வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 26, 2009

சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் - 4

4. தகவற் சேமிப்பில் இருந்து ஜனநாயக ரீதியான உரையாடலை நோக்கி...

கட்டுரையின் முதல் மூன்று பகுதிகளும் மூன்று வெவ்வேறு விடயங்களுடன் சிறுபான்மைச் சமூகம் கொள்ளும் உறவு மற்றும் ஆவணப்படுத்தல் என்ற விடயங்களைப் பேசியுள்ளன. முதலாவது ஐரோப்ப மைய வாதமும் அதன் வழியேயான சமூக அறிவும் அதன் பின்னர் ஐரோப்ப மையவாதத்தை ஏற்றுக்கொள்ளாத சிறுபான்மைக் கதையாடலான, பின்காலனித்துவக் கதையாடல் தொடர்பாக சிறுபான்மைச் சமூகங்களின் ஆவணப்படுத்தல் தொடர்பாக பேசியது. இரண்டாவது இலங்கை என்ற பரப்பிற்குள் மொழிரீதியாகச் சிறுபான்மையாக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்கள் தொடர்பாகவும் அதனுடன் தொடர்புள்ள சிறுபான்மை ஆவணங்கள் என்ற அளவில் பேசியது. மூன்றாவதாக இலங்கைத் தமிழ் அடையாளம் என்ற பெரும்பரப்பு தன்னுள் உள்ளடக்கிய சிறுபான்மைத் தமிழ்ச்சமூகங்கள் தொடர்பாகவும் இலங்கைத் தமிழ் அடையாளம் சார்ந்தான ஆவணப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் நூலகத்திட்டத்தின் நகர்வுகள் சார்ந்தும் பேசியது.

சமூகத்தை ஆவணப்படுத்துவதன் தேவை தொடர்பாகப் பல்வேறுபட்ட பார்வைகள் இருப்பினும் இக்கட்டுரையில் ஆவணமாக்கலுடன் சிறுபான்மைச் சமூகங்களையும் மாற்றுக்குரல்களையும் தொடர்படுத்தும் விடயங்களே கூறப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆவணப்படுத்தல் என்பது 'வரலாறு' என்ற பதத்தின் அளவே சுருங்கிவிடுகின்றது. தனியே வரலாறு எழுதுதல் அல்லது கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளல் என்பதுடன் இக்கட்டுரை முற்றுப்பெறவில்லை. நான்காவதாக ஆவணப்படுத்தல் என்பதையும் சமூக அறிவு என்பதையும் அதைப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது தொடர்பாகவும் வரலாறு அல்லது தொல்லியல்/கடந்தகால மோகம் என்பதற்கான குறுகிய பார்வையை தரும் நோக்கம் இக்கட்டுரையில் இல்லை. மேற்கூறிய மூன்று பகுதிகளிலும் அவற்றின் மீள்வாசிப்புத் தொடர்பான விடயங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும் நான்காவது பகுதியில் இணைய நூலகத்தின் மூலமான ஆவணப்படுத்தலின் இதர சாதக நிலைகளையும் இக்கட்டுரை கூற நினைக்கின்றது.

தகவல் சேமிப்பு என்பதற்கப்பால் அவற்றைப் பொதுக்களத்தில் காட்சிப்படுத்துவது என்பதும் அதன் மூலம் உரையாடல்களைச் சாத்தியப்படுத்துவதும் (தகவல் சேகரத்தில் இருந்தான நம்பகமான உரையாடல்கள்) அதன்மூலம் உருவாக்கப்படும் அறிவுத்திரட்சியும் செயற்பாட்டுக்களத்தை ஆரோக்கியமான போக்கில் செலுத்தவல்லவை. சமூக மாற்றம் என்பதை உருவாக்க நினைக்கும் தரப்பினரும் அதிகார மேலாண்மையினால் சிக்குண்ட சிறுபான்மை மற்றும் மாற்றுக் குரல்களும் இவ்வகையான தேவைப்பாடுகளை உணர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

4.1 தகவல் சேமிப்பும் உரையாடல் களமும்.
சமூகம் பிரசவித்த அறிவும் தகவல்களும் அவற்றின் தேவை காரணமாக தொடர்ச்சியாகப் பல்வேறு விதங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தன. பாறைகளில் கல்வெட்டுக்களாகச் செதுக்கப்பட்டும், ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டும் பிற்காலத்தில் பத்திரிகைகளில் அச்சிடப்பட்டும் அறிவுப்பாரம்பரியம் பேணப்பட்டது. இவை தொட்டுணரக்கூடிய பொருள்களில் சேமிப்பாக இடம்பெற்றன. அவ்வகை அறிவுகள் அதிகாரவர்க்கத்தின் கைகளில் கட்டுண்டிருந்தன. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அறிவை கதைகளாகவும் சடங்காக்கல் மூலமும் வாய்வழிப் பாடல்கள் மூலமும் இன்னும் மௌனத்தின் மூலமுமே பேணிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. அதிகார வர்க்கத்தின் கைகளில் முழு அதிகாரமும் கையகப்பட்டிருந்ததே இதற்கான காரணமாகும்.

ஆயினும் இன்று தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கும் வெளிகளை ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகங்கள் தமது அரசியல் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் ஒவ்வொருவருக்கும் அவர்களது இடத்திலேயே நூலகங்களையும் உரையாடல்களங்களையும் கொண்டுவந்து சேர்த்து விட்டிருக்கின்றது. செயற்பாடு என்னும் விடயம் வேறுதளத்தில் அமைந்திருக்கும் போதிலும் அதிகாரவர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மையை தகர்க்கும் கருத்தியல் ரீதியான அறிவுழைப்பிற்கான சாத்தியங்களும் சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் குரல்கள் தமது குரலை சுலபமாகப் பதிவுசெய்யவுமான சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தொழில்நுட்பம் உலகமயமாதலை இலகுபடுத்தி உதவியிருக்கின்றது என்ற வாதம் ஒடுக்கப்படும் சமூகங்கள் சார்பாக முன்வைக்கப்பட்டாலும் உலகமயமாகும் ஐரோப்ப மைய உற்பத்தி அறிவை எதிர்கொள்வதற்கான சாத்தியத்தை சிறுபான்மை அல்லது ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு வழங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழில்நுட்பமும் உலகமயமாதலும் பின்காலனித்துவ காலத்தின் நுண்வடிவக் காலனியாதிக்கம் என்ற கருத்தை முற்றாக மறுப்பதற்கில்லை. ஆனால், அதை எதிர்ப்பதற்கான சாத்தியத்தையும் அவ்வெளி தன்னகத்தே கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
அதே நேரம் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பின்பு சிறுபான்மை மக்கள் மீதான உரையாடல்கள் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. இதன் மூலம் தனியொருவருக்குள் கட்டுண்டு இருந்த அதிகாரக்குவிமையங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. மூடுண்ட செயற்பாட்டுக்களங்களைத் தொழில்நுட்பம் இல்லாமல் ஆக்கிவிட்டிருக்கின்றது. ஓரிருவரின் கைகளில் கட்டுண்டு இருந்த ஊடகவெளி இன்று சகலருக்கும் திறந்துவிடப்பட்டிருக்கின்றது. சகலரும் உரையாடுவதற்கான களம் திறந்துவிடப்பட்டிருக்கின்றது.

4.2 நம்பகமான உரையாடல் களனைச் சாத்தியமாக்கல்.
பிராங்பேர்ட் பள்ளியின் மார்க்சிய அறிஞர் ஹேபர்மாஸ் கூறும் 'பொதுக்களம்' (Public Sphere) என்பது 'ஜன்நாயக் கோட்பாட்டின் மீது அமைந்திருப்பது அவசியம் என வலியுறுத்தும் வேளையில் அதில் தனி நபர்கள் கூடி எவ்வித பலவந்தமுமின்றி வெளிப்படையாக விசயங்களை விவாதிப்பார்கள்' என்கின்றார் இரா. முரளி. மேலும் 'பொதுக்களத்தில் நடைபெறும் விவாதங்கள் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்கின்றார். பொதுக்களங்களே சமூக விமர்சன அறிவை வளர்க்கும் பூமி ஆகும்.' என்கின்றார். நூலகத்திட்டம் 'இலங்கைத் தமிழ்' தொடர்பான ஆவணப்படுத்தல் செயற்பாடு என்ற வகையில் அதன் மூலமான தகவல் சேமிப்பில் இருந்து தமிழ்ச்சமூகங்களுக்கிடையில் பொதுக்களத்தை உருவாக்க முடியும்.

உரையாடல்களின் ஜனநாயகத்தன்மை எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு நம்பகத்தன்மையும் முக்கியமானவை. பொதுக்களங்களிலான உரையாடல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நூலகத்திட்டத்தில் காணப்படும் தகவல் சேகரிப்பைப் பயன்படுத்த முடியும். நூலகம் 'இலங்கைத் தமிழ்' பிரதேச எல்லைகளைத் தாண்டி விரிவடைந்திருப்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டினேன். அதை இன்று பலவகைகளிலும் தொழில்நுட்பம் இணைத்துக் கொண்டுள்ளது. ஹேபர்மாசும் 'தொழில்நுட்பப் புரட்சி என்பது பொதுக்களங்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளன. அதை ஜனநாயக செயல் வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பொதுக்களத்தின் பலனை உருவாக்கும்' என்கின்றார் ஹேபர்மாஸ். நம்பகமான உரையாடல்கள் சமூக அக்கறையுள்ள பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும் சாத்தியமுள்ளவை. அவை உருவாக்கும் சமூகப் புரிதலிலும் அறிவுத்திரட்சியும் சமூக மாற்றம் தொடர்பாக உதவக்கூடியவை. 'சமூக ஒப்புதல் என்பது, புரிதலின், பகிர்வின் மீது அமைவது. இப்புரிதலை உருவாக்குவது எது என்று பார்த்தால் அது தொடர்பறிவே (Communicative Rationality) என்பது புரியும்' என்கின்றார்.

ஹேபர்மாஸ் தனது 'பொதுக்களம்' என்னும் கருத்தியலுக்கு தகவலையே அடிப்படையாகக் காண்கின்றார். தகவலில் இருந்து ஜனநாயகம் நோக்கிச்செல்வது அவரது பாதை. ஹெபர்மாஸ் கூறும் 'இலட்சியப் பேச்சுச் சூழல்' என்பதிலேயே சரியான ஜனநாயகபூர்வமான உரையாடலை நிகழ்த்த முடியும். ஃபூக்கோ கூறும் உரையாடல் என்பது தொடர்புச்செயலின் அடுத்த கட்டவடிவம் என்பது ஹேபர்மாசின் நம்பிக்கை. ஐரோப்பிய சூழலை அதிலும் குறிப்பாக மேற்கு ஜேர்மனியின் சூழலை மையமாக வைத்ததே ஹேபர்மாசின் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. மூன்றாமுலக நாடுகளின் சூழல் அதைத்தாண்டி வேறு சூழலில் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை உரையாடல் களத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் தகவல் சேகரங்களை தன்னுள் கொண்டியங்கும் எனக்கூற முடியும். இன்றைய சூழலுக்குத் தேவையான பங்கேற்பு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை நூலகத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்படமுடியும். உரையாடலில் நம்பகத்தன்மை இருப்பின்போது மட்டுமே ஜனநாயகத்தன்மை உருவாக முடியும். அவகையில் உரையாடலின் நம்பகத்தன்மையை ஏற்கனவேயான ஆவணங்களையும் எழுத்துக்களையும் பரிந்துரைப்பதன் ஊடாக ஏற்படுத்த முடியும். தமிழில் அச்சுவடிவில் ஏராளமான உள்ளடக்கங்கள் உள்ள போதிலும் மின்வடிவில் அதாவது இணையம்மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதான உள்ளடக்கங்கள் அச்சுவடிவில் காணப்படும் உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவானவை. நம்பகமான உரையாடலின் சாத்தியத்திற்கு மின்வடிவ உள்ளடக்கங்களின் தேவை அதிகமானது. அவ்வகையில் ஏற்கனவேயான அச்சுவடிவ உள்ளடக்கங்களை மின்வயப்படுத்தும் போது மட்டுமே மின்வடிவ உள்ளடக்கங்களை அதிகரிக்க முடியும். அதுவே நம்பகத்தன்மையான உரையாடலையும் அதன் மூலமான ஜநாயகபூர்வமான உரையாடல் களனையும் சாத்தியப்படுத்தும் எனக்கூற முடியும்.

4.3 உரையாடலுக்கான தொழில்நுட்பச் சாத்தியம்.
இணையவழியான உரையாடலுக்கான சாத்தியத்தை தொழில்நுட்பம் இன்றைக்கு நினைக்க முடியாத அளவிற்குச் சாத்தியமாக்கியுள்ளது. வழங்குபவன், பெறுபவன் என்ற இடைவெளி பெரும்பாலும் அழித்துவிடப்பட்டிருக்கின்றது. பார்வையிடுபவனே பங்காளிப்பாளனாகிய திட்டங்கள் பெரும்வெற்றி பெற்றிருக்கின்றன. நேத்ரா தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலின் சசீவனால் கீழ்வருமாறு கூறப்படுகின்றது. 'வெப் 2.0 இனது வரவு இணையத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கிய நிகழ்வு. வழங்குபவன் X பார்வையிடுபவன் என்ற துவித எதிர் இருமை நிகழ்வின் உடைவும், பார்வையிடுபவன், பங்களிப்பவன் என்ற நிலை நோக்கிய நகர்வும் உள்ளடக்கங்களின் கட்டுமானங்களை உடைத்தெறிந்தது மட்டுமல்லாது இணையப்பாவனையாளர்கள் அனைவரையும் பங்களிப்பாளர்களாக மாற்றியது. தொடர்பாடல் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்வற்றை எளிய நிலைக்கு கொண்டுவர உதவியது. அதுமட்டுமல்லாது பாவனையாளர்களை பங்களிப்பாளர்களாக மாற்றிய கட்டத்தில் பாவனையாளர்களின் பாவனையின் இலகுத்தன்மையை கட்டற்றுச்செழுமைப்படுத்தியது. இவ்விடத்தில் நூலகம் 2.0 என்ற கருத்துருவாக்கத்தை நூலகத்திட்ட இணையத்தளத்தில் சாத்தியப்படுத்துவதென்பது அதன் பாவனையாளர்களுக்கு வரப்பிரசாதகமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏற்கனவே அதன் சில கட்டங்களை சாத்தியப்படுத்தியுள்ள போதிலும், அதன் முழுமையை அடையும் எமது முன்னெடுப்புகள் தொடர்ந்தவாறேயிருக்கின்றன.'

அத்துடன் தகவல் பெருக்கமும் உரையாடல்களும் இணையத்தில் முக்கியபங்காற்றுகின்றன. மீடியா விக்கி போன்ற மென்பொருள்களும் பேஸ்புக் போன்ற நண்பர்களுக்கான தொடர்பாடல் வலையமைப்புகளும் இன்னும் ட்விட்டர் போன்றவையும் இணையவழியாக மனிதர்களை நெருக்கமாக்கி உரையாடலை அதிகப்படுத்தியிருக்கின்றது. தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய விடயங்களே இவையெனலாம். பின்னவீன உலகம் தகவல் சமூகமாக இனங்காணப்படுகின்றது. பின்னவீனத்துவக்கருத்தியல் 'உண்மை'களை 'மொழி'க்கூடாகவே பார்த்தது. ஃபூக்கோ கூறினார் 'உண்மை என்று எதுவும் இல்லை. மொழி மட்டுமே அங்குள்ளது. நாம் மொழியைப் பற்றிப் பேசுகின்றோம். மொழிகளுக்கிடையில் பேசுகின்றோம்.' ரோலன்ட் பார்த் கூறினார் 'மொழி அப்பாவித்தனமானது அல்ல'. மொழி மையப்படுத்திய சிந்தனைமுறை தகவல்களை மையப்படுத்துகின்றது. மொழியும் தகவலும் பின்னவீன உலகில் இணைபிரியாதனவாகின்றன. இதன் மூலமான தகவல்பெருக்கமே பின்னவீன உலகு எனப்படுகின்றது. இத்தகவல் பெருக்கத்தையும் குறியீடுகளது உலவுகையையும் தொழில்நுட்பமே சாத்தியப்படுத்தியிருக்கின்றது.

4.4 அறிவுருவாக்கமும் சமூகச் செயற்பாடும்.
மொழி, அறிவு, அதிகாரம் இவை மூன்றும் நெருங்கிய தொடர்புள்ளவை. மொழியில் இருந்து அறிவுருவாக்கம் பெறுகின்றது. அறிவில் இருந்து அதிகாரம் தோற்றுவிக்கப்படுகின்றது. பின்னர் அதிகாரம் தனக்குச் சாதகமான அறிவை உற்பத்தி செய்கின்றது. அதிகாரம் தனக்குச் சாதகமான முறையில் மொழிக்கு கடிவாளம் போடுகின்றது. இன்றைய உலகின் போக்கு தகவலை மையப்படுத்தியதாகவே உள்ளது. இன்றைய பொருளாதாரம் தகவல் பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது. இன்றைய காலம் தகவல் யுகம் என அழைக்கப்படுகின்றது. உலகமயமாதல் தகவல்பெருக்கத்தின் உடாக ஆபிரிக்க கண்டத்தின் காட்டிலுள்ள சமூகம் வரை பாய்கின்றது. ஹேபர்மாஸ் கூறுவதன்படி பல்வேறுபட்ட சமூகங்களின் அடையாளங்களை உலமயமாகும் தன்மை அழிக்க முற்படுவதே பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக உள்ளது. சிறுபான்மைச் சமூகங்கள் தமது அடையாளம் அழிக்கப்படுவதாக நினைக்கின்றன.

இன்றைய யுகத்தை இருவிதமாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவது ஹேபர்மாஸ் கூறும் உலகமயமாதல் தன்மையும் அதற்கெதிரான பயங்கரவாதமும். இவ்வுலகயமாதல் தன்மையை கணனியும் தகவலும் இலகுபடுத்திக் கொடுத்துள்ளன. 'உலகமயமாதல் மரபுகளின் வேர்களை பிடுங்கி எறிகிறது. உலகமயமாதல் உலகினை வெற்றியடைந்தவர்கள், தோற்றவர்கள் என்று மட்டுமே பாகுபடுத்துகின்றது.' என்பது ஹேபர்மாசின் வாதம். மேலும் 'ஜனநாயகம், சுதந்திரம் என்பவற்றின் உண்மைப் பொருளைச் சிதைத்து நுகர்வியக் கலாச்சாரத்தை ஜனநாயகமாக முனிறுத்துவதும் பயங்காரவாதத்திற்கு மற்றொரு காரணமாகும்' என்கின்றார். இதை வேறொருவிதமாகவும் பார்க்க முடியும். உலகமயமாதலை சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்வதற்கான வெளியையும் சாத்தியப்படுத்தியிருக்கின்றது. அதைப் பயன்படுத்துவதே சிறுபான்மையினரிடம் உள்ள முக்கிய சவாலாகும். தகவல் யுகத்தில் சிறுபான்மையினர் சார்பான தகவல் பெருக்கத்தை நிகழ்த்துவதும் அதிலிருந்தான அறிவுருவாக்கம் என்பதைச் சாத்தியமாக்கக் கூடிய வெளியையும் அதே தாராளவாதம் வழங்கியுள்ளது. 'அறிவில் இருந்து அதிகாரம் உருவாகின்றது. அதே அதிகாரம் தனக்குச் சார்பான அறிவை உற்பத்தி செய்கின்றது.' என்ற ஃபூக்கோவின் கருத்தியலை நாம் ஹேபர்மாசின் கருத்திற்கு எதிர்நிலையில் பிரயோகிக்கும் போது சிறுபான்மை மக்களின் அறிவை அவர்களது பார்வையில் உற்பத்தி செய்ய முடியும். இவ்வறிவுருவாக்கம் ஒற்றை அதிகாரத்தை தகர்வுக்குள்ளாக்குகின்றது. சிறுபான்மைச் சமூகங்களது அறிவுருவாக்கம் என்பது அவர்களது சமூகச்செயற்பாட்டுக்க்கான ஆரம்பப் புள்ளியாகும். தகவல் என்பது அறிவுருவாக்கத்தின் ஆரம்பநிலையாகும். இதுவே இச்சுழற்சியின் மூலமாகும். உலகமயமாதல் - தகவல் பெருக்கச் சுழல் அதிகாரவர்க்கம் சார்பானதாக இருந்தாலும் அது ஏற்படுத்தியிருக்கும் இடைவெளிகளில் தம்மை நிலைநிறுத்துவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்தவரை இச்சுழற்சியில் அது ஏற்படுத்தியிருக்கும் வெளியில் தம்மைப் பொருத்திக் கொள்வதேயாகும். அதன் மூலமான சமூகத்தின் ஆதாரமான அறிவுருவாக்கச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்வே சமூகச்செயற்பாடுகளுக்கான ஆதாரமாகும்.

உசாத்துணை.
1. ஹேபர்மாஸ், இரா. முரளி
2. Habermas and Public Sphere, Craig Calhoun
3. Jurgen Habermas - Democracy and the Public Sphere, Luke Goode
4. The Theory of Communicative Action: Reason and the rationalization of society, Jürgen Habermas, Thomas McCarthy
5. On Pragmatics of Communication, Jurgen Habermas
6. Theories of the information society, Frank Webster
7. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், டிசம்பர் 2008
8. The Archeology of Knowledge, Michel Foucault


இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.

(முடிந்தது.)


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter