வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 21, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 0

அறிமுகம்.
இக்கட்டுரை சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அவசியத்தையும் அரசியலையும் மற்றும் நூலகத்திட்டத்தின் மூலம் இலங்கைத் தமிழ்ப்பரப்பில் சிறுபான்மைக் குரல்களை ஆவணப்படுத்தல் தொடர்பான விடயங்களையும் அவற்றில் இருந்து அதிகாரத்திற்கு எதிரான நம்பகத்தன்மையுடன் கூடிய உரையாடலை ஆரம்பித்தல் தொடர்பாகவும் ஆய்வுசெய்ய முற்படுகின்றது. சிறுபான்மை அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பான சரியான திசை நோக்கிய அரசியல் செயற்பாட்டுக்குச் சாத்தியமான வெளிகளை இதன்மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும் நோக்கம் இக்கட்டுரையின் உள்ளோட்டமாகும்.

அவ்வகையில் இக்கட்டுரை முக்கியமான நான்கு பகுதிகளைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.
1. சிறுபான்மைச் சமூகங்களும் ஆவணங்களும்.
2. இலங்கையும் சிறுபான்மைச் சமூகங்களும்.
3. தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும் நூலகத்திட்டமும்.
4. தகவற் சேமிப்பில் இருந்து ஜனநாயக ரீதியான உரையாடலை நோக்கி...

இதில் முதல் பகுதியாகிய 'சிறுபான்மைச் சமூகங்களும் ஆவணங்களும்.' என்னும் பகுதி ஆவணங்கள் மற்றும் தொல்லியல் பொருள்கள் உருவாக்கிய ஐரோப்ப மைய (Eurocentric)1* வரலாறு, அதற்குச் சமாந்தரமான மானிடவியலின் போக்கு, இவற்றுக்கு எதிரான பின்காலனியச் சிந்தனைகள், ஐரோப்பியர் சார்பான ஆவணங்களில் இருந்து ஐரோப்பியரல்லாத சமூகங்கள் தமது வரலாற்றை எழுத முற்பட்டமை மற்றும் அனைத்துத் தளங்களிலும் 'ஐரோப்பிய அல்லாத' போன்றவற்றை மீளுருவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிப் பேசமுற்படுகின்றது.

இரண்டாவது பகுதியாகிய 'இலங்கையும் சிறுபான்மைச் சமூகங்களும்.' என்னும் பகுதியானது மொழிரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகங்கள்2* தொடர்பாகவும் மொழிப்பாகுபாட்டிற்கெதிராக ஆவணப்படுத்தல் தொடர்பாகவும் கூறுவதோடு முதலாவது பகுதியில் கூறப்பட்ட விடயங்கள் சார்ந்து இரண்டாவது பகுதியில் கூறப்பட்ட விடயங்களை மதிப்பீடு செய்கின்றது.

மூன்றாவது பகுதியாகிய 'தமிழ்ச்சிறுபான்மைச் சமூகங்களும் நூலகத்திட்டமும்.' என்ற பகுதியானது தமிழ்ச்சமூகங்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் நூலகத்திட்டத்தில் அதற்கான வெளி, தமிழ்ப்பரப்பு வரையும் சிறுபான்மைக்களங்கள் மற்றும் நூலகத்திட்டத்தின் மூலம் அவற்றின் மீதான ஆவணப்படுத்தலுக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை போன்றவற்றையும் பற்றிப் பேசுகின்றது. நூலகத்திட்டமானது 'இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி.'[1] எனக் கூறப்படுகின்றது. இவ்வகையில் மேற்கூறிய விடயங்களுக்கான சாத்தியங்கள் பற்றியும் பேச முற்படுகின்றது.

நான்காவது பகுதியாகிய 'தகவற் சேமிப்பில் இருந்து ஜனநாயக ரீதியான உரையாடலை நோக்கி...' என்னும் பகுதியானது தற்போதைய தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கும் 'எண்ணிம உலகம்' தொடர்பாகவும் அதன் மூலம் முன்னிலைப்படுத்தபடக் கூடிய சிறுபான்மை உரிமைகள் தொடர்பாகவும் அதன் மூலமான தகவல் சேமிப்புக்களன் தொடர்பாகவும் நம்பகமான உரையாடலை அதன் மூலம் சாத்தியப்படுத்துவது தொடர்பாகவும் மேலும் தகவல் சேமிப்பில் இருந்தான அறிவுருவாக்கம் தொடர்பாகவும் அதன் மூலமான சிறுபான்மை சார்பான அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் பேச முற்படுகின்றது.

இதன் மூலம் இக்கட்டுரை 'சிறுபான்மை'3* என்னும் பதமும் 'ஆவணப்படுத்தல்' என்னும் பதமும் சேரும் பரப்புகளை மூன்றுவிதமான படிநிலைகளில் ஆராய்கின்றது. அவையாவன உலகு தழுவிய பார்வை, இலங்கைத் தமிழ்ச் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான பார்வை மற்றும் இலங்கைத் தமிழ்ப்பரப்பு உள்ளடக்கும் சிறுபான்மைக்களங்கள் தொடர்பான பார்வை. மேற்கூறிய மூன்று படிநிலைகளுடன் அவற்றின் அரசியல் செயற்பாடு என்ற பரப்பையும் தொட்டுச் செல்கின்றது.


