வாழ்வு போராட்டம் இயங்கியல் சிந்தனை தத்துவம் - சசீவன் வலைத்தளம்

December 12, 2009

நேத்ரா தொலைக்காட்சியில் எனது நேர்காணல் (06.07.2008)

நேத்ரா தொலைக்காட்சி 'நூலகத் திட்டம்' பற்றிய அறிமுகம் ஒன்றைத் தமது பார்வையாளர்களுக்கு நிகழ்த்த வேண்டி நூலகத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் க. சசீவனுடன் நேர்காணல் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதனை ஒழுங்கு செய்தவர் நேத்ரா தொலைக்காட்சியின் 'புன்னகை' நிகழ்ச்சித்தயாரிப்பாளர் என். ஜாபிர் (ஆத்மா) அவர்களாகும். புன்னகை நிகழ்ச்சிக்காக நேர்காணலை செய்தவர் வாசுகி சிவகுமார் அவர்கள்.

வாசுகி:- நூலகம் திட்டம் இணையத்தில் முக்கியமான திட்டம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. நூலகம்.நெட் மூலம் பல்வேறு வகையான நூல்கள் சஞ்சிகைகளை இணையத்தின் வழியே நாம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கின்றது. இணையப் பாவனையாளர்களுக்கு நூலகத் திட்டம் காத்திரமான பங்களிப்பை வழங்குகின்றது. அவ்வகையில் தற்போதைய திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில் நூலகத்திட்டத்தினது வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

சசீவன்:- 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகத்திட்டம் தற்போது 3 1/2 ஆண்டுகள் கடந்த நிலையில் அண்ணளவாக 1800 நூல்கள், சஞ்சிகைகளை உள்ளடக்கிய தமிழின் மிகப்பெரிய உள்ளடகங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கின்றது. ஆரம்பத்தில் நூல்கள் தட்டெழுதப்பட்டே பதிவேற்றம் செய்யப்பட்டன. நூல்களைத் தட்டெழுதிப் பதிவேற்றம் செய்யும் போது பலவித நன்மைகள் இருந்தன. தேடுபொறிகள் மூலம் குறிப்பிட்ட சொல்லைத் தேடி வருவோர் நூலகத்தை வந்தடைந்து பயன் பெற்றார்கள். நூலகத்திட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் நூல்களைத் தட்டெழுதி நூலகம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். அதனைத் திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தது. தட்டெழுதச் சாத்தியமற்றவர்கள் தனிப்பட உப திட்டங்களை ஒழுங்கமைத்தார்கள். அதாவது பணக்கொடுப்பனவின் மூலம் தட்டெழுதுவித்து அதனை நூலகத்தில் சேர்ப்பித்தார்கள். நூலகத்திட்டம் எதுவிதமான பணக்கொடுக்கல் வாங்கல்களையும் செய்யவில்லை. முழுக்க முழுக்க திறந்த நிலையில் தன்னார்வலர்கள் ஊடாடும் களமாகத் தன்னைப் பேணிக்கொண்டிருந்தது.

ஆயினும் தட்டெழுதல் மூலம் பலவித சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. நூலகத்தில் நூல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மெதுவாகவே நிகழ்ந்தது. பண்ணக்கொடுப்பனவின் மூலம் செய்யப்பட்ட உப திட்டங்களைப் பொறுத்தவரை, தட்டெழுதலுக்கான பணக்கொடுப்பனவென்பது சற்று அதிகமாகவே காணப்பட்டது. மேலும் அதனை ஊக்கத்துடன் செய்வதற்குப் போதியளவு தன்னார்வலர்களின் ஒத்துழைப்பும் காணப்படவில்லை. மேலும் தட்டெழுதப்பட்ட நூல்கள் பூரணமாக மெய்ப்புப் பார்க்காமலேயே பதிவேற்றம் செய்யப்பட்டன. மெய்ப்பு பார்க்கவேண்டிய அளவுக்கான தன்னார்வலர்களையும் நூலகம் கொண்டிருக்கவில்லை.

இவ்விடத்தில் நூலகத்திட்டத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த கோபி புதியவகை முடிவு ஒன்றுக்கு நூலகத்தைத் தயார்ப்படுத்தினார். அதாவது நூல்களை மின்பிரதியாக்கம் செய்தலே அதுவாகும். மின்பிரதியாக்கலின் மூலம் நூல்களின் பக்கங்கள் 'படங்களாகச்' சேமிக்கப்பட்டன. தெடுபொறிகளில் இருந்து வருவோரை இதன் மூலம் இழக்க நேரிட்டாலும் பலவித நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதாவது வாசகர் ஒருவருக்கு நேரடியாகப் புத்தகம் வாசிக்கும் உணர்வை தொற்றவைக்கக் கூடியதாக இருந்தது. அதாவது படங்களாகச் சேமிக்கபப்ட்ட பக்கங்கள் ஒன்றாகச் சேர்க்கபப்ட்டு pdf ஆக்கப்பட்டன. இதன் மூலம் இதனைப் பதிவிறக்கம் செய்து பார்வையிட முடியும். இதை விட குறைந்தளவான ஆளணி மற்றும் பொருளாதார வளங்களைப் பயன்படுத்தி தட்டெழுதல் மூலம் ஆவணப்படுத்தப்பட்டதை விட அதிகமான அளவில் நூல்களை ஆவணப்படுத்த முடிந்தது. அந்நேரத்தைய சூழலில், இம்மாற்றத்தின் மூலம் முன்னரை விட 10 மடங்கு அதிகமான நூல்களை ஆவணப்படுத்த முடிந்தது.

இநேரத்தில் நூல்களை மட்டுமல்லாது சஞ்சிகைகளையும் ஆவணப்படுத்தும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. சஞ்சிகைகளைப் பொறுத்தவரை தட்டெழுதல் என்பதை விட மின்பிரதியாக்கம் செய்தல் இலகுவானதாக இருந்தது. இதன் மூலம் இலங்கையில் இருந்தும் புலம்பெயர் பிரதேசங்களில் இருந்தும் வெளிவந்த சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. தன்னார்வலர்களின் போதாமையால் திட்டம் மெதுமெதுவாகவே வளர்ச்சியடைந்து வந்தது.

ஒரு கட்டத்தில் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் அண்ணளவாக 20 மின்வருடிகள் மூலம் வேகமாக மின்பிரதியாக்கம் நிகழக்கூடியதாக நூலகத்திட்டத்தின் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் மூலம் பெருமளவான நூல்கள், சஞ்சிகைகள் குறுகிய காலத்திற்குள் ஆவணப்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரிதான பலவிடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்நேரத்தில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் தம்மால் வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகளை நூலகத்திட்டத்தில் வெளியிட அனுமதி தந்ததோடு மட்டுமல்லாது தமது வளங்களைப் பயன்படுத்தவும் அனுமதி தந்தனர். இதன் மூலம் முதன் முறையாக ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்து விடயங்களும் அவர்களின் அனுமதியுடன் ஆவணப்படுத்தப்பட்டன. இது நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான விடயமாகும்.

வலைத்தளத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் அடிப்படை அறிவைப் பயன்படுத்தி செய்யப்பட்ட தளத்திலேயே நூலகத் திட்டம் காட்சிப்படுத்தப்பட்டது. ஆயினும் ஓரளவான நூல்களின் வருகைக்குப் பின்னர் 'ஜூம்லா' மென்பொருள் மூலம் தளம் வடிவமைக்கப்பட்டது. ஆயினும் சிறிது காலத்தின் பின்னர் உடனடியாகவே 'மீடியாவிக்கி' நிறுவப்பட்டு தளம் வடிவமைக்கப்பட்டது. இன்று வரை தளம் மீடியாவிக்கியிலேயே இயங்கி வருகின்றது. இது பல தன்னார்வலர்களால் ஒவ்வொரு நாளும் அபிவிருத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பலரது கூட்டுழைப்பும் தளத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றது.


வாசுகி:- நூலகம் திட்டத்தின் வளர்ச்சி பற்றிய விரிவான விளக்கம் ஒன்று கிடைத்தது. உங்களை ஊக்குவிக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் உங்களிடம் போதுமான வளம் இல்லை என்று சொல்கின்றீர்கள். தற்போது இத்திட்டத்தில் அண்ணளவாக எத்தனை பேர் இணைந்து பணியாற்றுகிறார்கள்.? மேலும் வளர்ச்சியினூடாக நீங்கள் எவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?

சசீவன்:- தற்போது அண்ணளவாக 60 இற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்தே இத்திட்டத்தினை முன்னெடுக்கிறார்கள். பலவிதமான வயதுகளிலும் பலவிதமான நாடுகளில் இருந்தும் அவர்களின் உழைப்பு நூலகத்திட்டத்திற்குச் சாத்தியமாகின்றது. எனினும், தன்னார்வலர்களின் போதாமை என்பது நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை பெரும் சவாலாகவே விளங்குகின்றது. தன்னார்வலர்களினதும் பங்களிப்பாளர்களினதும் எண்ணிக்கையைக் கூட்டும் நோக்கில நாமும் எம்மால் இயன்றளவான முயற்சிகளை எடுத்தவாறே இருக்கின்றோம். ஆயினும் நாம் நினைத்தபடி எம்மால் முற்றுமுழுதான தன்னார்வக் கூட்டுழைப்புத்திட்டமாக நூலகத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் தடுமாற வேண்டியுள்ளது. இவ்விடத்த்தில் நாம் சில விட்டுக்கொடுப்புகளுக்கு இணங்கி திட்டத்தின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் வேண்டி கொள்கை அமைப்புகளில் சில தளர்ச்சிகளைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. அதன் மூலம் தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்படும் திட்டங்களில் பணக்கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அனுமதிக்க வேண்டி இருந்தது. இவ்விடத்தில் எமது வளங்களுக்கும் சூழலுக்கும் ஏற்ற விதத்தில் நேரடியாகப் பங்களிக்க முடியாத நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியின் மூலம் தன்னார்வலர்களைக் கொண்டு சில திட்டங்களை ஒருங்கிணைத்தோம். இதன் மூலம் எம்மால் நூல்களின் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க முடிந்தது. திட்டம் தன்னார்வலர்களின் கண்காணிப்பின் கீழ் வளரக்கூடியதாகவும் இருந்தது.

இவ்விடத்தில் தொடர்ந்து சில சிக்கல்களை எதிர்நோக்கியவாறிருக்கிறோம். நான் ஏற்கனவே கூறியபடி நூலகம் வலைத்தளம் பலரும் பங்களிக்கக் கூடியவகையில் அமைந்த மென்பொருள் மூலம் அமைந்திருக்கின்றது. அதன் மூலம் தினமும் பலர் பங்களித்த வண்ணம் உள்ளார்கள். ஆயினும் அப்பங்களிப்பிலும் போதாமைகள் இருப்பதாக உணரக்கூடியதாக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் இது தொடர்பான பரிச்சயம் இருக்குமென்று கூற முடியாது. அதை விட இங்கே பங்களிக்க ஆர்வமுள்ளவர்களின் தொகையும் மிகக்குறைவாகவே உள்ளது. இது நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும். போதிய விக்கி பங்களிப்பாளர்கள் கிடைக்குமிடத்து தளத்தை இன்னும் பலபரிமாணங்களைத் தாண்டி புதிய பலவிடயங்களையும் சாத்தியப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

அடுத்து நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து எமக்கான நிதியுதவிகள் கிடைத்தாலும், பதிவு செய்யப்பட்ட அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பங்களிப்பாளர்களும் தன்னார்வலர்களும் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. நூலகத்திட்டம் என்பது மிகவும் சுதந்திரமானது. அதனைப் பதிவு செய்ய முடியாது. அதற்கான தேவையும் இல்லை. அதன் பங்களிப்பாளர்கள் ஒன்றிணைந்து நூலகத்திட்டத்திற்கு பக்கபலமான அமைப்பு ஒன்றைப் பதிவு செய்யுமிடத்து நிதிப்பங்களிப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் நிதியினை இன்னும் நல்லவிதமாக ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைக்கிறேன். அதன் மூலம் ஏற்படுத்தப்படும் நம்பிக்கையின் மூலம் இன்னும் அதிகமான நிதிப்பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு அதிகளவிலான ஆவணப்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆயினும் சில அசாதாரண சூழ்நிலைகளால் தன்னார்வப் பங்களிப்பாளர்களை இணைக்கும் அமைப்பொன்றை பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளோம். ஆயினும் அதற்கான தயார்ப்படுத்தல்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்தாயிற்று. எதிர்காலத்தில் அதற்கான சூழ்நிலைகள் வரும் போது நிச்சயமாக நூலகத்திட்டத்தினைப் பலப்படுத்தும் நோக்கில் ஒரு அமைப்பைப் பதிவு செய்து அதனை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகின்றேன்.

அடுத்து, நூலகத்திட்டம் தொடர்பான அறிமுகம் போதியளவில் இல்லை என்பதும் எமக்கு முன்னுள்ள ஒரு சவாலே. போதியளவான அறிமுகங்களின் மூலமே பலரையும் எம்மை அணுகவைக்க முடியும். தற்போது நாமே ஒவ்வொருவரையும் அணுகிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டுமாயின் பரந்தளவிலான அறிமுகத்திற்கான வேலையை நாம் செய்தே ஆக வேண்டும். முக்கியமாக எழுத்தாளர்களுக்கு நூலகத்திட்டத்தைப் பற்றிய அறிமுகங்களை வழங்க வேண்டிய தேவை பலருக்கும் உள்ளது. அது மிக முக்கியமானதும் கூட.


வாசுகி:- பார்வையாளர்கள் உங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என நம்புகின்றேன். அடுத்து, நூலகத்திட்டத்தின் தற்போதைய நகர்வைச் சாத்தியமாக்கும் திட்டங்கள் என்ன? மற்றும் எதிர்காலத்தில் எவ்வகையான திட்டங்களுடன் இருக்கின்றீர்கள்?

சசீவன்:- தற்போது இயன்றவரை சில முழுமையாக்கல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது, தளத்தில் இன்னும் சில அடிப்படை விடயங்கள் பூர்த்தியாக்கப்படாமல் இருக்கின்றது. அவற்றை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் நூலகத்திட்டத்திற்கான தகவல் தளம் இன்னும் முறையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை. அவற்றைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சியில் உள்ளோம். 2008 ஆம் ஆண்டு இறுதிவரை இவற்றின் பூர்த்தியாக்கலுக்குச் செலவளிக்க வேண்டிய தேவை உள்ளது. அதனைச் சாத்தியமாக்கும் பட்சத்தில் மட்டுமே எதிர்காலத்தில் எளிதாகவும் வேகமாகவும் திட்டச்செயற்பாடுகளை நகர்த்திச் செல்ல முடியும். அத்துடன், சில செயற்திட்டங்களை நடைமுறப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். அதாவது தினமொரு மின்னூல் என்ற செயற்திட்டத்தின் கீழ் மின்பிரதியாக்கம் செய்த நூல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். இதனை விட நூலகத்திற்குச் சமாந்தரமான விடயம் ஒன்று நூலகம் தளத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சேகரம் என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படும் புதிய தலைப்பின் கீழ் சில முக்கியமான கட்டுரைகள் தட்டெழுதப்பட்டு வெளியிடப்படுகின்றன.

இதனை விட எதிர்காலத்தில் பரவலான வகையில் அறிமுகங்களை நிகழ்த்தக் கூடியதான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் போது மாத்திரமே அடுத்தக்கட்டமாக சில விடயங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். இதை விட மாதம் ஒரு எழுத்தாளரைத் தெரிவு செய்து அவரது புத்தகங்களை நூலகத்தில் முழுமையாக ஆவணப்படுத்தும் எண்ணமும் உண்டு. மேலும், இதழகம் என்னும் பெயரில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளை உடனுக்குடன் நூலகத்தில் வெளியிடும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழங்களில் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுகள் வெளி உலகத்திற்கு பார்க்கக் கிடைப்பதுமில்லை. பயன்படுவதுமில்லை. அதைக் கருத்தில் கொண்டு ஆய்வுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான சூழ்நிலைகள் வாய்க்குமிடத்து அதனைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்களுடைய பல ஆவணக்கங்கள் நுண்படச்சுருளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை டிஜிட்டலைஸ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.


No comments:

Post a Comment

Blog Archive

Statcounter