
இர்ஃபான்:- ஈழத்து நூல்கள், சஞ்சிகைகளுக்கான ஆவணக்காப்பகமான நூலகம் திட்டம் பற்றிய அறிமுகம் எமது நேயர்களுக்கு அதிகமாகத் தேவையில்லை. நூலகம் பற்றிய அறிமுகம் ஏற்கனவே எமது தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளது. ஆயினும் அந்நிகழ்ச்சியைப் பார்க்க கிடைத்திருக்காதவர்களுக்காக நூலகம் திட்டம் பற்றிய சிறிய அறிமுகம் ஒன்றைத் தரமுடியுமா?
சசீவன்:- 'ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.' என நூலகம் திட்டம் வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. ஆரம்பத்தில் நூல்களை மாத்திரம் ஆவணப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்ட நூலகம் திட்டம் காலப்போக்கில் நூல்கள் மாத்திரமன்றி இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் என தனது பரப்பை விரித்துக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சகலவகையான ஆவணங்களையும் உள்ளடக்கியவாறு நகரமுற்படும் நிலையில் தன்னை கட்டமைத்துக்கொண்டிருக்கின்றது. இந்நேரத்தில் 'வலை அடைவு' ஒன்றைத் தொகுக்கும் முயற்சியிலும் இருக்கின்றோம். தொடர்பற்று தனித்தியங்கும் இணையத்தளங்களை இணைக்கும் முயற்சியாகவோ அல்லது தொகுக்கும் முயற்சியாகவோ இதனைக் கொள்ள முடியும். ஒருவகையில் இதுகூட ஒரு சேகரிப்பு முயற்சியே.
உள்ளடக்க வகைகளில் எம்மை விசாலித்துக்கொண்டது போலவே தொழில்நுட்பத்திலும் மற்றும் இதரவிடயங்களிலும் எம்மை வளம்படுத்தியவாறு நகர்ந்துகொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பத்தின் புதிய சாத்தியங்களை பரிசீலித்தவாறு நகரக்கூடியதாக இருப்பது புதிய தலைமுறையை முழுமையாக உள்வாங்கும் முயற்சியாகவும் நாம் தேங்கிப்போவதைத் தடுக்கும் முயற்சியாகவும் கொள்ளமுடியும். ஆரம்பத்தில் சாதாரணமாக, மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருந்த இணையத்தளம் அதன் பின்னர் 'ஜூம்லா' மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்டது. அதன் பின்னர் 'மீடியாவிக்கி'யில் இயங்குகின்றது. ஆயினும், தற்போது மீடியாவிக்கியில் கூட பிரச்சனையை எதிர்கொள்கின்றோம். எதிர்காலத்தில் புதிய வடிவில் எம்மை வெளிபடுத்த வேண்டிய கட்டத்தையும் எதிர்பார்த்தே இருக்கின்றோம்.
நூல்களை ஆவணப்படுத்திய காலங்களில், அதாவது ஆரம்ப காலங்களில் நூல்களைத் தட்டெழுதியே இணைத்தோம். ஆயினும், இதழ்களை ஆவணப்படுத்த முற்பட்டவேளை தட்டெழுதுவதை விட அவற்றை மின்பிரதி செய்வதே உகந்தது என்ற அடிப்படையில் மின்பிரதியாக்கம் செய்யத்தொடங்கினோம். மின்பிரதியாக்க ஆவணப்படுத்தல் பாதகமான அம்சங்களை விட பல சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்ததன் காரணமாக நூல்களையும் மின்பிரதியாக்கம் செய்யத் தொடங்கினோம். இதனால் உள்ளடக்க அளவில் தமிழில் ஒரு புரட்சியே செய்ய முடிந்தது. மிகவிரைவாகப் பெருமளவு விடயங்களை ஆவணப்படுத்த முடிந்ததென்பது மிகப்பெரும் சாதனையாகக் கொள்ள முடியும்.
அடுத்து, நூலகம் 2.0 இனைச் சாத்தியப்படுத்தல். வெப் 2.0 இனது வரவு இணையத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கிய நிகழ்வு. வழங்குபவன் X பார்வையிடுபவன் என்ற துவித எதிர் இருமை நிகழ்வின் உடைவும், பார்வையிடுபவன், பங்களிப்பவன் என்ற நிலை நோக்கிய நகர்வும் உள்ளடக்கங்களின் கட்டுமானங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாது இணையப்பாவனையாளர்கள் அனைவரையும் பங்களிப்பாளர்களாக மாற்றியது. தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்வற்றை எளிய நிலைக்கு கொண்டுவர உதவியது. அதுமட்டுமல்லாது பாவனையாளர்களை பங்களிப்பாளர்களாக மாற்றிய கட்டத்தில் பாவனையாளர்களின் பாவனையின் இலகுத்தன்மையை கட்டற்றுச்செழுமைப்படுத்தியது. இவ்விடத்தில் நூலகம் 2.0 என்ற கருத்துருவாக்கத்தை நூலகத்திட்ட இணையத்தளத்தில் சாத்தியப்படுத்துவதென்பது அதன் பாவனையாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கனவே அதன் சில கட்டங்களை சாத்தியப்படுத்தியுள்ள போதிலும், அதன் முழுமையை அடையும் எமது முன்னெடுப்புகள் தொடர்ந்தவாறேயிருக்கின்றன.
நூலகம் திட்டத்தைப் பொறுத்த்வரை நாம் சில நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றோம். சாதனைகளை சொல்லிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் பிரச்சனைகளையும் சொல்லியே ஆகவேண்டும். 'பங்களிப்பு' என்ற விடயம் எமக்கு பெரியளவில் பிரச்சனையாக இருந்திருக்கின்றது. இன்றும் இருந்துகொண்டிருக்கிறது. நூலகம் திட்டம் தன்னார்வக்கூட்டுழைப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தன்னார்வலர்களைப் பெற்றுக்கொள்வதிலும் எம்முடன் இணைந்து பங்களிக்கும் தன்னார்வலர்களை ஒழுங்குபடுத்துவதிலும் நாம் பாரிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம். திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு பெருமளவில் தன்னார்வலர்களின் பங்களிப்புத் தேவைப்படுகின்றது. எம்முடன் இன்றுவரைக்கும் இணைந்துள்ள 70 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை எம்மால் சரியாக ஒழுங்குபடுத்த முடியவில்லை. தொழில்நுட்பப் பங்களிப்புத் தவிர மற்றைய அனைத்து விடயங்களிலும் எமக்கு மேன்மேலும் தன்னார்வப்பங்களுப்புகள் தேவைப்படுகின்றன. நூலகம் திட்டம் என்பதை தனியே 'தொழில்நுட்ப மாற்றம்' என்பதுடன் மட்டுப்படுத்திவிட முடியாது. நூலகம் திட்டத்தைச் சாத்தியப்படுத்தும் ஒருபகுதியே தொழில்நுட்பத்தின் தேவை சாரப்பட்டது. நாம் அதனின்றும் மேவி பலதளங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. விசேடமாக பல்வேறு தன்னார்வலர்களும் நன்கொடையாக அளிக்கும் நிதிவளங்களைப் பெற்றுக்கொள்வதிலும் நாம் சிரமத்தை எதிர்நோக்கின்றோம். நாம் உள்ளூரில் ஒழுங்குபடுத்தும் திட்டங்களுக்கும் உரிய நேரத்தில் நிதியினைப் பெற்றுக்கொள்வதென்பது முக்கியமானது. அதுமட்டுமல்லாது மேலதிக நிதியினைப் பெற்றுக்கொள்ளுமிடத்து புதிய திட்டங்களை ஆரம்பித்து ஆவணப்படுத்தை விரைவுபடுத்தவும் முடியும்.
உள்ளடக்க வகைகளில் ஏற்பட்ட விரிவுநிலை, தொழில்நுட்ப மாற்றங்களுடனான நூலகம் திட்டத்தின் வளர்ச்சி, ஆவணப்படுத்தும் முறைகளில் ஏற்பட்ட மாற்றமும் விரைவும், நூலகம் 2.0 இனைச் சாத்தியப்படுத்தல், தன்னார்வப்பங்களிப்பை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் போன்ற நான்கு விடயங்களையும் கூறியிருக்கின்றேன். இவை நூலகத்திட்டம் பற்றிய எளிய அறிமுகத்திற்கு உதவும் என நினைக்கின்றேன்.
இர்ஃபான்:- நூலகத்திட்டத்தைப் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து முக்கியமான விடயங்களுக்கு வருவோம். நூலகத்திட்டத்தில் ஏற்கனவே பலவகையான உபதிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றீர்கள். ஆயினும் தற்போது 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' போன்ற சமூகக் குழுக்கள் சார்ந்து செயற்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகக் கூறுகின்றீர்கள். இவற்றின் முக்கியத்துவம் மற்றும் தேவை பற்றிக் கூற முடியுமா?
சசீவன்:- நூலகத்திட்டம் 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் இடைவெட்டும் அனைத்துப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆவணமாக்கலை மேற்கொள்கின்றது. இவ் ஒற்றை அடையாளம் தெளிவான வரையறைகளைத் தனக்குள் கொண்டிருக்கவில்லை. இலங்கைத்தமிழ் என்ற ஒற்றை அடையாளம் தனக்குள் பல்வேறு உபபரப்புக்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒற்றை அடையாளம் என்பதுடன் நாம் ஆவணமாக்கல் சார்ந்து இயங்கும் போது யாழ்மையவாத ஆவணங்கள் நூலகத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை நினைவுகூருகின்றோம். ஏனெனில் இவ் ஒற்றை அடையாளம் அதன் ஆதிக்கசக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் யாழ்-இந்து-வேளாள-ஆண் என்ற ஆதிக்கநிலைப்பட்ட பிரதிகளின் தொகை அதிகமானது மட்டுமல்லாது பரவலானது. அவ்வகையில் அதுசாரப்பட்ட பிரதிகள் பெருமளவில் ஆவணமாக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குறித்த ஒற்றை அடையாளத்தாலும் ஆதிக்கக்கருத்தியலாலும் விளிம்பாக்கப்பட்ட ஆவணங்களை நூலகத்திட்டத்தில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது.
வரலாறு என்பது அதிகாரவர்க்கத்தின் வரலாறே என்பது நாம் அறிந்தவிடயமே. ஆவணமாக்கல்- பாதுகாத்தல் செயற்பாடுகள் என்பது அதன் அனைத்துப் பரப்புகக்ளையும் உள்ளடக்காத போது அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத போது அதனோடு தொடர்புபட்ட அனைவரும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியவர்களாக அர்த்தப்படவேண்டும். நாம் இலகுவாக மறந்து போகும் விடயங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் மீதான மீள்வாசிப்புக்கு விளிம்புக்கருத்தியல்கள் மிக முக்கியமானவை. அவ்வகையில் அவற்றை உரிய முக்கியத்துவத்துடன் ஆவணமாக்க வேண்டியதென்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. ஆவணமாக்கல் செயற்பாட்டில் இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட கவனமே விளிம்பு அடையாளங்கள் சார்ந்த ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கு உதவியது. இவ்வகையில் 'இலங்கைத்தமிழ்' என்ற பெரும்பரப்பால் விளிம்பாக்கப்பட்ட முஸ்லிம், மலையகம், தலித்தியம், பெண், புலம்பெயர்வாழ்வு போன்ற அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 'பெண்' என்ற அடையாளம் சார்ந்து முழுமையான ஆய்வு நோக்குடன் கூடிய செயற்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத போதிலும் 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினுடாக கணிசமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே 'புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினூடாக மாற்றுக்கருத்தைச் சாத்தியமாக்கிய பல சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தினூடாக மேலும் பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன. மேற்கூறிய இரு திட்டங்கள் மேற்படி விளிம்பு அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வு என்ற போதிலும் அவை முழுமையானவை அல்ல. அவற்றை முழுமையாக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் போர்ச்சூழல், பிரதிகளின் சிதறல், ஆய்வுமுயற்சிக்கு தன்னார்வலர்களின் போதமை, நிதிப்பற்றாக்குறை, ஒருங்கிணைப்பின் கடினம் போன்வற்றை முக்கியமானவையாகக் கூற முடியும்.
2009 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' ஆகிய இரண்டு திட்டங்களும் ஓரளவாவது முழுமையாகச் செய்யக்கூடியவை. இவ்விளிம்பு அடையாளங்கள் சார்ந்து ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆக, ஆய்வை முழுமைப்படுத்துவதும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதும் ஆவணமாக்கலுமே மிகுதி அம்சங்களாகும்.
இர்ஃபான்:- இரண்டு செயற்திட்டங்களினதும் தேவை பற்றிக் கூறினீர்கள். அடுத்து 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' இனை எவ்வாறு நீங்கள் செயற்படுத்தப்போகின்றீர்கள்? எமது நேயர்களிடம் நீங்கள் என்ன வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்? இத்திட்டம் தொடர்பான உங்களது எதிர்பார்ப்பைக் கூற முடியுமா?
சசீவன்:- ஒரு செயத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு சிலவகையான ஒழுங்குமுறைகள் முக்கியமானவை. எமது ஏற்கனவேயன செயற்பாட்டு அனுபவங்களில் இருந்து அவற்றைக் கண்டடைய முடிந்துள்ளது. குறிப்பிட்ட விடயம் சார் ஆவணங்கள் தொடர்பான ஆய்வு என்பது எந்தவொரு செயற்திட்டத்தைப் பொறுத்தவரையுமான மிகமுக்கியமான கட்டமாகும். எமது சமூகத்தைப் பொறுத்தவரை ஆவணப்படுத்தலின் தேவையை-கட்டாயத்தை உணராத நிலை காணப்படுகின்றது. இவ்விடத்தில் ஆவணங்கள் தொடர்பான ஆய்வு என்பதற்கு கடினமான உழைப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. முஸ்லிம் பிரதிகள் தொடர்பாக ஏற்கனவே இரு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு அவ்விரு ஆய்வுகளும் மிக முக்கியமானவை. ஒன்று எஸ். எச். எம். ஜெமீல் அவர்களால் வெளியிடப்பட்ட சுவடி ஆற்றுப்படை என்ற நூலும் பி. எம். புன்னியாமீன் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு' என்ற நூற்தொகுதியும். இவற்றில் இருந்தே மேலதிக ஆய்வை செய்வதாக இருக்கின்றேன்.
ஆய்வின் பின்பான இரண்டாம் கட்டமென்பது பிரதிகளைச் சேகரித்துக்கொள்வதென்பது. இவ்விடத்திலும் ஆவணமாக்கலின் அவசியத்தை உணர்த்தியவாறே பிரதி உரிமைகாளரை அணுகவேண்டும். இக்கடத்தின் பின்பு ஆவணங்களை மின்பிரதியாக்கம் செய்தல். முதல் இரண்டு கட்டங்களுடன் ஒப்பிடும் போது மூன்றாம் கட்டம் இலகுவானது. ஆயினும், அவற்றிலும் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை மின்னூலாக்க வேண்டும்.
நேயர்களிடம் நான் முவைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும் செயற்திட்டத்தின் மூன்றுகட்டங்களுக்கும் உதவமுடியும். ஆய்வு என்ற முதல்கட்டத்திற்கான தகவல்களை எம்மைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். அவ்வாறே ஆவணங்களைச் சேகரித்தல் என்ற இரண்டாம் கட்டத்திற்கு எம்மைத் தொடர்புகொண்டு தாங்கள் வெளியிட்ட பிரதிகளை அனுப்பி வைக்க முடியும். அதுமட்டுமல்லாது அரிதான பிரதிகள் இருக்குமிடத்தை எமக்குத் தெரிவித்து அதைப் பெற்றுக்கொள்வதற்கு எமக்குதவ முடியும். ஆவணமாக்கல் என்ற மூன்றாம் கட்டத்திற்கு, மின்பிரதியாக்கத்தில் ஈடுபட்டோ அல்லது அதற்குத் தேவையான நன்கொடைகளை எமக்கு அளித்தோ உதவ முடியும். நண்பர்களிடம் இததேவையை வலியுறுத்துவதும் தெரியப்படுத்துவதும் கூட மேற்படி ஆவணமாக்கல் செயற்பாட்டிற்கான பங்களிப்பே.
இர்ஃபான்:- நேயர்கள் உங்களது வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பார்கள் என நம்புகின்றேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment