வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 18, 2009

பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களுடனான உரையாடல் - 1

2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நானும் துவாரகனும் சிவதாசும் தயா சோமசுந்தரம் அவர்களுடன் உரையாடலொன்றை நிகழ்த்தியிருந்தோம். அவ்வுரையாடல் துவாரகனால் பதிவுசெய்யப்பட்டு ஒழுங்குபடுத்தி எழுதப்பட்டுக் கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. அவ்வுரையாடலை சிறுதிருத்தங்களுடன் வெளியிடுகின்றேன்.

நன்றி: பா. துவாரகன், Dr. எஸ். சிவதாஸ்.

தற்போது அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் தயா சோமசுந்தரம் அவர்கள் 2007 வைகாசி மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற Community level Intervention for Collective Trauma மகாநாட்டிற்காக வருகைதந்திருந்தபோது அவருடன் இந்நேர்காணலுக்காக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

பேராசிரியர் தயா சோமசுந்தரத்தை யாழ்ப்பாணச் சமூகம், தமிழ்ச் சமூகம் எப்படி அறிந்திருக்கிறது? உளநல மருத்துவராக, பேராசிரியராக அதேநேரம் உடுவிலில் உள்ள தனது வீட்டில் இருந்து சைக்கிளில் யாழ்பெரியாஸ்பத்திரிக்குச் செல்லும் எளிமையான ஒரு மனிதராகவும் பார்த்திருக்கின்றது.

தயா சோமசுந்தரம் சிறுவயதுமுதலே மனிதர்களின் நடத்தைகள், எண்ணங்கள் குறித்து அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். வெற்றிபெற்ற அரசர்கள், வரலாற்று நாயகர்களுடைய வாழ்க்கைச் சரிதங்களைப் படிப்பதிலும் பார்க்க மனித சமூகத்தைப் பற்றிச் சிந்தித்து மனித சமூகத்தின் பால் அக்கறை கொண்ட மனிதநேயம் மிக்கவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிவதில் ஈடுபாடு இருந்ததாகவும் குறிப்பிடும் இவர், அந்த வகையில் காந்திமீது தனக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார்.

தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு ரோயல் கல்லூரியிலும் பின்னர் பாங்கொங்கில் உள்ள சர்வதேச பாடசாலையிலும் பயின்றார். தனது முதலாவது பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இதற்காக உளவியல் உள்ளிட்ட கலைப்பாடங்களைத் தேர்வுசெய்தார். பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து கமம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். இது குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க இந்தியாவிற்குச் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். அக்காலப் பகுதியில் ஊர்சுற்றித் திரிவது அவரது பொழுதுபோக்காக இருந்தது. இன்று போர் நடைபெறும் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஈரான், பாகிஸ்தான், துருக்கி இன்னும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் விமானச்சிட்டை (flight ticket) இல்லாமல் ஒரு நாடோடிபோல் பயணம் செய்துள்ளார். முதுகில் ஓரு mobile bed உடன் பல்வேறு தேசங்களுக்குப் பயணம் செய்து, அந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள், கலாசார பழக்கவழக்கங்கள் என்பவற்றை அறிவதனூடாக பெற்றுக்கொண்ட அனுபவ அறிவு அவரது சிந்தனையிலும் பேச்சிலும் பிரதிபலிக்கின்றது.

தயா சோமசுந்தரம் அவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தை தனது வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாகக் கருதுகின்றார். அக்காலப்பகுதியில் நடைபெற்ற வியட்னாம் போர்ப் பிரச்சாரங்கள், போருக்கெதிரான மாணவர்களது எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்கக் குண்டு வீச்சு விமானமான டீ-52 இல் Bombardier ஆகக் கடமையாற்றியவருடன் பின்னாளில் உணவுவிடுதியொன்றில் வேலைசெய்ய நேர்ந்தமை, என்பன யுத்தம் பற்றிய எதிர்மறையான கண்ணோட்டத்தை இவரில் ஏற்படுத்தின. சிறுவயதில் வேடங்களைப் போட்டுக்கொண்டு நடமாடுவது இவரது ‘போக்கு’ ஆக இருந்தது. பிச்சைக்கார வேடமிட்டுத் தெருவில் பிச்சையெடுத்துக் கொண்டு இருப்பார். பிச்சைக்கார வேடத்தில் இவரை யாருமே இனங்கண்டு கொள்ளமாட்டார்கள். பிச்சைக்காரனின் மனநிலை எப்படியிருக்கும், மனிதர்கள் பிச்சைக்காரரை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறியும் விருப்பு தனக்கு இருந்ததையும் நினைவுபடுத்தினார்.

அமெரிக்காவில் படித்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பி வந்த காலப்பகுதில் வேலையில்லாமல் சுற்றித்திரிந்ததாயும் சந்தைக்குப் போய் மணிக்கணக்காக வியாபாரம் செய்பவர்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதையும் அதேநேரம் கள்ளுத் தவறணைக்குப் போய் நாள் முழுவதும் தவறணை மூடப்படும்வரை அங்கேயே இருந்து அவர்கள் பாடுவதையும் கதைப்பதையும் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவ்வாறு இருக்கின்ற போது தானும் கொஞ்சம் அருந்திவிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் தனது ‘போக்கு’ என்றும் அதைத் தான் ஆராய்ச்சிக்காகச் செய்யவில்லையென்றும் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பக்கல்வியில் இருந்து உயர்கல்விவரை ஆங்கிலம் மூலம் கற்றிருந்தும் தான் பெற்றுக்கொண்ட அறிவு சமூகத்திற்குப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் பணிபுரியவந்த ஆரம்பகாலத்தில் தமிழைக் கற்கின்றார். பழந் தமிழ் இலக்கியங்களை கற்கின்ற போது எமது கீழைத்தேயப் பண்பாட்டிலும் கலை கலாசாரங்களிலும் மேலைத்தேசங்களில் காணமுடியாத விழுமியங்கள் இருப்பதை அறிந்து கொள்கிறார். பின்னாளில் அவர் சேகரித்த வாசித்த, நூல்களில் பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர், திருவாசகம், திருக்கோவையார் என்று என்று எமது பழந்தமிழ் இலக்கியங்களே அதிகமாக இருந்தன.

