
'நூலகத்திட்டம்' இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை எண்ணிம முறையில் சேகரித்து அனைவரும் பெற்றுக் கொள்ளக்கூடியதான செயல்முறை வடிவம்' என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆயினும் நூலகத்திட்டத்தின் மூலம் தமிழ்ப்பரப்புடன் இடைவெட்டும் ஆங்கில எழுத்தாவணங்களூம் ஆவணப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்களும் அடங்கும். தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தை நூலகத்திட்டம் என்றும் குறுக்க முற்பட்டதில்லை. மாறாக அவ்வடையாளம் விரிந்து சென்று ஊடாடும் பரப்புக்களை எல்லாம் சுவீகரித்துக் கொண்டு ஆவணப்படுத்தும் முறையைச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
இரண்டுவகையான விடயங்களைக் கூறி இக்கருத்தைச் செழுமைப்படுத்த முடியும். முதலாவதாக 'இலங்கைத் தமிழ்' என்ற ஒற்றை அடையாளம் இன்று குறித்த பிரதேசங்களுக்குள்ளோ அல்லது குறித்த மொழிகளுக்குள்ளோ நின்றுவிடுவதில்லை. உலகுதழுவிய பார்வையையும் மொழிகடந்த வீச்சையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சுதந்திரத் தனிநாடு வேண்டிய போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த சமூகங்கள் பலமொழிபேசும் சமூகங்களிலும் வாழ்கின்றார்கள். அவர்கள் அந்நாட்டு மொழிகளைப் பேசுவதோடு சிலர் எழுதவும் செய்கின்றார்கள். நூலகத்திட்டத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமொழியைத் தற்போது உள்வாங்கினாலும் எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் என்னும் அடையாளம் ஊடாடும் அனைத்து மொழி எழுத்தாவணங்களையும் ஆவணப்படுத்தும் நோக்கோடு செயலாற்றுகின்றது. அதற்கான வெளியை அனுமதிக்கும் நோக்கத்தோடு உள்ளதை நூலகத்திட்டம் தொடர்பான அறிமுகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இரண்டாவதாக 'இலங்கைத் தமிழ்' அடையாளம் பல்வேறு சமூகங்களை உள்ளடக்குகின்றது. தனித்துவமான சமூகக்கருத்தியலுடன் ஆதிக்கக் கதையாடலுக்கு உட்பட்ட சிறுபான்மைச் சமூகங்களாக காணப்படும் முஸ்லிம் சமூகம், மலையகச் சமூகம், கிழக்குச் சமூகம் இன்னும் தலித்துக்கள், பெண்கள், ஏழைகள், மாற்றுப் பாலியலாளர்கள் போன்றோர் சிறுபான்மையினராக* உள்ளார்கள். 'இலங்கைத் தமிழ்' என்ற அடையாளம் தான் ஊடாடும் களங்கள் மீதான தனித்துவத்தைப் பேணும் போது மட்டுமே இப்போதிருப்பது மாதிரியான தொடர்ச்சியைப் பேண முடியும் என்பதில் நூலகத்திட்டம் கரிசனை கொண்டுள்ளது.
3.1 தமிழ்ச்சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தல்.

ஐரோப்பிய மரபே எழுத்து மூலமாக ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதையும் அவற்றில் இருந்து அறிவுருவாக்கம் பற்றிய செயற்பாட்டில் ஈடுபடுவதையும் கொண்டிருந்த சமூகமாக அறியப்படுகின்றது. எழுத்து மூலமாக ஆவணப்படுத்தும் மரபென்பது தமிழ்பரபில் குறிப்பிடும்படியாகக் காணப்படவில்லை. பக்தி இலக்கியம் மற்றும் மருத்துவம் தொடர்பான விடயங்கள் பாடல் வடிவில் ஏடுகளில் எழுதிப் பாதுகாக்கப்பட்டன. ஆயினும் ஆவணப்படுத்தன் தொடர்பான தீவிரமான முறைமைகள் தமிழ் மரபில் இடம்பெற்றிருந்ததற்கான ஆவணங்கள் எதுவும் குறிப்பிடும்படியாக இல்லை. இது தனியே தமிழ் மரபிற்கு உரிய விடயம் அன்று. ஐரோப்பா அல்லாத பிரதேசங்களைச் சேர்ந்தவர்களது நிலை இவ்வாறே காணப்பட்டது. இக்கருத்து மூலம் ஐரோப்பா அல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அறிவுத்தொடர்ச்சி தொடர்பான கரிசனை அற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இவர்கள் தொன்மங்களின் குறியீடுகள் வழியாகவும் தொன்மங்கள் மீதான சடங்குகள் வழியாகவும் பாடல்கள் வழியாகவும் பக்தி வழிபாட்டின் மூலமும் மந்திரங்கள், உச்சாடனங்கள் மூலமும் தமது சமூகத்தின் அறிவுத்தொடர்ச்சியை கையப்படுத்தியிருந்தார்கள். இயற்கையுடன் தமது அறிவை இணைத்து செவிவழியாகவும் சடங்குகள் வழியாகவும் ஆவணப்படுத்தப்பட்டன.
