வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

March 15, 2012

ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : கணேசன் ஐயர்



நிகழ்விற்குத் தலைமை தாங்கியதனால், நூல் தொடர்பான எனது கருத்துக்களை முழுமையாகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆயினும், பேச்சாளர்களின் கருத்துக்களிடையே அவர்களை மறுத்தும் ஏற்றுக்கொண்டும் சில விடயங்களைப் பதிவு செய்திருந்தேன். கட்டுரை என்ற வடிவத்தில் வைத்துப் பார்க்க முடியாது. அதற்கான தொடர்ச்சித்தன்மையையும் இப்பதிவில் எதிர்பார்க்க முடியாது. - சசீவன்

- மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உருவாக்குகிறார்கள். ஆனால் தமது விருப்பத்திற்கேற்ப அதை அப்படியே உருவாக்குவதில்லை; அவர்களே தெரிந்தெடுத்துக் கொண்ட ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்து நேரடியாக வந்து சேர்ந்த, கொடுக்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்குகிறார்கள். - கார்ல் மார்க்ஸ்


பகுதி 1

ஈழப்போராட்டம் - ஆயுதம் தாங்கிய ஈழப்போராட்டம் அண்ணளவாக 30 ஆண்டுகால தொடர்ச்சியாலானது. விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய இயக்கங்களின் பங்களிப்புக்களும் ஏராளமான சிறிய இயக்கங்களின் பங்களிப்புக்களுமாக - மிகப்பெரிய பொருண்மையுடையது. ஒரு சில எழுத்துப்பிரதிகளைக் கொண்டு அதனை முழுமையாக அளவிட்டு விடவும் முடியாது. பல்வேறுபட்ட செயற்பாட்டாளர்களுடையதும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாத சாதாரண மக்களுடையதும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட கருத்து வெளிப்பாடுகளின் தொகுப்பின் மூலமே - அதன் பொருண்மையான வடிவத்தை ஓரளவுக்கேனும் கற்பனை செய்து கொள்ளலாம். அமைப்பிற்கு வெளியேயிருந்தான பார்வைகளும் - அமைப்பை விட்டு வெளியேறியவர்களுடைய காய்தல் உவத்தலற்ற விமர்சனப் பாங்குமே வரலாற்றை ஓரளவிற்கேனும் முழுமைப்படுத்த எத்தனிக்கின்றது. கடந்த காலம் தொடர்பான மோகத்திற்கப்பாலிருந்து பதிவு செய்யப்படும் சம்பவங்கள் தனியே வரலாறாக எஞ்சிப்போவதில்லை. அவை, எதிர்காலத்திற்கான நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடியவையாகவும் - அவற்றிற்கான படிக்கட்டுக்களாகவும் அமைகின்றன என்ற புரிதலிலிருந்தே இப்பிரதியை அணுக வேண்டியுள்ளது. எமக்கு முன்னைய தலைமுறையினருக்கு - போராட்டத்தை உருவாக்கியவர்களுக்கு - பங்கு கொண்டவர்களுக்கு - பக்கத்திலிருந்து பார்த்தவர்களுக்கு இவை வெறும் சம்பவங்களாக இருக்கலாம். ஆனால், அதனை அறியாதவர்களுக்கும் பின்னைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கும் அவை வரலாறுகள். தமது வாழ்க்கைக்காலத்தில் சரியான முடிவுகளை எடுப்பதற்கான ஆதாரங்கள்.

ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்கங்களின் தோற்றம், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணப்பதிவுகள் என்று பார்த்தால் கீழ்வரும் நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜா), ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (கணேசன் ஐயர்), சுதந்திர வேட்கை (அடேல் பாலசிங்கம்), புளொட்டில் இருந்து தீப்பொறி வரையான எனது பதிவுகள் (நேசன்), புளொட்டில் நான் (சீலன்), தேசிய விடுதலைப்போராட்டம் - ஒரு மீளாய்வை நோக்கி (அன்னபூரணா), ஒரு போராளியின் டயறி (அலியார் மர்சூஃப்). இவை நான் ஆங்காங்கே வாசித்தவை. எனது ஞாபகப்பரப்பில் உள்ளவை. இவை தவிர உதிரிகளாக எழுதப்பட்ட ஏராளமான இவ்வகைக்குள் வரக்கூடிய பிரதிகளும் உண்டு. இவற்றில் புஸ்பராஜனுடைய பதிவும் கணேசன் ஐயரின் பதிவுமே நூலுருவில் வெளிவந்திருக்கின்றன. 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் - ஏராளமான போராளிகளின் அனுபவமுமாக மொத்தம் 10 இற்குக் குறைவான விடயங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை போராடிய இயக்கங்களின் எண்ணிக்கையை விடக் குறைவானது என்பதுதான் சோகம். இவற்றில் கூட ஆரம்பகாலப்பதிவுகள் அல்லது 'உள்வீட்டு விடயங்களை'ப் பதிவு செய்தவை என்று பார்த்தால் இன்னும் குறைவானவையே எஞ்சும்.

இவை தவிர பாலநடராஜ ஐயர் எழுதிய நூலொன்றும் அற்புதன் எழுதிய 'துரையப்பா முதல் காமினி' வரை என்ற தொடரும் மணியம் எழுதிக்கொண்டிருக்கும் 'புலிகளின் வதைமுகாம் அனுபவங்கள்' என்ற தொடரும் 'வதைமுகாமில் நான்' என்ற ரயாகரன் எழுதிக்கொண்டிருக்கும் தொடரும் கூட முக்கியமான பதிவுகளென்பேன். ராஜினி திராணகம, ராஜன் ஹூல், கே. சிறீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகியோருடைய 'முறிந்த பனை' என்ற நூலும், அதனைத்தொடர்ந்து அவர்களால் மனித உரிமை நோக்கிலிருந்து பதிவாக்கப்பட்ட அறிக்கைகளும் கூட பிறிதொரு தளத்தில் முக்கியமான பதிவுகளே. இதுதவிர புலிகளால் வெளியிடப்பட்ட ஏராளமான அனுபவக்குறிப்புக்கள், புனைவுகள் போன்றவை எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தவை அல்ல. புலிகளால் உட்சுற்றுக்கு விடப்பட்ட ஏராளமான முக்கிய ஆவணங்களும் ஏனைய பிரதிகளும் பல இன்று அழிக்கபப்ட்டுவிட்டன. எஞ்சியவற்றை முறையாக ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு எம் சமூகத்திற்கு உண்டு. ஒரு சமூகம் கடந்து வந்த பாதையையும் அனுபவத்தையும் பின்னொருக்கால் நின்று தேட முடியாது.

செ. யோகரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட 'தீ மூண்ட நாட்களும் தீண்டாமைக் கொடுமைகளும்' என்ற நூல் ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப்போராட்டங்கள் கருக்கொள்வதற்கு முன்னரும் கருக்கொண்டு தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்ட காலப்பகுதி வரைக்குமான பிறிதொரு மாற்று வரலாற்றை எழுதிச் செல்வதையும் அவதானிக்க வேண்டும். சாதியொழிப்புடன் கூடிய இடதுசாரி அரசியல் செயற்பாடுகளையும் அவற்றை முதன்மைப்படுத்திய போராட்டங்களையும் ஆவணப்படுத்திய மிக முக்கிய நூலாகக் கருத வேண்டும்.

இவை தவிர, நாவல் வடிவில் சில விடயங்கள் புனைவுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து' மற்றும் கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்நாவல்கள் கூட சமூகத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியவையே. புதியதோர் உலகம் நாவலைப் படித்த போது எனக்கு 10 வயதிருக்கும். அப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் நீண்டகாலம் மறக்க முடியாமல் அலைக்கழிக்கபப்ட்டிருக்கின்றேன். இடையில் மடித்துக் கட்டப்பட்ட சாரமும், பெரும்பாலான பட்டன்களைத் திறந்து விட்டபடியான தோரணையும், தலைநிறைந்த கலைந்த கேசமும் சேர்ந்து உருவாக்கிய சிறுவயதுக் கதாநாயக படிமங்கள் - சிறுவயது முதல் தேடியலைந்த கதாநாயகர்கள் தோல்வியால் துவண்டு போவதை எப்போதும் ஜீரணிக்க முடிவதில்லை. சீருடைகள் ஏதுமற்ற போராளிகள் கதாநாயகர்களாக எமது தலைமுறையை ஆகர்சித்திருப்பார்கள் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பட்டன்களைத்திறந்துவிட்ட கலைந்த முடியும் சாரக்கட்டுமாக உலாவந்த கதாநாயகர்கள் எம்மண்ணையும் மக்களையும் சிக்கிச் சின்னாபின்னமாக்கிச் சென்றுள்ளார்கள் என்பதே சோகமான உண்மை.

கணேசன் ஐயரால் எழுதப்பட்ட 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்' என்ற நூலில் மேற்கூறிய பதிவுகளுக்கு மேலதிகமாகத் தனித்துவமான அம்சங்கள் உண்டு. ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விடுதலைப்புலிகளின் தோற்றம் தொடர்பான பதிவு என்பதும், அமைப்பை விட்டு வெளியேறி சுய விமர்சனத்துடன் கூடியதாக அமைந்திருக்கின்றது என்பதும் பிரதான அம்சங்கள். இந்நூலைப்பற்றிய பார்வையை ஒரு சில சொற்கள் மூலமோ கட்டுரை மூலமோ தெளிவுபடுத்திவிட முடியாது. இந்நூலில், அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம், அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். அதாவது, அக்காலப்பகுதியில் - அக்காலச்சூழலில் நிகழ்ந்த சம்பவங்களை அதன் உண்மைத்தன்மையுடன் பதிவு செய்வது மற்றும் அச்சூழல் தொடர்பான அதன் பின்பான விமர்சனம் என்ற இரு விடயங்களுக்கிடையிலான போராட்டமே இப்பிரதி என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவ்விரண்டு நோக்குநிலைகளுக்கிடையில் அவற்றை உண்மையாகப் பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலாசிரியர் போராடியுள்ளதை நூலெங்கிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதே நேரம் போராட்டத்தில் அவரது வரலாற்றுப் பாத்திரத்தின் பின்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இவ்விரு எண்ணப் போக்கிற்கிடையிலும் நூலாசிரியர் நூல் முழுவ்வதும் ஊடாடிக் கொண்டிருப்பதை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.


பகுதி 2

பிரபாகரன் மீது முன்வைக்கப்படும் இரு குற்றச்சாட்டுக்கள் சார்ந்து நாம் சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம். இதை மறுதலிக்கும் விதமான முக்கிய சம்பவமாக உமாமகேஸ்வரனை தலமைப்பொறுப்பில் உட்கார வைத்ததைக் கூறலாம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்குகின்றார் பிரபாகரன். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் - அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள். இவ்விடயத்தை இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயானால் - தீவிர இராணுவப் பார்வையுடைய போராளி தனது அனுபவம் சார்ந்த முடிவுகளைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததும் அதன் தொடர்ச்சியில் காலப்போக்கில் தலைமைப் பொறுப்பை தானே கையெலெடுப்பதும் நிகழ்கின்றதெனவே கருதவேண்டியுள்ளது. மத்தியகுழு - செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட - தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு முதன்மைப்படுத்தப்படுவதாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு - தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர, தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் - தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்.

பிரபாகரன் தொடர்பான பிறிதொரு விமர்சனம் தொடர்பாகவும் நாம் கரிசனை கொள்ள வேண்டும். அதாவது, பிரபாகரனின் சிந்தனை முறை முற்றுமுழுதாகத் தூய இராணுவவாதச் சிந்தனையின்பாற்பட்டது என்ற விமர்சனம். கணேச ஐயர் பல இடங்களில் வலியுறுத்திச் செல்லும் விடயமொன்றைக் கவனிக்க வேண்டும். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்ப முற்படும் ஆரம்ப காலப்பகுதியில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் இராணுவ அலகாகவே விடுதலைப்புலிகளைக் கட்டியெழுப்பும் நோக்கம் பிரபாகரனுக்கு இருந்திருக்கின்றது. தமிழர் விடுதலைக்கூட்டணி அரசியல் அமைப்பாகவும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பாகவும், விடுதலைப்புலிகள் ராணுவ அணியாகவும் செயற்படும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்திருக்கின்றது. இதனை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்த முற்படுகின்றார். அதுமட்டுமன்றி, தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலை பிரபாகரன் அக்காலத்தில் ஏற்றுக் கொண்டுமிருந்தார். ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் தான் கண்ட போதாமையை நிரவுவதற்கான பணியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பு என்ற நோக்கம் அவருக்கு இருந்திருக்கின்றது. அதாவது தமிழ்மக்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கான அமைப்பொன்று உள்ளது - ஆனால், அதற்குப் பக்கபலமான இராணுவ அமைப்பே இல்லை என்ற குறையே அவர் மனதில் இருந்திருக்கின்றது. அதுவே தனது முதன்மைப் பணியென நினைத்திருக்கக்கூடும். இக்காரணங்களாலேயே அவரது தூய இராணுவவாதச் சிந்தனை முறை கட்டியமைக்கபபட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 2002 இன் பின்பான ஈழப்போராட்ட வரலாற்றைக் கவனித்தால், விடுதலைப்புலிகள் - தமிழர் விடுதலைக்கூட்டணியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் முன்னணியாக ஆக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதாவது பிரபாகரன், 72 இல் தான் கண்ட கனவை சரியாக 30 வருடங்களின் பின்னர் 2002 இல் நடைமுறைப்படுத்தியதாகவே என்னால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயங்கள் நிச்சயமாக மேலும் மேலும் பேசப்பட வேண்டியது அவசியமானது. ஏனெனில் அண்மையில் டயான் ஜெயதிலக கொழும்பு டெலிகிராப் இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையொன்று, பிரபாகரனை ஹிட்லரின் வாரிசாக நிறுவுவதிலேயே கவனத்தைக் குவிக்கின்றது. அதுமட்டுமன்றி, அவர் தனது நிறுவலுக்கு கபீலாவில் பிரசுரமான ராகவனுடைய நேர்காணலொன்றையும் இனியொருவில் வெளியான கணேச ஐயருடைய இத்தொடரையும் ஆதாரமாக முன்வைக்கின்றார். இங்கே, உட்கட்சி ஜனநாயகம் - ஜனநாயகம் - மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடி வரும் ஒருவர் இதே விடயத்தைக் கூறுவதற்கும், இனப்படுகொலை என்று வர்ணிக்கப்படூம் ஒரு யுத்தத்தைச் சர்வதேச ரீதியாக அரசின் பிரதிநிதியாக நியாயப்படுத்திய ஒருவர் கூறுவதற்கும் நிச்சயம் வேறுபாடுண்டு.

பிரபாகரனை மையப்படுத்திய தமிழ் மக்கள் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்ற நிறுவலுக்கு தயான் ஜெயதிலக துணைக்கிழுக்கும் இருவர்கள் கணேச ஐயரும் ராகவனும். இதில் கணேச ஐயர் உடகட்சி ஜனநாயகம் - போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவது என்ற புள்ளியில் நின்று நீண்ட காலம் இயங்கியவர். நான்கு வெவ்வேறு முக்கியமான இயக்கங்களின் (எல்.டி.டி.ஈ, புளொட், என்.எல்.எஃப்.ரி, தீப்பொறி) மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டவர். அவ்வாறே ராகவனும் இயக்கத்திற்குள் மிதவாதியாகக் கருதப்பட்டவர். பிளவுகளின் போது இருதரப்பினர் மீதும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணியவர். பிளவுகளைச் சரியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர். பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். இயக்க காலத்தின் பின்னரும் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இவ்விருவருக்கும் பிரபாகரன் தொடர்பாகவும் விடுதலைப்புலிகள் தொடர்பாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் முழு உரிமையும் உண்டு. இவ்விருவரின் கூற்றுக்களையும் - நிலைப்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டு இனப்படுகொலையை நியாயப்படுத்திய அரசின் பிரதிநிதி போகின்ற போக்கில் பயன்படுத்திவிட்டுப் போக முடியாது. இவ்விருவரும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக முன்வைக்கும் விமர்சனங்களை - தமிழ்மக்களின் எதிர்காலப் போராட்டங்களையும் எழுச்சிகளையும் செழுமைப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மக்களது எழுச்சியைத் தடுத்து நிறுத்தும் நோக்கோடு டயான் ஜெயதிலக போன்றவர்கள் முன்வைக்கும் போது, அதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.


பகுதி 3

ஜனநாயம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் - எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த 'ஜனநாயகம்' என்ற எண்ணக்கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்களில் - அரசு உட்பட - ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது. இன்று, தமிழ் பேசும் சமூகங்களில் குடும்பம் என்ற நிறுவனம் சார்ந்து ஜனநாயகம் எவ்வகையில் நடைமுறையில் உள்ளது என்பதிலேயே பல்வேறு மக்கள் இணைந்து உருவாக்கும் பொது நிறுவனத்தில் ஜனநாயகம் எந்தளவு தூரம் நடைமுறையில் இருக்கும் என்பது தங்கியுள்ளது. நாம் அன்றாடாம் ஊடாடும் பாடசாலைச் சங்கங்கள், ஊர்ச்சங்கங்கள், தொழிற்சங்கங்கள், மதவழிபாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுடைய நிர்வாக சபைகள் போன்றவற்றில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே - இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு அமைப்பிலும் இயக்கங்கள் - கட்சிகளிலும் ஜனநாயகம் நடைமுறையில் சாத்தியமாகும். தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த எத்தனிக்கின்ற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த ஒவ்வொரு சமூக நிறுவனங்களிலிருந்தும் அதனை அமுல்படுத்தத் தொடங்க வேண்டியுள்ளது.

ஈழப்போராட்டத்தில் அமைப்பாகிய - நிறுவனமாகிய இயக்கங்களது நடவடிக்கைகள் தொடர்பாக அதில் அங்கம் வகித்தவர்களாலும், அதிருப்திகளால் வெளியேறிய மறுத்தோடிகளாலும் ஏராளமான விடயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதியதோர் உலகம் என்ற கோவிந்தனின் நாவல், சமூகத்தின் மீது முகத்திலறைந்து கேட்ட முதல் பிரதியெனலாம். அதனைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் இவ்விவாதங்கள் ஓயாமல் துரத்திக் கொண்டேயிருக்கின்றன. மறுத்தோடிகள் என்னும் மரபே தனகான அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டதையும் ஜனநாயகமின்மைகளுடன் இயங்கியதையும் வரலாற்றில் கண்டுள்ளோம். அதிகார அமைப்பாக நிறுவனமயமாகிய அலகுகளுக்கெதிரான மறுத்தோடிகளது பாத்திரத்தை நாம் வரலாற்றில் எவ்விடத்தில் வைத்துப் பார்ப்பது என்ற தெளிவிற்கு வர வேண்டிய தவிர்க்க முடியாத தருணமிது. மிதவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிகழ்காலத்தில் ஒரேமாதிரியாகவே தோற்றம் காட்டுவார்கள். அவர்களை வரலாற்று ஓட்டத்தில் வைத்து - நீண்டகாலச் செயற்பாடுகளின் பின்னணியில் வைத்தே வேறுபடுத்தி அறிய முடியும். ஏராளமான ஜனநாயகப் போராளிகள் நிறுவனமாகிய அதிகாரத்தின் சேவகர்களாகச் செயற்பட்டதைச் சமகாலத்தில் கண்டுகொண்டிருக்கின்றோம். இவ்விடத்தில் தான் நூலாசிரியர் வலியுறுத்தும் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பான விடயத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு கட்டத்தில் கணேசன் ஐயர் தாம் செல்லும் பாதை தவறென்பதை உணர்ந்து கொள்கின்றார். அதற்கான மாற்றீடுகள் தொடர்பான முன்மொழிவுகளை அவரால் இயக்கத்திற்குள் முன்வைக்க முடியாத போதிலும் தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைக்கின்றார். இனிமேலும் முடியாது என்ற கட்டம் வரும்போது, இயக்கத்தில் இருந்து வெளியேறிச் செல்கின்றார். அதன் அடுத்த கட்டமாக, தான் சரியெனக் கருதும் போராட்ட முன்னெடுப்புக்களில் ஈடுபடுகின்றார். இதன் தொடர்ச்சியிலேயே புளொட்டிலும் என்.எல்.எஃப்.ரி இலும் தீப்பொறியிலுமான அவருடைய செயற்பாடுகள் அமைகின்றன. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து மறுத்தோடியாக ஆரம்பித்த அவர் பயணம் இதர இயக்கங்களில் பங்களிப்பதிலும் - அங்கும் தனது எண்ணத்தைச் செயற்படுத்த இயலாது அதிருப்தியுடன் விலகுவதிலும் முடிவடைகின்றது. கணேசன் ஐயர் இறுதிவரை போராட்டத்திற்கான தேவையை மறுதலிக்கவும் இல்லை - அதேநேரம் தொடர்ச்சியாக வெகுஜன மக்கள் இயக்கங்களின் தேவையை வலியுறுத்திக் கொண்டும் செல்கின்றார் என்பதை நாம் பதிவு செய்தே ஆகவேண்டியுள்ளது. அவர் வலியுறுத்திய விடயங்களை அவர் ஈடுபட்ட எந்த இயக்கங்களிலும் சாத்தியப்படுத்த முடியவில்லை. இங்கே தான் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் - ஒரு சமூகத்தின் வகிபாகம் குறித்தும் எமது சிந்தனையைத் திசை திருப்ப வேண்டியுள்ளது. இயக்கங்களைக் குற்றம் சாட்டுவதுடன் எமது பணி முற்றுப்பெறவில்லை என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.


பகுதி 4

இடதுசாரியப் பாரம்பரிய அரசியல் தொடர்பாக இந்நூலாசிரியர் கணேசன் சில விமர்சனங்களை முன்வைக்கின்றார். அக்காலப்பகுதியில், இடதுசாரியப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் இயக்கங்களான 'சிறுபான்மை தமிழர் மகாசபை' மற்றும் 'தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்' போன்றவை சாதிய ஒழிப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தன. இந்நூலில் இவ்விடயங்கள் சார்ந்து எவ்விடத்திலும் எக்குறிப்புக்களும் இல்லை. அதேநேரம், கணேச ஐயர் முன்வைக்கும் விமர்சனங்களைப் பார்ப்போமேயானால் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் தம்மை அணுகுவதற்கு முயற்சிக்கவில்லை என்பதும் தேசிய இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் முக்கியமானவை. இடதுசாரிய அரசியல் அக்காலப்பகுதியில் கருத்தியல் ரீதியாக தேசிய இன முரண்பாட்டை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தலைக் கொண்டிருக்கவில்லை. தேசியம், தேசியவாதக் கருத்துக்கள் தனியே வலதுசாரி அரசியலின் நீட்சியாகவே இடதுசாரிகளால் பார்க்கப்பட்டன. இன ரீதியான முரண்பாடுகளை முதன்மையான முரண்பாடுகளாகக் கொள்ள முடியாது என்ற வாதத்தில் இருந்து மாறி, இன ரீதியான முரண்பாடுகளையும் கவனிக்கத்தான் வேண்டும் என்று கட்டத்திற்கு இடதுசாரிகள் வந்தபோது, நிலமை தலைகீழாக மாறிப்போயிருந்தது.

கொலைகளில் நல்ல கொலை / தீய கொலை என்ற பாகுபாடு எவ்வளவு அபத்தமானதோ, அதேபோன்று ஒடுக்குமுறைகளில் நல்ல ஒடுக்குமுறை / தீய ஒடுக்குமுறை என்ற வாதமும் அபத்தமானதே. நாம் ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தும் போதும், தரவரிசைப்படுத்தும் போதும் நிச்சயமாக ஒடுக்கப்படுபவர்கள் என்ற திரட்சியையும் - ஒடுக்கப்படுபவர்களுக்கு இருக்கக்கூடிய தார்மீக நியாயத்தையும் இழந்துவிடுவோம். இன ரீதியான ஒடுக்குமுறையோ / மத ரீதியான ஒடுக்குமுறையோ / சாதிய ரீதியான ஒடுக்குமுறையோ / வர்க்க ரீதியான ஒடுக்குமுறையோ / பால் ரீதியான ஒடுக்குமுறையோ - அனைத்து ஒடுக்குமுறைகளும் சமாந்தரமாக எதிர்கொள்ளப்பட வேண்டியவை. அதைத்தான் அடையாள அரசியல் எமக்குக் கற்றுத் தந்துள்ளது. அடையாள அரசியலின் தீமையான பக்கங்கள் குறித்து நாம் கவனப்படுத்தாமல் விட முடியாதபோதிலும், அடையாள அரசியலின் நியாயங்களை தார்மீக ரீதியில் உணர்ந்து கொள்ளும் போதும் செயற்படும் போதும் - அதன் தீமையான பக்கங்களிலிருந்து விலகிச்செல்ல முடியும் என நம்புகின்றேன். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரட்சியை உருவாக்குவதே உண்மையான இடதுசாரிய அரசியலாக இருக்க முடியும். பிரதிநித்துவ அரசியலாகச் சுருங்கிப் போய், முதலாளித்துவ ஜனநாயக கட்சி அரசியலாக எஞ்சிப்போன இடதுசாரிய அரசியலே ஒடுக்கப்பட்டவர்களுடைய திரட்சியை அசாத்தியமாக்கியது. இடதுசாரிய அரசியல் வெகுஜன அரசியல் தளத்திற்கு அப்பால் நகரும் போது, அதுவும் இதர கட்சி அரசியல் போன்று எஞ்சிப்போகும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.

மேற்கூறிய காரணங்களே, ஒடுக்கப்பட்டவர்கள் இணைந்த முற்போக்கு அரசியலைச் சாத்தியமாக்க விடவில்லை. இன ஒடுக்குமுறையை உணர்ந்திருந்தால் - அதனை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் முதலில் கையெலெடுக்க வேண்டும். அல்லாது போனால் மக்கள் சார்ந்து அரசியல் செய்ய அனுபவமில்லாதவர்கள் கைகளில் அவ்வொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் சிக்கிக்கொள்ளும் என்ற ஏக்கத்தில் இருந்தே ஐயருடைய இடதுசாரிகள் தொடர்பான விமர்சனத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை ஒரு விமர்சனமாகப் பார்க்க முடியாது. பிணங்களின் மேல் நின்று விரக்தியில் கூறும் கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இன்றிருக்கும் எந்த ஒடுக்குமுறையையும் மறுதலிக்கும் ஒருவர், நிச்சயமாக முற்போக்கான போராட்டம் ஒன்றைச் சாத்தியமாவதை விரும்பாதவராகவே இருப்பார். ஈழத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறையே இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும், ஈழத்தில் இன ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - சாதிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் வர்க்க ரீதியான ஒடுக்குமுறையெதுவும் இல்லை - தேசிய ஒடுக்குமுறை மாத்திரமே உண்டு என்று கூறுபவர்களும் ஈழத்தில் ஒடுக்கப்படுபவர்கள் சார்ந்து முற்போக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை விரும்பாதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. நாம் ஒடுக்குமுறைகளை தரவரிசைப்படுத்தாமல் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கெதிரான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் போதே, அதிகாரத்திற்கெதிரான ஐக்கிய முன்னணிகளையும் அதனூடான விடுதலையையும் சாத்தியப்படுத்த முடியும்.

December 28, 2009

அவதார் (Avatar) - 3

அவதார் (Avatar) - 1
அவதார் (Avatar) - 2

'அவர்கள் ஒரு தேசத்துள் நுழைவார்கள்
யோனிகளைப் பிளப்பதற்கான பத்திரத்துடன்

ஆக்கிரமித்த நிலப் பெண்களின் காதலர்களின்

குறிகளை வெட்டும் அனுமதியுடன்..'

- கற்பகம் யசோதர


காலனித்துவம் என்பது தனியே நில ஆக்கிரமிப்புடன் மட்டும் பார்க்கப்பட முடியாதது. மூன்றாமுலக நாடுகளின் அனைத்து வாழ்வு முறைகளும் காலனித்துவ காலத்தில் மாற்றியமைக்கப்பட்டன. ஆங்காங்கே உதிரிகளாக இயற்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்த மூன்றாமுலக மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு 'தேசம்' என்னும் கருத்தியலுக்குள்ளும் அதன் முகாமைத்துவத்திற்குள்ளும் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்கள் படிப்படியாக தம் வாழ்முறைகளையும் அறிவுப்பாரம்பரியத்தையும் இழந்து ஐரோப்பியர்களாக மாறிப்போனார்கள் - ஐரோப்பியர்களாக மாற்றப்பட்டார்கள். காலனித்துவ போராட்டங்கள் பெரும்பாலும் தந்தைமை நோக்கில் நிகழ்த்தப்பட்டவை. பின்காலனியச் சிந்தனைக்கு ஊன்றுகோலாக இருந்த ஃபிரான்ஸ் ஃபனான் இனது கருத்துக்களை ஐரோப்பிய காலனித்துவம் என்பது 'அந்நிய ஆண்களது' நில ஆக்கிரமிப்பு எதிரானது என்ற அளவில் மட்டுப்படுத்திவிட முடியும். ஆக்கிரமிப்பில் இருந்தான விடுதலைக்காக ஆண்களை நோக்கிய பார்வையாகவே கருதவேண்டியுள்ளது. பின்காலனியச் சிந்தனையின் பிறிதொரு முக்கியமான கருத்தாளர் எட்வார்ட் சைட் ஆவார். சைட் இனது கருத்தியலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் மீதான பாலஸ்தீனர்களின் துயரம் - துயரத்தில் இருந்தும் நில ஆக்கிரமிப்பில் இருந்துமான விடுதலை என்பதாக நோக்க முடிகின்றது. எட்வார்ட் சைட் இனது மேற்கிற்கு எதிரான 'கீழைத்தேயவாதக்' கருதுகோள் ஒருவகையில் 'ஐரோப்பிய ஆண்களுக்கு' எதிரான 'கீழைத்தேய ஆண்களது' கருத்தாகப் பார்க்கக்கூடியது. நிலம் என்பதைப் பெண்ணுடனும் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை ஆண்களுடனும் இணைத்துப் பார்க்கும் போது 'நிலம்' போராட்டங்களில் மௌனமாகவே இருக்கின்றது. நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக 'நிலம்' இன் குரலை நாம் ஆண் பிரதிகளில் இருந்து மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். நிலத்தின் மௌனம் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இவ்விடத்தில் காந்தியை மீள்வாசிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

காந்தி தன்னை ஆணாக உணர்வதைத் தவிர்த்தார். அவர் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்தார் - பெண்ணாகப் பாவனை செய்து கொண்டார். அது மட்டுமல்லாது முதலீட்டியத்தின் மையப்பண்பான நுகர்வுக்கலாச்சாரத்திற்கு காந்தி எதிர்ப்புக் குறியீடாக இருந்தார். முதலீட்டியமும் சந்தை தொடர்பான கலாச்சாரமும் தந்தைமை நோக்கிலான பொருளாதார வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றது. காந்தியின் அரசியல் இதன் சகல அம்சங்களையும் எதிர்த்தது. காந்தியின் அரசியலை நாம் மேலும் விரிவாக்க முடியும். காந்தியின் அரசியல் காலனித்துவ எதிர்ப்பு, தந்தைமை ஆதிக்க எதிர்ப்பு, சூழலியல் மற்றும் வளங்கள் மீதான சுரண்டுலுக்கான எதிர்ப்பு, பால்நிலை சார் சமத்துவம், இயற்கையுடன் இணைந்த வாழ்வு என்று பன்மைத்துவ ஆய்வு முகங்களை உடையது. 'காலனிய எதிர்ப்பு அரசியல், தீவிர சமூக சீர்திருத்தம் இல்லாமல் மிகக்குறுகிய எல்லையில் நின்றுவிடும் என்ற முன்னுணர்வு காந்திக்கு இருந்தது. அவர் இந்திய சமூகத்தைச் சீர்திருத்த விரும்பினார். இந்திய சமூகத்தில் வேரோடியிருந்த சாதியம், சமூகப் பாலின அசமத்துவம், வெள்ளையர் ஆதிக்கம் ஆகியவற்றை ஒருங்கே எதிர்த்தார். அந்த அளவில் பின்காலனித்துவப் பெண்ணியச் செயற்பாட்டின் அரசியல் தந்திரங்களை, பெண்கள் உரிமைக்கான போராட்ட முறைகளை அவர் முன்கூட்டியே எதிர்நோக்கினார் எனலாம். அவரது அகிம்சைக் கோட்பாடு பிரிட்டிஷாரைச் சமாளிக்கும் தந்திரம் மட்டுமல்ல. அது ஆண் - பெண்ணுக்கிடையான சமபகிர்வு கொண்ட உறவின் அடிப்படை. சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பு வளையம். உணவு, இயற்கை மருத்துவம் போன்றவற்றால் போன்றவற்றால் ஏற்படும் உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையிலான கோட்பாடு ஆகும்.' - என்று கூறுகிறார் ரொபேர்ட் ஜே.சி.யங்

மேற்கூறிய விடயங்களில் இருந்து நாம் சில முடிவுகளுக்கு வந்தடைய முடியும். ஆக்கிரமிப்பு - தந்தைமை ஆதிக்கம் - சூழலியல் சமநிலையைக் குலைத்தல் - காலனித்துவம் - முதலீட்டியம் - நுகர்வுக் கலாச்சாரம் ஆகிய புள்ளிகளுக்கிடையேயான தெளிவான கோட்டை வரைய முடிகின்ற அதே நேரம் அதற்கு எதிர்த்திசையில் ஆக்கிரமிப்பு மீதான எதிர்ப்புணர்வு - பெண்ணியல்பு - தாவரங்கள், நிலம், நீர் இணைந்த சூழலியல் சமநிலை, காலனித்துவ எதிர்ப்பு மனநிலை - சமவுடமை - தேவைகளின் அளவான நுகர்வு போன்ற புள்ளிகள் இணைந்ததான கோடொன்றையும் வரைய முடிகின்றது. இப்போது எமக்குத் தெளிவான வரைபடம் ஒன்று கிடைத்திருக்கின்றது. இவ்விடத்தில் மேற்கூறிய புள்ளிகள் சார்ந்து அவதார் திரைப்படத்தை நோக்க முடியும். இப்புவிக்கோளத் தொகுதியின் தற்போதைய நகர்வு முதலாவதாகக் கூறிய விடயங்கள் சார்ந்தது - ஐரோப்பியர்களது செயற்பாடுகள் சார்ந்தது. நகர்வு இருந்திருக்க வேண்டிய விதம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விடயங்கள் சார்ந்தது - காந்தி உருவாக்க விரும்பிய உலகு சார்ந்தது. அவதார் சித்தரிக்கும் நாவிகளின் பண்டோரா கிரகத்தொகுதி நாம் தவறவிட்ட உலகாகி எம்முன் விரிகின்றது. கண்டங்கள் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற நோக்கோடு ஐரோப்பியர்களது கப்பல்கள் கிளம்பிய நேரமே இப்புவித் தொகுதி தனக்கான அழகிய வாழ்வைத் தொலைத்த முதல் கணமாகின்றது.

பண்டோராவினதும் நாவிகளினதும் வழிகாட்டும் தெய்வமாக Eywa அறியப்படுகின்றாள். பண்டோராவின் சூழலியல் சமநிலையை Eywa வே பேணுவதாக நாவிகள் நம்புகின்றார்கள். புவியில் இருந்து சென்ற விஞ்ஞானிகளின் கருத்துப்படி பண்டோராவில் உள்ள அனைத்து உயிரினங்களும் Eywa வுடன் உயிரியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. Pandora கிரகத்தொகுதி ஊதா மற்றும் நீலம் சேர்ந்த உயிரியல் இராசயனக் கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி Pandora வின் ஈர்ப்புவிசை பூமியைவிடக் குறைந்தது. சில இடங்களில் பாறைகள் அந்தரத்தில் காணப்படக்கூடியளவு குறைவான ஈர்ப்புவிசை கொண்டது. அத்துடன் வித்தியாசமான காந்தப்புலத்தால் சூழப்பட்டுள்ளது. Tree of Souls தங்களையும் Eywa பிணைத்து வைப்பதாகக் கருதுகின்றார்கள். Tree of Souls இல் இருந்து வெளிவரும் பூ போன்ற உருவமுடைய விதையை - Woodsprites ஐப் புனிதமாகக் கருதுகின்றார்கள். Hometree என்பதே நாவிகளின் வாழ்வியல் ஆதாரமாக உள்ளது. பெரியளவான இம்மரங்களுக்கு கீழே நாவிகள் வாழ்கின்றதாகக் கூறப்படுகின்றது. நாவிகளின் Omaticaya சமூகம் Omaticaya என்ற பெரிய மரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றது. அண்ணளவாக 1,500 இற்கும் மேற்பட்ட நாவிகள் Omaticaya என்ற Hometree இல் வாழ்கின்றன. ஒவ்வொரு Hometree இன் அடியிலும் Unobtainium என்ற விலைமதிக்க முடியாத தாதுப்பொருள் சேமிக்கப்பட்டிருக்கின்றது. இதைக் கொள்ளையடிப்பதே பூமியில் இருந்து வந்த மனிதர்களது நோக்கம். Mo'at என்னும் பெண்ணே நாவிகளின் ஆத்மீக ரீதியான தலைவராகச் செயற்படுகின்றார். இவரை தமது தாய்த்தெய்வமான Eywa விற்கிடையிலான பாலமாக நாவிகள் கருதுகின்றார்கள். இவரது கணவரே Omaticaya இன் தலைவர். இவர்களது மகளே Neytiri. Omaticaya சமூகத்தின் இளவரசி.

நாவிகள் மீதான ஆக்கிரமிப்பாளர்களான மனிதர்களுக்கு எதிரான போரில் நாவிகளுக்கு உதவியவர்கள் அடையாளம் சார்ந்து முக்கியமானவர்கள். ஒருவர் ஊனமானவர் Jake Sully. மற்றையவர் பெண் விஞ்ஞானி Dr. Grace Augustine. Dr. Grace Augustine மனிதர்களை விட தாவரங்களை அதிகம் விரும்புபவர் எனக்குறிப்பிடப்படுகின்றது. உண்மையில் ஆக்கிரமிப்பு மனநிலையில் இருந்து - தந்தைமை ஆதிக்க மனநிலையில் இருந்து விலகியவர்களே நாவிகளுக்கு உதவினார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாவிகள் உலகம் மனிதர்களது கையை விட்டுப் போன உலகத்தை எமக்கெடுத்தியம்புகின்றது. முக்கியமாக ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிறதேசங்களில் கண்டடைந்த மக்களையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் அவர்களுக்கு ஐரோப்பியர்கள் செய்த கொடுமைகளையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது. இயற்கையுடன் ஒன்றிய - தேவைக்கு அதிகமற்ற நுகர்வுடன் கூடிய வாழ்வு முறையில் போட்டிகள் இருக்கவில்லை. சமத்துவநிலை பேணப்பட்டிருக்கின்றது. நாவிகளது வாழ்வும் பண்டோராவின் அமைப்பும் தற்கால வாழ்வினதும் ஐரோப்பிய மையக்கருத்தியலினதும் அதன் தொடர்ச்சியினதும் எதிர்ப்பாகிக் குறியீடாகின்றது. பண்டோரா உயிர்த்தொகுதி முன்வைக்கும் வாழ்வு முறை கீழைத்தேய மக்களுக்கு அவர்களது மூதாதையருக்கு நெருக்கமாக இருந்திருக்கின்றது. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வும் கட்டுப்படுத்தப்பட்ட நுகர்வுக் கலாச்சாரமும் இயற்கை வழிபாடும் பெண்தெய்வங்கள் மீதான முதன்மைப்படுத்தலும் இதையே கூறுகின்றன. எமது மூதாதையரது தொன்மங்கள் மீதான மீள்வாசிப்பு நாம் செல்லவேண்டிய பாதையை இலகுபடுத்தும் என நிச்சயமாகவே நம்பலாம். அவ்வாசிப்பில் நாம் நிச்சயமாக Hometree ஐயும் Eywa வையும் Neytiri சந்திக்க முடியும்.


"The sky people have sent us a message,
That they can take whatever they want, and no one can stop them.

Well, we will send them a message.

You ride out as fast as the wind will carry you.

You tell the other clans to come.

You tell them Toruk Makto calls to them!

That you fly now, with me! My brothers! Sisters!

And we will show the sky people,

That they cannot take whatever they want!

And that this, this is our land!"

- Neytiri, Omaticaya Clan, Pandora

(முடிந்தது.)


December 27, 2009

அவதார் (Avatar) - 2

அவதார் (Avatar) - 1

'இயற்கைக்கு எதிராக மனிதன் அடைந்த வெற்றிகளுக்காக நாம் நம்மை அதிகமாகப் பாராட்டிக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்கிவிடுகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த விளைவுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாவது மூன்றாவது கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட நாம் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன. முதல் கட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை அவை பெரும்பாலும் நிராகரித்துவிடுகின்றன.' - ஏங்கல்ஸ்

'இந்தச் செவ்விந்தியத் தலைவன் அமெரிக்கப் பெருந்தலைவரிடம் சொல்லப்போவது, பருவங்கள் உள்ளவரை வானில் நட்சத்திரங்கள் உள்ளது போல் முக்காலமும் உண்மையாகும். உங்களால் வானத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? நிலத்தின் கதகதப்பை வாங்க முடியுமா? நீங்கள் கேட்பது எங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இந்தத் தென்றல் காற்றின் வாசமும், இந்தத் தெளிந்த நீரின் ஒளியும் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவற்றை எப்படி உங்களால் எங்களிடமிருந்து வாங்க முடியும்? இது பற்றிக் காலம்தான் சொல்ல வேண்டும். இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானவை. ஒவ்வொரு ஊசி இலையின் பளபளப்பும், கரைகளின் மணலும், அடர்ந்த காடுகளின் பனி மூட்டமும், வண்டுகளின் ரீங்காரமும் எங்களுக்குப் புனிதமானவை. நெஞ்சை விட்டு அகலாதவை.'
- சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..


ஐரோப்பியர்களுக்கு இயற்கை எப்போதும் நண்பனாக இருந்ததில்லை. அவர்களும் இயற்கையைத் தம் நண்பனாகக் கருதியதில்லை. இயற்கையை வென்று வாழ்வதே அவர்களது வாழ்க்கை முறையாக இருந்தது. இயற்கையை வென்று வாழும் நோக்கிலான வாழ்க்கைமுறையே அவர்களை அதீதமான தொழில்நுட்பப் பாவனையாளர்களாக்கியது. இவ்வாழ்வுமுறை ஐரோப்பியர்களை கருவிகளை மையப்படுத்திய அதிகாரவர்க்கத்தையும் அதன்மூலமான சமூக அதிகாரப்படிநிலைகளையும் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியே ஐரோப்பியர்களது இன்றைய சந்தையைக் கையகப்படுத்தும் முதலாளித்துவ பொருளாதார முறை என்பது. சந்தை மையப் பொருளாதார முறையின் அடிநாதமாக விளங்குவது போட்டியும் கையகப்படுத்துவதுமே. இயற்கை மீதான பற்றின்மையும் போட்டியுமே அவர்களை ஐரோப்பியக் கண்டங்களில் இருந்து பிற கண்டங்களை நோக்கிச் செல்ல வைத்தது எனலாம்.

தென்னமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களைச் சார்ந்த மக்களது வாழ்க்கை முறை ஓரளவு இயற்கையுடன் ஊடாடிய வாழ்க்கைமுறையாக இருந்தது. இயற்கை அம்மக்களின் நண்பனாக இருந்தது. இயற்கையை அவர்கள் தெய்வமாகக் கருதினார்கள். அவர்கள் தம்மை இயற்கையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மாறாகத் தம்மை இயற்கையின் ஒருபகுதியாகவே கருதினார்கள். இதனால் அவர்கள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவர்களால் ஐரோப்பியர்களை வெல்ல முடியாமல் போனது. வட அமெரிக்காவின் செவ்விந்தியர்களும் அவுசஸ்திரேலியாவின் பூர்வகுடிகளும் காலனித்துவத்தால் இவ்வுலகில் இருந்து அவர்களது அடையாளங்கள் களையப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டார்கள். தென்னமரிக்க, ஆபிரிக்க, ஆசிய கண்டங்கள் காலனித்துவத்திற்கு எதிரான நீண்டகாலப் போரைச் செய்ததன் மூலம் நிலரீதியான ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றன. ஆயினும் கருத்தியல் ரீதியான மேலாண்மையில் இருந்து இன்றுவரை அவர்களால் விடுபட முடியவில்லை. கருத்தியல் மேலாண்மையை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் ஐரோப்பியர்கள் இன்றுவரை நிறுவிக்கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையில் காலனியாதிக்கம் இன்றுவரை தொடர்வதாகவே கருத வேண்டியுள்ளது.

முதலீட்டியத்தின் அடிப்படையான அதீத நுகர்வுக்கலாச்சாரமும் இயற்கையை மீறிய அபிவிருத்திகளும் ஐரோப்பியர்கள் கற்றுக்கொடுத்தவைகளே. காலனியாதிக்கத்தின் போது ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிரதேசங்களில் இருந்து நினைத்துப் பார்க்க முடியாதளவு வளங்களைக் கொள்ளையடித்துத் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். அதையே காலனியாதிக்க மக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இதன் தொடர்ச்சியில் முதலீட்டியமும் நுகர்வுக்கலாச்சாரமும் பெருமளவுக்கு வளர்ந்தன. இவ்வளர்ச்சி என்பது இயற்கையை மீறியே உருவாக்கப்பட்டது. அதன் விளைவே இன்றைய சுற்றுழ்சூழல் பிரச்சனைகளும் மனித அழிவுகளுமாகும். இன்று இயற்கை பற்றிய பார்வைகள் மாறிக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். தத்துவப்பரப்புக்களில் இயற்கையுடனான உரையாடலை மனிதன் நிகழ்த்த முற்படுவதை நாம் காண்கின்னோம்.

அவதார் திரைப்படம் ஒருவகையில் காலனித்துவ காலப்பகுதியை மீள்வாசிப்புச் செய்கின்றது. பண்டோரா கிரகத்தைச் சேர்ந்த நாவிகளின் ஊடாக நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த எம்மூதாதையரைக் காணமுடிகின்றது. எமது மூதாதையர் ஆக்கிரமிக்கப்பட்ட வேதனைமிகு நிகழ்வைக் காண முடிகின்றது. ஐரோப்பியர்கள் எம்மைச் சிக்கிச் சின்னாபின்னமாக்கியதை எம்மால் காணமுடிகின்றது. நாவிகள் மனிதர்களை வென்றபோது தோற்றுப்போன எம் மூதாதையர்கள் சார்பாக நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். ஐரோப்பியர்கள் சென்றபோது விட்டுச் சென்ற அனைத்தையும் நாம் எம்கூடவே வைத்திருக்கின்றோம். எம்மால் இன்றும் எமது மூதாதையர் தொலைத்த வாழ்வை மீளக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துபெற்ற அனுபவங்களூடான அறிவைக்கூட நாம் தொலைத்துவிட்டு ஐரோப்பிய அறிவை எமது மூளைகளில் சுமந்து திரிகின்றோம். இன்று பிரதேச ரீதியான அறிவுகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

பண்டோரா கிரகத்து நாவி மக்களது இயற்கையுடனான தொடர்பாடல்திறன் மனிதன் நினைத்துப் பார்க்க முடியாதளவு அதிகமானது எனக்கூறப்படுகின்றது. அதனாலேயே மனிதன் நாவிகளைத் தாக்குவதற்கு அஞ்சினான். பண்டோராவில் காணப்படும் மிருகங்களுக்கும் நாவி மக்களுக்கும் கொண்டையின் முடிவில் காணப்படும் உயிரியல் ரீதியான அங்கம் இருவரையும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள வைக்கின்றது. அவ்வாறே தாவரங்களும் நாவிகளும் உயிரியல் ரீதியான பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றார்கள். இது இயற்கைக்கும் நாவிகளுக்கும் இடையிலான தொடர்பாடலைக் காட்டுவதற்கான குறியீடாகின்றது. இவ்வாறாக நாவிகளை இயற்கையின் அங்கமாகக் காட்ட திரைப்படமெங்கும் அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருக்கின்றது. காடு நாவிகளின் நண்பனாக இருக்கின்றது. நாவிகள் காட்டில் உள்ள ஒரு மிருகத்தையேனும் தேவைக்கதிகமாகக் கொல்வதில்லை. தமது உணவுத் தேவைகளுக்காகக் கொல்லும்போதும் அவ்விலங்கின் உயிர் இயற்கையுடன் கலப்பதாகவே கருதுகின்றார்கள். மேலும் இக்கிரகம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்படாத உயிரியல் - தாவரவியல் தொகுதியாக இயங்குகின்றது எனக் கூறப்படுகின்றது. இத்தொகுதியைப் பிரித்து நோக்க முடியாது. ஒருவிதத்தில் ஒன்றனது அங்கமாக இன்னொன்று எனக்கிரகத் தொகுதி முழுவதும் பிணைக்கப்பட்டிருக்கின்றது. அது bio-botanical neural network எனக்குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாகவே நாவிகளின் விரோதியாக இருந்த நாய் மாதிரியான உருவம் கொண்ட விலங்குகள் கூட இறுதியில் ஒன்றுபட்டு மனிதர்களை எதிர்க்கின்றன.

பண்டோரா கிரகத் தொகுதி திரையில் விரியும் போது தவிர்க்க முடியாமல் மிஷேல் ஸெர் உம் புரூனோ லத்தூரும் ஞாபகத்தில் வருகின்றார்கள். அவர்களது கனவுலகு பண்டோராவாக்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கத் தோன்றுகின்றது. இயற்கை மற்றும் புற - உலகு என்ற வேறுபாடுகளைக் களையும் நோக்கிலானவை இன்றைய தத்துவத்தின் போக்குகள். நாகர்ஜுனனின் மொழியில் சொல்வதானால் ' "இயற்கை" என்பதான "புற - உலகும்" மனிதர்களின் "அரசியல்-சமுதாய உலகும்" ஒரே வலைப்பின்னலில் இயங்குபவை என்று லத்தூர் கூறுகிறார்'. மேலும் 'அறிவு என்பதை, புற-உலகை வென்று கைப்பற்றும் விஞ்ஞானமாக மாத்திரமே எண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்டிருக்கிறோம். ஆனால், இந்தப் புற-உலகு என்ற வரையறைக்கு சமுதாய-ஒப்பந்தத்தில் இடமில்லாமல் போகும்நிலை வந்திருக்கிறது. அதாவது, இந்தச் சமுதாய-ஒப்பந்தத்தின் விரிவாக்கத்தின் போக்கில் இந்தப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறோம். இந்த நிலையில் நாம் விட்டுவைத்திருப்பதே இயற்கை என்பதாகியிருக்கிறது! இயற்கைமீது நாம் பெற்ற வெற்றி ஒருவாறாக நம்முடைய எல்லைகளை, இயற்கையில் நாம் தங்கி-நிற்கிறோம் என்பதை, தெளிவாக்கியிருக்கிறது. இந்த நிலையிலாவது இயற்கையைத் தன்னிலையாக அங்கீகரிக்க வேண்டும், அது நம்முடன் இணைந்தும் எதிர்த்தும் செயல்பட வல்லது எனபதை அங்கீகரிக்கும் ஓர் புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' மேலும் 'சொல்லப்போனால், இயற்கையை வெல்கிற வல்லமையையே வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது மனிதஇனம். இயற்கையை வென்று, கைப்பற்றி, அதற்கு ஏதும் அளிக்க முடியாமல் இருப்போரை அடுத்துண்ணிகள் (parasites) என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார் ஸெர். இந்த அடுத்துண்ணி-நிலையைக் கடக்க வேண்டி, இயற்கை-சமுதாயம் என்ற பிளவைக் கடக்கிற புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' என்று கூறிச் செல்கின்றார் நாகர்ஜுனன்.

ஒருவகையில் பார்த்தால் புருனோ லத்தூரும் மிஷேல் ஸெர் உம் இன்றைய உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கண்டவற்றைக் கொண்டு தனது பண்டோரா என்ற கற்பனைக்கிரகத்தை ஜேம்ஸ் கெமரூன் உருவாக்கியிருப்பது ஆச்சரியமாகவிருக்கின்றது. இயற்கை, சுற்றுச் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான இன்றைய பிரச்சனைகளுக்கு ஐரோப்பியர்களே மூல காரணமாகின்றனர். இன்றவர்கள் இயற்கையை மீறிய தம் வாழ்வை நிராகரித்து, தாம் காலனித்துவப்படுத்திய இயற்கையுடன் ஒன்றிய வாழ்வைப் பரிந்துரைக்கின்றார்கள். இதுவே வாழ்வின் முரண்நகையாகும். பூமியில் உள்ள வளங்களை இழந்து புதிய வளங்களைத் தேடியே மனிதர்கள் பண்டோரா கிரகத்திற்கு வருகின்றார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் மனிதகுலம் இன்று சென்றுகொண்டிருகும் தவறான பாதையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதோடு தான் விட்ட தவறின் ஊடான இலட்சிய உலகாகப் பண்டோராவைக் காட்சிப்படுத்துகின்றது.

'வெள்ளையனின் பசி இந்த நிலம் அனைத்தையும் விழுங்கிவிட்டு வெறும் பாலைவனத்தை மட்டுமே விட்டுச் செல்லப் போகின்றது. வெள்ளையனின் நகரங்களில் அமைதியே கிடையாது. இலைகள் காற்றில் அசைவதால் ஏற்படும் ஒலியும், வண்டுகள் பறப்பதால் அவற்றின் சிறகுகள் ஏற்படும் ஒலியும் அங்கே கேட்பதில்லை. குயில்களின் கூவுதலையும், தவளைகளின் உரையாடல்களையும் கேட்க முடியாத இடத்தில் என்னதான் இருக்கிறது? தாமரைக் குளத்தின் மீது தவழ்ந்து வந்து முகத்தில் வீசும் தென்றலும், மழைக்குப் பின் மண்வாசனையுடன் வரும் காற்றும், வேப்பம் பூ மணத்துடன் வரும் காற்றும் எங்களுடன் மிகவும் பிடித்தமானவை. இந்தக் காற்று செவ்விந்தியனுக்கு விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம். இந்தக் காற்றைத்தான் விலங்குகளும் செடி கொடிகளும், மனிதர்களும் சுவாசிக்கிறார்கள். பிறந்த குழந்தை தனது தாயை நேசிப்பது போல் நாங்கள் இந்தப் பூமித்தாயை நேசிக்கிறோம்.'
-சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..

(இன்னும் வரும்)


அவதார் (Avatar) - 1

கடந்த வாரத்தில் ஜேம்ஸ் கெமரூன் இன் 'அவதார் (Avatar)' திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது. வெகுஜன சினிமாவின் இயக்குநர்களில் கெமரூன் முக்கியமானவராகையால் அவதார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. பிரமிப்பூட்டும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதால் அவதார் திரைப்படத்தின் தொழில்நுட்பத்தை முன்வைத்து பலவிதமான விமர்சனங்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பத்தையும் பிரமாண்டத்தையும் மையப்படுத்தி அவதார் 'அம்புலிமாமா' ரகக் கதை என்ற கருத்தே பல இடங்களிலும் கூறப்படுகின்றது. ஜெயமோகன் மாத்திரம் அதன் பிறிதொரு பரிணாமம் சார்ந்து சிலவிடயங்களைக் கூறியிருந்தார். ஆயினும் ஜெயமோகன் மேலதிகமாகப் பலவிடயங்களைக் கூறியிருக்கலாம். 'ஐரோப்பமைய வாதம்' என்னும் கருதுகோளைத்தாண்டிப் பலவாசிப்புக்களை அவதார் இல் இருந்து மேற்கொள்ள முடியும் என்று தோன்றுகின்றது.

இன்று சூழலியல் நெருக்கடிகள் கவனம்பெறத் தொடங்கியுள்ளன. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை வலுப்படுத்தும் நோக்கிலான கருத்தியல்கள் மேன்மைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருக்கின்றது. இத்திரைப்படம் ஒற்றைவாசிப்பிற்கு உட்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பன்முக வாசிப்பை மேற்கொள்வதற்கான அனைத்துவெளிகளையும் இத்திரைப்படம் கொண்டுள்ளது. உதாரணமாக ஐரோப்ப மையவாதம் - காலனித்துவம் - பின்காலனித்துவம் என்னும் தொடர்ச்சியில் இத்திரைப்படத்தை வாசிக்க முடியும். அவ்வாறே ஆக்கிரமிப்பு - ஏகாதிபத்தியம் என்னும் தொடர்ச்சியிலும், சூழலியல் - இயற்கை வழிபாடு என்னும் தொடர்ர்சியிலும் தந்தைமைச் சமூகம் - சூழலியல் பெண்ணியம் என்னும் தொடர்ச்சியிலுமென பலதளங்களில் அவதாரை முன்வைத்து வாசிப்புக்களை மேற்கொள்ள முடியும்.

அவதார் இன் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போமேயானால், இக்கதை 2154 ஆம் ஆண்டளவில் Pandora என்னும் கிரகத்தில் நிகழ்கின்றது. அங்கே 'நாவி' என்ற மக்கள்வகையினர் வாழ்கின்றார்கள். நாவிகள் மனிதர்களை விட உயரமானவர்கள் மட்டுமல்லாது கூரிய அறிவுத்திறன் கொண்டவர்கள். அதுமட்டுமல்லாது இயற்கையுடனான அவர்களது வாழ்வு அவர்களுக்கு இயற்கையுடனான ஊடாட்டத்தை அதிகப்படுத்தியிருக்கின்றது. மனிதர்களுடன் ஒப்பிடும் போது இயற்கையுடனான அவர்களது தொடர்புகொள்ளும் திறன் பலமடங்கு என்று கூறப்படுகின்றது. Pandora என்னும் கிரகமே அனைத்துடனும் தொடர்பாடக்கூடிய கட்டமைப்பாக இயங்குகின்றது. உயிரியல் ரீதியாக அனைத்தும் சிந்தனைத்திறன் மிக்கதாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. நீலநிற மேனி கொண்ட நாவிகள் இயற்கையையும் பூமியையும் குறியீடுகளாக்கித் தாய்த்தெய்வமாக வழிபடுகின்றார்கள்.

2154 அளவில் Pandora இன் சிலபகுதிகளைப் பூமியில் இருந்து சென்ற மனிதர்கள் ஆக்கிரமித்திருக்கின்றார்கள். அக்கிரகத்தில் உள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கில் நாவிகளைத் துரத்தியடிப்பதே மனிதர்களின் நோக்கமாக உள்ளது. அக்கிரகத்தில் மனிதர்களால் சுவாசிக்க முடியவில்லை. செயற்கை முறையிலேயே சுவாசிக்கின்றார்கள். ஆக்கிரமிக்கும் நோக்குடன் சென்ற மனிதர்கள் பிரமாண்டமான தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆய்வுகூடங்களில் வாழ்கின்றார்கள். செயற்கையாக நாவிகள் உருவத்திலான உடல்களை உருவாக்கி அதை மனிதர்களின் மூளைகளை வைத்தே இயக்குகின்றார்கள். இதன்மூலம் நாவிகளுடன் ஊடாடி அவர்களைப்பற்றி அறிந்து கொள்வது மனிதர்களின் முக்கிய நோக்கமாகின்றது. அதன்மூலம் நாவிகளை வென்று வளங்களைச் சூறையாடுவதை இறுதி இலக்காகக் கொண்டுள்ளார்கள். ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட மனிதர்கள் குழுவில் ஏராளமான ஆயுதங்களைக் கொண்ட படையணிகளும் அதற்கான ஆயத்தப்படுத்தல் மேற்கொள்ளும் நோக்கிலான ஆய்வுகூடமும் காணப்படுகின்றது. Colonel Miles Quaritch என்பவர் பாதுகாப்பு படையணிகளின் தலைவராக இருக்கின்றார். Dr. Grace Augustine என்னும் பெண் ஆய்வாளர் ஆய்வுகூடத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கின்றார். நாவிகள் தொடர்பாக அவர்களது உயிரியல் பண்புகள் சார்ந்த ஆய்வுகளே இவரது முக்கிய கருப்பொருளாகின்றது.

Jake Sully என்னும் போலியோவால் பாதிக்கப்பட்டுப் பூமியில் வாழ்ந்துவரும் இளைஞனின் சகோதரன் பண்டோராவில் இருக்கும் ஆய்வுகூடத்தில் பணியாற்றியிருக்கின்றான். அவன் இறந்து விட்டதனால் அவனது மரபணுக்களைவைத்து உருவாக்கப்பட்ட நாவி உடலை இயக்குவதற்காக Jake Sully பூமில் இருந்து பண்டோரா ஆய்வுகூடத்திற்கு வருகின்றான். நாவி உருவத்தில் பண்டோராக் காடுகளுக்குச் சென்ற Jake Sully ஐ நாவிகளின் இளவரசி Neytiri காப்பாற்றுகின்றாள். அதன் மூலம் Jake Sully இற்கும் Neytiri உறவுவலுப்படுகின்றது. இவ்வுறவின் மூலம் நாவிகளைப் பற்றிய தகவல்களை அறிந்து Colonel Miles Quaritch இற்கு Jake Sully சொல்லிக்கொண்டிருக்கின்றார். நாவிகளைப் பற்றி அறியமுடியாமல் இருந்த மனிதர்களுக்கு Jake Sully இன் தகவல்கள் பெருமளவில் உதவிபுரிகின்றன. மனிதர்களுக்குத் தேவையான கனிமம் நாவிகளின் 'தாய்வீடு' என்னும் மரத்தின் அடியில் காணப்படுகின்றது. அதை நாவிகள் எப்போதுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை Jake Sully, Colonel Miles Quaritch இற்குத் தெளிவுபடுத்துகின்றார். Colonel Miles Quaritch அதைச் செவிமடுக்காமல் நாவிகளின் ஆதாரமான அம்மரத்தை அழிக்கின்றார். ஒருகட்டத்தில் Jake Sully நாவிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதை olonel Miles Quaritch அறிந்து கொள்கின்றார். இதன்பின்பு Jake Sully சிறைவைக்கப்படுகின்றார். அதன்பின்பு அச்சிறையில் இருந்து தப்பும் Jake Sully யும் Dr. Grace Augustine உம் நாவிகளுடன் சேர்ந்து மனிதர்களை வெற்றிகொள்வதே அவதார் திரைப்படத்தின் சுருக்கமான கதையாகும்.

அவதார் திரைக்கதை மிக எளிய கதையாகத் தோன்றுகின்ற போதிலும் இக்கதையை நாம் பல்வேறு கோணங்களில் வாசிக்க முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக, இயற்கை சார்பாக, காலத்தினித்துவ எதிர்ப்பு சார்பாக, தந்தைமைச் சமூகம் மீதான எதிர்ப்புணர்வு சார்பாக, சூழலியல் பெண்ணியம் சார்பாக, கீழைத்தேய வாதம் சார்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சார்பாக என்பதாகப் பல்வேறு தளங்களில் குறியீட்டு ரீதியாக அணுகமுடியும். அவ்வகை வாசிப்புக்களை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.

(இன்னும் வரும்)


Statcounter