வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 27, 2009

அவதார் (Avatar) - 2

அவதார் (Avatar) - 1

'இயற்கைக்கு எதிராக மனிதன் அடைந்த வெற்றிகளுக்காக நாம் நம்மை அதிகமாகப் பாராட்டிக் கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்கிவிடுகிறது. முதல் கட்டத்தில் ஒவ்வொரு வெற்றியும் நாம் எதிர்பார்த்த விளைவுகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாவது மூன்றாவது கட்டங்களில் முற்றிலும் மாறுபட்ட நாம் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன. முதல் கட்டத்தில் ஏற்பட்ட வெற்றியை அவை பெரும்பாலும் நிராகரித்துவிடுகின்றன.' - ஏங்கல்ஸ்

'இந்தச் செவ்விந்தியத் தலைவன் அமெரிக்கப் பெருந்தலைவரிடம் சொல்லப்போவது, பருவங்கள் உள்ளவரை வானில் நட்சத்திரங்கள் உள்ளது போல் முக்காலமும் உண்மையாகும். உங்களால் வானத்தை வாங்கவோ விற்கவோ முடியுமா? நிலத்தின் கதகதப்பை வாங்க முடியுமா? நீங்கள் கேட்பது எங்களுக்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இந்தத் தென்றல் காற்றின் வாசமும், இந்தத் தெளிந்த நீரின் ஒளியும் எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவற்றை எப்படி உங்களால் எங்களிடமிருந்து வாங்க முடியும்? இது பற்றிக் காலம்தான் சொல்ல வேண்டும். இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்குப் புனிதமானவை. ஒவ்வொரு ஊசி இலையின் பளபளப்பும், கரைகளின் மணலும், அடர்ந்த காடுகளின் பனி மூட்டமும், வண்டுகளின் ரீங்காரமும் எங்களுக்குப் புனிதமானவை. நெஞ்சை விட்டு அகலாதவை.'
- சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..


ஐரோப்பியர்களுக்கு இயற்கை எப்போதும் நண்பனாக இருந்ததில்லை. அவர்களும் இயற்கையைத் தம் நண்பனாகக் கருதியதில்லை. இயற்கையை வென்று வாழ்வதே அவர்களது வாழ்க்கை முறையாக இருந்தது. இயற்கையை வென்று வாழும் நோக்கிலான வாழ்க்கைமுறையே அவர்களை அதீதமான தொழில்நுட்பப் பாவனையாளர்களாக்கியது. இவ்வாழ்வுமுறை ஐரோப்பியர்களை கருவிகளை மையப்படுத்திய அதிகாரவர்க்கத்தையும் அதன்மூலமான சமூக அதிகாரப்படிநிலைகளையும் உருவாக்கியது. இதன் தொடர்ச்சியே ஐரோப்பியர்களது இன்றைய சந்தையைக் கையகப்படுத்தும் முதலாளித்துவ பொருளாதார முறை என்பது. சந்தை மையப் பொருளாதார முறையின் அடிநாதமாக விளங்குவது போட்டியும் கையகப்படுத்துவதுமே. இயற்கை மீதான பற்றின்மையும் போட்டியுமே அவர்களை ஐரோப்பியக் கண்டங்களில் இருந்து பிற கண்டங்களை நோக்கிச் செல்ல வைத்தது எனலாம்.

தென்னமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களைச் சார்ந்த மக்களது வாழ்க்கை முறை ஓரளவு இயற்கையுடன் ஊடாடிய வாழ்க்கைமுறையாக இருந்தது. இயற்கை அம்மக்களின் நண்பனாக இருந்தது. இயற்கையை அவர்கள் தெய்வமாகக் கருதினார்கள். அவர்கள் தம்மை இயற்கையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கவில்லை. மாறாகத் தம்மை இயற்கையின் ஒருபகுதியாகவே கருதினார்கள். இதனால் அவர்கள் ஐரோப்பியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போது அவர்களால் ஐரோப்பியர்களை வெல்ல முடியாமல் போனது. வட அமெரிக்காவின் செவ்விந்தியர்களும் அவுசஸ்திரேலியாவின் பூர்வகுடிகளும் காலனித்துவத்தால் இவ்வுலகில் இருந்து அவர்களது அடையாளங்கள் களையப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டார்கள். தென்னமரிக்க, ஆபிரிக்க, ஆசிய கண்டங்கள் காலனித்துவத்திற்கு எதிரான நீண்டகாலப் போரைச் செய்ததன் மூலம் நிலரீதியான ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெற்றன. ஆயினும் கருத்தியல் ரீதியான மேலாண்மையில் இருந்து இன்றுவரை அவர்களால் விடுபட முடியவில்லை. கருத்தியல் மேலாண்மையை நவீன தொழில்நுட்பங்களின் மூலம் ஐரோப்பியர்கள் இன்றுவரை நிறுவிக்கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையில் காலனியாதிக்கம் இன்றுவரை தொடர்வதாகவே கருத வேண்டியுள்ளது.

முதலீட்டியத்தின் அடிப்படையான அதீத நுகர்வுக்கலாச்சாரமும் இயற்கையை மீறிய அபிவிருத்திகளும் ஐரோப்பியர்கள் கற்றுக்கொடுத்தவைகளே. காலனியாதிக்கத்தின் போது ஐரோப்பியர்கள் ஐரோப்பா அல்லாத பிரதேசங்களில் இருந்து நினைத்துப் பார்க்க முடியாதளவு வளங்களைக் கொள்ளையடித்துத் தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். அதையே காலனியாதிக்க மக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். இதன் தொடர்ச்சியில் முதலீட்டியமும் நுகர்வுக்கலாச்சாரமும் பெருமளவுக்கு வளர்ந்தன. இவ்வளர்ச்சி என்பது இயற்கையை மீறியே உருவாக்கப்பட்டது. அதன் விளைவே இன்றைய சுற்றுழ்சூழல் பிரச்சனைகளும் மனித அழிவுகளுமாகும். இன்று இயற்கை பற்றிய பார்வைகள் மாறிக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். தத்துவப்பரப்புக்களில் இயற்கையுடனான உரையாடலை மனிதன் நிகழ்த்த முற்படுவதை நாம் காண்கின்னோம்.

அவதார் திரைப்படம் ஒருவகையில் காலனித்துவ காலப்பகுதியை மீள்வாசிப்புச் செய்கின்றது. பண்டோரா கிரகத்தைச் சேர்ந்த நாவிகளின் ஊடாக நாம் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த எம்மூதாதையரைக் காணமுடிகின்றது. எமது மூதாதையர் ஆக்கிரமிக்கப்பட்ட வேதனைமிகு நிகழ்வைக் காண முடிகின்றது. ஐரோப்பியர்கள் எம்மைச் சிக்கிச் சின்னாபின்னமாக்கியதை எம்மால் காணமுடிகின்றது. நாவிகள் மனிதர்களை வென்றபோது தோற்றுப்போன எம் மூதாதையர்கள் சார்பாக நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம். ஐரோப்பியர்கள் சென்றபோது விட்டுச் சென்ற அனைத்தையும் நாம் எம்கூடவே வைத்திருக்கின்றோம். எம்மால் இன்றும் எமது மூதாதையர் தொலைத்த வாழ்வை மீளக்கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துபெற்ற அனுபவங்களூடான அறிவைக்கூட நாம் தொலைத்துவிட்டு ஐரோப்பிய அறிவை எமது மூளைகளில் சுமந்து திரிகின்றோம். இன்று பிரதேச ரீதியான அறிவுகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டாலும், மிகவும் தாமதமான நடவடிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.

பண்டோரா கிரகத்து நாவி மக்களது இயற்கையுடனான தொடர்பாடல்திறன் மனிதன் நினைத்துப் பார்க்க முடியாதளவு அதிகமானது எனக்கூறப்படுகின்றது. அதனாலேயே மனிதன் நாவிகளைத் தாக்குவதற்கு அஞ்சினான். பண்டோராவில் காணப்படும் மிருகங்களுக்கும் நாவி மக்களுக்கும் கொண்டையின் முடிவில் காணப்படும் உயிரியல் ரீதியான அங்கம் இருவரையும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள வைக்கின்றது. அவ்வாறே தாவரங்களும் நாவிகளும் உயிரியல் ரீதியான பிணைப்பின் மூலம் தொடர்பு கொள்கின்றார்கள். இது இயற்கைக்கும் நாவிகளுக்கும் இடையிலான தொடர்பாடலைக் காட்டுவதற்கான குறியீடாகின்றது. இவ்வாறாக நாவிகளை இயற்கையின் அங்கமாகக் காட்ட திரைப்படமெங்கும் அதிக சிரத்தை எடுக்கப்பட்டிருக்கின்றது. காடு நாவிகளின் நண்பனாக இருக்கின்றது. நாவிகள் காட்டில் உள்ள ஒரு மிருகத்தையேனும் தேவைக்கதிகமாகக் கொல்வதில்லை. தமது உணவுத் தேவைகளுக்காகக் கொல்லும்போதும் அவ்விலங்கின் உயிர் இயற்கையுடன் கலப்பதாகவே கருதுகின்றார்கள். மேலும் இக்கிரகம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்படாத உயிரியல் - தாவரவியல் தொகுதியாக இயங்குகின்றது எனக் கூறப்படுகின்றது. இத்தொகுதியைப் பிரித்து நோக்க முடியாது. ஒருவிதத்தில் ஒன்றனது அங்கமாக இன்னொன்று எனக்கிரகத் தொகுதி முழுவதும் பிணைக்கப்பட்டிருக்கின்றது. அது bio-botanical neural network எனக்குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாகவே நாவிகளின் விரோதியாக இருந்த நாய் மாதிரியான உருவம் கொண்ட விலங்குகள் கூட இறுதியில் ஒன்றுபட்டு மனிதர்களை எதிர்க்கின்றன.

பண்டோரா கிரகத் தொகுதி திரையில் விரியும் போது தவிர்க்க முடியாமல் மிஷேல் ஸெர் உம் புரூனோ லத்தூரும் ஞாபகத்தில் வருகின்றார்கள். அவர்களது கனவுலகு பண்டோராவாக்கப்பட்டிருக்கின்றது என்று நினைக்கத் தோன்றுகின்றது. இயற்கை மற்றும் புற - உலகு என்ற வேறுபாடுகளைக் களையும் நோக்கிலானவை இன்றைய தத்துவத்தின் போக்குகள். நாகர்ஜுனனின் மொழியில் சொல்வதானால் ' "இயற்கை" என்பதான "புற - உலகும்" மனிதர்களின் "அரசியல்-சமுதாய உலகும்" ஒரே வலைப்பின்னலில் இயங்குபவை என்று லத்தூர் கூறுகிறார்'. மேலும் 'அறிவு என்பதை, புற-உலகை வென்று கைப்பற்றும் விஞ்ஞானமாக மாத்திரமே எண்ணும் நிலைக்கு ஆளாகிவிட்டிருக்கிறோம். ஆனால், இந்தப் புற-உலகு என்ற வரையறைக்கு சமுதாய-ஒப்பந்தத்தில் இடமில்லாமல் போகும்நிலை வந்திருக்கிறது. அதாவது, இந்தச் சமுதாய-ஒப்பந்தத்தின் விரிவாக்கத்தின் போக்கில் இந்தப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறோம். இந்த நிலையில் நாம் விட்டுவைத்திருப்பதே இயற்கை என்பதாகியிருக்கிறது! இயற்கைமீது நாம் பெற்ற வெற்றி ஒருவாறாக நம்முடைய எல்லைகளை, இயற்கையில் நாம் தங்கி-நிற்கிறோம் என்பதை, தெளிவாக்கியிருக்கிறது. இந்த நிலையிலாவது இயற்கையைத் தன்னிலையாக அங்கீகரிக்க வேண்டும், அது நம்முடன் இணைந்தும் எதிர்த்தும் செயல்பட வல்லது எனபதை அங்கீகரிக்கும் ஓர் புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' மேலும் 'சொல்லப்போனால், இயற்கையை வெல்கிற வல்லமையையே வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது மனிதஇனம். இயற்கையை வென்று, கைப்பற்றி, அதற்கு ஏதும் அளிக்க முடியாமல் இருப்போரை அடுத்துண்ணிகள் (parasites) என்றுதான் அழைக்க வேண்டும் என்கிறார் ஸெர். இந்த அடுத்துண்ணி-நிலையைக் கடக்க வேண்டி, இயற்கை-சமுதாயம் என்ற பிளவைக் கடக்கிற புதிய இயற்கை-ஒப்பந்தம் வேண்டும் என்கிறார் ஸெர்.' என்று கூறிச் செல்கின்றார் நாகர்ஜுனன்.

ஒருவகையில் பார்த்தால் புருனோ லத்தூரும் மிஷேல் ஸெர் உம் இன்றைய உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகக் கண்டவற்றைக் கொண்டு தனது பண்டோரா என்ற கற்பனைக்கிரகத்தை ஜேம்ஸ் கெமரூன் உருவாக்கியிருப்பது ஆச்சரியமாகவிருக்கின்றது. இயற்கை, சுற்றுச் சூழல் மற்றும் வளங்கள் தொடர்பான இன்றைய பிரச்சனைகளுக்கு ஐரோப்பியர்களே மூல காரணமாகின்றனர். இன்றவர்கள் இயற்கையை மீறிய தம் வாழ்வை நிராகரித்து, தாம் காலனித்துவப்படுத்திய இயற்கையுடன் ஒன்றிய வாழ்வைப் பரிந்துரைக்கின்றார்கள். இதுவே வாழ்வின் முரண்நகையாகும். பூமியில் உள்ள வளங்களை இழந்து புதிய வளங்களைத் தேடியே மனிதர்கள் பண்டோரா கிரகத்திற்கு வருகின்றார்கள். ஒருவகையில் இத்திரைப்படம் மனிதகுலம் இன்று சென்றுகொண்டிருகும் தவறான பாதையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதோடு தான் விட்ட தவறின் ஊடான இலட்சிய உலகாகப் பண்டோராவைக் காட்சிப்படுத்துகின்றது.

'வெள்ளையனின் பசி இந்த நிலம் அனைத்தையும் விழுங்கிவிட்டு வெறும் பாலைவனத்தை மட்டுமே விட்டுச் செல்லப் போகின்றது. வெள்ளையனின் நகரங்களில் அமைதியே கிடையாது. இலைகள் காற்றில் அசைவதால் ஏற்படும் ஒலியும், வண்டுகள் பறப்பதால் அவற்றின் சிறகுகள் ஏற்படும் ஒலியும் அங்கே கேட்பதில்லை. குயில்களின் கூவுதலையும், தவளைகளின் உரையாடல்களையும் கேட்க முடியாத இடத்தில் என்னதான் இருக்கிறது? தாமரைக் குளத்தின் மீது தவழ்ந்து வந்து முகத்தில் வீசும் தென்றலும், மழைக்குப் பின் மண்வாசனையுடன் வரும் காற்றும், வேப்பம் பூ மணத்துடன் வரும் காற்றும் எங்களுடன் மிகவும் பிடித்தமானவை. இந்தக் காற்று செவ்விந்தியனுக்கு விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம். இந்தக் காற்றைத்தான் விலங்குகளும் செடி கொடிகளும், மனிதர்களும் சுவாசிக்கிறார்கள். பிறந்த குழந்தை தனது தாயை நேசிப்பது போல் நாங்கள் இந்தப் பூமித்தாயை நேசிக்கிறோம்.'
-சீத்தல் என்ற செவ்விந்தியத் தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு 1855 இல் எழுதிய கடிதத்தில் இருந்து..

(இன்னும் வரும்)


2 comments:

  1. //இலைகள் காற்றில் அசைவதால் ஏற்படும் ஒலியும், வண்டுகள் பறப்பதால் அவற்றின் சிறகுகள் ஏற்படும் ஒலியும் அங்கே கேட்பதில்லை. குயில்களின் கூவுதலையும், தவளைகளின் உரையாடல்களையும் கேட்க முடியாத இடத்தில் என்னதான் இருக்கிறது? தாமரைக் குளத்தின் மீது தவழ்ந்து வந்து முகத்தில் வீசும் தென்றலும், மழைக்குப் பின் மண்வாசனையுடன் வரும் காற்றும், வேப்பம் பூ மணத்துடன் வரும் காற்றும் எங்களுடன் மிகவும் பிடித்தமானவை//

    முற்றிலும் உண்மை.. ஆனால் பிந்தைய தலைமுறைக்கு நாம் வெறும் கந்தக வாசத்தையே விட்டுச் செல்கிறோம்... இல்லையா..?

    ReplyDelete
  2. ஒரு சின்ன குறிப்பு: ஐரோப்பா எப்போதுமே இயற்கைக்கு எதிரானதாக இருந்ததென்ற கூற்று குறித்து.. ஐரோப்பாவிலும் தாய்த்தெய்வ மற்றும் இயற்கை வழிபாடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.. உதாரணம் Stone Henge.. கத்தோலிக்க மதத்தின் மேலாதிக்கத்துக்கு முந்தைய பகன் மதங்கள் அனைத்துமே பெரும்பாலும் இயற்கையோடிணைந்தவையே.. கிறிஸ்துமஸ் பண்டிகை கூட பண்டைய பகன் (குளிர்காலத்தின் ஆரம்பத்தைக் கொண்டாடும்) திருநாளொன்றே என்றும் கூறப்படுகிறது.. அவையெல்லாம் எங்கே அல்லது எப்படி அல்லது எதற்காக தொலைக்கப்பட்டன என்பதை ஆராய்வதும் சுவாரசியமாக இருக்கும்..

    ReplyDelete

Blog Archive

Statcounter