1994இல் யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுப் பேருரையை ஆற்றுகின்ற போது ஆரம்பத்திலே, ‘தன்னாத்மாவைத் தேடியலையும் மனிதன்’ என்ற இந்நினைவுரையை அவர் நேசித்த தமிழில் நிகழ்த்த முற்படுகிறேன் என்று குறிப்பிடுவது கூட பேராசிரியர் தயா சோமசுந்தரத்தின் விருப்பத்தையும் மறைமுகமாகக் கொண்டுள்ளது. ஈழப்போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நூலான முறிந்தபனை என்ற நூலின் ஆசிரியர்களில் தயா சோமசுந்தரமும் ஒருவர். முறிந்த பனை ஆசிரியர்களில் ஒருவரான ராஜினி திரானகம அந்நூல் வெளிவருவதற்கு முன்னரே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து வீடு திரும்பும் போது படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளநல மருத்துவரான சிவதாஸ் பேராசிரியர் தயா சோமசுந்தரத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

தயா சோமசுந்தரத்திடம் விளங்கப்படுத்த முடியாத ஒரு எளிமை காணப்படுவதாகவும் எதையுமே வெளியில் இருந்து பார்க்கின்ற தன்மை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். "பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற போதும் உரையாடுகின்ற போதும் பல கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வார். மற்றவர்களுடைய கருத்துக்களை ஆர்வத்தோடு கேட்டு அதற்கூடாகத் தனது கருத்துக்களை முன்வைப்பார்.”

“அல்லைப்பிட்டியில் ‘நவஜீவ இல்லம்’ என்ற இல்லத்தை உருவாக்கியிருந்தார். அங்கு அவர் தியானப் பயிற்சியில் ஈடுபடுவார். தியானத்தில் நாம் சிலைகளைத்தான் காணுவோம் தியானத்தில் இவர் ஒரு சிலையாக இருந்தார். அந்த ஊரில் பலர் குறிப்பிடுவார்கள் பாம்புகள் கூட இவரது உடலில் ஊர்ந்து செல்லும் அவர் பேசாமல் இருப்பார் என்று. செவ்வாய் வியாழக் கிழமைகளில் அவர் அல்லைப்பிட்டிக்குச் சென்று கடலில் நீந்திவிட்டு யோகப் பயிற்சிகள் செய்து தான் கொண்டுசென்ற புத்தகத்தையும் வாசித்துவிட்டு சாக்குக் கட்டிலில் படுத்து உறங்குவார். அடுத்தநாள் உடுப்பை மாற்றிக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு சைக்கிளில் வருவார். அந்த இடத்தை உருவாக்க அவர்பட்ட சிரமம். ஒவ்வொரு நாளும் சைக்கிளில் ஒவ்வொரு பூமரம், தென்னம்பிள்ளை என்று கொண்டுபோய் நட்டுத் தானே நீர் ஊற்றி அவற்றை வளர்த்து பசுமையான இடமாக்கியிருந்தார். அந்த இடத்திலே உளவியல் தொடர்பான பல கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன.

அல்லைப்பிட்டியில் அவர் உருவாக்கிய அந்தப் பிரதேசத்தையும் அவரையும் புகைப்படம் எடுத்து கொழும்பில் சிங்கள மருத்து நண்பர்களுக்கு காண்பித்து அவரைப்பற்றிச் சொன்னபோது இப்படியொரு பேராசிரியரை தாங்கள் கண்டதேயில்லை என்றும் இந்தக் காலத்தில் இப்படியொரு பேராசிரியர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதே கடினம், பெரிய அதிசயம் என்றும் சொன்னார்கள். இலங்கையில் குறிப்பாக வடகிழக்குப் பகுதியில் மனநல மருத்துவத்தை சமூகமட்டத்திற்கு கொண்டு சென்றது, அதை community psychiatric ஆக வளர்த்தெடுத்தவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம். அவரிடம் பயிற்சி பெற்ற உளவளத்துணையாளர்கள் இன்றும் வடகிழக்குப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தயா சோமசுந்தரம் அவர்கள் பேராசிரியர் வித்தியானந்தன் நினைவாக “தன்னாத்மாவை தேடியலையும் மனிதன்” என்ற பொருளில் ஆற்றிய நினைவுப் பேருரை அன்று சிறுநூலாக வெளியிடப்பட்டது. அந்நூலில் கீழைத்தேய சமய தத்துவங்களை மேலைத்தேய விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டு அதற்கு அளித்த விளக்கங்களை ஒப்பு நோக்குகிறார். மேலும் மனித உடலில் ஆறு ஆதாரங்களைப்பற்றிக் கீழைத்தேச மெய்ஞ்ஞானிகள் அளித்த விளக்கத்தையும் ஆராய்ந்து அதற்கூடாக மனிதன் உயர்நிலையை அல்லது ஞானநிலையை எவ்வாறு அடையலாம் என்பதையும் எளிமையான மொழியில் முன் வைக்கிறார்.

தயா சோமசுந்தரம் அவர்களது நூல்களை நூலகத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

(இன்னும் வரும்)


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter