுத்தியதாகக் காணப்படுகின்றன. இதில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆனால் ஒரு பாதுகாப்பான இடம் இங்குபோல் ஒவ்வொரு நாளும் ஷெல்லோ அல்லது குண்டுவீச்சோ என்று பயமில்லை. ஆனாலும் இப்போது வெளிநாடுகளிலும் இவை வந்துவிட்டன. பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம், போதைமருந்து இப்படியான பிரச்சினைகளும் இருக்கின்றன. அதுமட்டுமன்றி street violence போன்றவையும் காணப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து தப்பி ஓரிடத்திற்கு போகலாம் என்றும் இல்லை.


ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்பதை துயரமாக நினைக்கின்றீர்களா?

ஒருவரை ஓரிடத்தில் இருந்து வெளியேற்றுவது என்றால் துயரமானது. உண்மையிலே ஒருவர் ஓரிடத்தில் வந்து பிறப்பது என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது. அதிலிருந்து வேறுஇடத்திற்குப் போவது என்பது பிழை. அந்த இடத்தில் அவர் வாழவேண்டும். நாங்களாகவே வெளியேறுவது வேறு. மற்றவர்களால் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றப்படுவது என்பது வேறு.


மேற்கு நாடுகளில் வாழ்ந்திருக்கிறீர்கள். அதே நேரம் யாழ்ப்பாணத்திலும் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறீர்கள். மக்களது உளவியல், சமூகவியல் சம்பந்தமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் அல்லது அவதானித்திருந்தீர்கள். யாழ்ப்பாண சமூகத்திற்கு தனித்துவமான உளப்பாங்கு எதாவது இருக்கின்றதா ?

உண்மையில் எல்லா சமூகங்களுமே ஒரே மாதிரித்தான். நான் அமெரிக்காவில் இருந்து வந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பழைய விழுமியங்கள் பண்பாடுகள் இருந்தன. பாரம்பரிய முறைகளில் ஆழமான விடயங்களைக் காணமுடிந்தது. மேற்கில் இல்லாத ஆழம் அங்கிருந்தது. எங்களுடைய சமய விளக்கங்கள், வழிபாடுகளில் நல்ல அர்த்தங்களைக் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த மண்ணில் பிறந்த படியால் எனக்கு அது பொருத்தமானதாக இருந்தது. மேற்கத்திய நாடுகளில் கண்டுகொள்ளமுடியாததை அந்த மண்ணில் காண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைக் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலேதான் நான் பிறந்ததிற்கான காரணங்களும் வாழ்க்கையில் நான் கேட்ட கேள்விகளுக்கான முடிவுகளும் இருந்தன. என்னுடைய உணர்வும் அங்குதான் இருக்கிறது.


போரை நோக்கிச் செல்வதற்கு மக்களும் ஒரு காரணமாக இருந்திருக்கின்றார்களா ?

ஆம். Hierarchical அமைப்பு, சமூகம் பெண்களை நடாத்திய விதம் எத்தனையோ வருடங்களாக அடக்குமுறை இருந்திருக்கிறது. இதை நல்ல விடயமாகச் சொல்ல முடியாது. இப்படியான கொடுமைகள் இருந்திருக்கின்றது. எங்களுடைய சமூகத்தில் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் அவ்வளவாக மேற்கிளம்பவில்லை. மேலாதிக்கம், சாதிரீதியான ஒடுக்குமுறை சமூகத்தின் அமைப்பில் (Structure இல்) இருக்கின்றது. ஒவ்வொரு சாதியும் (தங்களைப்) அவர்களைப் பார்க்கின்ற முறைமை தங்களை மதிக்கின்ற விதம் இருந்துகொண்டே இருக்கிறது. போரினால் இவை ஓரளவிற்கு மாற்றமடைந்துள்ளன. பெண்களுக்கும் ஓரளவு சுதந்திரம் வந்திருக்கின்றது. பெண்களும் தாங்கள் நன்மையானவற்றை செய்ய, தம்மாலும் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது. இவையெல்லாம் போரினால் வந்த நன்மையான மாற்றங்கள். சமூகத்தை உடைப்பற்கான ஒரு காரணமாகப் போரைச் சொல்லலாம்.


இருபது வருடங்களுக்ளுக்கும் மேலாக யுத்தம் நிகழ்ந்து வரும் வேளை தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எத்தகைய துன்பம் அல்லது நெருக்கீட்டை எதிர்கொண்டீர்கள் ?

தனிப்பட்ட ரீதியில் suffer பண்ணியது என்று சொல்ல முடியாது. எனக்குத் தியானத்தில் நல்ல ஈடுபாடு இருக்கின்றது. அதுதான் என்னை நெருக்கடிகளில் இருந்து விடுபட உதவியது. அல்லைப்பிட்டி போன்ற இடங்களை நாடிப்போனது, யோகாவில் ஈடுபட்டுக் கொண்டது எல்லாம் ஒரு சமநிலையைப் பேண உதவியது. கடும் நெருக்கடிகள் இருந்த போதும் அவற்றில் இருந்து விடுபட்டுச் செயற்பட ஆன்மீக ஈடுபாடும் தொழிலும் உதவியது. எல்லோருக்குள்ளும் ஒரு துயரம் இருந்துகொண்டுதான் இருந்தது. 1983 இல் இங்கு (கொழும்பில்) கலவரம் நடக்கும் போது அங்கு யாழ்ப்பாணத்தில் நான் நிற்கும் போது சுடப்பட்டு நிறையப்பேர் தெல்லிப்பளை ஆஸ்பத்திரிக்கு வந்தார்கள். அந்த நேரத்தில் கஸ்டப்பட்டு வந்தவர்களை பராமரிக்கின்றதோ அல்லது அவர்களது தேவைகளை கவனிக்கின்றதோ எல்லாம் செய்யக் கூடியதாக இருந்தது. இப்போது நான் அவ்விடயங்களைச் செய்வேனோ தெரியாது.


போரினால் ஏற்பட்ட collective trauma கம்போடியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு எப்படி இருந்தது ?

கம்போடியாவில் மிக மோசமாக இருந்தது. நான் கம்போடியாவில் இருந்தபோது யாழ்ப்பாணத்தின் நிலமை மற்றைய இடங்களுடன் ஒப்பிடுகையில் பரவாயில்லை மாதிரி இருந்தது. ஆனால் இப்ப உள்ள நிலமையைப் பார்க்கின்ற போது அது மிக மோசமாகப் போய் விட்டது போலேதான் தெரிகின்றது. இப்படியே போனால் நாம் கம்போடியாவின் நிலையை விரைவில் அடைவோம். அதாவது அடிமட்டம் - ground zero நிலைமையை அடைவோம். குடும்ப அமைப்புக்கள், குடும்ப செயற்பாடுகள், சமூக நிர்வாகங்கள் எல்லாமே உடைந்து போய்விடும். ஒன்றுமில்லாத நிலை அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.


உங்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றதா ?

வரலாற்றைப் பார்க்கும் போது நம்பிக்கை கொள்ளமுடிகிறது. ஒரு கட்டத்தில் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவார்கள். சமூகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவரும். எந்தக் கட்டத்திலே வரும் என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறது. எவ்வளவிற்கு இன்னும் அழிவு நெருங்க வேண்டுமோ, எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ என்பவை ஒரு கேள்வியாகத்தான் இருக்கின்றன. இன்றைய வடகிழக்கு நிலமையை பார்க்கின்ற போது போரில் ஈடுபடுகின்றவர்களைவிட பொதுமக்கள்தான் பெரும் அழிவிற்கும் மீளமுடியாத துயரத்திற்கும் உட்பட்டு வருகின்றார்கள். போரில் ஈடுபடுகின்றவர்கள் களைப்படைவதைவிட மக்களே களைப்படைந்து அதிக நெருக்கடிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கிற போது மக்கள் அழிவடைந்த பின்னர் தான் போர் முடிவுக்குவரும் போல் தெரிகிறது. இன்றைய உலகில் போர்கள் மக்களின் அழிவைத்தான் விரும்புகின்றன. யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட, மக்கள்தான் எல்லாவிதத்திலும் அழிகின்றார்கள்.


மீண்டும் எதிர்காலம் நம்பிக்கையானதாக இருக்கின்றது. பழைய நிலைக்கு மக்களது வாழ்வு திரும்பும் என்பதை எதை அடிப்படையாக வைத்துக் கூறுகின்றீர்கள் ?

ஒன்று வரலாறு. மற்றது எல்லோருக்கும் வயது வரும். மேலும் வெளிச்சக்திகளின் தலையீடு. இந்த வெளிச்சக்திகளின் தலையீடு கூடிக்கொண்டு செல்கின்றது. அந்த வெளிச்சக்திகள் இதைக் கட்டாயப்படுத்தி ஒரு முடிவிற்கு கொண்டுவர முயலும். ஐரோப்பாவில் hundred years war என்று நடந்திருக்கின்றது. ஆனால் எங்களுடைய நாட்டில் அவ்வளவு காலத்திற்கு நீடிக்கலாம் என்று நான் நினைக்கவில்லை.

நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த காலம் ?

போர் தொடங்குவதற்கு முன்னிருந்த காலம். 1983 இற்கு முன்பு, பிறகு 2002 இல் சமாதானம் நிலவிய காலம். 1995 இல் சமாதானம் நிலவிய காலத்தையும் குறிப்பிடலாம்.


இன்றைய உளவியல் எவ்வாறு இருக்கிறது?

மேற்கத்தேய நாடுகளில் உளவியலின் முக்கியத்துவம் உணரப்பட்டு அது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு எல்லாத்துறைகளிலுமே அது முக்கிய இடத்தை எடுத்திருக்கின்றது. எல்லாவற்றையும் உளவியல் ரீதியாக பார்க்கின்ற தன்மையும் வந்திருக்கின்றது. நாடகங்களில், கதைகளில் என்று எழுத்தாளர்கள் உளவியலைப் பார்க்கின்ற தன்மை ஒன்று வந்திருக்கிறது. ப்ரெய்ட் இனது காலத்தில் இருந்துபார்க்கும் போது இதுபற்றிய இன்றைய ஆராய்ச்சி எங்கேயோ போய் இருக்கிறது. மூளை பற்றிய ஆராய்ச்சியை Left Brain - Right Brain என்று வேறுபடுத்தி உளவியல் ரீதியாக ஆராய்வு செய்கின்றனர். இது கூடிப்போய் விட்டதோ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அதிகளவில் Psychological ஆகப் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.


உளவியல் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளில் உங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பது ?

அவுஸ்திரேலியாவில் யூப்ளி யொங் என்று என்னோடு வேலை செய்கின்ற ஒருவர் இருக்கின்றார். அவருடைய எழுத்துக்களும் சிந்தனைகளும் எனக்குப் பொருத்தமானதாய் இருப்பதாக உணர்கின்றேன். அவருடைய கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.


நீங்கள் தற்போது எவ்வகையன நூல்களை திரும்பவும் வாசிக்க விரும்புகின்றீர்கள்?

எங்களது பழைய தேவார திருவாசகங்களில் ஈடுபாடு இருக்கிறது. திருவாசகத்தில் மிக ஆழம் இருப்பதாக உணர்கிறேன். 1987 வரை நான் சேர்த்து வைத்த புத்தகங்கள் ஷெல் தாக்குதல் காரணமாக அழிந்து விட்டன. இப்போது கடந்த 5 நாட்கள் யாழ்ப்பாணம் போய்விட்டுத் திரும்பும் போது 3 புத்தகங்களை எடுத்து வந்தேன். திருவாசகம், தாயுமானவர் மற்றது திருக்கோவையர் இந்த மூன்றையும் தான் வாசிப்பதற்கு என்று கொண்டு போகிறேன்.

(முடிந்தது)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

December 20, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 3

நீங்கள் உளமருத்துவத் துறைக்கு வரமுன்பும்சரி வந்த பின்பும்சரி மனிதர்களுடைய நடத்தைகளை அவதானிக்கின்றவர் என்ற வகையில் சமூகம் உங்களை எவ்வாறு பார்த்தது, பார்க்கிறது ?

உண்மையில் ஒருவிதத்தில் சமூகத்தில் இருந்து விலகி இருந்தேன். ஒன்பது பத்து வயதிலே வேடங்களைப் போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். பிச்சைக்காரன் மாதிரித் திரிவேன். பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இதிலே நோக்கம் என்று இல்லை. பிச்சைக்காரன் என்றால் எப்படி இருப்பான். மற்றவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதை அறியும் ஆர்வம் இருந்தது. எவரும் என்னை யார் என்று கண்டுகொள்ளமாட்டார்கள்.


இப்படி நீங்கள் வேடம் போட்டு திரிவதை ஒரு ஆராய்ச்சிக்காக என்று சொல்லலாமா ?

அப்படி நான் சொல்ல மாட்டேன். அது என்னுடைய போக்கு. நான் அமெரிக்காவில் படித்துவிட்டு திரும்பி வந்தகாலம் நீண்ட காலம் பிரச்சினைகள் எங்கும் இருக்கவில்லை. ஈராக் - ஈரான் - ஆப்கானிஸ்தான் எங்கும் பிரச்சினைகள் இருந்ததில்லை. hiking என்று ஒரு முறை இருக்கிறது. ரிக்கற் வாங்கிப் பிளேனில் போகாமல் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போய் அங்குள்ள மக்களை அறிந்து கொள்வது. இப்படி பல்வேறு நாடுகளுக்கூடாகப் பயணம் செய்திருக்கிறேன். முதுகிலே ஒரு ‘moving bed’ மாதிரி ஒன்றை கொழுவிக் கொண்டு போவேன். அதை அந்த இடத்திலேயே போட்டுவிட்டுப் படுக்கலாம். இதைப் போட்டுக் கொண்டு ஐரோப்பாவில் இருந்து இலங்கைவரையும் வந்தேன். இதற்குப் பல மாதங்கள் எடுத்தது. ஒவ்வொரு நாட்டிலும் நின்று அங்குள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றார்கள் என்று பார்த்து அவர்களுடன் கதைப்பது வித்தியாசமான ஒரு அனுபவம்.


எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள் ?

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும். கிழக்கு ஐரோப்பாவில் பல்கேரியா, யூகோஸ்லாவியா, துருக்கி மற்றும் ஈராக் இப்போது சண்டைகள் நடக்கின்ற இடங்கள், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்.


இந்தப் பயணங்களின் பினனர் இலங்கை வந்து என்ன செய்தீர்கள் ?

இது உங்களுக்கும் மிக interest ஆக இருக்கும். இலங்கையில் கிட்டத்தட்ட ஒருவருடம் படிப்பு முடிந்த பிறகு சும்மா திரிந்தேன். அப்பதான் கமம் செய்ய வேணும் என்று வெளிக்கிட்டனான் என்று சொன்னேன். யாழ்ப்பாணத்தில் கள்ளுக் கொட்டிலுக்குப் போய் இரவாகி மூடும் வரையும் அங்கு இருப்பேன். கொஞ்சம் குடித்துவிட்டு அவர்கள் பாடுகின்ற பாட்டுக்களை, அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். இது purpose இற்காகச் செய்ததில்லை. அங்கு போய் இருந்தால் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதேபோல சந்தையில் போய் இருப்பது. சந்தையில் என்ன நடக்கிறது, என்ன கதைக்கின்றார்கள் என்று பார்ப்பது என்று சும்மா சுற்றித்திரிவேன். இது அமெரிக்காவில் இருந்து வந்த காலத்தில் மருத்துவம் பயில முன்பு சுற்றித்திரிந்த காலம். இந்தியாவிற்குப் போய் மருத்துவம் படிக்கும் போதும் இந்தியா முழுவதும் சுற்றினேன் - பயணம் செய்தேன். Train இல் ஊர்சுற்றுவது. இந்தியாவில் Train இல் பயணம் செய்வது மிகவும் மலிவு. அத்தோடு எல்லா இடமும் போகலாம். Train ஒவ்வொரு ஊரிலும் நிற்கும் போது அந்த இடத்திலே இறங்கிச் சுற்றித் திரிந்து விட்டு பிறகு ஏறிப் போவது என்று traveling ஒரு பொழுது போக்காய் இருந்தது. இப்போது traveling என்றால் பெரிய கஸ்டம். மேலும் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று போய் இருக்கிறேன் இது சும்மா ஒரு சுற்றல்தான்.


இந்தப் பயணங்களினூடாக வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் வெவ்வேறு மொழிகளைப் பின்பற்றும் மக்களை சந்தித்திருப்பீர்கள். மேற்கு நாட்டவர்கள் கீழைத்தேசத்தைப் பார்க்கின்ற சிந்தனைமுறை வேறுபட்டது. இது பற்றிய உங்களது அனுபவம் எவ்வாறு இருக்கின்றது?

நான் படித்தது மேற்கத்திய கல்விமுறையில். மேலைத்தேச முறைக்கூடாகவே எனது பார்வையும் ஆரம்பத்தில் இருந்தது. படிப்படியாக நான் மாறினேன். ஆனால் அமெரிக்காவில் படித்தகாலம் பல்வேறு சிந்தனைகளுக்கு களமாக அமைந்தது. எமது கலாசாரத்தை எமது (Roots) வேர்களைத் தேடிச் செல்கின்ற, செல்ல வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது. மாட்டின் லூதர்கிங், மல்கம் எக்ஸ் ஆகியோர் இருந்த காலம். கூடியளவு மாணவர்கள் வியட்னாம் போருக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். போரை நிறுத்தியவர்கள் அவர்கள்தான். அந்தக்காலத்தில் இருந்து போரில் ஒருவித விரோதத்தன்மை இருந்து வந்தது. போர்தான் மனிதவாழ்க்கையில் நடக்கக்கூடியவற்றில் மிகமோசமானது என்று கூறுவேன்.


வியட்னாம் போர்தான் 'போர்' தொடர்பான இந்த எண்ணத்தை உங்களிடம் ஏற்படுத்தியதா ?

போர் என்றால் என்ன என்பதை உண்மையாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.


ஊடகங்களிற்கு ஊடாகத்தானே நீங்கள் பார்த்திருப்பீர்கள் ?

பல்கலைக்கழகங்களில், ஊடகங்களில் போர் எப்படிக் காட்டப்படுகின்றது என்பதுபற்றி மாணவர்கள் கதைப்பதைப் பார்த்தேன். ஒவ்வொரு நாளும் இவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டது என்பதை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள், அதிகாரத்திற்காக (Power) பிரசாரம் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப்பற்றி மாணவர்கள் கதைத்துக் கொண்டதை, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அமெரிக்காவும் நிக்சனும் அதிகாரத்திற்காக எவ்வாறு பிரசாரம் செய்தார்கள், இந்த வியட்னாம் போராளிகளைப்பற்றி எப்படி எண்ணிக்கையை மாற்றிக் காடடினார்கள் என்பதைப்பற்றி அறிய முடிந்தது. வியட்னாமில் என்ன நடந்தது, போர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதை அங்கிருந்த போது உணர்ந்து கொண்டேன். தனி மனிதர்களுடைய தேவைகளுக்காக, அதிகாரத்திற்காக போர் செய்யப்படுகின்றது என்பதை அந்த நேரத்தில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

பல்கலைக்கழகத்தில் படிக்கிற போது அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் வேலை செய்தேன் - ஒரு உணவு விடுதியில் வேலை செய்தேன். என்னுடைய சக ஊழியர் வியட்னாமில் டீ-52 விமானங்கள் குண்டு வீசுவதற்கு Bombardier ஆக இருந்தவர். Bombardier என்றால் அந்தநேரத்தில் பிளேனில் இருந்து குண்டுகள் வீழ்வதற்கு அவர்தான் பொறுப்பு. நாங்கள் மணித்தியாலக் கணக்காக இருந்து கதைப்போம். அப்போது அவர் பல கதைகளைச் சொல்வார். டீ-52 விமானங்களில் இருந்து வியட்னாம் முழுவதும் குண்டு வீசப்பட்டது. அவர் சிலகாலத்திற்குப் பிறகு வியட்னாமிற்குப் போனார். ஒரு வருடம் குண்டு வீசுவதற்குப் பொறுப்பாய் இருந்தவர். லீவு கிடைத்த பின்னர் குண்டுவீசப்பட்ட இடங்கள் எப்படி இருக்கின்றது எனப்பார்ப்பதற்காகச் சென்றபோது, நேரடியாகக் குண்டுகள் வீழ்ந்த இடத்தை, அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்த போது அவருக்குப் பெரிய அதிர்ச்சியாகப் போய்விட்டது. மனதிற்குள் ஒரு வெறுமை - வெற்றிடமாகப் போய்விட்டது. இதனால் அவர் திரும்பி வந்து வேலையை விட்டுவிட்டு உணவுவிடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். உண்மையில் அங்கு அவரும் நானும் செய்தது பீங்கான் கழுவுகின்ற வேலை. அந்நேரத்தில் இவையெல்லாம் போர் பற்றிய ஒரு படிமானத்தை எனக்குள் ஏற்படுத்தியது. 1ம் உலகப் போர், 2ம் உலகப் போர் போன்றன ஏன் ஏற்பட்டது? எவ்வாறு நடைபெற்றது? என்பதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்தது. Economic reason என்ன என்று பார்க்கின்ற போது போர் பற்றிய மிக மோசமான கருத்துநிலையைத் தோற்றுவித்தது.


இலங்கையில் தமிழ்மக்கள் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக உரிமைகேட்டு பல்வேறு வழிகளில் போராடிவருகின்றார்கள். சாத்வீகப் போராட்டங்கள் தோற்ற நிலையிலேதான் ஆயுதப் போராட்டம் தோன்றியது. தமிழ் மக்கள் தற்காப்பிற்காகத்தானே போராடி வருகின்றனர். இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

எனக்கு இது வீணானது போலத்தான் எரிச்சலூட்டுகிறது. போர் மனிதர்களாலேதான் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவைகளைப் பார்க்காமல் யுத்தத்தில் ஈடுபடுகின்றவர்களின் தேவைகளுக்காகத்தான் போர் நடை பெறுகின்றது. தங்களுடைய தேவைகள், தங்களுடைய அதிகாரம் இவற்றுக்காகத்தான் நிகழ்கிறது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இது விளங்கும்.


எந்தப் பக்கத்தில் நியாயம், நியாயம் இல்லை என்றெல்லாம் நீங்கள் பார்க்க மாட்டீர்களா ? பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து சாத்வீகப் போராட்டங்களில் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாற்றான் தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்திற்கு மாறினார்கள். இல்லையா?

அப்படித்தான் போதிக்கப்பட்டிருக்கின்றது. புகட்டப்பட்டிருக்கின்றது. உண்மையாக ஒரு சாத்வீகப் போரோ அல்லது அகிம்சைப் போரோ நடக்கவில்லை. நீங்கள் இப்போது 1983 இற்குப் பிறகு நடந்தவற்றை அதற்கு முதல் நடந்தவற்றோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றது. இபோது யாழ்ப்பாணத்தைப் போய்ப் பாருங்கள் யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகள் எவ்வளவு என்று புரியும். எங்களுடைய கல்வியைப் பாருங்கள். நான்காம் வகுப்பில் அடிப்படை மொழிஅறிவு பற்றி ஆய்வு செய்திருக்கின்றார்கள். நாடுமுழுவதும் தமிழ், சிங்களம் இரண்டிலும் அவ்வாய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் யாழ்ப்பாணம் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆக, யுத்தத்தால் வந்த அழிவுகளை அதற்கு முதல் நடந்தவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். உதாரணமாக திருகோணமலையில் இருக்கின்ற தமிழர்கள் திருகோணமலை நகரத்திற்கு வெளியில் இல்லை. colonization ஐத் தவிர்க்கத்தான் போர் என்றுதான் சொல்கிறார்கள் . ஆனால் போரால் colonization தான் ஏற்பட்டிருக்கிறது. போரால் வந்த நன்மையை விடத் தீமைதான் அதிகம். முந்தைய நிலைமைகளிலும் பார்க்க எவ்வளவு மோசமாய் இருக்கின்றோம்.

போராட்டம் என்று பார்த்தால் அகிம்சை வழியில் போராடும்போது தான் மக்களுடைய பங்களிப்பு இருக்கும். போராட்டம் என்று வரும்போது மக்களுடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆயுதப் போராட்டம் என்று வருகின்ற போது சில மனிதர்களின் கைகளில்தான் ஆயுதம் இருக்கும். அவர்கள்தான் தீர்மானம் எடுப்பார்கள். போர் வெற்றிகரமாக முடிந்தாலும் அவர்களின் ஆட்சிதான் நடக்கும்.


போர் வெற்றிகரமாக முடியும் என்று நம்புகின்றீர்களா ?

உண்மையில் போர் என்றும் வெற்றிகரமாக முடிவதில்லை. போரில் எவரும் வெற்றிபெறுவதில்லை. சில குழுக்கள் வெற்றியடையலாம். மக்களுக்கு எதுவும் அழிவுதான். நோக்கங்கள் மக்களுக்கு பொருத்தமான நோக்கங்களா என்பதெல்லாம் பிரச்சினை. விடுதலைக்கான போர் என்று சொல்வதில் விடுதலை என்றால் உண்மையில் என்ன என்று கேள்வி எழுகின்றது. இன்று ஈராக்கில் நடைபெறும் குண்டு வெடிப்புக்களில் கொல்லப்படுவது ஈராக்கியர்கள்தான். அவர்கள் தங்களுக்குள் தாங்களே அடிபட்டுக் கொள்கிறார்கள். இங்கும் தமிழர்களே தமக்குள் அடிபட்டு இறக்கின்றார்கள். இது கிட்டத்தட்ட auto genocide ஆகப் போய் விட்டது. போராட்டத்தில் இது வெற்றியா ?

போர் ஆரம்பிக்கமுதல் தமிழர்களின் சதவீதம் 30 ஆக இருந்தது. இப்போ பிரித்து விட்டார்கள். முஸ்லிம் என்றும் மலையகம் என்றும் - வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்திருக்கிறார்கள். அதேநேரம் நாட்டை விட்டு வெளியேறியவர்களின் தொகையைப் பாருங்கள். இலட்சக்கணக்கில் வெளியேறிவிட்டார்கள். இப்போது நாங்கள் 10 வீதத்திற்குக்கும் குறைவாக கீழே வந்து விட்டோம். இப்போது யாழ்ப்பாணத்தைப் பாருங்கள் சனத்தொகை 3 இலட்சத்திற்கு வந்துவிட்டது. வயோதிபரும் பெண்களும் தான் மிஞ்சுகின்றனர். இந்தக் காரணங்களால் தான் போர் எனக்கு உடன்பாடற்றதாக இருக்கின்றது. போரின் விளைவுகள், கால் இழந்தவர்கள், அங்கவீனமானவர்கள் இவை எல்லாம் போருக்கு எதிரான கருத்தை ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் ஏற்படும் மிகவும் மோசமான ஒரு நிகழ்வு போரே.


நீங்கள் மட்டுமல்ல சாதாரண தமிழர்களைக் கேட்டாலும் சமாதானத்திற்கு ஆதராகவே கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 86 வீதமான சிங்களவர்கள் போருக்கு ஆதரவாகவே கருத்தத் தெரிவித்துள்ளனரே ?

சிங்கள மக்கள் யுத்தத்தை விரும்புகிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தடவையும் அவர்கள் சமாதானத்திற்கே வாக்களித்துள்ளனர். ஊடகங்கள் சில கருத்துக்களை ஊட்டி மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சில கருத்துக்களை ஊட்டி மக்களை அப்படியான முடிவை எடுக்கப்பண்ணலாம். உண்மையாக மக்கள் போரை விரும்புகிறார்கள் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்தக் கருத்துக் கணிப்பில் சில குறைபாடுகள் இருக்கின்றது என்றே என்னால் கூற முடியும்.


யுத்தம் எப்போது முடிவிற்கு வரும் என்று கருதுகின்றீர்களா ?

இருதரப்புக்களும் களைப்படைகின்ற போது யுத்தம் செய்து பயனில்லை என்று வருகின்ற போது யுத்தம் நின்றுவிடும்.

(இன்னும் வரும்)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2

December 19, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 2

உங்களுக்கு உளநலத்துறை மீது ஆர்வம் எப்போது ஏற்பட்டது எனக்கூற முடியுமா?

சிறுவயதில் இருந்தே எனக்கு psychiatric இல் ஆர்வம் இருந்து வந்துள்ளது. மனிதர்களின் போக்குகள், அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களின் நடத்தை, மனதிலே என்ன எண்ணங்கள் இருக்கின்றது, எவற்றிலே ஈடுபாடு கொள்கிறார்கள் என்பது பற்றிய சிந்தனை இருந்து வந்தது. உளமருத்துவத்தைப் படிப்பதற்கு முதலே மனிதர்கள் என்ன செய்வார்கள், என்ன எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கப்பார்க்கின்ற, அறியமுயற்சிக்கின்ற தன்மை இருந்தது. நான் வளர்ந்து வருகின்ற போது இவற்றைப்பற்றி வாசிப்பது, கேட்பது, மனிதர்களது எண்ணங்கள், நடத்தைகள் பற்றிய படங்களைப் பார்ப்பது என அதிகம் psychiatric சார்ந்த விடயங்களிலேயே ஆர்வம் கொண்டிருந்தேன். சாதாரண படங்களைப் பார்ப்பதைவிட இப்படியான படங்களையே விரும்பிப்பார்ப்பேன். அந்த ஒரு perspective இருக்கிற படங்களைப் பார்ப்பதில் இயல்பாகவே ஈடுபாடு இருந்தது. இவ்விடயங்களைப்பற்றிச் சிந்திப்பது, உரையாடுவது என்று சிறுவயது முதலே இத்துறை சார்ந்த உந்துதல் இருந்தது.

அக்காலத்தில் நான் கதைப்பதற்குக்கூட ஆட்களைத் தேர்ந்தெடுத்துத்தான் கதைப்பேன். சந்திக்கின்ற பெரியோர்கள் என்றாலும் அதிகமாக இந்த நோக்கத்திலேயே சிந்திக்கின்ற, கதைக்கின்ற ஆட்களைத்தான் தேர்ந்தெடுத்து அவர்களோடு உரையாடுவேன். மனிதனது நடத்தைகள் சிந்தனைகள் பற்றிய தேடல் உள்ளவர்களைக் காட்டிலும் மனித நேயம் மிக்கவர்களில் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்தது. இந்த வகையில் காந்தி மீது அவரது நூல்கள் மீது ஈடுபாடு இருந்தது. சிலருக்கு வரலாறுகள், பெரிய அரசர்களாக இருந்தவர்கள் மீது ஈடுபாடு இருக்கும் எனக்கு அவற்றில் - வரலாற்று நாயகர்கள் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. கூட மக்களோடு உறவாடி அவர்களைப் பற்றிச் சிந்தித்த அவர்களில் ஈடுபாடு காட்டியவர்கள் மீது ஆர்வம் இருந்தது. அவர்கள் எப்படிச் சிந்தித்தார்கள் என்பதை நான் சிந்தித்துப் பார்ப்பேன்.


உங்களுக்கு இயல்பாகவே உளநலத் துறை மீது ஆர்வம் வந்ததென்று என்று கூறுகின்றீர்களா?

ஓரளவிற்கு எனது பெற்றோர் மற்றது வளர்ந்தசூழல், சுற்றாடலில் இருந்த பெரியோர்கள் காரணமாக இருந்திருந்திருக்கிறார்கள்.


பிறந்து வளர்ந்த சூழல், உங்களது ஆரம்பகால வாழ்க்கை, உளநல மருத்துவராக வர முன்பு இருந்த ஈடுபாடு பற்றி:

பிறந்தது யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில். ஆரம்பத்திலே யாழ்ப்பாணத்திலேயே வசித்தோம். பின்னர் கொழும்பில். 11 வயது வரை கொழும்பிலேயே இருந்தேன். அப்பா 1987 - 1988 வரையும் கொழும்பில் தான் இருந்தார். பின்னர் UN வேலை ஒன்றிற்காகத் தாய்லாந்து போனார். முதலில் தாய்லாந்தில் இருந்து அங்கு ஒரு International School இல் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு 1967 இல் சென்றேன். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எனது முதலாவது பட்டப்படிப்பை மேற்கொண்டேன். முதலாவது degree இல் ஆரம்பத்தில் engineering செய்வதே எனது நோக்கமாக இருந்தது. அப்போது பாடங்கள் கூட எனக்கு பொருத்தமானதாக - Maths போன்றவை ஈடுபாடு மிக்கதாக அமைந்திருந்தன. அங்கு போனபிறகு சிந்தனை மாறியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒரு விரிந்த கற்றலுக்கு ஏற்ற இடம். கட்டாயம் 4 Subject தான் எடுக்க வேண்டும் என்றில்லை. மற்றையது, போன காலமும் மிக வித்தியாசமான ஒரு காலப்பகுதி. வியட்னாம் போருக்கு எதிரான பிரசாரங்கள் பல்கலைக்கழகங்களுக்குள்தான் நடந்ததன. ஒவ்வொரு நாளும் இதைப்பற்றிக் கதைப்பார்கள். எதிர்ப்பு நடவடிக்கைகள், கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கும்.

மற்றையது, roots (வேர்கள்) தொடர்பான தேடல்கள். எங்கு இருந்து வந்ததோம் என்பது பற்றிய சிந்தனை, ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்குள் இருந்தது. எனக்கும் அவைகளைக் கேட்டு அங்கு நடந்தவற்றைப் பார்த்து சிந்திக்கின்ற போது என்னைப் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டது. நான் எங்கிருந்து வந்தேன், என்ன செய்கிறேன் என்பது பற்றி அறியும் ஆர்வம் வந்தது. இதனால் என்னுடைய பாடங்களை எல்லாம் மாற்றினேன். உளவியலை ஒரு பாடமாக தெரிந்து கலைத்துறைப் பாடங்களைத் தெரிவுசெய்தேன். மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும் போல் இருந்தது. course முடிய திரும்ப இங்கு வந்தேன். என்னோடு அமெரிக்காவில் படிக்கவந்த எல்லோரும் அங்குதான் இருக்கிறார்கள் திரும்பி வரவில்லை. இலங்கை மட்டுமல்ல எல்லா நாடுகளில் இருந்து வந்தவர்களும் திரும்பத் தங்கள் நாட்டிற்குப் போகவில்லை.

உளவியலைப் படித்து விட்டு இங்கு வந்து கமம் செய்ய வேண்டும் என்று வெளிக்கிட்டேன். பரந்தனில் எனது நண்பர் ஒருவர் இருந்தார். அவரும் ஒரு எஞ்சினியராக இருந்து பின்னர் கமம் செய்தவர். நாங்கள் கமம் செய்வது வீட்டில் பெரிய ஒரு பிரச்சினையாகிவிட்டது. அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து தோட்டம் செய்வது என்பது குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. என்னை வற்புறுத்தி திரும்பப் படிக்க வைத்தார்கள். Medicine படிக்க ஒழுங்கு செய்து இந்தியாவிற்கு அனுப்பினார்கள். Medicine னிற்குள்ளும் எனக்கு Psychology மீதுதான் ஈர்ப்பு ஏற்பட்டது. Anatomy என்றாலும் Brain இல் தான் ஈடுபாடு. Psychology படிக்கும் போது Neuro Psychology எனது ஆராய்ச்சிக்குரியதாக இருந்தது. இந்தியாவில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சிறிது காலம் வேலைசெய்தேன். பிறகு Psychology துறைக்கு வந்துவிட்டேன். தொடர்ந்தும் அந்தத் துறையிலேயே இருந்து வருகின்றேன். Medicine இற்கு பிறகு Psychology இல் நான் Post graduate செய்தேன்.


நீங்கள் பட்டப் பிற்படிப்பிற்காக Psychology (உளமருத்துவம்) ஐத் தெரிவு செய்யும் போது வீட்டில் எத்தகைய எதிர்பார்ப்பு இருந்தது?

நான் உளமருத்துவம் தான் பயிலப் போகிறேன் என்றபோது வீட்டில் அம்மா உடனே “ஏன் இந்தத் துறைக்குள் போகிறாய் மகன்” என்று அழுதார். எனக்கு Psychology என்பது Natural. இந்தத் துறைக்குள் வேலை செய்யும் போது எனக்கு எந்தக் கஸ்டமும் இல்லை. ஒரு பிரச்சினையைக் கேட்பதோ அல்லது அதனை அணுகுவதோ அதை ஆராய்வதோ கஸ்டமாக இருந்ததில்லை.


மனப்பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது பிரச்சினைகளைச் சொல்கின்ற போது அவர்களது அனுபவங்கள் உங்களைப் பாதித்ததில்லையா?

அது ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்ததை உணர்ந்திருக்கிறேன்.


உளமருத்துவராக வருவதற்கு முன்பும் - அந்தத் துறையைத் தெரிவுசெய்வதற்கு முன்பும் - உங்களது ஆளுமை இல் எத்தகைய மாற்றத்தை உணருகின்றீர்கள் ?

நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஒன்று கூடிய விளக்கங்கள் கூடியளவு தெளிவு வந்திருக்கிறது. இன்னொன்று என்னை இத்துறைக்குள் ஆழமாக இழுத்துக் கொண்டு போய் இருக்கின்றது. உண்மையாக நான் வெளிக்கிட்டதிலும் பார்க்க வேறு எங்கோ போனது போல உணர்ந்திருக்கிறேன். திரும்பி கொஞ்சம் வரவேண்டிய தேவை இருந்திருக்கிறது. கூட இதற்குள் involve ஆகியதால் இளமையில் நான் வெளிக்கிட்டபோது இருந்த சிந்தனைக்கு அப்பால் போய்விட்டேன்.


இலங்கை போன்ற ஒரு நாட்டில் வாழ்வது மிகவும் நெருக்கீடு தருவதாய் இருக்கின்றது எனக் கருதுகிறீர்களா?

இப்போ ஒரு கஸ்டமான காலமாகத்தான் இருக்கிறது. 20 வருடங்களுக்கும் மேலாக இங்கு யுத்தம் நிகழ்ந்துள்ளது. தனிப்பட்ட முறையில் இதனை எவ்வாறு எதிர்கொண்டேன் என்றால், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவமுடிந்தது என்ற ரீதியில் மனத்திருப்தியைத் தந்தது. அப்படி இயங்கிக்கொண்டிருந்ததன் காரணமாக எனக்கு ஏற்பட்ட அழுத்தங்கள் கொஞ்சம் குறைந்தது என்றுதான் சொல்லவேணடும். எப்படிச் சொன்னாலும் வாழ்க்கை முறையிலே கடும் போர் நடக்கின்ற காலம் தவிர மற்றைய காலங்களிலே இங்கு இருக்கின்ற வாழ்க்கை முறையும் கலாசாரங்களும் மற்ற இடங்களை விடக் கூடப்பொருத்தமானதாய் அல்லது தேவையானதைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருந்தது. மிகவும் தன்மையான (Qualitatively) வாழ்க்கைமுறை இருந்தது என்று சொல்லலாம்.


உளமருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்காமல் இருந்திருந்தால் உங்களால் வாழ்க்கையை எப்படி எதிர் கொண்டிருக்க முடியும்? இங்கு திரும்ப வந்திருக்கமாட்டீர்களா?

ஆம். பெரும்பாலும் இங்கு வந்திருக்கமாட்டேன். அதைத் தேர்ந்தெடுத்த படியால்தான் நான் இங்கு இருக்கக்கூடிய சாதகத்தை, தேவையைத் தந்தது. நான் நினைக்கிறேன், Medicine இற்குள் வேறு துறைக்குள் போயிருந்தாலும் பெரும்பாலும் இங்கு வந்திருக்கமாட்டேன் என்று. வேறு எங்கேயும் போய் இருப்பேன்.


நீங்கள் மனநலத்துறையில் ஆற்றிய சேவைகளில் திருப்தியடைகின்றீர்களா ?

சேவை என்று எவ்வளவு தூரம் சொல்லலாமோ தெரியவில்லை. எனக்கு ஒரு தகைமையைத் தந்தது. குறிப்பிட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லலாம். ஓரளவிற்கு வித்தியாசமான, உளமருத்துவத்திலும் பார்க்க கூடிய அளவில் - சமூக அளவில் பொது மக்களில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது. நான் நினைக்கிறேன், இலங்கையைப் பொறுத்தவரை மற்ற இடங்களோடு பார்க்கின்றபோது அதிகம் உளமருத்துவம் என்பது சமூகமட்டத்தைத் சென்றடைந்திருக்கிறது என்று. அதிலேயும் ஒரு திருப்தியிருக்கின்றது. மக்களிற்கு நம்பிக்கையேற்பட்டிருக்கின்றது உளப்பாதிப்பைக் குணப்படுத்தலாம் என்று.


இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

உண்மையில் பணியை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னும் அதை establish பண்ணவில்லை. establish பண்ண வேண்டும். அடிப்படை உளமருத்துவ சேவையை நாம் இயங்கவைத்திருக்கின்றோம் என்று சொல்லலாம். மக்களிற்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அதைப்பற்றி இருக்கின்ற களங்க உணர்வையும் குறைக்கக்கூடியதாய் இருந்திருக்கிறது. முன்பு நான் வந்த காலத்தில் இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது எவ்வளவோ வித்தியாசம் ஏற்பட்டிருக்கின்றது. நேரத்துடனேயே மருத்துவத்தை நாடிவர ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பு வேறு முறைகளை நாடித்தான் உளமருத்துவத்திற்குச் சென்றார்கள். தற்போது ஆரம்பத்திலேயே மருத்துவத்தை நாடி வருகின்றார்கள். மற்றத்துறைகளில் ஈடுபடுகின்றவர்களும் எங்களிடம் வரும்படி இனங்காட்டி அனுப்புகிறார்கள்.


நீங்கள் மற்றத்துறை என்று சொல்வது யாரை?

எங்களது பாரம்பரிய முறைகள். பேய் துரத்துவது. கலாசார முறைகளினால் தங்களால் கையாள முடியாது, கடுமையானது என்று கருதுவதை எங்களிடம் உடனே அனுப்பிவிடுகிறார்கள்.


பாரம்பரியச் சடங்குகள் - பேய் துரத்துதல் போன்றவற்றினாலும் மனபாதிப்புக்குள்ளானவர்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்புகின்றீர்களா ?

ஓம். ஓம். என்னைப் பொறுத்தவரை மிதமான உளப்பிரச்சினைகளுக்கு மனநோய்களுக்கு எங்களுடைய மேற்கத்தைய முறையும் மற்றைய சாதாரண மனநோய்களுக்கு பழைய காலசார முறைகளும் சிறந்தவை. இவற்றினாற்கூடப் பயன் வரும். அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். அதிலும் பல பிழைகள் இருக்கிறது. பிரச்சினைகள் இருக்கிறது. அதேபோல மேற்கத்தைய முறையிலும் எத்தனையோ பிழைகள் இருக்கின்றது. தேவையில்லாத ஆய்வுகூடப்பரிசோதனைகள் இருக்கின்றது. அவற்றைப்பற்றி ஆட்கள் அதிகம் கதைப்பதில்லை. எங்களுடைய பாரம்பரிய முறைகளிலும் தேவையில்லாமல் ஆட்களைப் பயமுறுத்துவது. பேய் துரத்துவது என்று சொல்லி ஆளைவைத்து அடித்து, துன்புறுத்தி சித்திரவதை செய்வது. சிலர் இதனால் இறந்தும் இருக்கிறார்கள். ஆயினும், நாங்கள் அதிலே உள்ள நன்மைகளையும் பார்த்து பெரும்பாலான் பிரச்சினைகளை எங்களுடைய பாரம்பரிய முறைகளால் தீர்க்கலாம். நல்ல ஒரு வளம் எமது பாரம்பரிய முறைகளிலே இருக்கின்றது.

நீங்கள் ‘யோகாவை’ (Yoga) எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய பாடசாலைகளில், சமூகத்தில் யோகாவைக் கற்பிப்பதற்கு விரும்புவதில்லை. அவுஸ்திரேலியாவிற்குப் போய் இருக்கின்றேன். எனது பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பில் இருந்து யோகாவைப் படிப்பிக்கின்றார்கள் பாடமாக. அங்கு படிப்பிக்கப்படுகின்றது. இங்கு நாம் ஐந்து வருடங்களாகக் கஸ்டப்பட்டோம். கல்வித்திணைக்களத்திற்கு ஊடாக ஒரு முறையைக் கொண்டு வரச் செய்வதற்கு முயற்சித்தேன். அதற்கு செவிசாய்க்கவே இல்லை. வடகிழக்கில் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உதைபந்து netball, drills இவற்றிற்கு முன்னிற்பார்கள். யோகா என்றால் செய்யமாட்டார்கள. இதைப்பற்றி விளக்குவது கஸ்டம்.

(இன்னும் வரும்)

தொடர்புடைய இடுகைகள்.
பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1



December 18, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1

2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நானும் துவாரகனும் சிவதாசும் தயா சோமசுந்தரம் அவர்களுடன் உரையாடலொன்றை நிகழ்த்தியிருந்தோம். அவ்வுரையாடல் துவாரகனால் பதிவுசெய்யப்பட்டு ஒழுங்குபடுத்தி எழுதப்பட்டுக் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அவ்வுரையாடலை சிறுதிருத்தங்களுடன் வெளியிடுகின்றேன்.

நன்றி: பா. துவாரகன், Dr. எஸ். சிவதாஸ்.

தற்போது அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் தயா சோமசுந்தரம் அவர்கள் 2007 வைகாசி மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற Community level Intervention for Collective Trauma மகாநாட்டிற்காக வருகைதந்திருந்தபோது அவருடன் இந்நேர்காணலுக்காக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

பேராசிரியர் தயா சோமசுந்தரத்தை யாழ்ப்பாணச் சமூகம், தமிழ்ச் சமூகம் எப்படி அறிந்திருக்கிறது? உளநல மருத்துவராக, பேராசிரியராக அதேநேரம் உடுவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் யாழ்பெரியாஸ்பத்திரிக்குச் செல்லும் எளிமையான ஒரு மனிதராகவும் பார்த்திருக்கின்றது.

தயா சோமசுந்தரம் சிறுவயதுமுதலே மனிதர்களின் நடத்தைகள், எண்ணங்கள் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். வெற்றிபெற்ற அரசர்கள், வரலாற்று நாயகர்களுடைய வாழ்க்கைச் சரிதங்களைப் படிப்பதிலும் பார்க்க மனித சமூகத்தைப் பற்றிச் சிந்தித்து மனித சமூகத்தின் பால் அக்கறை கொண்ட மனிதநேயம் மிக்கவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதில் ஈடுபாடு இருந்ததாகவும் குறிப்பிடும் இவர், அந்த வகையில் காந்திமீது தனக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பின்னர் பாங்கொங்கில் உள்ள சர்வதேச பாடசாலையிலும் பயின்றார். தனது முதலாவது பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இதற்காக உளவியல் உள்ளிட்ட கலைப்பாடங்களைத் தேர்வுசெய்தார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து கமம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். இது குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க இந்தியாவிற்குச் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். அக்காலப் பகுதியில் ஊர்சுற்றித் திரிவது அவரது பொழுதுபோக்காக இருந்தது. இன்று போர் நடைபெறும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஈரான், பாகிஸ்தான், துருக்கி இன்னும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் விமானச்சிட்டை (flight ticket) இல்லாமல் ஒரு நாடோடிபோல் பயணம் செய்துள்ளார். முதுகில் ஓரு mobile bed உடன் பல்வேறு தேசங்களுக்குப் பயணம் செய்து, அந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள், கலாசார பழக்கவழக்கங்கள் என்பவற்றை அறிவதனூடாக பெற்றுக்கொண்ட அனுபவ அறிவு அவரது சிந்தனையிலும் பேச்சிலும் பிரதிபலிக்கின்றது.

தயா சோமசுந்தரம் அவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தை தனது வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாகக் கருதுகின்றார். அக்காலப்பகுதியில் நடைபெற்ற வியட்னாம் போர்ப் பிரச்சாரங்கள், போருக்கெதிரான மாணவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கக் குண்டு வீச்சு விமானமான டீ-52 இல் Bombardier ஆகக் கடமையாற்றியவருடன் பின்னாளில் உணவுவிடுதியொன்றில் வேலைசெய்ய நேர்ந்தமை, என்பன யுத்தம் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தை இவரில் ஏற்படுத்தின. சிறுவயதில் வேடங்களைப் போட்டுக்கொண்டு நடமாடுவது இவரது ‘போக்கு’ ஆக இருந்தது. பிச்சைக்கார வேடமிட்டுத் தெருவில் பிச்சையெடுத்துக் கொண்டு இருப்பார். பிச்சைக்கார வேடத்தில் இவரை யாருமே இனங்கண்டு கொள்ளமாட்டார்கள். பிச்சைக்காரனின் மனநிலை எப்படியிருக்கும், மனிதர்கள் பிச்சைக்காரரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறியும் விருப்பு தனக்கு இருந்ததையும் நினைவுபடுத்தினார்.

அமெரிக்காவில் படித்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பி வந்த காலப்பகுதில் வேலையில்லாமல் சுற்றித்திரிந்ததாயும் சந்தைக்குப் போய் மணிக்கணக்காக வியாபாரம் செய்பவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதையும் அதேநேரம் கள்ளுத் தவறணைக்குப் போய் நாள் முழுவதும் தவறணை மூடப்படும்வரை அங்கேயே இருந்து அவர்கள் பாடுவதையும் கதைப்பதையும் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவ்வாறு இருக்கின்ற போது தானும் கொஞ்சம் அருந்திவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் தனது ‘போக்கு’ என்றும் அதைத் தான் ஆராய்ச்சிக்காகச் செய்யவில்லையென்றும் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பக்கல்வியில் இருந்து உயர்கல்விவரை ஆங்கிலம் மூலம் கற்றிருந்தும் தான் பெற்றுக்கொண்ட அறிவு சமூகத்திற்குப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் பணிபுரியவந்த ஆரம்பகாலத்தில் தமிழைக் கற்கின்றார். பழந் தமிழ் இலக்கியங்களை கற்கின்ற போது எமது கீழைத்தேயப் பண்பாட்டிலும் கலை கலாசாரங்களிலும் மேலைத்தேசங்களில் காணமுடியாத விழுமியங்கள் இருப்பதை அறிந்து கொள்கிறார். பின்னாளில் அவர் சேகரித்த வாசித்த, நூல்களில் பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர், திருவாசகம், திருக்கோவையார் என்று என்று எமது பழந்தமிழ் இலக்கியங்களே அதிகமாக இருந்தன.

1994இல் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுப் பேருரையை ஆற்றுகின்ற போது ஆரம்பத்திலே, ‘தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்’ என்ற இந்நினைவுரையை அவர் நேசித்த தமிழில் நிகழ்த்த முற்படுகிறேன் என்று குறிப்பிடுவது கூட பேராசிரியர் தயா சோமசுந்தரத்தின் விருப்பத்தையும் மறைமுகமாகக் கொண்டுள்ளது. ஈழப்போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நூலான முறிந்தபனை என்ற நூலின் ஆசிரியர்களில் தயா சோமசுந்தரமும் ஒருவர். முறிந்த பனை ஆசிரியர்களில் ஒருவரான ராஜினி திரானகம அந்நூல் வெளிவருவதற்கு முன்னரே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து வீடு திரும்பும் போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளநல மருத்துவரான சிவதாஸ் பேராசிரியர் தயா சோமசுந்தரத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

தயா சோமசுந்தரத்திடம் விளங்கப்படுத்த முடியாத ஒரு எளிமை காணப்படுவதாகவும் எதையுமே வெளியில் இருந்து பார்க்கின்ற தன்மை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். "பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற போதும் உரையாடுகின்ற போதும் பல கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வார். மற்றவர்களுடைய கருத்துக்களை ஆர்வத்தோடு கேட்டு அதற்கூடாகத் தனது கருத்துக்களை முன்வைப்பார்.”

“அல்லைப்பிட்டியில் ‘நவஜீவ இல்லம்’ என்ற இல்லத்தை உருவாக்கியிருந்தார். அங்கு அவர் தியானப் பயிற்சியில் ஈடுபடுவார். தியானத்தில் நாம் சிலைகளைத்தான் காணுவோம் தியானத்தில் இவர் ஒரு சிலையாக இருந்தார். அந்த ஊரில் பலர் குறிப்பிடுவார்கள் பாம்புகள் கூட இவரது உடலில் ஊர்ந்து செல்லும் அவர் பேசாமல் இருப்பார் என்று. செவ்வாய் வியாழக் கிழமைகளில் அவர் அல்லைப்பிட்டிக்குச் சென்று கடலில் நீந்திவிட்டு யோகப் பயிற்சிகள் செய்து தான் கொண்டுசென்ற புத்தகத்தையும் வாசித்துவிட்டு சாக்குக் கட்டிலில் படுத்து உறங்குவார். அடுத்தநாள் உடுப்பை மாற்றிக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு சைக்கிளில் வருவார். அந்த இடத்தை உருவாக்க அவர்பட்ட சிரமம். ஒவ்வொரு நாளும் சைக்கிளில் ஒவ்வொரு பூமரம், தென்னம்பிள்ளை என்று கொண்டுபோய் நட்டுத் தானே நீர் ஊற்றி அவற்றை வளர்த்து பசுமையான இடமாக்கியிருந்தார். அந்த இடத்திலே உளவியல் தொடர்பான பல கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன.

அல்லைப்பிட்டியில் அவர் உருவாக்கிய அந்தப் பிரதேசத்தையும் அவரையும் புகைப்படம் எடுத்து கொழும்பில் சிங்கள மருத்து நண்பர்களுக்கு காண்பித்து அவரைப்பற்றிச் சொன்னபோது இப்படியொரு பேராசிரியரை தாங்கள் கண்டதேயில்லை என்றும் இந்தக் காலத்தில் இப்படியொரு பேராசிரியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதே கடினம், பெரிய அதிசயம் என்றும் சொன்னார்கள். இலங்கையில் குறிப்பாக வடகிழக்குப் பகுதியில் மனநல மருத்துவத்தை சமூகமட்டத்திற்கு கொண்டு சென்றது, அதை community psychiatric ஆக வளர்த்தெடுத்தவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம். அவரிடம் பயிற்சி பெற்ற உளவளத்துணையாளர்கள் இன்றும் வடகிழக்குப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தயா சோமசுந்தரம் அவர்கள் பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக “தன்னாத்மாவை தேடியலையும் மனிதன்” என்ற பொருளில் ஆற்றிய நினைவுப் பேருரை அன்று சிறுநூலாக வெளியிடப்பட்டது. அந்நூலில் கீழைத்தேய சமய தத்துவங்களை மேலைத்தேய விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு அளித்த விளக்கங்களை ஒப்பு நோக்குகிறார். மேலும் மனித உடலில் ஆறு ஆதாரங்களைப்பற்றிக் கீழைத்தேச மெய்ஞ்ஞானிகள் அளித்த விளக்கத்தையும் ஆராய்ந்து அதற்கூடாக மனிதன் உயர்நிலையை அல்லது ஞானநிலையை எவ்வாறு அடையலாம் என்பதையும் எளிமையான மொழியில் முன் வைக்கிறார்.

தயா சோமசுந்தரம் அவர்களது நூல்களை நூலகத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

(இன்னும் வரும்)


Statcounter