வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 12, 2009

வெட்கத்துடன் வெளிவருதல் - முதல் பதிவு

நான் 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வலைப்பூக்களின் வாசகனாகிய போதிலும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. எழுத்துத் தொடர்பாக எனக்கிருந்த அவநம்பிக்கைகளும் எழுத்தாளர்கள் தொடர்பான எனது பார்வையில் இருந்த சரிவுகளும் அதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது. ஆயினும் தோழர் ரயாகரன் தொடர்பான பெயரிலி அவர்களது பதிவில் உரையாடியதே எனது முதல் இணைய எழுத்தாகிப் போனது. அவ்வுரையாடலில் இறுகிப்போதலின் வன்முறை தொடர்பாக எனது உரையாடல் அமைந்திருந்தது. 2007 ஒக்டோபர் 27 இல் இருந்து இணையத்தில் பல பெயர்களில் பல உரையாடல்களை நிகழ்த்தியிருக்கின்றேன். எனது உரையாடல்களில் சிலவற்றை அடையாளமற்ற வெளி என்னும் வலைப்பூவில் சேமித்து வைத்துள்ளேன். உரையாடல் களன் ஒன்றைச் சாத்தியமாக்குவது எனது முக்கிய நோக்கமாயிருந்தது. ஆனாலும் அதைச் சாத்தியப்படுத்தல் மிகக்கடுமையான செய்கையாகிப் போயிற்று. 2009 மே 18 இல் அரசியலில் நிகழ்ந்த பெரியளவிலான மாற்றத்துடன் எனது உரையாடல்களை முடித்து மௌனித்துக் கொண்டேன்.

எனது உரையாடல்களின் மூலம் பல புதியவர்களைச் சந்திக்க முடிந்தது. சமூகம் சார்ந்து அக்கறை கொண்ட பலருடன் எனது உரையாடலை நிகழ்த்த முடிந்தது. பெயரிலி, மு. மயூரன், ப. வி. சிறீரங்கன், ரயாகரன், டி.ஜே தமிழன், பேய்ச்சி, அற்புதன், மீராபாரதி, ரதன், திவாகர், வளர்மதி, கொன்ஸ்டன்டைன், த. ஜெயபாலன், பொன். சிவகுமார், ஜெ. ஜென்னி, ரஃபேல் வின்ஸ்டன், தூயவன், சேனன், சபா. நாவலன், நாகர்ஜுனன், ஜமாலன், றஞ்சினி, ராஜன் குறை, ஹரி, சுந்தர், பெருந்தேவி, சுகன் போன்றோரது கருத்துக்களுடனான உரையாடல் பல புதிய விடயங்களை அறிந்துகொள்ள உதவியது. ஆயினும் மீண்டும் நான் முன்னரான மனநிலைக்கே தள்ளப்பட்டேன். இவ்வுரையாடல்களால் எம்மைச் சார்ந்த சமூகம் எதை அடைந்தது என்ற கேள்வி த
விர்க்க முடியாதது. அந்நிலையில் மௌனம் தவிர்க்க முடியாத விடயமாகிப் போனது. யாராலும் தடுத்துநிறுத்த முடியாத அழிவுக்குப் பின்னரான மக்களும் அவர்களது அவலமும் எதையும் பேசவிடாமல் தடுத்தது.

அண்ணளவாக 20 மாதகால உரையாடல்களை நிகழ்த்தியிருந்த நிலையில் ஆழ்ந்த மௌனத்திற்குப் போக வேண்டியநிலை ஏற்பட்டிருந்தாலும் அதன் பின்னர் வாசிப்பை அதிகப்படுத்தியிருந்தேன். கடந்த ஏழு மாதங்களாக வாசிப்பும் போதையும் அதிகமாகியிருந்தன. குறிப்பாக இடைப்பட்ட காலத்தில் திசை மாறியிருந்த மார்க்சியம் தொடர்பான விடயங்களை அதிகமாக வாசிக்க நேர்ந்தது. மார்க்சியம் தொடர்பாக அதிகப்படியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எனது வாசிப்பைச் செழுமைப்படுத்தியிருந்தேன். மார்க்சியம் தொடர்பாக இருவழிப்பட்ட நோக்கோடு வாசிப்பை மேற்கொண்டேன். முதலாவது சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் இருந்து மார்க்ஸ் வரை பின்னோக்கிய திசையில் பயணித்தேன். இவ்வனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதே நேரத்தில் அவ்வாசிப்பிற்குச் சமாந்தரமாகச் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான மார்க்க்சியத்தின் போக்குப் பற்றி வாசிப்பை மேற்கொண்டேன். என்னைப் பொறுத்தவரை தற்காலச் சூழலில் மார்க்க்சியத்தை அதன் தூய தன்மையோடும் செழுமையோடும் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது என்பது முக்கியமான விடயமாக இருந்த அதே நேரம் இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து மார்க்சியத்தின் வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் என்பது அதிகம் முக்கியமானதாக இருந்தது.

பொருளாதார ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு அப்பால் இதர அடையாளங்கள் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்த ஒடுக்குமுறைகளை இணைந்ததான செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியம் என்னும் கருதுகோளை கடந்த ஏழு மாதங்களில் முழுமைப்படுத்த முடிந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி ஒடுக்கப்பட்டோருக்கான குரல்களுக்கு அப்பால் செயற்பாடுகள் மற்றும் தீவிரமான அறிவுழைப்புப் போன்றவற்றின் முக்கியத்துவங்கள் தொடர்பான எனது ஏற்கனவேயான கருத்தியல் வலுவடைந்துள்ளதாகவே கருதுகின்றேன். அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக மானுடவியல் துறைகளுக்கிடையிலான இணைவுகள் மற்றும் சாத்தியமான அசைவியக்கங்கள் தொடர்பாகவும் தீவிர கவனம் செலுத்த முடிந்திருக்கின்றது. இது பல புதிய அனுபவங்களையும் உணர்வுகளையும் தீர்மானங்களையும் எனக்குத் தந்துவிட்டிருக்கின்றது.

சொந்தப்பெயரில் எழுதும் புதிய அனுபவத்துடன் என்பயணம் இன்னும் நீண்டகாலத்திற்குத் தொடரப்போகின்றது என்பதை உணரமுடிகின்றது.

No comments:

Post a Comment

Blog Archive

Statcounter