இவ்வாறே தமிழ்மரபும் தனது அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆங்கிலேயர்களது காலனித்துவ காலப்பகுதியில் எழுத்தாவணங்களை முறையாக ஆவணப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பியர்கள் இலங்கை வந்த போது இலங்கையில் வாழ்ந்து வந்த சமூகங்களைப் பற்றி ஏராளமான குறிப்புக்களையும் நூல்களையும் எழுதினார்கள். அவை அனைத்தும் ஐரோப்பியர்களது பார்வையில் அமைந்த பிரதிகளாக மட்டுமே காணப்படுகின்றன. அச்சியந்திரத்தின் வருகைக்குப் பின்னர் ஏடுகள் காகிதத்திற்கு மாற்றலாகின. காகிதத்திற்கு மாற்றலாகாத ஏராளம் ஏடுகள் அழிந்து போயின. நூலகத்திட்டம் பற்றி எழுத்தாளர்களுக்கான கையேட்டில் கூறுவது போன்று 'ஏடுகளில் இருந்த தமிழ் எழுத்துப்பிரதிகள் காகித அச்சில் வெளிவரத் தொடங்கியமை தமிழ்ச்சூழலில் நிகழந்த பெரிய திருப்பம். வரலாற்று ஓட்டத்தில் முக்கியமிக்க மாற்றம். அவ்வாறு மாற்றங்காணாத ஏட்டுப்பிரதிகள் இன்று பயனெதுவும் அற்று அழிந்து போய்விட்டன. காகித அச்சில் இருந்து அடுத்த நிலைமாற்றத்தை நீங்கள் தொடர்புபடுமெழுத்துப்பிரதிகள் எட்டிவிட்டனவா? உங்கள் எழுத்துப் பிரதிகள், மின் ஆவணங்களாக்கப்பட்டு மின்வெளியில் அணுகப்படக் கூடியனவாக இருக்கின்றனவா? இன்னமும் மாற்றங்காணவில்லையானால் அவை காகிதத்தில் ஏறாத ஏடுகளின் இன்றைய நிலையை ஒருகாலத்தில் அடையக்கூடும்'.
தமிழ்ச்சமூகங்கள் தமது சமூகத்தின் வரலாற்றையோ அல்லது சமூகத்தின் தனித்துவத்தையோ கூறும் எழுத்தாவணங்களை வைத்திருக்கக்கூடாது என்பதில் தமிழ்மொழியை இன்றும் புறக்கணிக்க விரும்பும் அதிகார வர்க்கம் கவனமாக இருக்கின்றது. அவற்றைத் திட்டமிட்டு அழிக்க முற்படுகின்றது. யாழ் நூலகத்தின் எரிப்பு மட்டுமே அரசியல் ரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் பெரும்கவனத்தைப் பெற்ற போதிலும் அதைவிட முக்கியமான பழைய ஆவணங்கள் பல போரினால் அழிந்து விட்டன. இடைப்பட்ட போர்க்காலப்பகுதியில் தனி நபர்களது தனிப்பட்ட நூலகங்கள் பலவும் அழிந்துவிட்டன. அதே நேரத்தில் இலங்கை ஆவணக்காப்பகத்தில் கூட தமிழர்களது எழுத்தாவணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. 1981 இற்குப் பின்னர் அச்சிடும் பிரதி ஒன்றை ஆவணக்காப்பகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற நடைமுறைய தமிழ்மொழி மூல வெளியீடுகளை மேற்கொவோரால் முறையாகப் பின்பற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி ஆவணக்காப்பகம் போன்ற இடங்களில் தமிழ்மொழி சார்ந்த சமூகங்களின் தொடர்புக்கு அப்பாற்பட்ட இடங்களாக மாறியதும் முக்கிய காரணமெனலாம்.
தனிப்பட்ட வகையில் சிலர் எடுத்த முயற்சிகளின் காரணமாக தமிழ்ச்சமூகங்கள் தொடர்பான விடயங்கள் பல ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் குரும்பசிட்டிக் கனகரத்தினம் முக்கியமானவர். இவர் இலங்கையில் தமிழ் மொழியில் வெளியாகிய ஏராளமான பருவ வெளியீடுகளின் சேகரிப்பை மேற்கொண்டதோடு மட்டுமல்லாது அவற்றை நுண்படச்சுருள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கின்றார். வேறு சிறிய முயற்சிகள் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை அவரவர்களுடன் நின்று போய்விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. எண்ணிம முறையிலான ஆவணப்படுத்தல் என்னும் போது இலங்கைத் தமிழ்ச்சூழலில் நூலகத்திட்டம் சகல ஆவணங்களையும் ஆவணப்படுத்த முயற்சிக்கின்றது. முன்னைய முயற்சிகளைப் போன்று தனிநபர் முயற்சியாக இல்லாமல் கூட்டுழைப்பாக மேற்கொளப்படுகின்றது. இதுவே இதன் சிறப்பு. நூலகத்திட்டத்தின் தொடர்ச்சி இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
3.2 தமிழ்வெளி வரையும் சிறுபான்மைக்களங்கள் மீதான ஆவணப்

இலங்கைத் தமிழ் அடையாளம் வரையும் சிறுபான்மைவெளிகளைப் பற்றிய விடயங்கள் ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பப்பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. நூலகத்திட்டம் சகல எழுத்துப்பிரதிகளையும் ஆவணப்படுத்துவதாகக் கூறியுள்ள போதிலும் அவற்றில் பெரும்பாலும் மைய நீரோட்டக் கருத்துள்ள பிரதிகளே ஆரம்ப காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வடையாளம் வரையும் வெளியில் அவ்வகைப்பிரதிகளே அதிகளவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளமை அதற்கான காரணமாக இருக்கக்கூடும். ஆயினும் அந்நிலை பிற்காலத்தில் மாற்றம் பெற்றிருக்கின்றது.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நூலகத்திட்டம் சார்பாக நேத்ரா தொலைக்காட்சி இடம்பெற்ற உரையாடலில் 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்' மற்றும் 'மலையகச் செயற்றிட்டம்' ஆகியவை அறிவிக்கப்பட்டு புலமையாளர்களிடமிருந்து பங்களிப்பும் கேட்கப்பட்டிருந்தது. ஆயினும் எழுந்தமானமாக அல்லாமல் முறையாக ஒரு சமூகத்தை ஆவணப்படுத்துவதற்கு அச்சமூகத்தின் எழுத்தாவணங்கள் தொடர்பான விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அந்நிலையில் அச்செயற்றிட்டங்கள் இன்னமும் தொடங்கப்படாமலே இருக்கின்றன. ஆயினும் பிரதிகள் தெரிவில் விளிம்பு எழுத்தாவணங்கள் அதிகமாக விசேட கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அத்துடன் நூலகம் வலைத்தளத்தில் வலைவாசல் என்னும் பகுதிக்கூடாக விளிம்பு அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விடயங்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கூறப்படுவது போன்று 'நூலகத்திட்டம் 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாக தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. 'இலங்கைத்தமிழ்' என்ற விடயம் இடைவெட்டும் அனைத்துப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஆவணமாக்கலை மேற்கொள்கின்றது. இவ் ஒற்றை அடையாளம் தெளிவான வரையறைகளைத் தனக்குள் கொண்டிருக்கவில்லை. இலங்கைத்தமிழ் என்ற ஒற்றை அடையாளம் தனக்குள் பல்வேறு உபபரப்புக்களையும், அடையாளங்களையும் உள்ளடக்கியது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஒற்றை அடையாளம் என்பதுடன் நாம் ஆவணமாக்கல் சார்ந்து இயங்கும் போது யாழ்மையவாத ஆவணங்கள் நூலகத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதை நினைவுகூரக்கூடியதாகவுள்ளது. ஏனெனில் இவ் ஒற்றை அடையாளம் அதன் ஆதிக்கசக்திகளின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் யாழ்-இந்து-வேளாள-ஆண் என்ற ஆதிக்கநிலைப்பட்ட பிரதிகளின் தொகை அதிகமானது மட்டுமல்லாது பரவலானது. அவ்வகையில் அதுசாரப்பட்ட பிரதிகள் பெருமளவில் ஆவணமாக்கப்பட்டது. இந்நிலையில் மேற்குறித்த ஒற்றை அடையாளத்தாலும் ஆதிக்கக்கருத்தியலாலும் விளிம்பாக்கப்பட்ட அடையாள ஆவணங்களை நூலகத்திட்டத்தில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவை மேன்மேலும் உள்ளது.
வரலாறு என்பது அதிகாரவர்க்கத்தின் வரலாறே என்பது நாம் அறிந்தவிடயமே. ஆவணமாக்கல்- பாதுகாத்தல் செயற்பாடுகள் என்பது அதன் அனைத்துப் பரப்புக்களையும் உள்ளடக்காத போது அல்லது அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காத போது அதனோடு தொடர்புபட்ட அனைவரையும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தியவர்களாக அர்த்தப்படவேண்டும். இலகுவாக மறந்து போகும் விடயங்கள் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் மீதான மீள்வாசிப்புக்கு விளிம்புக்கருத்தியல்கள் மிக முக்கியமானவை. அவ்வகையில் அவற்றை உரிய முக்கியத்துவத்துடன் ஆவணமாக்க வேண்டியதென்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. ஆவணமாக்கல் செயற்பாட்டில் இவ்விடயம் தொடர்பாக ஏற்பட்ட கவனமே விளிம்பு அடையாளங்கள் சார்ந்த ஆவணமாக்கல் செயற்பாட்டுக்கு உதவியது எனக்குறிப்பிடப்படுகின்றது. இவ்வகையில் 'இலங்கைத்தமிழ்' என்ற பெரும்பரப்பால் விளிம்பாக்கப்பட்ட முஸ்லிம், மலையகம், தலித்தியம், பெண், புலம்பெயர்வாழ்வு போன்ற அடையாளம் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆவணப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. 'பெண்' என்ற அடையாளம் சார்ந்து முழுமையான ஆய்வு நோக்குடன் கூடிய செயற்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படாத போதிலும் 'பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினுடாக கணிசமான பிரதிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே 'புலம்பெயர் சஞ்சிகைகள் மின்பிரதியாக்கம்' என்ற செயற்திட்டத்தினூடாக மாற்றுக்கருத்தைச் சாத்தியமாக்கிய பல சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தினூடாக மேலும் பல விடயங்கள் ஆவணப்படுத்தப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கூறிய இரு திட்டங்கள் மேற்படி விளிம்பு அடையாளம் சார்ந்த ஆவணப்படுத்தல் நிகழ்வு என்ற போதிலும் அவை முழுமையானவை அல்ல. அவற்றை முழுமையாக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. நாட்டின் போர்ச்சூழல், பிரதிகளின் சிதறல், ஆய்வுமுயற்சிக்கு தன்னார்வலர்களின் போதமை, நிதிப்பற்றாக்குறை, ஒருங்கிணைப்பின் கடினம் போன்வற்றை முக்கியமானவையாகக் கூற முடியும்.
2009 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 'முஸ்லிம் பிரதிகள் செயற்றிட்டம்', 'மலையக மின்பிரதியாக்கம்' ஆகிய இரண்டு திட்டங்களும் ஓரளவாவது முழுமையாகச் செய்யக்கூடியவை. இவ்விளிம்பு அடையாளங்கள் சார்ந்து ஆய்வுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. ஆக, ஆய்வை முழுமைப்படுத்துவதும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதும் ஆவணமாக்கலுமே மிகுதி அம்சங்களாகும்.' சிறுபான்மைக்களங்கள் மீதான விசேட கவனக்குவிப்புக்களை மேற்கொள்ளும் போதே முழுமையை நோக்கி நகரமுடியும். சிறுபான்மைக்களங்களை விசேட கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்துவதன் ஊடாகவே முழுமையை நோக்கி நகரமுடியும்.
3.3 நூலகத்திட்டத்தில் தமிழ்ச்சிறுபான்மையினரின் எதிர்காலம்.

சிறுபான்மைக் கருத்தியல்களே வரலாற்றையும் சமூகங்களையும் முழுமையாக்குகின்றன. ஆதிக்க நிலைப்பட்ட ஆவணங்களில் இருந்து சிறுபான்மைக் கதையாடல்கள் மீள்வாசிப்பு செய்யப்படுகின்றன. எவ்வகையான ஆவணங்களாக இருப்பினும் சமூக மாற்றத்திற்கான உரையாடலை ஆரம்பிக்க அவை பெரும்பங்காற்றும். அவ்வகையில் நூலகத்திட்டத்தின் கவனக்குவிப்பு சிறுபான்மைத் தமிழ்ச்சமூகங்களை மையப்படுத்துவதே சமூக மாற்றத்திற்கு அவசியமானதாகும். வலைவாசல்கள் மூலம் அனைத்துச் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பாகவும் 'கூட்டுநிலை அறிவுருவாக்கத்திற்கு' நூலகத்திட்டம் தயாராகி வருவது சிறுபான்மை மக்களது அரசியல் ரீதியான உரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் நிச்சயமாக உதவும் என எதிர்பார்க்கலாம்.
நூலகத்திட்டம் தனிநபர் கருத்தியலின் செயற்பாடு அல்ல. அதன் கூட்டுமுயற்சியின் பலவிதமான பங்களிப்புக்களும் இருக்கும் போதே அம்முயற்சி முழுமைபெறும் எனலாம். அவ்வகையில் சிறுபான்மைக் கருத்தியல்கள் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்தலும் அவற்றை இணைத்து கூட்டுநிலை அறிவுருவாக்கத்தை மேற்கொள்வதுமே பொதுக்கதையாடல் கருத்தியல் மேலாண்மையில் இருந்து விடுபட உதவும். விமர்சன மரபின் தொடர்ச்சியாக மட்டும் நின்றுவிடாமல் அதைத்தாண்டிப் அதன் செயற்பாடு மற்றும் பங்களிப்பு என்ற நிலைகளை அடையும் போது மட்டுமே பெருங்கதையாடல்களில் இருந்து விடுதலை பெற உதவும். இவற்றுக்கான சாத்தியங்களை மேலும் அதிகரிப்பதாக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். சிறுபான்மை அறிவுருவாக்கத்தில் கூட்டுப்பங்களிப்பு ஏற்படும் போது அந்நிலையைச் சாத்தியமாக்க முடியும்.
அடிக்குறிப்பு
* இங்கே சிறுபான்மையினர் என்ற பதம் தனியே எண்ணிக்கை சார்ந்து பயன்படுத்தபடவில்லை. இங்கே பயன்படுத்தப்படும் சிறுபான்மையினர் என்னும் பதமானது 'கருத்தியல் மேலாண்மை என்பதில் இருந்து விளிம்பாக்கப்பட்ட' என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.
உசாத்துணை.
1. நூலகம் இணையத்தளம் , http://www.noolaham.org
2. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், யூலை 2008
3. நூலகம் மடலாடல் குழு மடல்கள்
4. எழுத்தாளர்களுக்கான கையேடு, கோபி, மு.மயூரன்
5. சசீவனுடனான நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல், டிசம்பர் 2008
இக்கட்டுரை 2009 யூன் மாதமளவில் ஒஸ்லோவில் நடைபெற்ற 37 ஆவது இலக்கியச் சந்திப்பிற்காக எழுதப்பட்டது.
(இன்னும் வரும்)
No comments:
Post a Comment