அடிக்குறிப்பு
1* Eurocentric என்பதை நான் ஐரோப்பியத் தன்மையை மையமாக வைத்த பார்வை என்றே குறிப்பிடுகின்றேன். பல புலமையாளர்கள் 'மேற்கு' என்ற பதத்தின் மூலம் குறித்தாலும் அதைவிட 'ஐரோப்ப மைய வாதம்' என்பதே பொருத்தமாயிருக்கும். காலனித்துவத்தின் மூலம் அப்பிரதேசங்களின் பூர்வகுடிகள்4* ஒடுக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்க இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் இன்றைய கருத்தியலும் மேற்கூறிய 'ஐரோப்ப மைய வாதம்' என்னும் கருத்தியலில் உள்ளடங்கும். அவ்வகையில் 'ஐரோப்ப மைய வாதம்' என்ற பதத்தைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். எட்வேட்ர் சைட் 'Eurocentric' மற்றும் 'West' ஆகிய இரு சொற்களுக்கும் அண்மைய அர்த்தம் கொடுக்க முயற்சிக்கின்றார். [2] அதுமட்டுமல்லாது 'ஐரோப்ப - அமெரிக்க' என்ற பதத்தையும் பயன்படுத்துகின்றார். இப்பதங்கள் மனதில் உருவாக்கும் நிலப்பரப்புக்குள் அப்பிரதேசப் பூர்வகுடிகளின் குரல்களும் எதிர்ப்புணர்வும் வெளித்தெரியாமல் போகும் என்பதை எட்வார்ட் சைட்டால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வியப்பளிக்கின்றது. பூர்வ குடிகள் தொடர்பான கரிசனை 'சைட்' இடம் இருக்கின்ற போதிலும் அவ்வார்த்தைப் பிரயோகம் தவறெனவே கருத வேண்டியுள்ளது. (தந்தைமை/ஐரோப்ப சமூகம் என்ற பதத்தை அவர் கூறுவதன் முக்கியத்துவமும் இங்கே பார்க்கப்பட வேண்டியது.)

2* தமிழ் மொழி பேசுவோர் பல சமூகங்களாகக் காணப்படுவதால் 'தமிழ்ச்சமூகம்' என்னும் பதத்தை தமிழ்ச்சமூகங்கள் என்று கூற விளைகின்றேன். K. M. de Silva வை வழிமொழிந்து E. Valentine Daniel கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. [3]

3* 'சிறுபான்மை' என்னும் பதம் தமிழ்ச்சூழலில் நிரந்தரமான தளத்தில் வைத்து அணுகும் நோக்கில் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. 'சிறுபான்மை' என்பது சூழல் சார்ந்து மாறக்கூடியது. அது மட்டுமன்றி எண்ணிக்கை சார்ந்தது மட்டுமாகவும் அர்த்தப்படுத்த முடியாதது. அதன் வரையறைகளை நெகிழ்வுடன் வைத்திருப்பது என்ற அர்த்தத்திலேயே இக்கட்டுரை முழுவதும் பயன்படுத்தப்படும்.

4* 'பழங்குடிகள்' என்னும் புழக்கத்தில் உள்ள வார்த்தைக்குப் பதிலாக 'பூர்வகுடிகள்' என்னும் பதத்தையே இங்கு பாவிக்க விரும்புகின்றேன். தமிழில் இவ்விரு பதங்களுக்கும் அருகருகான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டாலும் 'ஐரோப்ப மைய வாதம்' உருவாக்கும் வலையமைப்பில் இருந்து வெளியேறும் நோக்கில் 'பூர்வகுடிகள்' என்னும் பதத்தைப் பாவிக்க விரும்புகின்றேன். நாகரிகமடைந்த - முன்னேறிய ஐரோப்பிய சமூகத்தால் கண்டுபிடிக்கப்பட்டவர்களே ஐரோப்பியர் அல்லாத சமூகத்தவர் என்னும் கருத்தை மறுதலிக்கும் நோக்கில் 'பூர்வகுடிகள்' அல்லது 'பூர்வீகமக்கள்' என்னும் பதத்தைப் பயன்படுத்துகின்றேன். ஹெகல் கூறும் 'கிழக்கில் இருந்து மேற்கு...' என்பது நாகரிகமற்றதில் இருந்து நாகரிகமானதை நோக்கி என்று மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றது. அம்மனநிலையை 'பழங்குடி' என்னும் பதமும் உருவாக்க விளைவதால் 'பூர்வீக மக்கள்' என்னும் பதத்தை நான் பயன்படுத்துகின்றேன்.

உசாத்துணை.
1. http://noolaham.org/
2. Said, Edward (1977) Orientalism. London: Penguin
3. Charred Lullabies, Chapters in an Anthropology of Violence, E. Valentine Daniel, Princeton University Press

இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(இன்னும் வரும்)


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter