வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 14, 2009

இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம் - 1

எமது தலைமுறையினர் மாறிவரும் உலகப்போக்குகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கருத்தியலை பல்வேறு துறைகளையும் சூழல்களையும் உள்வாங்கி புதிதாக வடிவமைக்கவேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். மரபான மார்க்சியர்களைப் பின்பற்றுவதன் மூலம் நாம் சரியான இடத்தை நோக்கிப் பயணிக்க முடியாத அதே வேளை மார்க்சியர்களுடன் உரையாடாமலோ அல்லது மார்க்சியர்களது நிலைப்பாடுகளை முற்றாகப் புறந்தள்ளியோ ஒடுக்குமுறைக்கெதிரான நமது தலைமுறைக்காகப் புதிய சித்திரத்தைக் கண்டடைந்துவிட முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மராபார்ந்த மார்க்சியர்களுடனான தீவிர உரையாடல்கள் நிகழ்த்தப்படும் போது மட்டுமே இவ்விடயத்தைச் சாத்தியப்படுத்த முடியும். மேற்கில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் பரவலாக அறியப்படும் பின்மார்க்சியம் என்னும் வகைமாதிரிக்குள் அடக்கப்படும் கருத்தியல்கள் எமது சூழலுக்குப் போதுமானவை அல்ல. அதை உள்வாங்கியவாறு நமது சமூகவியல் பரிமாணங்களை அறிந்து நமக்கான புதிய சித்திரத்தை உருவாக்க வேண்டியுள்ளதே எமக்கான சவாலாகும். ஏராளமான அறிவுத்துறைகளை உள்வாங்கியே நாம் ஒடுக்குமுறைக்கெதிரான சித்திரத்தையும் அதன் செயற்பாடு சார்ந்த நடைமுறையையும் கண்டுகொள்ள வேண்டியுள்ளது.

நவ தாராளவாதச் சமூக உருவாக்கத்தின் பின்னர் அதற்கான மாற்றீட்டைப் பேசுவோர் பின்மார்க்சியர்கள் என்று பரவலாக அழைக்கப்படும் போதிலும் இங்கே இனிமேல் நான் 'பின்மார்க்சியம்' என்னும் பெயரைப் பயன்படுத்த விரும்பவில்லை. அதை உள்வாங்கி இடதுசாரித்துவம் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதையே பெரிதும் விரும்புகின்றேன். இடதுசாரித்துவம் என்பது பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கெதிரான கருத்தியல்களை உள்வாங்கியவாறு வளர்ச்சி பெற்றது. இடதுசாரித்துவத்தைத் தனியே ஒருவகைக் கருத்தியலுக்குள் வைத்து பார்க்க முடியாதது. ஒடுக்குமுறைக்கெதிரான சகல கருத்தியல்களை ஒருங்கிணைப்பதற்காக 'இடதுசாரித்துவம்' என்னும் சொல்லைப் பயன்படுத்த முடியும். பிரெஞ்சுப் புரட்சியில் இருந்து மார்க்ஸ் இல் தொடங்கி லெனின், மாவோ வரையான அதன் பாதையில் இன்றைய பிரசண்ட, சாவோஸ் வரை இடதுசாரித்துவத்தின் பங்கு அளப்பரியது. அச்சொல்லின் வீச்சு இன்னும் மனிதகுல வரலாறு நெடுகிலும் செல்லப்போவது மாத்திரமல்லாது, பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னரான காலப்பகுதிக்குக் கூட அதை நீட்டித்துப் பொருள்கொள்ள முடியும். இடதுசாரித்துவமானது மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் போன்ற ஒடுக்குமுறைக்கு எதிரான சகல கருத்தியல்களையும் உள்ளடக்கக்கூடிய நெகிழ்ச்சியான சொற்பிரயோகமாகும். இடதுசாரித்துவமே சமத்துவம் நோக்கிய மனிதகுல வரலாற்றுப் பயணத்தில் எப்போதும் உடனிருந்தது. இன்றைய இடதுசாரித்துவக் கருத்தியல் வளர்ச்சியில் மார்க்சியத்தின் பங்கு அதிகமுக்கியத்துவம் பெற்றாலும் இடதுசாரித்துவம் வேறுபட்ட ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் உள்வாங்கியது என்பதையே வலியுறுத்தவேண்டியுள்ளது.

ஏர்னஸ்ட் லக்லாவ் என்ற பின்மார்க்சியர் கூறுவது போன்று உற்பத்தி உறவுகளூடு சமூகத்தை அணுகுவதும் அதன் சமத்துவத்தை வலியுறுத்துவதென்பதும் இன்றைய உலகில் மிகவும் சிக்கலாகிவிட்டது. சமத்துவத்தை பொருளாதார மையப்படுத்தி அணுகும் முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் மார்க்சியம் மனிதகுலத்திற்கு கிடைக்கச்செய்த சாதகமான விளைவுகளைப் பட்டியல்படுத்த வேண்டிய அவசியமில்லை. லக்லாவ் கூறுவது போன்று மார்க்சியம் என்னும் சம்பவம் நமக்குக் கொடுத்திருக்கும் ஜனநாயமாகும் செயற்பாட்டை அதன் பொருளாதார மைய அணுமுறையைத் தாண்டி அகலிக்க வேண்டியதே நமது தலைமுறைக்கான சவாலாகும். இதையே நான் இடதுசாரித்துவம் என்னும் நெகிழ்ச்சியான கருத்தியலுக்குள் உள்ளடக்கிப் பார்க்க முயற்சிக்கின்றேன். பல உரையாடல்களிலும் வலியுறுத்திய 'சிறுபான்மை அரசியல்' என்னும் கருத்தியலையும் வேறுசில ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியல்களையும் 'இடதுசாரித்துவத்தின் புதிய வரைபடம்' என்னும் கருத்தியலுக்குள் உள்வாங்க முயற்சிக்கின்றேன். பல்வேறுபட்ட பின்மார்க்சியர்களது கருத்தியல் நிலைப்பாடுகள் எனது கருத்தியலில் தாக்கம் செலுத்துவதைத் தவிர்க்க முடியாத போதிலும் எமது தலைமுறை எதிர்கொள்ளும் உலகச்சூழலுக்குள் மாத்திரம் முடங்காமல் மூன்றாமுலக அரசியல் சூழல் மற்றும் நாம் வாழும் சமூகத்தின் கலாச்சாரச் செல்நெறிகள் உள்வாங்கியதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும். இங்கே நாம் கிராம்சியையும் மாவோவையும் துணைக்கழைத்துக் கொள்ள முடியும்.

இடதுசாரித்துவத்தை பிரஞ்சு புரட்சிக் காலத்தின் முன் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்தியல்கள் சார்ந்து நீட்டிப்பதும், அதனை இன்றைய சூழல் வரை புதிய கருத்தமைவுகளுடன் உள்வாங்கிச் செழுமைப்படுத்துவதுமே எமக்குள்ள முக்கிய பணியாகும். இதுவே இடதுசாரித்துவத்தை எதிர்காலத்திலும் சகல ஒடுக்குமுறைக்கெதிரான கருத்தியலாக - மக்கள் சார்பான அரசியலாக வளர்த்தெடுக்க உதவும். மார்க்சியத்தின் முதல் மீறல் லெனினால் நிகழ்த்தப்பட்டதாக லக்லாவ் கூறுகின்றார். பொருளாதார மையமான மார்க்சியக்கட்டமைப்பை அதிகம் அரசியல் சார்ந்ததாக மாற்றியமைத்தவர் லெனினே. இத்தொடர்ச்சிக்கு மாவோவின் பங்களிப்பு புதிய பார்வையைக் கொடுத்தது. உதாரணமாகக் கருத்தியல் தளத்தில் ழீன் போல் சர்த்தரின் தன்னிலைக்கும் அமைப்பாக்கத்திற்கும் இடையிலான தெரிவுகளுடன் கூடிய கருத்தியல் மார்க்சியத்தின் மீது புதிய பார்வையைக் கொடுத்தது. இச்சமபவங்கள் நடைபெற்ற காலங்களில் அவை மீறல்களாக அடையாளப்படுத்தப்பட்டு மரபான மார்க்சியர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் மார்க்கியத்தை அகலித்ததாகக் கொள்ளப்பட்டன. இவ்வகையான அகலிப்புகளுடன் கூடிய கூட்டுக்கருத்தியலின் வளர்ச்சியையும் போராட்ட வடிவங்களையும் இடதுசாரித்துவம் என்னும் பொதுக்கருத்தியலூடாக உள்வாங்கி அதன் மக்கள் சார்பையும் மக்களை அண்மித்த நிலைப்பாட்டையும் உறுதிசெய்யவதே எமது தலைமுறைக்கான முக்கியபணியாகும்.


(இன்னும் வரும்)

1 comment:

Blog Archive

Statcounter