வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 24, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 2

2.இலங்கையும் தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும்.
இலங்கையில் மொழி ரீதியாக முக்கியமாக இரண்டு சமூகங்கள் காணப்படுகின்றன. சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரும்பான்மைச் சமூகம்1* மற்றும் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சிறுபான்மைச் சமூகங்கள்2* . பெரும்பான்மைச் சமுகத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான முரண்பாடு நீண்ட வரலாற்றைக் கொண்டது. மொழிப்பிரச்சனை என்பது காலனித்துவ காலத்தில் இங்கிலாந்து ஆட்சியாளர்களது முகாமைத்துவத்தின் விளைவெனக் கூறப்பட்டாலும் அதைத்தாண்டிய சமூகவியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களும் கூறப்படுகின்றன. மொழி ரீதியான பாகுபாடு இறுதியில் வன்முறை ரீதியான எழுச்சியைச் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இந்நேரத்தில் 1981 ஆம் ஆண்டு மொழியியல் ஆவணக்காப்பகங்களில் ஒன்றாகவும் அறிவுச் சேகரிப்பாகவும் விளங்கிய யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இச்சம்பவம் சிறுபான்மை மொழிபேசும் மக்களில் மாறாத வடுவை ஏற்படுத்தியது. அடையாள அழிப்பு என்பது குறித்த சமூகத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் அல்லது அதன் தனித்துவத்தை அழிக்கும் நோக்கில் அதிகாரவர்க்கம் மேற்கொள்ளும் முக்கியமான செயற்பாடாகும். இச்செயற்பாடு இலங்கையில் மாத்திரம் நிகழவில்லை. உலகின் பல பிரதேசங்களிலும் கருத்தியல் ரீதியாக அதிகார மேன்மை பெறும் பொருட்டு அச்சமூகங்களைக் கருத்தியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் பொருட்டும் குறித்த சமூகத்தின் அறிவுருவாக்கத்தை முடக்கிப் போடும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவை தொடர்பான விடயங்களை கீழே விரிவாக ஆய்வுசெய்ய முயல்கின்றேன்.

2.1 மொழியும் சமூகமும்.
ஹேபர்மாசினது கருத்தின்படி 'மொழிச்செயற்பாடு' என்னும் நிகழ்வே சமூகத்தில் புரிதலை ஏற்படுத்தியபடி சமூக இயங்குநிலைக்கு அடிப்படைக் காரணமாகின்றது. ஆயினும் இப்பகுதியில் மொழிச்செயற்பாடு அல்லது சமூக மாற்றம் பற்றிப் பேசப்போவதில்லை. இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் இவ்விடயத்தை விரிவாக ஆராய முடியும். சமூகத்திற்கும் மொழிக்கும் உள்ள இறுக்கமான தொடர்பு சமூகத்திற்கும் மொழிக்குமான உறவின் உளவியல் அவ் உளவியலின் அடிப்படை போன்ற விடயங்களைப் பற்றியே கூற வேண்டும். மொழி உருவாக்கும் பொதுத்தன்மை உளவியல் மற்றும் மொழிக்கும் சமூகச் சிந்தனை தொடர்பாகவும் சில விடயங்களைக் கூற வேண்டும்.3*

மொழியே சமூகத்தின் அடிப்படைத் தொடர்பாடல் அலகாகும். அவ்வகையில் சில இடங்களில் மொழியே சமூகத்தை வழிநடத்திச் செல்கின்றது. ஒரு சமூகத்தின் இன்றைய அடைவுவரை மொழிக்குரிய பங்கு முக்கியமானது. மொழி ஏற்படுத்தும் சமூக உளவியல் ஒருபுறமும் மொழிச்செயற்பாடு மறுபுறமுமாக சமூகத்தின் ஆதிக்க - ஆதிக்கமற்ற வெளிகளை மொழி உள்வாங்கியிருப்பதே அதன் சிறப்பம்சமாகும். நாகர்ஜுனன் கூறுவது போன்று 'உலகின் மொழிகள் ஒவ்வொன்றும் அந்தந்த மக்களின் வரலாறு, சால்பு போன்றவற்றின் உறைபொருள் மட்டுமன்றி உலகு பற்றி, இயற்கை பற்றி, பருவங்கள் பற்றியெல்லாம் பிரத்தியேகப்புரிதல் கொண்டவை. கலை-கதை-விஞ்ஞானம் என்று பிரிபடாத புரிதல். இந்தப் பிரத்யேகப்புரிதலை வெறும் அடையாளம் என்று மாத்திரம் கொண்டுவிட முடியாது. மாறாக, குறிப்பிட்ட ஒரு மொழியின் இந்தப் பிரத்யேகப்புரிதலும் மற்ற மொழிகளின் பிரத்யேகப்புரிதலுடன் இசைந்தும் மாறுகொண்டும் செல்வதாகும். இந்தப்புரிதல்கள், க்ளாட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) கூறுவதைப் போல, மனிதப் பொதுமனத்தின் ஆழ்-அமைப்பைச் சுட்டுவன. ஆக, இவற்றில் எந்த ஒரு மொழி அழிந்தாலும் அதன் சொல், சொற்றொடர், வாக்கியம், இலக்கணம், கதை, பாடல் போன்றவற்றில் எது அழிந்தாலும் நாமும் அழிந்ததற்குச் சமம். ஆக, இந்த அழிவின் விளிம்பில்தான் நிற்பதே இன்றைய மனிதப்பொதுமனம்.' சமூக அடிப்படையான புரிதல் அல்லாதவ்டத்து அச்சமூகத்தைப் பற்றிய எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதே உண்மையானது.

'நீங்கள் உங்களது மையமல்ல என்று உளப்பகுப்பாய்வு அறிவிக்கின்றது. காரணம், உங்களுக்குள் இன்னொரு அகநிலையான நனவிலி உள்ளது' என்று லக்கான் கூறுகின்றார். லக்கான் கூறும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அகநனவிலியானது குறிப்பான்களாலும் மொழியாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுவே மொழி அடிப்படையிலான கூட்டுணர்விற்கு வழிகோலுகின்றது. அகநிலயைக் கட்டமைப்பதற்கு மொழிசார் உறவுகளே அடிப்படையாகின்றன. குறிப்பான்களின் தொகுதி தமக்குள் உறவுபடுத்தப்படவையாக மொழியாக வெளிப்படுத்துகின்றன. சமூகத்தின் சடங்காக வெளிப்படும் மொழி ஒரே சமூகத்தில் அதிகளவான புரிதலை ஏற்படுத்துகின்றது. அதேநேரம் 'மற்றமை' என்பதன் மீது அதிகளவான புறவொதுக்கலையும் செய்கின்றது.6*

2.2 சிங்கள சமூகம், தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் மொழிரீதியான பாகுபாடு.
இலங்கையில் மொழிரீதியாக சிங்கள மொழிபேசும் சமூகம் ஆதிக்கம் பெற்றிருந்த அதேவேளை தமிழ்மொழிபேசும் சிறுபான்மைச் சமூகங்களை மொழி ரீதியாக புறக்கணித்தது. 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதே தமிழ்ச்சமூகங்கள் மீதான பெரியளவிலான ஒடுக்குமுறையாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தினர் இரண்டாம் தரப்பிரஜையாக்கப்பட்டார்கள். அரசியல் ரீதியான வெற்றியைப் பெறும் நோக்கிலேயே - சிங்கள மொழிபேசும் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் நோக்கத்திலேயே இநநடவடிக்கை இடம்பெற்றது. அந்நேரத்தில் அந்நிகழ்வு பிற்காலத்தில் பலத்த அழிவுகளை நிகழ்த்தப் போகின்றது என்பதை யாரும் யூகித்திருக்க மாட்டார்கள்.

1956 ஆம் ஆண்டு நிகழ்வே தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்கள் மீதான முழுதான புறக்கணிப்பின் ஆரம்பம் என்பதை சில புலமையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 1833 ஆம் ஆண்டு கோல்புரூக் யாப்பின் மூலம் ஏற்பட்ட மொழி ரீதியான முகாமைத்துவமே மொழி ரீதியான சமூகப்பிளவுக்கு ஆரம்ப வழிகோலியாகியது என்றும் சில புலமையாளர்களால் கூறப்படுகின்றது. காலனித்துவம் ஏற்படுத்திய மொழி ரீதியான பிளவென்பதை பண்பாடு, வரலாறு மற்றும் அதனடிப்படையிலான மானிடவியல் சார்ந்த புலமையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கருத்தியல் மேலாண்மை என்பதில் இருந்து பார்க்கின்றார்கள். அப்பிளவை 2000 வருடங்களுக்கு முன்னரான ஆரியர் வருகைக்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

2.3 மொழிப்பாகுபாட்டிற்கெதிரான தமிழ்ச்சமூகங்களின் எழுச்சி.
மொழிப்பாகுபாட்டிற்கெதிராக - சிங்கள மொழிபேசும் ஆதிக்கக் கருத்தியலுக்கெதிராக தமிழ்ச்சமூகங்கள் எழுச்சி பெற்றன. அரசியல் போராட்டங்கள், ஆயுதப்போராட்டம் என அவ்வெழுச்சிகள் பல்வேறு பரிணாமம் பெற்றன. அரசியல் சட்ட மூலங்கள் தொடர்ச்சியாகத் தமிழ்பேசும் சமூகங்களைப் பாதிப்பதாக தமிழ்ச்சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் மீது குறைகூறின. 1958, 1972, 1987, 1988, 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்பேசும் சமூகங்களின் நன்மைகருதிய சட்டமூலங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மொழிரீதியான சமநிலையைக் கொண்டு வரும் நோக்கில் அரசியல் சீர்த்திருத்தங்கள் மூலமாக யாப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அம்மாற்றங்கள் தமிழ்பேசும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தவில்லை. மொழிரீதியான சமநிலை தமக்குக் கிடைக்கவில்லை என்பதே தமிழ்பேசும் சமூகங்களின் நிலைப்பாடாக இருந்தது.

தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவாக்கம் மேற்படி வரலாற்றுத் தொடர்ச்சியான நிகழ்வுகளின் பால் தோற்றம்பெற்றது. பல சமூகங்களாகவும் தனித்துவம் மிக்கதகவும் விளங்கிய தமிழ்பேசும் சமூகங்கள் சிலபுள்ளிகளில் ஒன்றுபட்டு தமிழ்த்தேசியம் என்ற கருத்துருவாக்கத்தைப் பலப்படுத்தின.4* Clifford Geertz தனது The Integrative Revolution: Primordial Sentiments and Civil Politics in the New States என்ற கட்டுரையில் கூறுவது போன்றே தமிழ்ப்பிரிவினைவாதம் தோற்றம்பெற்று வளர்ந்தது. ஒன்றிணைந்த தமிழ்ச்சமூகங்களின் கூட்டிணைவு என்பதை Clifford Geertz இனது 'புதிய தேசம்' கருத்துருவாக்கத்திற்கு நெருக்கமாகப் பார்க்கின்றார் Bryan Pfaffenberge.5*

தமிழ்ச்சமூகங்களின் எழுச்சியின் பின்னர் நடைபெற்ற அரசியல் போராட்டங்களின் போதும் வன்முறை ரீதியான போராட்டங்களின் போதும் அவர்களால் சுயாட்சியுடன் கூடிய முகாமைத்துவ அலகைக்கூடப் பெறமுடியவில்லை. இன்றைய திகதியில் மொழிப்பாகுபாடு மற்றும் போராட்டம் தொடர்பான சரியான ஆய்வுகளை நடாத்தக்கூடிய அளவு இலங்கையின் அரசியல் சூழல் காணப்படவில்லை. தமிழ்ச்சமூகங்களின் மனப்பதிவுகள் கூட முறையாக ஆவணப்படுத்தப்படாதன் காரணமாக எதிர்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்வது கூடக் கடினமாகவே அமையக்கூடும். தமிழ்ச்சமூகங்கள் தமது அடுத்த கட்டத்தெரிவை மேற்கொள்வதற்கான சூழலை வன்முறைக்கலாச்சாரம் முற்றாக அழித்துவிட்டிருப்பதை வேதனையுடன் நினைவுகூர வேண்டியுள்ளது.

2.4 அதிகாரத்திற்கெதிராக ஆவணப்படுத்தல்.
இப்பகுதியை இரண்டாகப் பிரித்து நோக்க வேண்டும். முதலாவதாக இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்கத்தின் காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி தொடர்பான ஆவணப்படுத்தல் தொடர்பானது இரண்டாவது தமிழ்மொழி என்ற பொது அடையாளம் உள்ளடக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் ஆவணப்படுத்தல் தொடர்பானது. இதற்கு முன்னதாக ஐரோப்ப மையவாதக் கதையாடல்களுக்கும் ஆதிக்கத்திற்கும் மாற்றீடான ஐரோப்பா அல்லாத பிரதேசங்களை ஆவணப்படுத்துவது தொடர்பாகவும் அவற்றின் மீள்வாசிப்புத் தொடர்பாகவும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும்.

இந்துமதம் கூறும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சமணமத நூல்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன. தமிழர் மரபின் பெருமளவான ஞாபகங்களும் கடத்தப்பட்ட அறிவும் இல்லாது அழித்தொழிக்கப்பட்டன. அதிகாரங்கள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள தமக்கெதிரான ஆவணங்களை அழித்தொழிக்கின்றன. இதே தொடர்ச்சியிலேயே யாழ் நூலகமும் எரிக்கப்பட்டது. ரமேஸ் - பிரேம் அவர்களது 'ஏடுகளில் படிந்த இருண்ட காலம்' என்னும் கட்டுரையில் கூறுவது போன்று 'தமிழ் நிலம் மறதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு கனவு நிலம். சங்க இலக்கியத் தொகைகளும் சில காப்பியங்களும் இல்லையென்றால் தமிழ் வரலாற்று நினவுதான் என்ன' இன்று 'இனமையக்கணிதவியல்' (Ethnomathematics) போன்ற துறைகளைக் கற்கும் தருணத்தில் தமிழ்க்கணிதம் நினைவுகூரப்படுகின்றது. ஆனால், இவையெல்லாம் பெருந்தொகையான அறிவுத் தொகைகளில் இருந்து எஞ்சியவையே. இன்றைய மேற்கில் சித்த மருத்துவம் தொடர்பான விடயங்கள் ஊன்றி ஆய்வுசெய்யப்படுகின்றன. ஆனால், எம்மிடம் எஞ்சியுள்ளவை மிகச்சொற்பமானவையே. ரமேஸ் - பிரேம் மேலும் கூறிச் செல்கின்றார்கள் 'பக்தி இலக்கியங்களும், கம்பராமாயணமும், சில சிற்றிலக்கியங்களும் தான் தமிழ் நினைவைக் கட்டமைத்து நின்றவை. இவற்றில் இருந்து பெறப்படும் தமிழ் வாழ்வுக் களங்களும், புலங்களும் முற்றிலும் வேறானவை. அன்றைய காலகட்டத்தில் திருக்குறள் கூட தீண்டாமைக்குட்பட்ட ஏடுதான் அல்லவா. திணைச்சமூக வாழ்வும் நினைவும் கனவும் இல்லாததமிழர் அற வரலாறும் எவ்வடிவில் இருந்திதிருக்கும்? எல்லாம் காலத்தின் விளையாட்டு. நினைவில் எஞ்சியவை வரலாகின்றன. வரலாறு மீண்டும் நினைவாக எஞ்சுகின்றது. மீந்த சுவடிகளில் இருந்து உயிர்த்தெழுந்த நமது தமிழ் நினைவுகளில் தான் எத்தனை எத்தனை சிக்கல்களும் சிடுக்கல்களும்.' என்றவாறு.

மேலும் 'இன்று அதிகாரம் பெற்றுள்ள இந்துமதம் தமிழர் வாழ்வின் சமணம், பௌத்தம் சார்ந்த ஏடுகளை அழிப்பதில் கூடிய அக்கறை காட்டின. பிற்காலத்தில் கொடூரமாக வளர்ந்த தீண்டாமை அப்பொழுது இருக்கவில்லை. சாதிப்பிரிவுகள் இருந்த போதிலும் பிறகு வந்த சாதி வன்முறை, ஒடுக்குதல் அக்காலகட்டத்தில் இருக்கவில்லை. இனக்குழு, குடிமரபு, வட்டாரச் சமூகங்கள் தன்னுரிமையுடன் தம் வாழ்வைத்தாமே நடாத்திக் கொண்டிருந்தன.' என்று கூறிச் செல்கின்றார்கள். இன்று இந்துமதத்திற்கு மாற்றீடாக அக்கூறுகளை மீளுருவாக்கம் அல்லது மீள்வாசிப்புச் செய்வதற்கான ஆவணங்களைக் கூட இந்துமத அதிகாரவர்க்கம் விட்டுவைத்திருக்கவில்லை.

இவ்வாறேதான் இதே நோக்கத்துடனேயே யாழ் நூலகமும் தமிழ்மொழிச் சமூகங்களுக்கெதிரான மனநிலையில் இருந்தவாறு அதிகாரவர்க்கத்தால் தீக்கிரையாக்கப்பட்டது. தமிழ் ஆவணங்களையும் அறிவையும் அழித்தால் எதிர்ப்புணர்வு மங்கிப்போகக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அப்போதைய நூலக எரிப்பிற்குக் காரணமானவர்களுக்கு இருந்திருக்கக்கூடும். அதற்குப் பின்னர் 25 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் தமிழ்ச்சமூகங்களிடம் தம் சமூகத்தை முறையாக ஆவணப்படுத்தும் பிரக்ஞை எழவில்லை.

ஆவணங்களும் மொழியும் அதிகாரத்தைக் கட்டமைப்பதாக வாதிடுபவர்கள், அதே ஆவணங்களையும் மொழியையும் அதிகாரத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பதை வசதியாக மறந்துவிடுகின்றார்கள். இலங்கைத் தமிழ்ச்சமூகங்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தனித்துவமான பேச்சு மொழியைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆதிக்கத்தமிழ் வெளி உருவாக்கிய மொழிப்பயன்படுத்துகையையே எழுத்தில் கைக்கொண்டிருந்தார்கள். சில புனைவுகளில் மாத்திரம் வட்டார வழக்காக தமது சமூகத்தின் பேச்சு மொழியை எழுத்தாக்கியிருக்கின்றார்கள். இது மொழிரீதியாக முஸ்லிம்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். ஆரம்பப்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் போது அ-ம்-மா 'உம்மா' என்று கற்பிக்க வேண்டியளவிற்கு முஸ்லிம்கள் மொழி ஆதிக்கத்திற்கு உடப்பட்டிருந்தார்கள். ஆயினும் அண்மைக்காலத்தில் வட்டார வழக்கை விசேட கவனத்தில் எடுத்து பரவலான பிரதிகளைச் சாத்தியமாக்கிக் கொண்டிருப்பது முஸ்லிம்கள் ஆதிக்க மொழிக்கட்டமைப்பில் இருந்து விடுபடுவதையே உணர்த்தி நிற்கின்றது. இதை ஃபூக்கோ கூறும் Archeology of thought என்னும் கருத்தமைவிற்குச் சாதகமகப் பார்க்க முடியும். மொழியானது ஏற்கனவேயான கட்டுக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அது இலக்கணமாக இருக்கலாம் அல்லது அதன் குறித்த சமூகத்தை மட்டும் பிரதிபலிக்கும் குறித்த சொற்களாக இருக்கலாம். இக்கட்டுக்களை மீறிய உரையாடல்களே பொதுப்போக்கின் அல்லது அக்காலத்தையப் பெருங்கதையாடலின் தகர்வுக்கு சாதகமான கருத்தியல் மேலாண்மையைப் பெற்றுக் கொடுக்கும்.

யாழ் ஆதிக்க சமூக அமைப்பில் வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலின் பங்கு முக்கியமானது. அக்கோவிலில் வாழ்ந்த தேவதாசி ஒருவர் எழுதிய பாடல்களின் தொகுப்பு நூலே 'கனகிபுராணம்' ஆகும். அப்பாடல்கள் அத்தேவதாசியிடம் வந்து சென்ற யாழ் மேலாதிக்க சமூகத்தின் பிரதிநிகளைப் பற்றிய பாடல்களாகும். அவர்களே விபச்சாரத்தை பாவச்செயல் என்ற கருத்தியலை யாழ் சமூகம் எங்கும் விதைத்தவர்கள். கனகி புராணம் நூலுருப்பெறுவதை யாழ் மேலாதிக்க சமூகம் அனுமதிக்கவில்லை என்று கூற்ப்படுகின்றது. அவர்களை மீறி நூலுருப்பெற்ற பிரதிகள் அதிகார வர்க்கத்தால் அழிக்கப்பட்டன. இன்று கனகிபுராணத்தின் சில பாடல்கள் அடங்கிய தொகுப்பையே வரலாறு எம்முன் விட்டுச் சென்றுள்ளது. அக்காலத்தில் இருந்த அச்சுக்கூடங்கள் ஒருசிலவே. அவையும் அதிகாரவர்க்கத்தின் கைகளிலேயே காணப்பட்டன. ஆனால், நிலமை இன்று மாறியுள்ளது. தொழில்நுட்பம் சில இடங்களில் அதிகாரவர்க்கத்தின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. அதிகாரவர்க்கங்களுக்கு எதிராக ஆவணப்படுத்துவதென்பது சுலபமாகன விடயமாகிவிட்டது. ஒடுக்கபடும் சமூகங்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதே ஒடுக்கப்படும் சமூகங்களின் விரைவான விடுதலையைச் சாத்தியப்படுத்தும்.


அடிக்குறிப்புக்கள்.
1* சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சமூகம் தனக்குள் பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும் இக்கட்டுரையில் அதனை பொதுமைப்படுத்தும் மொழியில் 'சமூகம்' என்றே குறிப்பிட விரும்புகின்றேன். இக்கட்டுரையில் சிங்கள சமூகம் உள்ளடக்கும் உள் பிரிவுகளை ஆய்வுசெய்வது எனது நோக்கமல்ல.

2* தமிழ்மொழிபேசும் சிறுபான்மை மக்கள் பற்றிப் பேசுவது கட்டுரையின் இப்பகுதியின் முக்கிய நோக்கம் என்ற காரணத்தால் தமிழ்பேசும் சமூகம் என்ற ஒற்றைத் தளத்தில் பொதுமைப்படுத்திப் பேசாமல் தமிழ்ச்சமுகங்கள் என்ற பன்மைத்துவ வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்கின்றேன்.


3* 'மொழிவழித்தேசியம் என்பது பாசிசமாகும்' என்று யாந்திரிகத்தனமாக அணுகுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே எனது கருத்து. எதிர்ப்பரசியல் என்பது சமூகத்தின் மாற்றம் வேண்டிய கருத்தியலை உருவாக்குவதே தவிர சில யதார்த்தமான நிலைப்பாடுகளை மறுத்தவாறிருப்பதல்ல. சமூகத்தின் பாதகமான நிலைப்பாடுகள் கருத்தியல் ரீதியாக மேலாண்மை பெற்றுள்ள போது எதிர்ப்பரசியலின் மூலம் மட்டுமே அக்கருத்தியல் மேலாண்மையைத் தகர்க்க முடியும். கருத்தியல் ரீதியான மேலாண்மை தகர்க்கப்படும் போது மட்டுமே உண்மையான விடுதலை என்பது சாத்தியமானது. அவ்வகையில் எதிர்ப்பரசியல் சமூகத்தில் மிக அவசியமான பாத்திரத்தை எடுகின்றது. இவ்விடத்தில் சமூகவியல் மற்றும் அறிவியல் மரபையும் பற்றிய சில பார்வைகளை முன்வைத்து விட்டு எடுத்துக் கொண்ட விடயங்களைப் பற்றி ஆய்வு செய்ய முடியும். அறிவியலின் நகர்வை ஐரோப்ப அறிவியலின் நகர்வெனக்கூறுவதில் தவறில்லை. ஐரோப்ப அறிவியல் தர்க்கம் மற்றும் பரிசோதனை முறைமைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றின் வழி வளர்ச்சியுற்றவை. இன்று அப்போக்கு பலத்த விமர்சனத்திற்கு உட்பட்டு 'இனஅறிவியல்' (Ethnoscience) போக்குக்களுக்கு வித்திட்ட போதிலும் ஐரோப்ப மையவாதம் சார் அறிவியலின் போக்கு மேற்கூறியவாறே காணப்பட்டது. மேற்கூறிய அடிப்படையிலான ஆய்வுகளே விஞ்ஞான ரீதியானவை என ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமூகவியல் தளம் அத்தளத்தின் தீவிர அரசியலாலும் சமூக மாற்றம் குறித்த உரையாடல்களங்களைக் கொண்டிருப்பதாலும் 'விஞ்ஞான உண்மைகளைத் தாண்டி' பலவிதமான தேவைப்பாடுகளுக்கான உரையாடலைத் தன்னுள் மேற்கொள்வது. இவ்வகையில் 'மாற்றத்தின் தேவையும்' 'உண்மையும்' முரண்படும் புள்ளியே அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் உள்ள முரண்படும் புள்ளியாகின்றது. உதாரணமாக டார்வினையும் ஹிட்லரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பார்வையானது அடிப்படையிலேயே கோளாறானது.


4* அரசியல் ரீதியாக இன்று தமிழ்த்தேசியத்தைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. எதிர்ப்பரசியல் கூறுகளில் தமிழ்த்தேசியக்கருத்தியல் புறமொதுக்கிய சமூகங்கள் சார்பான பார்வைகள் பதிவாகியுள்ளன. மலையகத்தமிழர், முஸ்லிம்கள், கிழக்குப் பிரதேச மக்கள் என்ற அம்சங்கள் குறித்தான பார்வைகள் இன்று பலவகைகளில் முன்னேற்றம் பெற்றுள்ளன. அது மட்டுமன்றி தலித்துக்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பார்வைகளும் இன்று கரிசனையைப் பெற்றுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றை நிறுவப்பட்ட கருத்தியல் மேலாட்சியை தகர்த்து பொதுத்தளத்தில் அமுல்படுத்தக்கூடிய சாத்தியங்கள் பெருமளவில் பரிசோதிக்கப்படாத போதிலும் எதிர்ப்பரசியல் கூறுகளின் அவற்றின் தாக்கம் முன்னெப்போதையும் விட அதிகமாகியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.


5* Bryan Pfaffenberge அவர்கள் தமிழ்த்தேசியவாதம் பற்றிய புதிய பார்வை ஒன்றைத் தனது The Political Construction of Defensive Nationalism: The Temple entry crisis in northern Srilanka என்னும் கட்டுரையில் முன்வைக்கின்றார். யாழ் மேலாதிக்கவாதிகளான சைவ வேளாளர்கள் 1968 ஆம் ஆண்டு தலித்துக்களால் நிகழ்த்தப்பட்ட கோவில் பிரவேச நிகழ்வுகளுக்குச் சமாந்தரமாகக் காண்கின்றார்.


6* லக்கானிய ஆய்வு ஆண்வழிப்பட்டது என்ற கருத்தாக்கம் பிற்காலப் பெண்ணியர்களால் முன்வைக்கப்பட்டது. குறிப்பான்களை மையப்படுத்திய கூட்டுணர்வுக் கருத்தியலில் 'விலக்கப்பட்ட பெண்' என்ற கருத்தாக்கம் லக்கான மீது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. லக்கான் இன அடையாளம் என்ற கருத்துருவை அதிகளவில் இறுக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அவ்வாறே ஒரே குறிப்பான்களை மையமாக வைத்தியங்கும் சமூக குழுக்களுக்குள் இயங்கும் படிநிலை வேறுபாடும் (சாதியம்) குறிப்பான்களின் அதீத கவனப்பாடுகளை விளக்கப் போதுமானதாக இருக்கவில்லை.


உசாத்துணை.
1. ஹேபர்மாஸ், இரா.முரளி
2. மெல்லக்கனவாய், மொழியாய்ப் பழங்கதையாய்..., திணை, இசை, சமிக்ஞை - நாகர்ஜுனன் வலைத்தளம்

3. Interview with Jacques Lacan, 1957

4. Lacan and Language

5. Language Discrimination to Language equality - FCE

6. The Integrative Revolution: Primordial Sentiments and Civil Politics in the New States, Clifford Geertz

7. The Political Construction of Defensive Nationalism: The Temple entry crisis in northern Srilanka, Bryan Pfaffenberge

8. ஏடுகளில் படிந்த இருண்ட காலம், ரமேஸ் - பிரேம்

9. Hinduism: past and present, Axel Michaels, Barbara Harshav

10. The Archeology of Thought, Thomas J. Hubschman

11. கனகி புராணம், நட்டுவச் சுப்பையனார்

12. Nature knowledge: ethnoscience, cognition, and utility, Glauco Sanga, Gherardo Ortalli


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter