வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

September 11, 2012

இசைபட வாழ்தல், மனிதநேயமற்ற குழுமஅறம் | கைமண்


மனிதர்களிடையே காணப்படும் பகிர்ந்து வாழ்தல் - பறித்து வாழ்தல், இசைபட வாழ்தல் - பகைபட வாழ்தல் ஆகிய இரு சோடிப் பண்பாட்டுக் கூறுகளே இங்கு அறம் எனும் பதத்தால் குறிப்பிடப்படுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவை சமூக குழுமங்களிற்குள் சிறைப்படுத்திக் காண்பது உருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூகக் குழுமங்களைக் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களிடையேயான உறவுகளைக் காண்பது அருவ மனித நேயம் எனப்படுகிறது. சமூக குழுமங்களெனும் பதம் எதைக் குறிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பார்ப்போம். மனிதன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சமூக நிறுவனங்களில் அங்கத்துவம் வகிக்கிறான். இதனால்தான் அவன் சமூகப் பிராணி எனப்படுகிறான். ஏனைய பிராணிகளிலிருந்து மனிதன் வேறுபடுவது இந்த இடத்தில் தான். இந்த சமூக நிறுவனங்கள் அவனின் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றன. அதே நேரம் அவன் தனித்துவமுள்ள தனிமனிதனாகவும் இருந்து வருகிறான். ஆனால்; இத்தனித்துவம் சமூக நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டதுமல்ல; அத்தனி நபர் சமூக நிறுவனங்களின் கொத்தடிமையும் அல்ல.

மனிதன் சுய விருப்பத்துடனும், சுய விருப்பின்றியும் உறுப்புரிமை வகிக்கும் சமூக நிறுவனங்கள் இரு வகைப்படும். ஒன்று அடிக்கட்டுமான சமூக நிறுவனங்கள், மற்றையது மேற்கட்டுமான சமூக நிறுவனங்கள். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டுக்கள்; தொழிற்பிரிவுகளின் அடிப்படையிலான சங்கங்கள், நலன்புரிச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் - குழுக்கள், கோவில்கள் இத்தியாதிகள். இவை முறைசார் நிறுவனங்களாகும். இவற்றிலான உறுப்புரிமை பெரும்பாலும் முறைசார் தன்மை பெற்றவைகளேயாகும். சடங்குகள் மரபுகள் ஆகியன முறைசார் தன்மை அற்றவை. அதாவது முறைசாரா சமூக நிறுவனங்களாகும். இரத்த உறவுகள், குடும்பம் ஆகிய இரண்டும் சமூக நிறுவனங்களே. இதில் இரத்த உறவுகள் முறைசாரா நிறுவுனமாகும். குடும்பம் முறைசார்ந்த தன்மையும், முறைசாரா தன்மையும் ஒருங்கே பெற்ற சமூக நிறுவனமாகும். குடும்பம்தான் முதலில் தோன்றிய முறை சார் சமூக நிறுவனமாகும். தனி நபர்களின் நடவடிக்கைகளை வடிவமைப்பதில் குடும்பம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

இனவழிக் கட்டுமானங்கள் , மொழிவழிக் கட்டுமானங்கள், மதக் கட்டுமானம், வர்க்கக் கட்டுமானம், தேசக் கட்டுமானம் ஆகியவையே அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களாகும். இவ் அடிக்கட்டுமான சமூக நிறுவனங்களையே சமூகக் குழுமங்கள் என அழைக்கிறோம். மேற்கட்டுமான சமூக நிறுவனங்களை சமூக ஸ்தாபனங்கள் என அழைப்போம். சமூக குழுமங்கள் தான் சமூக ஸ்தாபனங்களின் தோற்றுவாயாகும். அரசியல் கட்சிகளும் அரசியல் குழுக்களும் மேற்கட்டுமானத்துக் குரியவையே. இந்த சமூக ஸ்தாபனங்களினதும் அதன் உறுப்பினர்களினதும் அறம் கெட்டுள்ளது என்பதே இன்றைய விசனமாக உள்ளது. அதைப்பற்றி நிறையவே பேசப்பட வேண்டும் எனப் பலரும் எதிர்பார்க்கிறார்கள். இது பற்றி வெளிப்படையான பேச்சுகள் ஆரம்பித்து விட்டன. இந்நிலை ஏன் உருவானது? இதை எவ்விதம் மாற்றுவது? என்பது தொடர்பான கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. அது நல்லதே, அவசியமானதே. ஆனால் இக்கட்டுரை அரசியல் குழுக்களின் அறம் கெட்டிருப்பது பற்றிப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஏனெனில், பானையில் இருப்பது தான் அகப்பையில் வரும். சமூக குழுமங்களைப் பானையென்றும் அகப்பையில் உள்ளவற்றை சமூக ஸ்தாபனங்கள் என்றும் கொள்ளவும். அகப்பையில் உள்ளவை வெறுமனே வெளிப்பாடுகள் தான். வெளிப்பாடுகளையும் அவற்றின் விளைவுகளையும் அவதானிப்போம், பட்டியலிடுவோம். வெளிப்பாடுகளை நோவென்றும் விளைவுகளை நோவின் காரணத்தாலான உடல் உள அவஸ்தைகள் என்றும் கொள்வோம். நோவை உணராமல் செய்ய ஏதாவது செய்யத்தான் வேண்டும். ஆனால் அது ஏதாவது நோய்க்கான சிகிச்சையல்ல. வலி நிவாரணியுடன் நிறுத்தி விடக் கூடாது. நோய்க்கான சிகிச்சை அவசியம். அகப்பையில் உள்ளவற்றைப் பட்டியலிட்டது போதும். இனி மாற்றத்தைச் செய்ய பானைக்குள் செல்வோம். அப்போது தான் நோய் நாடலிலும், நோய் முதல் நாடலிலும் வெற்றி பெற முடியும். வாருங்கள் நோய் நாடியும், நோய் முதல் நாடியும் பானைக்குள் செல்வோம் என இக்கட்டுரை அழைக்கின்றது. நோய் முதல் பானைக்குள்தான் உள்ளது. சமூக குழுமங்களின் அறந்தான் பானைப் பண்டமாகும். அப்பண்டத்தை முதலில் புரிந்து கொள்வோம். அதன் இருத்தலை மாத்திரமல்ல அதன் இயங்கியலையும் புரிந்து கொள்வோம். அதாவது இலங்கையின் சமூகக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று கொண்டுள்ள உறவு நிலையின் இயங்கியவைப் புரிந்துக் கொள்வோம். அவ் உறவு நிலையின் இன்றைய இயங்கு நியதிகளைப் புரிந்து கொள்வோம்.

சமூக குழுமங்களை நாம் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று பண்பாட்டு மரபு வழி வந்த சமூக குழுமங்கள்; மற்றையது உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் செயற்படும் சமூக குழுமங்கள். இரண்டாவது வர்க்க சமூக குழுமங்கள் என அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், யாழ்பாணத்தார், வன்னியர், பௌத்த சிங்களவர், கிறிஸ்துவ சிங்களவர், வன்னிச் சிங்களவர், மலை நாட்டுச் சிங்களவர், முஸ்லீம்கள், வடகிழக்கு முஸ்லிம்கள், தென் இலங்கை முஸ்லீம்கள், மட்டக்களப்பார், கொழும்புத் தமிழர், கொவியார்ஸ், வெள்ளாளர், கரவாஸ், கரையார்கள், பறங்கியர்கள், வேடர், பஞ்சமர், குடிமைசாதிகள் நொடியாஸ், முக்குரைவர், முக்கியர், கிறிஸ்தவர், இந்து, சைவர், புலர் பெயர் தமிழர்கள், தமிழர், சிங்களவர் ஆகிய இவ்வித சமூக குழுமங்கள் அனைத்தும் பண்பாட்டு மரபு வழிவந்த சமூக குழுமங்களேயாகும். இவை அனைத்துக்குமான பொதுப் பெயர் என்ன? வர்க்க சமரச சமூக குழுமங்கள் எனலாம். இக்குழுமங்களின் முன்னனி அமைப்புகளின் உறுப்பினர்களின் முதலில் வர்க்க சமரச கோட்பாட்டாளர்களாக ஆக்கப்படுகிறார்கள். இதுதான் இவர்களுக்கான ஞானஸ்தானமாகும். பகைமைப் போக்குக் கொண்ட குழுமங்களின் இருத்தலுக்கான காரணம் இவ்வர்க்க சமரசமே.

குழுமங்களுக்குள்ளான வர்க்க சமரசத்தின் அதிகரிப்பு குழுமங்களிடையேயான பகைமை உறவின் அதிகரிப்பாக அமைகின்றது. இக்குழுமங்களின் தலைவர்களும், செய்றபாட்டாளர்களும், தீவிர ஆதரவாளர்களும் வர்க்க நீக்கம் பற்றியும் வர்க்க உறவுகளுக்கு அப்பாற்பட்ட மனித உறவு பற்றியும் பேசிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் வர்க்க சமரசமும், குழும பாசமும் கலந்த இவர்களின் மனித நேயந்தான் வர்க்க சமரச குழும உருவ மனித நேயம் எனப்படுகிறது. அடுத்த பக்கத்தில் தொழிலாளி வர்க்கம், உதிரித் தொழிலாளி வர்க்கம், விவசாயக் கூலிகள், உழைக்கும் விவசாயிகள், சிறு உடமை உற்பத்தியாளர்கள், ஆடைகசங்கா சேவைத்துறைத் தொழிலாளர்கள், மூளை உழைப்பாளர்கள் பெரும் நில உடமையாளர்கள் அதிகாரத்துவ வாதிகள், முதலாளிகள், சிறுவர்த்தகர்கள், பெரும் வர்த்தகர்கள் போன்றோர் தனித் தனி சமூக குழுமங்களாகச் செயல்படுகிறார்கள். இச் சமூக குழுமங்களே வர்க்க சமூக குழுமங்களாகும். இவை தான் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அமைந்த சமூக குழுமங்கள். கடந்த 25 வருட கால இலங்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் வர்க்க மேட்டுக்குடிச் சமூகக் குழுமம் மாத்திரமே (ஆளும் வர்க்கங்களின் கூட்டணி) உணர்வு பூர்வமான செயற்திறன் மிகு சக்தியாக இருந்து வருகின்றது. ஆனால், ஆளப்படும் வர்க்க குழுமங்களோ தமது வர்க்கக் கடமையை மறந்து வர்க்க சுபாவத்தை இழந்து ஒரு வர்க்கக் குழுமம் என்ற முறையில் நீண்ட துயிலில் ஆழ்ந்துள்ளன. சக்திமான்கள் இடையிடையே இவ்வித நீண்ட துயில் கொள்வது வரலாற்றின் தொடர்கதை போலும். கும்பகர்ணன் மீளாத் துயில் கொள்ளவில்லை, நீண்ட துயில் தான் கொண்டான். ஆனால் உழைக்கும் வர்க்க சமூக குழுமங்களின் உறப்பினர்கள் கூட்டம் கூட்டமாக வர்க்க சமரச சமூக குழுமங்களில் இணைவதே கடந்த 25 வருட கால இலங்கையின் வரலாறாக இருந்து வருகிறது. இவ்விதம் இணைப்பவர்களில் ஒரு பகுதியினர் வர்க்க மேல்நிலையாக்கம் பெற்று பணக்காரர்களாகிறார்கள். அத்துடன் வர்க்க சமரச சமூக குழுமங்களின் தலைமை அணியாக மாறுகிறார்கள். அவ்விதம் மாற விரும்பாதவர்களும் மாற முடியாதவர்களும் அதே குண்டாஞ்சட்டிக்குள் நின்று குதிரையோட்டிய வண்ணம் உள்ளார்கள்.

நலமடித்த நாய் தனது எஜமானர்களை விட்டுப் பிரிய முடியாதது போல் வர்க்க சமரசப் பார்வையுள்ள அவர்களால் வர்க்க சமரச சமூக குழுமங்களைவிட்டு விலகிக் கொள்ளவும் முடியாமல், அதை நெறிப்டுத்தவும் வழி தெரியாமல் ஒரு மையத்தை சுற்றிச் சுற்றி ஒடிக் கொண்டேயிருக்கிறார்கள். வர்க்க மேல் நிலை பெறும் முயற்சியில் தோற்றுப் போனவர்களும், மேல்நிலை பெற விரும்பாதவர்களும் மீண்டும் தமது வர்க்கத்துக்கு வந்து நீண்ட துயிலில் இருக்கும் தமது வர்க்க சமூக் குழுமத்தின் தூக்க நிலையை கலைப்பார்கள் என எதிர்பார்ப்போம். கும்பகர்ணன் போர்க்களம் புகுவான் என நம்புவோம். எப்படியோ வர்க்க சமூக குழுமங்களின் உறங்கு நிலை காரணத்தால் வர்க்க சமரச சமூக குழுமங்களே சமுதாயத்தின் இயங்கு சமூக குழுமங்களாகவும், இலங்கை சமூகத்தை இயக்கும் சமூக குழுமங்களாகவும் இருந்து வருகின்றன. இதனால் தான் இன்றைய அறத்தின் வாழ்நிலை பற்றிய காரண காரியத் தேடலை வர்க்கச் சமரச சமூக குழுமங்களின் செயற்பாடுகள், வர்க்க மேட்டுக்குடி சமூக குழுமங்களிலும் செயற்பாடுகள் ஆகிய இரு களங்களில் மாத்திரமே நடத்துகிறோம்.

வர்க்க சமரச சமூக குழுமங்களுக்கிடையேயான உறவுகள் என்பது என்ன? குஜராத்தில் வாழும் ஒரு இந்துப் பெண்ணும், இஸ்லாமிய இளைஞனும் காதலித்தால் அதை இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவு நிலை சீரடைந்து விட்டது என அர்த்தப்படுத்தலாமா? 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் மூதாட்டியை ஒரு சிங்கள் இளைஞன் இன வெறியர்களிடமிருந்து பாதுகாத்து பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு வந்து சேர்த்த நிகழ்ச்சியை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என அர்த்தப்படுத்தலாமா?
சிங்கள இராணுவத்திலிருந்து தமிழ் கிராமத்துக்கு தப்பியோடி வந்த (அது தமிழ் கிராமம் என்று தெரிந்தும்) ஒரு சிங்கள சிப்பாயை அக்கிராம மக்கள் புலிகளுக்கும் தெரியாமல், சிறிலங்கா அரசுக்கும் தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே தெரியாமல் அச்சிப்பாயின் கிராமத்துக்கே கொண்டு போய் சேர்ப்பித்ததை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது என்று அர்த்தப்படுத்தலாமா? அல்லது அக்கிராம மக்கள் சிங்களவனிடம் சரணடைந்துவிட்டார்கள் என அர்த்தப்படுத்தலாமா?
இஸ்லாமியர்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை உருவாகத் தொடங்கிய பிறகும் வன்னிப் பகுதி நாட்டார் வளமைக் கோவில்களை (அநேகமாக இவை மலையக மக்களின் கோவில்கள்) சைவ ஆகமக் கோவில்களாக மாற்றும் முயற்சி துரிதமடைந்து வருகிறது என்று தெரிந்த பிறகும் ஒரு மலையக முஸ்லீம் இளைஞன் தனது கிராமத்து முத்துமாரியம்மன் கோவில் தலைவராகப் பணிபுரிந்து அக்கோவிலை மலையக முறைப்படி சிறப்பாக நடத்தி வந்ததை முஸ்லீம்களுக்கும் சைவ ஆகமவாதிகளுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தப்படுத்தலாமா? சைவ ஆகம தலைமையிடமான புனித நிலமான வைத்தீஸ்வர கல்லூரிக்கும் அதன் மிக அருகாமையில் இருந்த சிவன் கோவிலுக்கும் நிலம் போதாமை என்று பிரச்சனை இருந்தது. இதனால் ஆறுமுக நாவலரின் பேரன் வழியான ஒருவரின் தலைமையில்தான் வண்ணார் பண்ணை முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பது இனியும் ஒரு இரகசியமா என்ன?

யாழ்பாணத்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஒரு உச்சநிலையை அடைந்து பின்னர் தணிந்து வந்த வேளையில் அகமண முறையைப் பாதுகாப்பதற்காக பனையில் இருக்கும் போதே பனையைத் தறித்து வீழ்த்திக் கொலை செய்யப்பட்டார் ஒரு சீவல் தொழிலாளி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால் கொதிப்படைந்திருந்த பஞ்சமர் இளைஞர்கள் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் உயர்சாதி இளம் பெண்கள் சிலர் இவர்கள் கைகளில் தனியாக மாட்டக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. இதை அவதானித்த வேறு சில பஞ்சம இளைஞர்கள் அப்பெண்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வை பஞ்சம இளைஞர்களில் ஒரு பகுதியினர் சமரசப் பாதையை மேற்கொண்டு விட்டார்கள் என்று அர்த்தப்படுத்தலாமா? இவை அரசியல் விளம்பரத்துக்காக நடந்த சம்பவங்களல்ல. அரசியல் உள்நோக்கம் எதுவும் இவற்றிற்கு இருக்கவில்லை. பலன் எதையும் எதிர்பார்க்காமல் நடந்து வரும் பல்லாயிரம் சம்பவங்களில் இவை மிகச் சிலவாகும். இவ்வித சம்பவங்களில் உயிர் நீத்தவர்கள் கூட உள்ளார்கள். பிறர் மேலான அன்பினதும் அருவ மனித நேயத்தினதும் விளைவுகளே இந்நிகழ்வுகளாகும். இவற்றை முன் சொன்ன முறையில் அர்த்தப்படுத்தலாமா? அவர்களின் அருவ மனித நேயப் பார்வையைக் கொச்சைப்படுத்தலாமா? இல்லை இல்லை யென்பதே இக் கேள்விகளுக்கான பதிலாகும். அவ்விதமானால் இவற்றை எவ்விதம் அர்த்தப்படுத்துவது? இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வர்க்க சமரச சமூகக் குழும உரும மனித நேயிகளாக அல்லாமல் அருவ மனித நேயிகளாக இருந்துள்ளார்கள் என்றே அர்த்தமாகும். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இடதுசாரிகளாக இருந்திருந்தால் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இல்லாமல் வர்க்க சமரச சமூக-குழும மனிதநேயிகளாக இருந்துள்ளார்கள்.

இன்னோர் வகையான எடுத்துக்காட்டை அவதானிப்போம். இளம் பெண் வைத்தியர் ஒருவர் தன் மீது பாலியல் வன்முறை செலுத்த முற்பட்ட ஒரு சிங்கள ஆணை அவ்விடத்தில் வைத்தே அவமானப்படுத்த முற்பட்டார். தான் அவமதிக்கப்படுதலைத் தவிர்ப்பதற்காக அவ் ஆண், “தமிழிச்சி சிங்களவர் மீது பாரபட்ச் காட்ட முற்படுகிறாள்” என்றோர் புரளியைக் கிளப்பிவிடுகிறான். சிங்களவர் அதை உண்மையென நம்புகிறார்கள். அம் மருத்துவர் அவ் ஊரைவிட்டே துரத்தப்பட வேண்டுமென்பது மக்கள் முடிவாகிறது. சிங்கள அதிகாரியும் அம்முடிவை ஏற்று அவளை இடமாற்றம் செய்கிறார். இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு சிங்கள தமிழ் பகைமை உறவை நிரந்தரமானது என்றும் சர்வ வியாபாகமானது என்றும் அர்த்தப்படுத்தலாமா? மனித நேயமற்ற ஒரு சிங்களவன் தனது இச்சைக்கு இணங்க மறுத்தவொரு பெண்ணை பழிவாங்கிக் கொண்டான். அவள் ஒரு றொடிய சிங்களம் பெண்ணாகவும் அவன் ஒரு கொவிகம சாதியனாகவும் இருந்திருந்தால் அவளைத் துரத்தியடிக்க அவன் சாதிய மேலாண்மை உணர்வை பயன்படுத்தியிருப்பான். கிறிஸ்துவப் பெண்ணாகவும் சிங்கள பௌத்தனாகவும் இருந்திருந்தால் பௌத்த பேரகங்காரவாதம் பயன்பட்டிருக்கும். சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் இருந்திருந்தால் தமிழ் உணர்வு பயன்படுத்தப்பட்டிருக்கும். இங்குள்ள விவகாரம் அவள் ஒரு பெண், அவன் அருவ மனித நேயமற்ற ஒரு காமுகன் என்பது தான். இங்கு வேறு எந்த விவகாரமும் இல்லை. ஒரு அருவ மனித நேயியின் கண்களுக்கு இந்த விவகாரம் மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே தெரியாது. ஆனால் ஒரு வர்க்க சமரச உருவ மனித நேயியின் கண்களுக்கு அவன் ஒரு காமுகன் என்பது மட்டும் தெரியாது. வேறென்னவோ எல்லாம் தெரியும். வர்க்க உருவ மனித நேயி கூட இந்த இடத்தில் தவறு இழைக்கக் கூடும். இவள் ஒரு உயர் அதிகாரியாக இருந்து அவன் ஒரு கீழ்நிலை ஊழியனாக இருந்தால் இவ்விவகாரம் கீழ்நிலை ஊழியன் பழிவாங்கப்படுகிறான் எனும் விவகாரமாயிருக்கும்.

முன் கூறிய எடுத்துக்காட்டுகளெல்லாம் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட தனித்தனிச் சம்பவங்கள். மரங்களைக் கண்டுக் கொள்ளாமல் மரங்களின் கூட்டுத் தொகுப்பான காட்டை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் உள்ளவர்கள் தனித்தனிச் சம்பவங்களை நிராகரிக்கக் கூடும். அவர்களுக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. காடு (முழுமை) சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எடுத்துக்காட்டாக கொண்டு ஆராய்வோம். 1971 இல் பல ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். மகாவலிகங்கையிலும், மாணிக்க கங்கையிலும், களனி கங்கையிலும் இளைஞர்களின் பிரேதங்கள் தூக்கி எறியப்பட்டன. குறை உயிரும் குற்றுயிருமாக பலர் தெருக்களில் டயர் போட்டுக் கொளுத்தப்பட்டனர். கொல்வதிலும், கொல்லப்பட்டவர்களின் விபரங்களைப் பதிவதிலும் அவர்களைப் பற்றிய விபரங்களை அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைப்பதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த விதிமுறைகளும் பின் பற்றப்படவில்லை. 1989, 90 களிலும் இதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது. கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் பிற சமூக ஆர்வலர்கள் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், நாட்டை விட்டுஓட நிர்பந்திக்கப் படுகிறார்கள். வெள்ளைவானின் தொல்லை தொடர் தொல்லையாக அதிகரித்து வருகின்றது. வர்க்க சமரச தமிழ் குழுமத்தினருக்கு இதுவெல்லாம் கண்களுக்குத் தெரிவதில்லை. சிறிலங்கா அரசு தம்முடன் மாத்திரம்தான் முரண்படுகிறது என்று கருதிக் கொண்டுள்ளார்கள். தமிழர்களையும் இவ்விதமே நம்ப வைக்க அதிக சிரமம் எடுத்து வருகிறார்கள். அதே போன்று வர்க்க சமரச சிங்களக் குழுமத்தினரின் ஒரு பகுதியினர் தமது அரசு தமக்கு எதிராக நடந்து கொள்வதைக் கண்டுக் கொள்ளவேயில்லை. அல்லது அதைப் பார தூரமாகக் கருதுவதில்லை. இன்னோர் பகுதியினர் சிறிலங்கா அரசின் கரங்கள் தம்மையும் அடக்குகிறது என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவ் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கும் வன்முறையை கண்டு கொள்வதில்லை. அது அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அதே போன்று தமிழீழ அரசு தமிழ் பேசும் மக்களுக்கும் பிற தமிழ் அரசியல் குழுமங்களுக்கும் எதிராக எடுத்து வந்த அடக்குமுறைகளைத் தமிழர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். தமிழீழ அரசு சிறிலங்கா அரசுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளிலேயே தமது கவனம் முழுமையையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

வர்கக சமரச குழுமங்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் அவற்றில் பல தத்தமது மக்களிடையே பகை வாழ்தல் எனும் அறநெறியைக் கடைப்பிடிக்காதனவாகவே உள்ளன. ஆனால் சிங்களக் குழுமத்துக்கும் பிற இன, மத வழிக் குழுமங்களும் இடையேயான உறவு நிலையோ நல்லறமாக இல்லை. பதுக்கி அல்லது பறித்து வாழ்தலும், பகைபட வாழ்தலுமே பிரதான உறவு நிலையாக உள்ளது. ஆனால், பகைமையுள்ள குழுமங்களின் உறுப்பினர்களை தனித்தனி அலகுகளாக எடுத்துக் கொண்டால் வௌ;வேறு குழும தனிநபர்களுக்கிடையேயான உறவு நிலையில் பகிர்தலும் இசைபடவாழலுமான அறம் காணப்படவே செய்கிறது. அதாவது தனி நபர்களுக்கிடையேயான உறவில் நல்லறம் காணப்படவே செய்கின்றது. இந்தத் தனிநபர்கள் எண்ணிக்கையில் குறைந்த மிகச் சிறுபான்மையினரல்ல எண்ணிக்கையில் குறைந்தாலும் கணிசமாக தொகையினராகும். யாழ் மாவட்டம் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களும் பல் இனக் கலப்பு மாவட்டங்களே என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும். வெவ்வேறு சமூக குழும உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையும், குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையும், இரு வெவ்வேறு தளங்களில் இயங்கும் தனித்தன்மையுள்ள இரு வெவ்வேறு சமூக நிகழ்வுப் போக்குகளாகும். இவை இரண்டுக்கும் தனித்தனியான பொறிமுறை உண்டு. வெவ்வேறு சமூக குழுமங்களின் உறுப்பினர்களுக்கிடையேயான உறவு நிலையை இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம். குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையை அரசியல் மைய சமூக நிகழ்வுப் போக்கு எனக் கொள்வோம்.

இயல்பு நிலை சமூக நிகழ்வுப் போக்கு மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகள், சடங்குகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. பகிர்ந்து வாழ்தலும் இசைபட வாழ்தலுமே இங்கு பிரதான போக்காக இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணல், பகையை புறந்தள்ளி நல்லுறவை வளர்த்தல் ஆகியனவே இவர்களின் மந்திரமாக இருக்கும். பண்பாட்டுக் கலப்புகள் மிக எளிதாக நடைபெறும். பகிர்ந்து வாழல் , இசைபட வாழ்தல் அறம் இங்கு உயிரோட்டமானதாகக் செயற்படும். அதே நேரம் பறித்து பதுக்கி வாழும் பண்பாடும், பகைபட வாழும் அறமும், முற்றாக அற்றுப் போயிருக்கும் என்று கூற முடியாது. நல்லறத்துடன் கூடவே அந்நிகழ்வுப் போக்கும் காணப்படும். ஆனால் இத் தீயறத்துக்கு எதிரான போராட்டமும் அந்தந்த மக்களிடையே நடந்து கொண்டேயிருக்கும். இயல்பான உறவு நிலையைத் தீர்மானிப்பது அருவ மனித நேயம், வர்க்க உருவ மனிதநேயம், வர்க்க சமரச உருவ மனித நேயம் ஆகியனவேயாகும். சாதாரன வேளைகளில் வர்க்க சமரச உருவ மனித நேயம் அடித்தளத்தில் மறைந்திருக்கும். அது பிரதான போக்காக இருக்காது. ஆனால் இவ் எதிர்மறை மனித நேயம் மேலாண்மை பெறும் வேளைகளில் வௌ;வேறு குழும உறுப்பினர்களிடையேயான உறவு கெட்டுப் போகின்றது. பறித்து - பதுக்கி வாழலும், பகைபட வாழலும் எனும் வாழ்க்கை நெறி அறமாகின்றது. இவ்வித மேலோங்கல் அடிக்கடி ஏற்படும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் இத வளமையான நிகழ்வல்ல. மக்கள் வர்க்க சமரச சமூக குழுமங்களின் மேட்டுக் குடிகளின் அரசியல் பண்பாட்டு செல்வாக்கிற்கு உள்ளாகும் போது தான் இவ்வித மேலோங்கல்கள் நடைபெறுகின்றன. மக்களுக்கும் மேட்டுக்குடிக்கும் இடையேயான அரசியல் தூரம் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் நல்லறமும் அதிகரிக்கும். அரசியல் தூரம் குறைய குறைய குறிப்பிட்ட தூரம் வரை நல்லறமும் குறையும். அதன் பின் நல்லறம் தீயறமாக மாறத் தொடங்கிவிடும்.

குழுமங்களுக்கிடையேயான உறவு நிலையென்பது என்ன? அதை எவ்விதம் வரையறுப்பது. இவ் உறவு ஐந்து வகைப்படும். எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம் . S,T எனும் இரு வர்க்க சமரச சமூகக் குழுமங்களை எடுத்துக் கொள்வோம்.

1. S இன் தலைமைக்கும் (மேட்டுக்குடிக்கும்) T இன் தலைமைக்கும் இடையேயான உறவு.
2. S இன் தலைமைக்கும் T யின் மக்களுக்கும் இடையேயான உறவு.
3. S இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
4. T இன் தலைமைக்கும் S இன் மக்களுக்கும் இடையேயான உறவு.
5. T இன் தலைமைக்கும் T இன் மக்களுக்கும் இடையேயான உறவு.

இந்த ஐந்து உறவுகளின் தொகுப்புத்தான் S.T ஆகிய இரு வர்க்கச் சமரச சமூகக் குழுமங்களுக்கிடையேயான உறவாக அமைகிறது. இரு சமூகக் குழுமங்களினதும் மேட்டுக் குடிகளுக்கு இடையேயான தொடர்பாகவே இது காட்சியளிக்கிறது. ஆனால் உண்மையில் இது இந்த ஐந்து உறவுகளின் தொகுப்பேயாகும். புலிகளின் இராணவ அணி தோற்கடிக்கப்பட்டதன் பின்னேயான இன்றைய சூழலில் இவ் ஐந்து வகை உறவுகளும் எவ்விதம் செயல்படுகிறது என்பதை நோக்குவோம்.

அ) மஹிந்த அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான உறவு நிலை.
புலிகள் பலவீனப்பட்டுவிட்டார்கள். தமிழரின் தலைமை அரசியல் அணியாக திகழ்ந்த புலிகளின் இடம் இன்னமும் எந்த அரசியல் தலைமையாலும் ஈடு செய்யப்படவில்லை. இதனால் மஹிந்த அரசுக்கு உள்ளுர் எதிராளியாரும் இல்லை.

ஆ) மஹிந்த அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான உறவு
இவ்வுறவு ஆளும் அணியின் நலனுக்கு ஏற்றபடி மிக நன்றாகவே அமைப்பு மயப்படுத்தப்பட்டு வருகின்றது. கீழ்படியும், பணிவும், சமரசமும் மிக்க அரசியல் தலைவர்களும் அரசியல் குழுக்களும் தாரளமாகவே உள்ளன. இவ் உறவு வளர்ந்தும் வருகிறது. இது இசைபட வாழ்தலல்ல, அடிமைப்பட வாழ்வதாகும்.

இ) மஹிந்த அரசுக்கும ; சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு.
யுத்தத்தின் முன்னர் இது மிக நெருக்கமானதாக இருந்தது. யுத்தத்தின் பின்னர் இந்நெருக்கம் மேலும் அதிகரித்தது. ஆனால் தற்போது இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவ வல்லமையைப் பிறயோகிக்கும் அவசியம் தோன்றியுள்ளது. இவ் இடைவெளியை அதிகரிப்பதற்கான காரணிகள் இடைவெளியைக் குறைப்பதற்கான காரணிகளை விட கெட்டியானதாகும் வளர்திசை நோக்கியதாகவும் உள்ளன.

ஈ) புலிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவு
தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான தொடர்பைப்பற்றி எந்தத் தமிழ் தேசியவாதியும் புரிந்துக் கொள்ளவில்லை. அவர்களின் கண்களுக்கு சிங்களவர்கள் எல்லாமே பகைவர்கள்தான். தமது அமைப்பின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய சிங்கள தனிநபர்களைத் தேடி வருகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் அவர்களைத் தமது குழுவாதத்திற்குள் அமுக்கி சிங்கள மக்களிடம் இருந்து பிரித்துவிடுகிறார்கள். புலிகள் உட்பட அனைத்துத் தேசியவாதிகளும் இதையே காலங் காலமாக செய்து வருகிறார்கள்.

உ) புலிகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு
இது பூஜ்ஜியம் என்று சொல்லக் கூடியளவிற்கே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. தமிழரின் தலைமைக்கு வரக்கூடியவர்கள் என எதிர்பார்க்கப்படும் மாற்றாளர்கள் எவரிடமும் தமிழ் மக்களுடனான உறவை வளர்ப்பதற்கான எந்த வேலைத்திட்டமும் இல்லை.

இந்த ஐந்து உறவு நிலைகளையும் தொகுத்துப் பார்க்கும் போது சிங்களம் அரசியல்ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் தமிழியத்தை விட பலமானதாகவே உள்ளது. ஆகவே சிங்களம் தமிழியம் உறவு எஜமான ஊழியன் உறவாகவே இன்று காணப்படுகிறது. சரணடைவும், தனிமைப்பாடும் விரக்தியுமே தமிழியத்தின் இன்றைய நிலையாக உள்ளது. இராணுவ ரீதியான வல்லமை ஒன்று தான் தமிழியத்தக்கு இருந்ததே தவிர புலிகளின் இராணுவத் தோல்விக்குப் முன்பும் பின்பும் தமிழியம் அரசியல்ரீதியாகப் பலவீனப்பட்டே இருந்துவருகிறது. தமிழியம் பலவீனப்பட்டுவிட்டது என்பதை சிங்களம் புரிந்து கொண்டுள்ளது. சுயமாக தம்மால் இனி எதுவும் செய்ய முடியாது என்பதை தமிழியம் புரிந்த கொண்டுள்ளது. ஆயினும், தமக்கிடையேயான பகைபட வாழும் போக்கை ஊக்குவிப்பதில் சிங்களத்தினதும்; தமிழியத்தியத்தினதும் வர்க்க மேட்டுக்குடியினர் மிக மும்முரமாகவே செயற்பட்டு வருகிறார்கள். அவர்களது வர்க்க மேல்நிலையாக்கத்திற்கு இவ்வித பகைமையுறவு அவசியப்படுகிறது. ஆகவே மஹிந்த அரசு இன்னோர் இனப் பேரழிவை ஏற்படுத்தாது என்றோ, இன்னோர் இனப் பேரழிவுக்கு தமிழியம் மீண்டும் காரணமாக இருக்கமாட்டாது என்றோ கூற முடியாது.

தமிழியம் அடிமை நிலையில் இருந்த மீள்வது எப்படி என்பது ஒரு அரசியல் பிரச்சினை. அவ் அரசியல் விவாதம் இக்கட்டுரையின் எல்லைக்கு அப்பாற்பட்டது. இங்கு சொல்ல வருவது பெரும்பான்மையான தமிழ் குழுக்களிடமும் அரசியல் உணர்வுள்ளவர்களாக கருதப்படுபவர்களிடமும் காணப்படும் குப்பைத்தனமாக அரசியல் உறவு முறைகளுக்கான காரணம் அவர்களல்ல. அவர்களின் பாசறைகளேயாகும். தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கான அரசியல் வேலைத் திட்டம் ஒன்றின் கூட்டுருவாக்கமும் அவ் வேலைத் திட்டத்தை நிறைவெற்றுவதற்கான முயற்சிகளுந்தான் குப்பைத்தனத்தைக் களைய உதவும். குப்பையில் விளைந்த மாணிக்கங்களை பட்டை தீட்டி மகுடம் சேர்க்க வழிவகுக்கும். அரசியல் அறிவியலார்கள் அரசியல் நிபுணத்துவம் மிக்கவர்கள் இதற்கு விடை காணட்டும். ஆனால் வெவ்வேறு வர்க்க சமரச சமூக குழுமங்களின் மக்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவது என்பது ஒரு அரசியல் வேலைத் திட்டமல்ல. அது பண்பாட்டுக் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்களை உள்ளடக்கியதாகும். அதுதான் வெளிவர இருக்கின்ற இந்நூலின் விரிவான விவாதத்திற்குரிய பொருளாகும். ஆகவே அதைத் தொடர்வோம்.

[[ கைமண் அவர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நுலின் ஒரு சிறு பகுதி, தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினால் லண்டனில் மாதாந்தம் நடாத்தப்பெறும் உரையாடல் அரங்கில் தோழர் எஸ்.சிறீதரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. சமூக அடிக்கட்டுமானம் தொடர்பாக, வழமையான பாணியில் இருந்து ஆசிரியர் விலகிச் செல்வதையும் - செழுமைப்படுத்துவதையும் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. லக்லாவ் , கிராம்சியை மீள்வாசிப்புச் செய்யும் போது கூறிய விடயங்களுக்குச் சமாந்தரமான கருத்தமைவுடன் இக்கட்டுரை செல்வதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. - சசீவன்  ]]

Statcounter